சனவரி

சாந்தியை கொண்டாடுவோம்

வன்கொடுமைகளுக்கு எதிராகக் களமிறங்குவதும் இடஒதுக்கீடு உள்ளிட்ட உரிமைகளைப் போராடிப் பெறுவதும் தலித் விடுதலைக்கு வழிவகுக்கும் என்பது உண்மைதான். அதே நேரத்தில் சாந்தி போன்ற தனி மனிதர்கள், சமூகம் தன் மீது திணித்த அத்தனைத் தடைகளையும் தகர்த்தெறிந்து நிகழ்த்தும் சாதனைகளும் தலித் விடுதலைக்கு கண்டிப்பாக வலுசேர்க்கும் என்பதையும் உணர வேண்டும். சாந்தியின் வெற்றியைக் கொண்டாடி மகிழ வேண்டிய நாம், ஆதிக்கவாதிகளின் அவதூறுகளை நம்பி அவரை அலட்சியப்படுத்தி விட்டோம். தலித் தலைவர்கள் எவரும் சாந்தியைப் பாராட்டி அறிக்கைகூட விடாதது வேதனையளிக்கிறது. வன்கொடுமைகளையும் ஒடுக்குமுறைகளையும் நினைத்துப் புலம்புவதற்கு மட்டுமா தலித் மக்கள்! ஒருவர் நிகழ்த்திய சாதனையைக் கொண்டாட மனமற்றவர்களா நாம்? சாந்திக்கு இந்த நேரத்தில் கொடுக்கப்படும் ஊக்கமும் தன்னம்பிக்கையும் தாழ்ந்த சாதியென்ற தாழ்வு மனப்பான்மையில் முடங்கிக் கிடக்கும் இளைஞர்களைத் தன்னம்பிக்கையுடன் விழித்தெழச் செய்யும். தலித் விடுதலை போராட்டங்களால் மட்டும் உருவாக்கப்படுவதல்ல; அது சாதனைகளால் அழகுபடுத்தப்படுவதும் கூட!

– மீனாமயில்

இந்துக்களாக்கும் சதித்திட்டம்

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது போலவும், சில அறிவுஜீவிகள் சொல்வது போலவும் தலித் கிறித்துவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் கூட, கடந்த தி.மு.க. அரசு ஆட்சியில் இருந்த போது வெளியிட்ட "தலித் மதமாற்றத் தடை ஆணை' (சுவீகரதாஸ் எதிர் இந்திய உணவுக் கழகம் வழக்கில் 1996 இல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மேற்கோள் காட்டி, மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பப்பட்ட அரசுக் கடிதம் எண்.81, நாள். 19.9.2000) இருக்கும்வரை, மதம் மாறிய தலித்துகள் இடஒதுக்கீட்டைத் துய்க்க முடியாது. ஏனெனில், தி.மு.க. அரசு ரத்து செய்யப் பிடிவாதமாக மறுக்கும் அந்த ஆணை இப்படிக் கூறுகிறது: “பிறப்பால் கிறித்துவராக இருப்பவர் இந்துவாக மாறினால், அவர் ஆதிதிராவிடர் சாதிச் சான்றிதழ் பெறவோ, இடஒதுக்கீட்டுக்குரிய சலுகைகளை அனுபவிக்கவோ தகுதி இல்லை.'' இந்த ஆணை மதமாற்றத் தடைச் சட்டம் ரத்து செய்யப்பட்டு ஆறுமாதங்களுக்குப் பிறகும் இன்றளவும் உயிர்ப்புடன் உள்ளது.

– அய். இளங்கோவன்

பிப்ரவரி

தலித் பெண்ணியம்

அம்பேத்கர் சாதிப் படிநிலை வரிசைக்கும் பெண்ணடிமைத்தனத்துக்கும் இடையே உள்ள நுணுக்கமான, ஆழமான உறவினை நன்றாகவே புரிந்து வைத்திருந்தார். அகமண முறைதான் சாதியமைப்பு தொடர்ந்து நீடிப்பதற்குக் காரணம் என்றார். தங்களது வகுப்பைச் சேர்ந்த பெண்கள், அந்நிய ஆண்களுடன் உறவு கொள்வதையும் மணம் முடிப்பதையும் தடுப்பதற்காகத்தான் பார்ப்பனர்கள் விதவை மறுமணத்தைத் தடை செய்தனர். பார்ப்பன விதவைகளை வீட்டுக்குள்ளேயே அடைத்து வைக்கப் பார்த்தனர். அரச குடும்பங்களைச் சேர்ந்தவர்களது வீட்டுப் பெண்கள் வேற்று வகுப்பாருடன் உறவு கொள்வதைத் தடுக்கவே உடன் கட்டை ஏறும் பழக்கம் உருவாக்கப்பட்டது. இத்தகைய கொடூரமான சமூகச் செயல்பாடுகளுக்கு பெண்கள் எதிர்ப்புத் தெரிவிக்காமலிருக்க , அவர்கள் இளம் வயதிலேயே மண முடிக்கப்பட்டதுடன் அவர்களுக்குக் கல்வி உரிமையும் மறுக்கப்பட்டது. இவ்வாறே பாபாசாகேபின் வாதம் விரிந்தது.

– சர்மிளா ரெகே

லட்சுமி நரசு : பவுத்தத்தின் முன்னோடி!

இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்து, பிரச்சாரம் செய்த லட்சுமி நரசை ஏறத்தாழ அரை நூற்றாண்டிற்குப் பிறகு பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் வாழ்வு, நடவடிக்கைகள் மற்றும் செய்தியால் உச்சத்தை அடைந்த "ஏற்றுக்கொள்ளப் பட்ட பவுத்தம்' என்று அழைக்கப்பட்ட சிந்தனையின் முன்னோடியாகவே காணலாம். பாபா சாகேப் அவர்களே பேராசிரியர் நரசு அவர்களை தனது முன்னோடியாகக் கருதியது தற்செயலானது அல்ல!

- ஜி. அலாய்சியஸ்

வழக்குகள் சந்திக்கும் வன்கொடுமை!

முதலில் புகாரைப் பெற்று பதிவு செய்வது என்பது மிகப் பெரும் சுமை, தேவையற்ற வேலை என்று காவல் துறையினர் கருதுகின்றனர். அப்படிப் பதிவு செய்யப்படும் புகார்களும் வன்கொடுமைக் குற்றங்களின் ஒரு சிறு எண்ணிக்கையே. பெறப்படும் புகார்களும் வழக்கை வலுவிழக்கச் செய்யும் வகையிலேயே பதிவு செய்யப்படுகின்றன. பல நேர்வுகளில் வன்கொடுமை குற்றம் செய்தவர்கள் மீது பாதிக்கப்பட்டவர்கள் முதலில் புகார் கொடுத்தாலும், காவல் துறையினர் குற்றம் சாட்டப்பட்டவர்களை அழைத்து அவர்களிடமிருந்து பாதிக்கப்பட்டவர்கள் மீது பொய்ப்புகார் தரச் செய்து, அதை முதலில் பதிவு செய்து, வன்கொடுமைப் புகாரை வலுவிழக்கச் செய்கின்றனர்.

– சு. சத்தியச்சந்திரன்

மார்ச்

"தலித்' என்பது இழிவா?

தீண்டத்தகாத மக்கள் தங்களை எப்படி அழைத்துக் கொள்ள வேண்டும் என்ற உரிமைகூட இனி அவர்களுக்கு இல்லை என்று தி.மு.க. அரசு முடிவு செய்துள்ளது. அதனால்தான் "தலித்' "தாழ்த்தப்பட்ட மக்கள்' என்பது போன்ற சொற்களை உச்சரிக்கக்கூட கூடாது; அது இழிவானது என்று வன்மத்துடன் ஆணை வெளியிட்டுள்ளது. ஆனால், இது எந்த வகையில் இழிவானது என்று அது தெளிவுபடுத்தவில்லை. "தாழ்த்தப்பட்ட மக்கள்' என்று சொல்வது இழிவு எனில், "பிற்படுத்தப்பட்ட மக்கள்' என்ற சொல்லாடல் மட்டும் இழிவாகாதா? தமிழ்த் திரைப்படங்களுக்கு வரிச்சலுகைகளை வாரி வழங்கும் தமிழக அரசு, அத்திரைப்படங்களில் தொடர்ந்து தலித்துகளை இழிவுபடுத்தி வரும் "சண்டாளன்' என்பது போன்ற பெயர்களைத் தடை செய்ய முன்வந்திருக்கிறதா? ஓர் இனத்தின் அடையாளத்தை அதிகாரிகளும், அரசியல்வாதிகளுமா நிர்ணயிப்பது? அறிவீனத்துடன் அரசாணை வெளியிட்டுள்ளது அரசு. தமிழக முதல்வர் அடிக்கடி பயன்படுத்துகிறாரே "சண்டாளன்' என்று அதுதான் இழிவான பெயர்; அதுதான் சட்டப்படி குற்றம். ஆனால், அதற்காக சிறு வருத்தம்கூட தெரிவிக்காத கருணாநிதி அரசுதான், தலித் மக்கள் தங்களை தங்கள் விருப்பப்படி அழைத்துக் கொள்வதை இழிவு என்கிறது.

– தலையங்கம்

நவீன உலகம் யாருக்கானது?

சிறப்புப் பொருளாதார மண்டலப் பகுதிகள் தூதரக வளாகங்கள் போலவே கருதப்படுமாம்! அங்கு எந்தவித இந்திய சட்டங்களும் செயல்படாது. மலிவான கூலிக்கு ஆட்கள் கிடைப்பதால், நிறுவனங்கள் போட்டிப் போட்டு இங்கு குடிவருகின்றன. அடுத்து வேலை நிறுத்தங்கள், கடை அடைப்புகள் என எதுவும் இந்தப் பகுதியின் செயல்பாட்டை பாதிக்காது என இடதுசாரி தொழிற்சங்கங்கள்கூட நேரடியாகவே அறிவித்திருக்கின்றன. இது, கண்டிப்பாக குறைவற்ற மறு காலனியமே என்பதில் அய்யமில்லை.

– அ. முத்துக்கிருஷ்ணன்

ஏப்ரல்

தலித் பொருளாதாரம்

இந்தியாவில் கொழுத்த செல்வந்தர்களிடமிருந்து வசூலிக்கப்படாமல் போகும் வரிப்பணம் எவ்வளவு தெரியுமா? ரூ. 90,000 கோடி (2007 நிதி நிலை அறிக்கை). இந்தியாவில் 7 லட்சம் பட்டியல் சாதியினர் கல்லூரிப் படிப்புகளும், முதுகலைப் படிப்புகளும், தொழிற்கல்வியும் பெறுவதற்கு அரசு முழு உதவி செய்கிறது எனில், தேவைப்படும் தொகை எவ்வளவு தெரியுமா? ஆண்டுக்கு ரூ. 5,000 கோடி மட்டுமே! அதாவது வசூலிக்கப்பட வேண்டிய ஆனால் வசூலிக்காமல் இருக்கும் தொகையில் 18இல் ஒரு பங்கு மட்டுமே. ரூ. 90,000 கோடி வரிதர மறுக்கும் நிறுவன உரிமையாளர்கள் ஈட்டும் லாபம் எவ்வளவு தெரியுமா? ஆண்டுக்கு ரூ. 3 லட்சம் கோடி!

– கிருத்துதாசு காந்தி

அன்றே கொல்லும் அரசு

சட்டங்களின் அடிப்படையில் நீதிமன்றங்கள் அளிக்கும் மரண தண்டனைகளை எதிர்த்து உலகெங்கும் உரத்த குரல்கள் எழுப்பப்படுகின்றன. இந்தியாவிலும் மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்காக நாடு தழுவிய அளவில் பெரிய இயக்கங்கள் செயல்படுகின்றன. ஆனால், இந்த மரண தண்டனைகளை விடவும் மிகக் கொடியதாக, கேள்வியற்றதாக, எந்தவித விசாரணையோ, வாத எதிர்வாதங்களோ இன்றி காவல் துறையினரால் நேரடியாக சில மரண தண்டனைகள் நிறைவேற்றப்படுகின்றன,

மோதல் சாவுகள் (என்கவுன்டர்) என்ற பெயரில்! இன்று எவ்விதத் தயக்கமுமின்றி நட்ட நடு வீதியில் மக்கள் திரளுக்கு இடையே இரவு பகல் பாராது வெளிப்படையாக நடக்கின்றன. ஆனால், யாருடைய மனசாட்சியையும் இந்த அப்பட்டமான கொலைகள் உலுக்குவதில்லை.

– பூங்குழலி

சாதிய ஒடுக்குமுறைகளிலிருந்து நம்மை நாம்தான் மீட்க முடியுமே தவிர, காத்துக் கொள்ள முடியுமே தவிர, வேறு ஒருத்தர் வந்து நமக்கு உதவி செய்ய முடியாது. தலித் அரசியல் என்பது நாம் தன்னிச்சையாக எழுந்து நமது இழிவைப் போக்குவதற்குப் பயன்படுவதற்கான அரசியலாக மாற்ற வேண்டும். அப்படி மாறும்போது, அந்த தலித் என்ற கருதுகோள்கூட இல்லாமல் போய்விடும். அதனுடைய தேவையை அது இழந்துவிடும். - க.நெடுஞ்செழியன்: "தலித் அரசியல் இழிவைப் போக்க வேண்டும்'

“ஏகாதிபத்தியம் ஒழிக என்ற விண்ணை முட்டும் முழக்கம், இயல்பாகவே பார்ப்பனியத்தை குறைத்து மதிப்பிடுவதாக அமைந்து விடுகிறது. பார்ப்பனியம் என்ற அடித்தளத்தின் மீதுதான் ஏகாதிபத்தியம் என்ற அமைப்பு கட்டப்பட்டிருக்கிறது. பார்ப்பனியத்தை வலுவிழக்கச் செய்துவிட்டால், அதன் மீது கட்டப்பட்டுள்ள ஏகாதிபத்தியத்தை அழித்தொழிப்பது மிகவும் எளிது.'' – டாக்டர் அம்பேத்கர்

மே

“இந்தியனே வெளியேறு''

அவரவர் உணவு, உடை, வாழ்க்கை முறை மதம் மற்றும் பண்பாட்டைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை, எந்த சமூகம் தன் மக்களுக்கு மகிழ்ச்சியோடு வழங்கியிருக்கிறதோ, அதுவே ஜனநாயக நாடு. இந்தியா அப்படியொரு ஜனநாயக நாடாக எப்போதும் இல்லை. எல்லைகளை வளைப்பது என்பது வெறும் புவியியல் சார்ந்த பிரச்சனை அல்ல; அது உணர்வு ரீதியாக ஆராயப்பட வேண்டிய கோட்பாடு. ஆனால், ஆதிக்க அரசியலில் அதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை. இந்திய தேசியத்தை வணங்கி அதற்குள் மூழ்கிப் போய்விட்டால் எந்தப் பிரச்சனையும் இல்லை. அடிமைத்தனம் பழக்கமாகி, பின் அதுவொரு போதையாகிவிடும். அப்படி மூழ்க முடியாதவர்கள்தான் "இந்தியனே வெளியேறு' என்று முழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

– மீனாமயில்

நிலைநாட்டப்பட்ட மதமாற்ற உரிமை!

“பிறப்பால் கிறித்துவராக இருப்பவர், இந்துவாக மாறினால் அவர் ஆதி திராவிடர் சாதிச் சான்றிதழ் பெறவோ, இட ஒதுக்கீட்டுக்குரிய சலுகைகளை அனுபவிக்கவோ தகுதி இல்லை'' (கடிதம் நகல் எண் 81 / 19.9.2000) என்றொரு ஆணையை – ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் கோலப்பன் மூலம் கடந்த முறை தி. மு. க. அரசு ஆட்சிப்பொறுப்பில் இருந்தபோது வெளியிட்டிருந்தது. இந்த ஆணையால் மதம் மாறும் உரிமை, தலித் மக்களுக்கு முற்றிலுமாக மறுக்கப்பட்டது. மதமாற்றத் தடைச்சட்டம் திரும்பப் பெற்ற பிறகும்கூட, இந்த ஆணை உயிர்ப்புடன் இருந்தது. இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான இந்த ஆணையை ரத்து செய்யக் கோரி, ஏப்ரல் 2002இல் வேலூர் ஊரிசு கல்லூரியின் பேராசிரியரும், "டாக்டர் அம்பேத்கர் மய்ய'த்தின் தலைவருமான அய். இளங்கோவன், உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கைத் தொடுத்தார். சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் "டிவிஷன் பெஞ்ச்' 4.10.2002 அன்று, இந்த ஆணைக்கான இடைக்காலத் தடையை வழங்கியது.

பார்ப்பனர்களை நாம் மூன்று வகையில் எதிர்கொண்டால் அரசியல், பொருளாதாரம் மற்றும் சாதி அழித்தொழிக்கப்படும். நாம் கோயிலுக்குச் செல்ல வேண்டியதில்லை. பார்ப்பனரை அழைக்க வேண்டியதில்லை. கடவுளிடம் செல்ல வேண்டியதில்லை. நமக்கென ஒரு மதம் இருக்கும். ஆனால், அரசியலில் இதை எப்படி செய்வீர்கள்? ஏனெனில், அவர்கள்தான் சட்டதிட்டங்கள், கொள்கைகள் அனைத்தையும் முடிவு செய்கிறார்கள். அதனால் நாம் அதில் பங்கெடுக்க வேண்டும். அவர்களும் பங்கெடுப்பார்கள். இந்த இடத்தில்தான் பிரதிநிதித்துவ ஜனநாயகம், பங்கெடுக்கும் ஜனநாயகமாக மாற வேண்டியுள்ளது.

– விவேக்குமார்: "பிரதிநிதித்துவ ஜனநாயகமும் பங்கேற்பு ஜனநாயகமும்'

சூன் 

வரலாற்றை இழந்தோம்

"விடுதலை இயக்க வேர்களும் விழுதுகளும்' என்ற சிறப்புமிக்க வரலாற்றுத் தொடரை கடந்த ஆறு ஆண்டுகளாக தலித் முரசில் பதிவு செய்து வந்த சமநீதி எழுத்தாளர் ஏபி. வள்ளிநாயகம் அவர்கள் 19.5.2007 அன்று, நம்மை எல்லாம் ஆழ்ந்த துயரத்தில் பரிதவிக்கவிட்டு மாரடைப்பால் மறைந்து விட்டார். தலித் முரசின் கொள்கைகளுக்கும், கருத்தியலுக்கும் ஓர் அச்சாணியாய்த் திகழ்ந்த அந்தப் போராளியை இழந்து சொல்லொணா வேதனையில் "தலித் முரசு' அமிழ்ந்திருக்கிறது.

பவுத்தம், அம்பேத்கரியம், பெரியாரியம் ஆகிய கொள்கைகளை தம்முடைய வாழக்கை நெறியாகக் கொண்டிருந்த தோழர் ஏபி. வள்ளிநாயகம், இக்கருத்தியலை மய்யப்படுத்தி, 25–க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார்கள். கடந்த பத்து ஆண்டுகளில் எந்த ஓர் அமைப்பிலும் சிக்கிக் கொண்டு தனது சுதந்திரத்தை இழந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்த வள்ளிநாயகம், தலித் முரசில் மட்டும் தன்னை முழுமையாக இணைத்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைந்தார். அந்த வகையில் "தலித் முரசு' தனது சமூகக் குடும்பத்தின் மூத்த சகோதரரை இழந்திருக்கிறது.

தலையங்கத்திலிருந்து

சூலை

வரலாறு மன்னிக்காது!

விடுதலைச் சிறுத்தைகள் 17.6.2007 அன்று நடத்திய மண்ணுரிமை மாநாட்டில் "போராளிகளுக்கு சிறப்பு' என்ற தலைப்பில் மூன்று தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறார்கள். அப்போராளிகள் : 1. அய்யா வைகுண்டர் 2. தியாகி இம்மானுவேல் சேகரன் 3. ஒண்டிவீரன் 4. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். "தாழ்த்தப்பட்ட மக்களின் தலைநிமிர்விற்காக தலைகொடுத்த போராளி தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களின் அய்ம்பதாமாண்டு நினைவு நாளை (செப்டம்பர் 11, 2007) தமிழக அரசு அவரது நினைவைப் போற்றும் நாளாகக் கடைப்பிடிக்க வேண்டும்'' தீர்மானம் 17(1). "பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு (அக்டோபர் 30,2007) அரசு விடுமுறை நாளாக அறிவித்துச் சிறப்பிக்க வேண்டும்'' தீர்மானம் 17(3). அதாவது, தலை கொடுத்தவருக்கும் பாராட்டு; தலை எடுத்தவனுக்கும் பாராட்டு!

– தலையங்கம்

பெரியவர் மனப்பான்மை X குழந்தைகள்

குழந்தைகளற்ற பூமி எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்! உலக இயக்கம் நிலை குலைந்து விடாதா? மனித சமூகத்தின் வளர்ச்சிக்கு முக்கிய ஆதாரம் குழந்தைகள். எந்த சமூகம் குழந்தைகளுக்கான உரிமைகளை மறுப்பின்றி முழுமையாக வழங்குகிறதோ, அந்த சமூகமே மேன்மையடையும். அந்த அடிப்படையில் இந்தியாவின் வளர்ச்சி என்பது எப்போதுமே கேள்விக்குறிதான். மத, சாதி, பண்பாட்டு, பாலின, பொருளாதார, அரசியல் ரீதியான பாகுபாடுகளைக் கொட்டிக் குவித்து வைத்திருக்கும் நாட்டில் குழந்தைகளுக்கான உரிமைகளும், நீதியும் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது.

– எ.ச. செந்தில்குமார்

ஆகஸ்ட்

வெளியேற்றப்படாத அந்நியன்!

“தாழ்த்தப்பட்ட மக்கள் ரொட்டிக்காகவும் மீனுக்காகவும் போராடுகிறார்கள் என்று கூறுவது முட்டாள்தனமானது. அவர்கள் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றுக்காகப் போராடுகிறார்கள். அம்மக்களின் கொள்கைகள் குறுகிய வட்டத்தைக் கடந்து நிற்கின்றன. அவர்களது கொள்கைகள் இந்தியாவை மட்டுமல்ல; உலகையே மறுசீரமைக்கக் கூடியவை.'' டாக்டர் அம்பேத்கர்

கோயில் நுழைவுப் போராட்டங்களை நடத்தியவர்கள் யார்?

விடுதலைச் சிறுத்தைகளின் மண்ணுரிமை மாநாட்டில் ஓர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. "காந்தியார் கோயில் நுழைவு நடத்தச் சொன்னதாகவும், வைத்தியநாத அய்யர் தலைமையில் அது நடந்ததாகவும், அவருடன் முத்துராமலிங்கத் தேவர் இருந்ததாகவும் அதனால் அந்த நாளில் கோயில் நுழைவை நடத்த வேண்டும்' என்றும் "நமது தமிழ்மண்' (சூலை 2007) தலையங்கம் கூறுகிறது. இந்த கோயில் நுழைவுப் போராட்டம் நடந்த காலத்தில் முத்துராமலிங்கத் தேவர் சட்டமன்ற உறுப் பினர். அவர் அதில் கலந்து கொண்டதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை. அவர், சத்தியமூர்த்தி அய்யரின் ஆதரவாளர். போராட்டம் நடத்திய வைத்திய நாத அய்யரோ ராஜாஜியின் சீடர். காங்கிரஸ் உட்கட்சிப் பூசல் இருந்த நேரம் அது. வைத்தியநாதய்யரே கோயில் நுழைவுப் போராட்டத்தை நடத்தவில்லை என்னும்போது, அதில் முத்துராமலிங்கத்திற்கு இடமேது?

– வாலாசா வல்லவன்

செப்டம்பர்

புதிரை வண்ணார்கள்

தோழர்களே! அடிமைத்தனத்தில் பல வகையுண்டு. மனரீதியானது, உடல் ரீதியானது, விருப்பப்பட்டு இருப்பது, விருப்பமின்றி தள்ளப்படுவது, வெளிவரக்கூடியது, வெளிவரமுடியாதது, சித்ரவதையானது, சுகமான... இப்படியாகப் பல வகை.... பள்ளர், பறையர் மற்றும் அருந்ததியர்கள் ஆதிக்க சாதியினருக்கு அடிமைத் தொழில் செய்கிறார்கள். அந்த அத்தனை அடிமை வேலைகளையும் தலித்துகளுக்கு செய்வதே புதிரை வண்ணார்களின் வேலை. ஊர் முழுவதும் சுற்றி மூட்டை மூட்டையாக அழுக்குத் துணிகளை எடுத்து வந்து பளிச்சென வெளுத்துக் கொடுத்தாலும் கூலி என்று எதுவும் இவர்களுக்கு கிடைக்காது. பழைய கஞ்சி கொடுத்தால் அதுவே பெரிய விஷயம். தவிர, தலித் மக்களுக்கு சவரம் செய்ய வேண்டியது புதிரை வண்ணார்களின் "சமூகக் கடமை'(!) தலித் மக்களின் பிணத்தை குளிப்பாட்ட வேண்டியது புதிரை வண்ணார்கள் மறுக்கக் கூடாத "பொறுப்பு.' பள்ளப்பய, பறப்பய, சக்கிலியப்பய என சாதிப் பெயர்களால் தலித்துகள் தாழ்த்தப்படுவது போல "புதரப்பய' என்ற சொல், தலித்துகள் மத்தியில் மிகச் சாதாரணமாகப் புழக்கத்தில் உள்ளது.

– மீனாமயில்

அக்டோபர்

சாதியை ஒழிக்கும் வழி

இந்நூலை அம்பேத்கர் எழுதி 70 ஆண்டுகள் கடந்து விட்டன. அதுமட்டுமல்ல, அம்பேத்கர் லட்சோப லட்சம் மக்களுடன் தாம் வாழும் காலத்திலேயே சாதியை ஒழித்தும் 50 ஆண்டுகள் (14.10.1956) நிறைவடைந்து விட்டன. இருப்பினும் சாதியை ஒழிப்பது குறித்தும், தீண்டாமையை அழிப்பது குறித்தும் நாம் புதுப்புது வழிகளில் போராடிக் கொண்டும், விவாதித்துக் கொண்டும் இருக்கிறோம். ஆனால், அம்பேத்கரின் வழியை நாம்பின்பற்றினோமா? என்று நம்மை நாமே கேட்டுக்கொள்வதற்கான தருணத்தை, இந்த நூலை மீண்டும் வெளியிடுவதன் மூலம் உருவாக்குகிறோம். "தலித் முரசின்' ஓர் இதழை இதற்காக நாம் அர்ப்பணித்திருக்கிறோம். நம் லட்சியத்தைப் பிரகடனப்படுத்துவதோடு, தொல்குடி மக்களின் சீரிய செயல்திட்டமான இச்சிந்தனையை, திக்கெட்டும் பரப்புவதும்தான் நம் தலையாய நோக்கம்.

– தலையங்கம்

நவம்பர்

ஜாதிய கொண்டாட்டங்கள்

பார்ப்பன எதிர்ப்பு, திராவிட இயக்க அரசியல், பிற்படுத்தப்பட்டவர்கள் நலன் என்ற அடிப்படையில் மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டு, தமிழகத்தில் கடந்த அறுபது ஆண்டு காலமாக அரசியல் நடந்து வருகிறது. 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே தமது சுயமரியாதைக்கும் அரசியல் உரிமைகளுக்கும் போராடி வரும் ஒடுக்கப்பட்ட மக்கள் இன்றைக்கும் தனிச் சேரிக் குடிகளாகவும், மனித மலத்தை மனிதனே சுமக்கும் கொடுமைகளை "தொழில்' என்ற பெயரில் சுமப்பவர்களாகவும், சாதி இந்துக்கள் என அறியப்படுகிற பிற்படுத்தப்பட்ட அனைத்து சாதியினராலும் ஒடுக்கப்படுகிறவர்களாகவும் ஒவ்வொரு நாளும் தீராத துன்பத்தில் உழன்று வருகின்றனர். தென்மாவட்டங்களில் முத்துராமலிங்கத்திற்குப் பிறகு இத்தகைய ஒடுக்குமுறைகள் அரசியல்மயப்படுத்தப்பட்டு, அமைப்பாக்கப்பட்ட வன்முறைகளாக நாள்தோறும் ஏதேனும் ஓர் ஊரில் நிகழ்ந்த வண்ணமே உள்ளன. இத்தகைய வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்த, கடுமையாக ஒடுக்க, சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூட இதுவரையில் எந்த அரசுகளும் முன்வரவில்லை.

– கா. இளம்பரிதி

டிசம்பர்

உச்ச நீதிமன்றம் என்ன கிழித்துவிடும்?

இந்தியாவில் உள்ள 14,500 ரயில்களில் நவீன கழிப்பறை வசதிகள் இல்லை. ரயில் நிற்குமிடங்களிலேயே பலரும் கழிவறைகளைப் பயன்படுத்துவதால், கழிவுகள் தண்டவாளத்தில்தான் விழுகின்றன. இதன் மூலம் இந்தியாவில் ஒரு நாளைக்கு 2.74 லட்சம் லிட்டர் மனிதக் கழிவுகள் வெளியாகின்றன. எனவே, 6,856 ரயில் நிலையங்களில் கையால் மலமள்ளும் வேலை கட்டாயமாகிறது. 1993 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி கையால் மலமள்ளும் பணி தடை செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தை அவமதிப்பதில் ரயில்வே துறை முதலிடம் வகிக்கிறது. அதனால் என்ன?

கிராமங்களுக்குப் போ...

சமூக நோக்கத்துடன் கூடிய கல்வியும், சமூகத் தொண்டும், மனிதநேயமுமே இன்றைய இந்திய ஜனநாயகத்திற்கான அடிப்படைத் தேவை. இதனை எந்த ஒரு குடிமகனும், படிப்பாளியும் குறிப்பாக மருத்துவ மாணவர்களும் மறுக்க முடியாது, மறுக்கவும் கூடாது. கிராமப்புற சேவை என்பதை மருத்துவ மாணவர்களுக்கு மட்டுமின்றி, தொழிற்கல்வி பெறும் அனைத்து மாணவர்களும் கிராமப்புறங்களில் ஈராண்டுகள் கட்டாயமாகச் சேவை செய்ய வேண்டுமென அரசும் தொடர்புடைய பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்விசார் நிறுவனங்களும் சட்டமியற்ற வேண்டும் என்பது, இந்நாட்டின் உழைக்கும் மக்களின் எதிர்பார்ப்பாகும்.

– அய். இளங்கோவன்

சமூக நீதி பெற்றவர்களும் கேட்பவர்களும்

போராடிப் பெறப்படும் அரசுப் பணியிடங்களில் அமரும் சமூக நீதிப் பயனாளிகள், தாம் அப்பணியிடங்களில் அமர்ந்தவுடன் தங்கள் பணியிடங்களைப் "பதவி'களாகக் கருதுவது மிகவும் வேதனைக்குரியது. பதவிகளில் அமர்ந்த பின்னர், தாம் பிறந்த சமூகத்தைப் பற்றி அக்கறைப்படுபவர்களும், அதற்குத் தாம் செய்ய வேண்டிய பதிலுதவியைச் செய்பவர்களும் எண்ணிக்கையில் மிகக் குறைவே. இந்தப் பதவிகளைப் பெறக் காரணமாக இருந்த சமூகத்திற்கு மறுபலன் தர வேண்டியது, ஒவ்வொரு சமூக நீதிப் பயனாளியின் கடமையாகும்.

– சு. சத்தியச் சந்திரன்

என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் மற்ற பெண்களைப் போலவே நானும் கஷ்டப்பட்டிருக்கிறேன். ஆனால், எல்லாரும் துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும்போது என்னுடைய துயரத்தைப் பற்றி மட்டும் நான் எப்படிப் பேச முடியும்? எப்படி இருப்பினும் என் சமூகத்தின் வேதனைகளே எனக்கு எப்போதும் முக்கியமானதாகப் படுகிறது. சொந்த வேதனைகளைவிட நான் என்னை முழுமையாக என் மக்களுடன் அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

– பேபி காம்ப்ளே: "என் எழுத்துகளை இருபது ஆண்டுகளாக மறைத்து வைத்தேன்'