திராவிடர் மொழி பேசும் திராவிடரைப்பற்றிச்           சிறிது கூற ஆசைப்படுகிறேன். "திராவிடம்' என்பது நமது நாட்டினுடைய பெயராகும். "திராவிடர்' என்பது இந்நாட்டின் பழங்குடி மக்கள் இனத்துக்கு ஏற்பட்ட உலகப் பெயராகும். திராவிடர் என்பதை நம்மில் சிலர் மறுக்கிறார்கள்; வெறுக்கிறார்கள். திராவிடர் என்பது என்ன – நாம் கற்பித்த ஒரு பெயரா? இது இன்று நேற்று ஏற்பட்டதல்லவே! ஆரியர் என்ற பெயர் தோன்றிய அன்று ஏற்பட்ட பெயர்தானே திராவிடர் என்பது? நீக்ரோ, மங்கோலியர் என்ற பெயர்கள் ஏற்பட்டதும் அன்றுதானே? திராவிடர் என்ற பெயரை மநுதர்ம நூலில் காணலாமே! ராமாயணத்தில், பாரதத்தில்கூட இதற்கு ஆதாரம் உண்டே! இந்த நாட்டைப் பொருத்தவரையில் இதுவரைக்கும் இருந்துவரும் போராட்டமெல்லாம் ஆரியர் – திராவிடர் போராட்டமே ஒழிய, வடமொழி – தென்மொழிப் போராட்டமல்லவே! இதற்கு எவ்வளவோ ஆதாரங்கள் காட்டலாமே!

வடநாட்டு – தென்னாட்டுப் போராட்டம் இன்று நேற்று ஏற்பட்டதல்ல; புராண கால முதற்கொண்டு இருந்து வந்திருக்கிறது. இதிகாசங்களுக்கெல்லாம் முந்தியது புராணம்; புராணங்களுக்கெல்லாம் முதன்மையானது கந்தபுராணம். கந்தப்புராணத்திலேயே இந்த வடநாடு – தென்னாடு போராட்டம் தொடங்கப்பட்டு விட்டது. அதிலுள்ள சிறு கதையைக் கேளுங்கள். கதை கற்பனையாக இருந்தாலும் அதிலுள்ள கருத்தைக் கவனித்துப் பாருங்கள்.

ஆரியக் கடவுளாகிய சிவனுக்கும் (ஆரியர் தலைவன்) பார்வதிக்கும் வடநாட்டில் திருமணம் நடக்கிறது. கவனித்துப் பாருங்கள், அப்போது தேவர்கள் (வடநாட்டவர் – ஆரியர்கள்) தென்னாடு உயர்ந்துவிட்டதையும், வடநாடு தாழ்ந்து விட்டதையும் சிவனிடம் வருத்தத்துடன் கூறுகிறார்கள். சிவன் தென்னாட்டைத் தாழ்த்த வேண்டி அகத்தியனை அனுப்புகிறார்; அகத்தியன் தெற்கு நோக்கி வருகிறான்; திராவிட நாட்டின் வடக்கெல்லையான விந்தியமலை அவனைத் தடுக்கிறது. அகத்தியன் சினந்து அம்மலையை அழுத்திவிடுகிறான் (அங்குள்ள மக்களை வென்றுவிடுகிறான்). மேலும் தெற்கு நோக்கிச் செல்கிறான்; வாதாபியும் வில்லவனும் தடுக்கிறார்கள். அவர்களையும் வென்று கொண்டு போய்த் தென்னாட்டில் ராவணனுடைய ஆதிக்கத்தைத் தகர்த்தெறிந்து, தமிழை உண்டாக்கினான். அதாவது, முதலில் மொழியில்தான் அகத்தியன் கை வைத்தான்; மொழியை ஒழிக்கும் வேலைதான் அவர்களின் முதல் வேலை; இதுதான் அவர்களின் நடைமுறைப் பழக்கம்.

இந்த வடநாட்டு – தென்னாட்டுப் போராட்டம், நான் தொடங்கியதல்ல. கந்தபுராண காலத்திலே வாதாபியில் தொடங்கப்பட்டது. இது, ஆரியப் புராணம் கூறுவது. அன்று தொட்டு இடைவிடாது இருந்துவரும் இயற்கைப் போராட்டம்தான் இது. ஆரியம் ஒழிந்து, ஆரியர்கள் அத்தனைப்பேரும் திராவிடர்களாகும் வரையிலும், அல்லது அவர்கள் அத்தனைப்பேரும் திராவிட நாட்டை விட்டு வெளியேறும் வரையிலும் இப்போராட்டம் இருந்தே தீரும். உடற்கூற்று வல்லுநர்கள் அந்தந்த நாட்டுத் தட்பவெப்பத்திற்கேற்ப அமைந்த அங்க, மச்ச அடையாளங்களைக் கொண்டு பாகுபடுத்திக் கொடுத்த இனப்பெயர்கள்தாமே ஆரியர் – திராவிடர் என்பவை!

இப்பிரிவுகள் தேவர்களாலோ, கடவுளாலோ உண்டாக்கப்பட்ட பிரிவுகள் அல்லவே. அறிவுள்ள மக்களால் பிரிக்கப்பட்டு, மற்றவர்களால் ஒப்புக்கொள்ளப்பட்டு, வழக்கத்தில் இருந்துவரும் பெயர்தாமே இவை? இவர்களைப் பிரிக்க ரத்தப் பரீட்சை செய்ய வேண்டியதில்லையே! ஆடையின்றிப் பிறந்தமேனியாய் நிறுத்தினால்கூட – இவன் ஜப்பானியன், இவன் நீக்ரோ, இவன் திராவிடன், இவன் ஆரியன் என்று பிரித்துவிடலாமே! நாய்களைப் பிரிக்கவில்லையா நாம்? இது கோம்பை; இது "புல்டாக்'; இது சிப்பிப்பாறை; இது ராஜபாளையம்; இது சீமை – என்று? குதிரையைப் பிரிப்பதில்லையா நாம்? இது அரபிக் குதிரை; இது ஆஸ்திரேலியா குதிரை; இது வேதாரணியத் தட்டு – என்று?

இவற்றையெல்லாம் பிரிக்கும்போது மக்களைத்தானா பிரிக்க முடியாது? இது போகட்டும். நாம் பிறவி பார்த்து இனப்பிரிவினை செய்யும்படிக் கேட்கவில்லையே? அவரவர்கள் கொண்டாடும் உரிமைகளைக் கொண்டுதானே பிரிக்கும்படிச் சொல்லுகிறோம்!

தமிழர் என்பது மொழிப் பெயர். திராவிடர் என்பது இனப்பெயர். தமிழ் பேசும் மக்கள் யாவரும் தமிழர் என்ற தலைப்பில் கூற முடியும். ஆனால், தமிழ்பேசும் அத்தனைப் பேரும் திராவிடர் ஆகிவிட முடியாது. இனத்தால் திராவிடனான ஒருவன் எந்தச் சமயத்தைச் சார்ந்தவனாயிருந்தாலும், எந்த மொழி பேசுபவனாயிருந்தாலும் அவன் திராவிடர் என்ற தலைப்பில்தான் சேருவான். ஆகையால், திராவிட மொழி தமிழ் என்ற காரணத்திற்காக, தமிழ் பேசும் திராவிடன் அல்லாத ஒருவன் – மொழி காரணமாக மட்டுமே தன்னைத் திராவிடனென்று கூறிக்கொள்ள முடியாது.

 – தொடரும்

நூல் : "மொழியாராய்ச்சி' வள்ளுவர் பதிப்பகம், பவானி 1948