indian_child_640

(நவீன இந்தியாவின் இன்னொரு முகமே இக்குழந்தை. மத்தியப் பிரதேசத்தின் சிவபுரி மாவட்டத்தில் உள்ள மறுவாழ்வு மய்யம் ஒன்றில் இரண்டு வயது நிரம்பிய ரஜினியின் எடையை சுகாதாரப் பணியாளர் ஒருவர் குறிக்கிறார். நன்றி: அவுட்லுக்)

பசிக்கும்போது சாப்பிட ஏதுமில்லை
வயிற்றை நிரப்பிப் பசியாற்ற காற்றுக்கு வக்கில்லை
உடல் வதங்கி தோல் சுருங்கிய தாயின் மார்புகளில் புண்கள்
நடமாடும் சவப்பெட்டிகளாய்
சத்தற்ற குழந்தைகள்
நல்ல உணவின்றி நாற்பது கோடி குழந்தைகள்
தூய குடிநீருக்காய் தங்களை இழக்கும் குழந்தைகள்
உதிரும் இலைகளாய்ப் பழுத்து விழும் தளிர்கள்
பாற்கடல் கடைந்து அமுதம் தயாரித்தவர்கள்
அதை டப்பாக்களில் அடைத்து ஏற்றுமதி செய்கின்றனர்
பசி என்று கேட்டபோதோ சிலர்
வானத்துப் பறவைகளைப் பார்க்கச் சொல்லிவிட்டனர்
அவை விதைப்பதும் இல்லையாம் அறுப்பதும் இல்லையாம்
கற்சிலைகள்மீது கவிழ்க்கும் நெய்யும் பாலும் பழமும்
பேசும் மனிதக் குழந்தைகளுக்கு இல்லையா
என்றபோது
மொட்டைப் போட்டால் பஞ்சாமிர்தத்திற்கு எங்கே போவது
என வினாயெதிர் வினாவுகின்றனர்
உலக நாடுகள் ரொட்டியை வைத்திருக்கும்
விமானங்களுக்கு எரிபொருளுக்காக
போருக்குத் தயாராகின்றன
எல்லாம் முடிந்து உணவு வரும் வேளையில்
இறந்திருக்கும் குழந்தைகளை கழுகுகள்
கொத்திக் கொண்டிருக்கலாம்

அதுவரை
சிறப்பாகத் தயாரிப்போம்
நம் அனுதாபச் செய்திகளை
கண்டன அறிக்கைகளை
'அனைவருக்கும் உணவு'க்கான சட்ட முன்வரைவை!