சனவரி

பதுங்கி இருக்கும் வன்மம்

சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட தலித் மக்களையும், சிறுபான்மைச் சமூகத்தையும் காழ்ப்புணர்வுடன் புறந்தள்ளுகின்ற பார்ப்பன ஊடகங்கள், தங்களை "நடுநிலை நாளேடு' எனவும் வர்ணித்துக் கொள்ளுகின்றன. உரிமைகளுக்காக அரசையும் சமூகத்தையும் எதிர்த்துப் போராடி வரும் தலித் – இசுலாமிய மக்களை வன்முறையாளர்கள் என்ற முத்திரை குத்தி சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தி, திட்டமிட்டுச் செய்திகளை வெளியிட்டு வரும் இப்பார்ப்பன ஊடகங்கள், பாதிக்கப்பட்ட மக்களின் வாதங்களையும் பதிலுரைகளையும் திட்டமிட்டுப் புறக்கணிக்கின்றன.

– யாக்கன்

பொறியில் சிக்கிய வல்லரசு

1980 களில் அமெரிக்கா அடிமை முறையை ஒழித்துக் கட்டியது. அடிமை முறை இருக்க வேண்டும் என்பதற்காக அமெரிக்க அரசாங்கத்திற்கு எதிராக ராபர்ட் ஈ.லீ. என்ற ராணுவத் தளபதி நடத்திய ஆயுதமேந்திய கிளர்ச்சியில் ஆறு லட்சம் அமெரிக்கர்கள் மடிந்தனர். அவனையும் கூட அன்றைய அமெரிக்க அதிபர் யுலிசெஸ் கிரான்ட் மரியாதையுடன் நடத்தினார். ஆனால், சதாம் உசேன் நெப்போலியனோ, ராபர்ட் லீயோ அல்ல. ஜார்ஜ் புஷ் விலிங்டனோ, யுலி ரிசஸ் கிராஸ்ட்டோவோ அல்ல. எனினும் தண்டிப்பதோ, மன்னிப்பதோ வெற்றியாளர்களைப் பொருத்ததுதான். சர்வதேசப் பார்வையாளர்களும் பார்க்கும்படியான ஒரு விசாரணை நடத்தப்பட்டால், சதாம் மீது தொடுக்கப்பட்டுள்ள குற்றங்கள் அனைத்திற்கும் அமெரிக்க ஆட்சியாளர்கள் உடந்தையாக இருந்தது அம்பலப்பட்டுவிடும்.

- எஸ்.வி. ராஜதுரை

பிப்ரவரி

ஜல்லிக்கட்டு வீர விளையாட்டா?

வதைப்படுத்தி விளையாடுவதுதான் நம் தமிழரின் பண்பாடா? விவசாயத்திற்கு மாடுகளை உற்பத்தி செய்யும் காளையை நேசிப்பவர், அந்தக் காளைக்குச் செய்யும் குறைந்தபட்ச நன்றி இதுதானா? ஜல்லிக்கட்டு என்பது, தலித்துகளுக்கும், தலித் அல்லாதவர்களின் உறவுக்கும், விடுதலைக்கும் எதிரான ஒரு விளையாட்டு. வீரம் என்கிற பெயரில் கிராமங்களில் உள்ள தலித்துகளை ஒடுக்குவதற்கும் பகைமை உணர்வை வளர்ப்பதற்குமே இது பயன்படுகிறது. சாவுக்குப் பறையடித்து, இழவு செய்தி சொல்வதை நிறுத்தியது போல், ஜல்லிக்கட்டு காளையை அழைத்துவர பறையடிப்பதை நிறுத்த வேண்டும்.

– அன்பு செல்வம்

மார்ச்

பகுத்தறியுங்கள்

ஆடு, கோழிகளைப் பலியிடுவதைத் தடுக்கும் சட்டத்தைக் கொண்டு வந்த ஜெயலலிதா, மக்களின் வழிபாட்டு முறையில் தலையிடுவதால், தேர்தலில் ஆண்டவன் நம்மைத் தண்டித்துவிடுவானோ என்று எண்ணி அச்சட்டத்தை திரும்பப் பெற்றுவிட்டார். ஆனால், தேர்தல் நாடகத்திற்காகக்கூட மதமாற்றத் தடைச் சட்டத்தை அவர் திரும்பப் பெறத் தயாராக இல்லை. ஜெயலலிதா அரசு இத்தடைச்சட்டத்தைக் கொண்டு வந்ததன் நோக்கம், இது இந்துத்துவ செயல் திட்டத்தின் ஒரு பகுதிதான் என்று சொல்லி சட்டத்தை எதிர்த்தவர்கள், மறுபுறம் உழைக்கும் மக்களின் பண்பாடு – வழிபாட்டு முறை என்ற பெயரில் அந்த மூடத்தனத்தை ஆதரிக்கச் செய்தனர்.

கடவுள் மறுப்பும் மூட நம்பிக்கை ஒழிப்புமே அடிப்படைப் பணிகள். சாதி ஒழிப்பை அதிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. கடவுளும் மதமும் சடங்குகளுமே சாதி அமைப்பின் அஸ்திவாரம். அதன் மூலம் எழுந்த சிந்தனைதானே சாதி. ஆக, விளைவுகளை மட்டுமே கண்டித்து, வேர்களை விட்டுவிடுவது எப்படி சரியாகும்? மக்களின் நம்பிக்கைகளுக்கு மதிப்பளிப்போம் என்று சொல்ல ஆரம்பித்தால், இறுதியில் சாதியையும் ஆதரிக்கும் ஆபத்தில்தான் அது முடியும். எச்சரிக்கை!

- தலையங்கம்

ஏப்ரல்

அம்பேத்கர் தேசம்

இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்கின்ற பகுதிகளில் தெருவுக்குத் தெரு, மூலைக்கு மூலை சிலைகளாக வைத்துப் போற்றப்படுகின்ற ஒரு மாமனிதரை, மாபெரும் விடுதலையை அம்மக்களுக்குப் பெற்றுத் தந்திருக்கிற ஒரு போராளியை, இந்தியா என்கிற உலகின் மாபெரும் ஜனநாயக அரசு செயல்பட வழிகாட்டு நெறிகளான சட்டத் தொகுப்பை வழங்கிய ஒருவரை ஒரு பெரும் தலைவராகக் கருதாத இந்து சாதிய சமூகத்தின் நிலை முரண்பாடானது, வெட்கக் கேடானதும்கூட.

– அழகிய பெரியவன்

டாக்டர் அம்பேத்கருக்கு நோபல் பரிசு

அம்பேத்கரை சட்ட நிபுணராக நாம் அறிவோம்; சிறந்த அரசியல் தலைவராக அறிவோம். ஆனால், அவர் மிகச் சிறந்த பொருளியல் வல்லுநராகவும் இருந்தார் என்பது நம்மில் பலருக்குத் தெரியாது. தனது பல்வேறு பணிகளுக்கிடையே அவர் பொருளியல் தொடர்பான முக்கியமான ஆய்வுகளை மேற்கொண்டார். தமது ஆய்வுரைகளை நூல்களாகவும் வெளியிட்டார். அவர் தொடர்ந்து அக்கறை செலுத்தி வந்தது பொருளியல் துறையின் மிக நுணுக்கமானதொரு பகுதியõக விளங்கும் "பொது நிதி' என்பதில்தான். மிகச்சிறந்த பொருளியல் சிந்தனையாளரான அம்பேத்கரின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அவருக்குப் பொருளியல் துறைக்கான நோபல் பரிசினை வழங்குவதே சரியாக இருக்கும். அவர் பொருளியல் குறித்து எழுதிய காலத்தில் பொருளியல் துறைக்கு நோபல் பரிசு அளிக்கும் வழக்கம் இல்லை. ஆனால், இன்று அது உள்ளது. அண்ணல் அம்பேத்கருக்கு அத்தகைய பரிசு கிடைப்பது மிகச் சரியானதாக இருக்கும்.

– வ. கீதா

மே

“சாவறதுக்குள்ள செருப்பையாவது போட்டுட்டு சாகணும்னு வச்சிருக்கேன்''

உட்சாதிகளாகப் பிரிந்து, தனித்தனியாக எதிர்க்கின்ற தலித்துகளின் பிரச்சனை பொதுவானது என்பதை உணர வேண்டியுள்ளது. தனித்தனியாகப் போராடுவது என்பது, புரட்சியாளர் அம்பேத்கரின் சாதி ஒழிப்புக்கு எதிரானது. சாதி, தீண்டாமைப் பிரச்சனை என்று வருகின்றபோது பள்ளர், அருந்ததியர், பறையர், துரும்பர் (புதிரை வண்ணார்), குறவர் என்கிற வேறுபாடுகள் இல்லாமல் தலித்துகள் மட்டுமல்லர்; தலித் இயக்கங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து குரல் எழுப்ப வேண்டியுள்ளது. இதுவே தலித் இயக்கங்களுக்கு விடப்பட்டுள்ள நூற்றாண்டு சவால். அதே நேரத்தில், தலித் விடுதலையில் தோழமை கொள்கிற தலித் அல்லாத இடதுசாரி சிந்தனையாளர்கள், பெரியார் இயக்கத் தோழர்கள் போன்றோரையும் நமக்கான நேச சக்திகளாக அடையாளம் கண்டு, அவரவர் பகுதியில் அவர்களை சாதி ஒழிப்புக்கு எதிரான செயல் நடவடிக்கைக்கு உட்படுத்த வலியுறுத்த வேண்டியுள்ளது.

– அன்பு செல்வம்

 “அம்பேத்கர் சொன்னதை யார் செய்கிறானோ அவனே விடுதலை வீரன் அம்பேத்கரியத்தை கையில் எடுப்பவர்கள்தான் சுதந்திரமாகவும், நிமிர்ந்தும் வாழ முடியும். எங்கெல்லாம் அம்பேத்கரின் பிறந்த நாள், நினைவு நாள் விழா கொண்டாடவில்லையோ அங்கெல்லாம் "ஜாதி நாய்' ஆதி திராவிடனைக் கடிக்கும். அம்பேத்கர் பேரை சொல்ற இடத்துல ஜாதி நாய் வராது'' – மூர்த்தி தாத்தா : "அம்பேத்கர் சொன்னதை யார் செய்கிறானோ அவனே விடுதலை வீரன்'

“சி.பி.எம். கட்சியின் மொழிக் கொள்கை, ஜாதி – வர்க்கம் பற்றிய தெளிவின்மை இவற்றையெல்லாம் பற்றி பல சந்தேகங்கள் எழுந்தன. இதற்கெல்லாம் உச்சக்கட்டமாக இலங்கைப் பிரச்சனையில் அவர்கள் காட்டிய மெத்தனம் என்னை மிகவும் ஆத்திரமடைய வைத்தது. இதில் எவ்வித சமரசப் போக்கும் கூடாது என்று நான் முடிவு கட்டினேன்'' – கே. சந்துரு : “இந்திய சிறைகள் இன்னும் கற்காலத்திலேயே உள்ளன' 

சூன்

கொல்லும் ஜாதி; கொதிக்கும் காளப்பட்டி

இந்தியாவின் 14 ஆவது நாடாளுமன்றத்திற்கான தேர்தல் முடிந்து, மதவெறிக்கு எதிராக தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் ஆட்சிப்பீடத்தைப் பங்கு போட்டுக் கொள்கின்றன. ஆனால், இவர்கள் அரியணை ஏற தங்கள் உழைப்பை நல்கிய தலித்துகள் மீது நடக்கும் சாதி வெறிக்கு எதிராகக் குரல் கொடுப்பதற்கு எந்தக் கட்சிக்கும் வக்கின்றிப் போய்விட்டது. "எங்கள் கட்சியிலும் தலித்துகள் இருக்கிறார்கள்' என்று வாய்கிழிய பேசியவர்கள் வாயடைத்துப் போய் நிற்கிறார்கள். ஏன்? வேற்றுமாநிலமான குஜராத்தின் மதவெறிக்கு எதிராகக் குரல் கொடுக்கும் மதச்சார்பின்மைவாதிகள், தமிழ்நாட்டின் காளப்பட்டியில் சாதி வெறியைக் கண்டிக்கத் திராணியற்று இருப்பது எதைக் காட்டுகிறது? மதவெறி எதிர்ப்பாளர்கள் சாதி வெறியர்களாக இருப்பதைத்தானே காட்டுகிறது!

– கு. ஜக்கையன்

அதிகார வலை

தமிழக அரசுப் பணியாளர்களில் சுமார் 2 லட்சம் பேர் தலித்துகள். இது தலித் மக்கள் தொகையில் சுமார் 2 சதவிகிதம்; தவிர, மத்திய அரசு ஊழியர்கள், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனப் பணியாளர்கள் என இன்னும் கொஞ்சம் கூடும். மத்திய அரசில் பணிபுரியும் தலித் ஊழியர்களுக்காகவாவது "எஸ்.சி./ எஸ்.டி. தொழிற் சங்கங்கள்' மற்றும் பணியாளர்கள் நலச்சங்கங்கள்' உள்ளன. இதில் பல நலச் சங்கங்கள் தங்களை "அரசியல் சார்பற்றவை' என யோக்கியமாக அறிவித்துக் கொண்டுள்ளன. இவற்றின் பணிகள் எல்லோரும் அறிந்த அந்த இரண்டு நாட்கள் கொண்டாட்டம்தான். தொழிற்சங்கங்களாக உள்ளவைகளின் செயல்பாடுகள் கூடுதல் ஆய்வுக்குரியவை.

– கவுதம சன்னா

சூலை

அம்பேத்கர் கல்வி

கல்லூரி, பல்கலைக் கழக மாணவர்களும், தலித் இயக்கப் போராளிகளும், பெண்கள் அமைப்புகளும், அணி அணியாய் சேர்ந்து அம்பேத்கர் கல்வியைக் கற்றாக வேண்டும். புரட்சியாளர் அம்பேத்கரின் அடங்க மறுத்த போராட்டங்களையும், அத்து மீறிய உத்திகளையும், பேச்சுகளையும், எழுத்துகளையும் மூடிமறைக்க முற்பட்ட கதவுகளே இப்போது உடைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளன. இனி அடியெடுத்து ஆர்ப்பரித்து, எழுச்சியுடன் உள்ளே செல்ல வேண்டியது நாம்தான்.

– அன்பு செல்வம்

புரையோடியிருக்கும் பொது சுகாதாரம்

தலித்துகளின் உயிர்கள் மதிப்பில்லாதவை என்று பிற சமூகத்தினரால் கருதப்படுவது போல, அவர்கள் உடல் நலனும் முக்கியமற்றது என்று அரசு கருதுகிறது போலும். உலக சுகாதார நிறுவனத் தலைவர்களில் ஒருவரான ஜெப்ரியின் கருத்து ஆழமானது. “மக்களின் சுகாதாரத்துக்காக செலவழிக்கப்படும் பணம் பொருளாதார முன்னேற்றத்துக்கான ஒரு முதலீடு'' என்கிறார் ஜெப்ரி. இந்நாட்டின் 19 சதவிகிதம் உழைக்கும் ஏழை தலித் மக்கள் நோயாளிகளாக இருந்தால், இந்தியாவின் முன்னேற்றம் பெரிதும் பாதிக்கப்படும் என்பது உண்மை. ஆனால், அரசு மருத்துவத் துறையைப் பொருத்தமட்டில், நகர்ப்புறங்களில்தான் அதிக அக்கறை காட்டுகிறது. படுக்கை வசதியுடனான மருத்துவமனைகள், மருத்துவர்களின் எண்ணிக்கை, அரசு செலவழிக்கும் மருத்துவ மற்றும் பொது சுகாதாரத்துக்கான நிதி அனைத்தும் நகர்ப்புறங்களில் அதிகம் காணப்படுகின்றன. இதன் மூலம் எந்த நவீன வசதிகளும் கிராமப்புற தலித் மக்களுக்கும் ஏழைகளுக்கும் கிட்டாமல் போய்விடுகிறது.

– அழகிய பெரியவன்

வேட்டையாடப்படும் விவசாயி

"தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைப்பதால்தான் இது தொடர்கிறது' என்று சொல்லப்படும் கருத்துதான் இதில் கொடூரமான செய்தி. என்னே முரண்பாடு! ஒருவர் தற்கொலை செய்து கொண்டா லாபத்தை அடைய முடியும்? ஒரு விவசாயி அரசு கொடுக்கும் ஒரு லட்சத்திற்காக குழந்தைகளுடனும் மனைவியுடனும் வாழ்வதற்கு பதிலாக செத்துப் போகவா விரும்புவார்? இன்னொரு உண்மையையும் நாம் குறிப்பிட்டாக வேண்டும். 2000 – 01 ஆண்டுகளில் பெருமளவு தற்கொலை நடைபெற்றபோது, இழப்பீடுகள் தரப்படவில்லையே! இத்தகைய கருத்தியல்கள் நம்மிடையே தேய்ந்து வரும் மனித நேயத்தையே சுட்டிக் காட்டுகின்றன.

– பி. சாய்நாத்

அணு உலைகள் செயல்பாட்டில் இல்லாதபோது அவற்றைப் பராமரிப்பவர்கள் மற்றும் மறு சுழற்சி எந்திரங்களைப் பராமரிப்பவர்களுக்கு ரத்தப் புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. கல்பாக்கத்தில் இந்த வேலைகளை ஒப்பந்தத் தொழிலாளர்கள் செய்வார்கள். இவர்களில் 75 சதவிகிதம் பேர் தலித்துகள் என்பது குறிப்பிடத்தக்கது.

– டாக்டர் புகழேந்தி: "கல்பாக்கம் அணுஉலை இந்திய அணு ஆயுதத் திட்டத்துடன் தொடர்புடையது'

ஆகஸ்ட்

நீதிமன்ற அவமதிப்பு

"அனைத்து இந்துக்களும் கண்டதேவி தேர்த் திருவிழாவின் போது வடம் பிடிக்கலாம்' என்று சென்னை உயர் நீதிமன்றம் 1999 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. இத்தீர்ப்பினை நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு மாவட்ட நிர்வாகத் துறைக்கும், காவல் துறைக்கும் உள்ளது. ஆகவே, இத்தீர்ப்பினை நடைமுறைப்படுத்தவும், நடைமுறைப்படுத்தும்போது வன்முறையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கும் பொறுப்பும் மாவட்ட காவல் நிர்வாகத் துறைக்கு உள்ளது. ஆனால், இதுநாள் வரை உரிய நடவடிக்கையை மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் மேற்கொள்ளவில்லை. ஆகவே, தமிழக அரசு மாவட்ட ஆட்சித் தலைவர் மீதும், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் மீதும் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

– உண்மை அறியும் குழு

“இந்தியனே வெளியேறு''

உயிரை உலுக்கும் நிர்வாணப் போராட்டத்தின் மூலம் தங்களின் தீராத கோபத்தையும், நீங்காத சோகத்தையும் உலகிற்கு உணர்த்த முற்பட்டிருக்கின்றனர் மணிப்பூர் பெண்கள். சூலை 10, 2004 அன்று இரவு நடந்த கொடுமைதான் மணிப்பூர் பெண்களை நிர்வாணப் போராட்டத்துக்குத் துணிய வைத்தது. தங்ஜம் மனோரமா தேவி என்ற 32 வயதுப் பெண்ணை தேடி வந்த ராணுவ "வீரர்'கள் சிலர், வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த மனோரமாவை தரதரவென்று இழுத்துப் போட்டு அடித்துத் தாக்கியதோடு, அந்த ராத்திரி வேளையில் விசாரணைக்கென்று அழைத்துப் போனார்கள். மறுநாள் அதிகாலை மனோரமாவின் பிணம் பக்கத்து கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டது. உடம்பு முழுக்க பலாத்காரத் தடயங்கள். புல்லட் துளைகள். தங்கள் உடல் வெறியைத் தீர்த்துக் கொள்ள அந்தச் "சீருடைக் குற்றவாளி'கள் மனோரமாவுக்கு கொடுத்த பட்டம் – "தீவிரவாதி'

"அங்கீகரிக்கப்பட்ட அயோக்கியர்'களாக ஆயுதப் படையினர் தங்கள் மீது நிகழ்த்தும் தொடர் வன்முறைகளைக் கண்டு கொதித்துப் போன மணிப்பூர் பெண்கள் "ராணுவத்தை எங்கள் மண்ணைவிட்டு வெளியேற்று' எனப் போராட்டத்தில் குதித்தனர். "இந்திய ராணுவம் எங்கள் சதையைத் தின்கிறது' – "இந்திய ராணுவம் எங்களைப் பாலியல் வன்முறை செய்கிறது' என்று தங்கள் உடைகளைக் களைந்து, வெற்றுடம்புடன் "அசாம் ஆயுதப் படைப்பிரிவு' அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். மணிப்பூர் பெண்களின் சீற்றம் பலர் செவிகளையும் அறைந்தது. அந்தக் காட்சி பல கண்களை உறுத்தியது. மணிப்பூர் அரசு நீதிமன்ற விசாரணைக்கு ஆணையிட்டிருப்பதோடு, இந்திய ராணுவத்தை வெளியேற்ற மத்திய அரசை வலியுறுத்த வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகியிருக்கிறது.

– ஜெனிபர்

செப்டம்பர்

பெண்கள் எழுதிய தீர்ப்பு

தங்ஜம் மனோரமா தேவியின் பலாத்கார மரணத்துக்கு நீதி கேட்டு, நிர்வாணப் போராட்டத்தின் வாயிலாக மணிப்பூர் பெண்கள் ஏற்படுத்திய அதிர்வு இன்னும் அடங்காத நிலையில் தங்கள் உடல்களை வேட்டையாடி மேய்ந்த ஒரு கொடூரனை நீதிமன்ற அறைக்குள்ளேயே வெட்டிக் கொன்று, தங்கள் ஆயுதங்களால் அடையாளம் காட்டியிருக்கின்றனர் நாக்பூர் பெண்கள். கொலைக் குற்றத்துக்காக காவல் துறை அய்ந்து பெண்களை மட்டும் கைது செய்ய அதை எதிர்த்து, “நாங்களும்தான் அந்தக் கொலையை செய்தோம் எங்களையும் கைது செய்யுங்கள்'' என்று அய்நூறு பெண்கள் சரணடைய முன்வந்தனர். இது, பெண்களின் புரட்சிக்காலம் போல! மணிப்பூரைப் போலவே நாக்பூர் பெண்களின் இந்தப் போராட்டமும் உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

– ஜெனிபர்

பத்திரிகைகளின் வன்முறை

வணிக நோக்கில் பெண்களை செய்திகளில் கையாண்டு, அவர்களை இழிவுபடுத்துவது பற்றி ஊடகங்கள் எண்ணிப் பார்த்து தமது பொறுப்பை உணர வேண்டும். சமூகச் சீரழிவுகள் பற்றி எழுத எந்தப் பத்திரிகையும் போதிய கவனம் செலுத்துவதில்லை என்று கடந்த ஆண்டு தனது அறிக்கையில் "பிரஸ் கவுன்சில்' கூறியிருந்தது. இதழ்களின் போக்கை நெறிப்படுத்தும் அதன் குரலுக்கே இதழ்கள் செவிசாய்க்காதது வருத்தம் அளிக்கிறது. தமது கட்சிக்கும், அமைப்புகளுக்கும் எதிரான செய்திகளைப் பத்திரிகைகள் வெளியிட்டால், அவை செய்தித்தாள் எரிப்புப் போராட்டத்தில் இறங்குகின்றன. சமூக அக்கறையற்ற பத்திரிகைகளை அவ்வப்போது தெருவில் இறங்கி மக்களும் எரிக்க முன்வந்தால், சூடு தணியாமல் இருக்கும்.

– அழகிய பெரியவன்

தலித் இயக்கங்களுக்கு இன்னும் எழுச்சி வேண்டும். அந்த எழுச்சி இல்லாமல் இருப்பதற்கு என்ன காரணம்னு பார்த்து செயல்படணும். நான் பார்த்தவரைக்கும் நாம் எல்லோருமே தனி நபர்களாக வேலை செய்து கொண்டிருக்கிறோம். தனியாக செயல்படுவது நம்முடைய சமுதாய உணர்வு இல்லை. குழு சார்ந்த சமுதாயமா நாம செயல்பட்டா, எப்படி தனிநபரா இயங்க முடியும்? தனிநபரா செயல்பட்டா எப்படி குழு சார்ந்த சமுதாயத்தை எழுச்சியடையச் செய்ய முடியும்? கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்: "பத்தாயிரம் ஏக்கர் நிலங்களை மீட்டெடுத்தேன்'

அக்டோபர்

சிறப்பு உட்கூறுத் திட்டம்

கல்வித்துறை ஒதுக்கீடான ரூ.183 கோடியில், சிறப்பு உட்கூறுத் திட்டத்தின் கீழ் ரூ.36 கோடி ஒதுக்கப்பட வேண்டும். மேற்குறிப்பிட்ட ரூ.27 கோடி அந்த ஒதுக்கீட்டுக்குள் அடங்கும் என்பதைக் காட்டுவதுதான் சிறப்பு உட்கூறுத் திட்டம். 3,000 பேருக்கு ரூ.50,000க்கு மேல் செலவிட்டு வீடு கட்டித் தருவதைவிட, நிலையான பலனைக் கொண்டு வருவர் இந்த 3,000 பேர். இலவச வீடு பெறுவோர் தம் வீட்டைக் கட்டிக் காத்துக் கொள்ளும் வலு உள்ளவராக இருக்க மாட்டார். ஆளுமை பெற்ற இந்த செவிலியரோ, தம் வீட்டைக் காத்துக் கொள்பவராக மட்டுமல்ல, எதிர்கால வம்சங்களைப் பிறர் உதவியின்றி வளர்க்கும் தெம்புடையவராகவும் மாறுவர்.

– கிருத்துதாசு காந்தி

நவம்பர்

தனியார்மயமாக்கக் கூடாது

உலகிலேயே அதிகமாக தனியார் மயமாக்கப்பட்ட மருத்துவத் துறை இந்திய மருத்துவத் துறைதான். 85 சதவிகித மருத்துவ சேவைகள் தனியார் மயமாக்கப்பட்டுள்ளன.15 சதவிகித சேவைகளைத்தான் அரசு மருத்துவமனைகள், பொதுத் துறை மருத்துவமனைகள் செய்கின்றன. தனியார் மருத்துவமனைகளில் உள் நோயாளிகளாக சேர்பவர்களில் 40 சதவிகிதம் பேர் ஏழைகள்தான். அங்கே அறுவை சிகிச்சை செய்து கொள்கின்ற 40 சதவிகிதம் பேர் ஆடு, மாடுகளையோ, வீடுகளையோ, இதர சொத்துகளையோ, நகைகளையோ விற்று விட்டுத்தான் கட்டணம் செலுத்துகிறார்கள். இவ்வளவு மோசமான நிலை இந்தியாவில் இருக்கிறது. - ஜி. ஆர். ரவீந்திரநாத்

டிசம்பர்

வழிகாட்டும் பயங்கரவாதி!

பார்ப்பன எதிர்ப்பை ஒரு கொள்கையாக்கிவிட முடியுமா? முடியும் என்பதும் இந்திய சாதியச் சூழலில் அதற்கான தேவை இருக்கிறது என்பதும் நிரூபணமாகியுள்ளது. ஒட்டுமொத்த தகுதிக்கும் திறமைக்கும் தாங்களே உரிமையாளர்கள் என்று அறிவித்துக் கொண்டு, நாட்டு நிர்வாகத்தின் தலைமைப் பொறுப்புகளைச் சூறையாடி பெரும்பான்மை மக்களை எல்லாம் முட்டாள்களாக்கிக் கொண்டிருக்கும் ஆளும் வர்க்கத்தை எதிர்ப்பதற்கு மென்மேலும் இயக்கங்கள் வேண்டும். சமூக மாற்றத்திற்காக உழைக்கும் தலித், சமூக நீதி மற்றும் பொதுவுடைமை இயக்கங்களும் பார்ப்பன எதிர்ப்பை தங்களின் முக்கிய செயல்திட்டமாக்கிட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

மநுதர்மப்படி, ஒருவனை "பிராமணன்' என்று அங்கீகரிப்பதன் மூலம் மற்றவர்கள் "சூத்திரர்கள்' ஆகிவிடுகிறார்கள். ஆனால், இன்றைக்கும் "பார்ப்பனர்' என்று அழைப்பதற்கும், எழுதுவதற்கும் தயங்குகின்ற இயக்கங்கள், அறிவுஜீவிகள், பத்திரிகைகள் இருக்கத்தான் செய்கின்றன. அது மட்டுமல்ல, "பார்ப்பனர்களை எதிர்க்கக் கூடாது; பார்ப்பன "இயத்'தைதான் (பார்ப்பனியம்) எதிர்க்க வேண்டும்' என்றொரு கருத்தும் திட்டமிட்டுப் பரப்பப்படுகிறது. இப்படிச் சொல்பவர்கள், கள்ளர் "இயத்'தையோ, கவுண்டர் "இயத்'தையோ முதலியார் "இயத்'தையோ எதிர்ப்பதில்லை; தனிநபர்களைத்தான் எதிர்க்கிறார்கள் என்பதை மறந்து விடக்கூடாது. – தலையங்கம்

விடுதலைப் பாடங்கள்

“பத்மினி மானபங்கப்படுத்தப்பட்டாளே ஒழிய கற்பழிக்கப்படவில்லை. நந்தகோபால் சித்திரவதை செய்யப்பட்டாரே ஒழிய கொலை செய்யப்படவில்லை. அவர்தான் தற்கொலை செய்து கொண்டார்.'' –பழனியப்பன் கமிஷன்

“பெருமளவு தொகையை இழப்பீட்டுத் தொகையாகப் பெற வேண்டும் என்பதற்காக, கமிஷனின் மனதில் இரக்க உணர்வினை ஏற்படுத்த வேண்டுமென்ற உள்நோக்கத்துடன் கூடிய மிகை ஆர்வத்தின் வெளிப்பாடே "கற்பழிப்பு' என்ற குற்றச்சாட்டாகும்.'' – பானுமதி கமிஷன்

“ஆற்றில் நடந்த மரணங்கள் அனைத்தும் நீரில் மூழ்கிதான் ஏற்பட்டன. காவல் துறையினர் அடித்துக் கொலை செய்யவில்லை. இறந்தவர்களுக்கு நீச்சல் தெரியாமல் இருந்தது ஒரு காரணம்.'' – மோகன் கமிஷன்

“செங்கற்பட்டு காரணையில் நடந்த போலிஸ் துப்பாக்கிச் சூடு தேவையானது. அது நீதியானது.'' – பெயில் கமிஷன்

“பொன்னூர் துயர நிகழ்ச்சியில், தலித் மக்களே தங்கள் வீடுகளை இடித்துக் கொண்டு, காவல் துறை அதிகாரிகளைப் பொய்க் குற்றம் சாட்டுகிறார்கள்.'' – வரதன் கமிஷன்

தொகுப்பு : கே.எஸ். முத்து