மார்க்சும், லெனினும் "சதிக்கென்று' ஒரு       ஜாதி இல்லாத நாட்டைச் சேர்ந்தவர்கள். ஆதலால் அவர்கள் சதிகாரர்களின் சதிச் செயலுக்கும், தொழிலாளர் ஜாதி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் அழுத்தப்பட்டுக் கிடப்பதற்கும் பரிகாரம் சொல்ல வேண்டிய அவசியமில்லாதவர்களாய் இருந்திருக்கிறார்கள். ஆதலால், தொழிலாளி பேதம் மட்டுமல்லாமல் முதலாளி தன்மையில் சாதி உயர்வு – தாழ்வு, பேதம் நடப்பு இருக்கிறபோதும், அவர்கள் தொழிலாளர் கிளர்ச்சியை நடத்துகிற போதும் "மார்க்ஸ் சொன்னபடிதான் செய்ய வேண்டும்; லெனின் என்ன சொன்னாரோ அந்தப்படிதான் செய்ய வேண்டும்' என்று சொல்லிக் கொண்டிருந்தால் என்ன அர்த்தம்?

காலம் வேறு; ஆட்சி வேறு, அங்கு முதலாளி ஆளுகிறான்; இங்கு பார்ப்பான் ஆளுகிறான். பண்டித நேருவும், ராஜாஜியும், ராமமூர்த்தியும் யார்? கிரியும் கிருஷ்ணாராவும் ஜெயப்பிரகாசம் குருசாமியும் யார்? மற்றும் ரயில்வே மந்திரியும், தட்சிண ரயில்வேக்களின் ஏஜெண்டும் யார்? இதற்கும் தொழிலாளர் பிரச்சனைக்கும் சம்பந்தம் இல்லை என்று யாராவது சொன்னால், அவர்களை யோக்கியர்கள் என்றோ, அறிவாளி என்றோ ஒருநாளும் சொல்ல முடியாது. ஏன் இப்படிச் சொல்கிறேன்? இந்த மாதிரி தொழிலாளிக்குச் சம்பந்தப்பட்ட எல்லா ஸ்தானங்களிலும் ஆட்சிக்கு சம்பந்தப்பட்ட எல்லா தலைமைகளிலும் பார்ப்பனனே இருக்க வேண்டிய அவசியமென்ன? அல்லது, பார்ப்பனர்தான் இருக்க வேண்டும் என்கின்ற அவசியத்தினால் ஏற்பட்டதா? கம்யூனிஸ்டுகள்தாம் இதற்குப் பதில் சொல்லட்டுமே!

இவ்வளவு பாடுபட்டும் இன்னும் இந்த காலத்திலும் பார்ப்பான் இருக்கிறான்; சூத்திரன் இருக்கிறான்; பறையன் இருக்கிறானே! இந்தக்காலத்திலா இத்தகைய பேதங்கள் இருப்பது? அந்தச் சாதிகளில் ஒன்றுதானே தொழிலாளச் சாதி! பாழும் சுயராஜ்யம் வந்தும் ஒரு பார்ப்பான் குறையவில்லை; ஒரு பார்ப்பான் ஆதிக்கமும் குறையவில்லை. சூத்திரன் குறையவில்லை; பறையனும் குறையவில்லை; அவர்களது இழிநிலை, பாட்டாளித் தன்மை குறையவில்லை. இவை குறையவில்லை என்பதோடு மட்டுமல்ல, இந்தப் பேதங்கள் இந்த சுயராஜ்யக் குடியரசிலே இன்னும் அதிகமாகப் பலப்படுத்தப்படுகின்றன!

தொழிலாளர் குடும்பப் பெண்கள் எத்தனை பேர்கள் கற்பழிக்கப்பட்டார்கள்? எத்தனைப் பெண்களைக் குடுமியைப் பிடித்துக் கொண்டு தெருவிலே கொண்டு வந்து போட்டு அடித்தார்கள்? இவ்வளவு பாடுகள் படச் செய்தா இரண்டணா கூலி உயர்த்தித் தருவது? குறைந்த கஷ்ட நஷ்டத்தில் அதிகப்படியான லாபத்தை அல்லவா பெறவேண்டும்? இதை நினைத்தால் எனக்கு மனம் பதறுகிறது. நம் மக்கள் இப்படி ஏமாற்றப்படுகிறார்களே என்கின்ற ஆத்திரத்தில் சில சமயங்களில் ரத்தக் கொதிப்பு ஏற்படுகிறது. எத்தனை நாளைக்கு இப்படி நடந்தாலும் சூத்திரன் (தொழிலாளி) சூத்திரனாகவும், பார்ப்பான் (பிறவி முதலாளி) பார்ப்பானாகவும்தானே இருப்பர்?

நாங்கள் இந்த 25 ஆண்டுகளாகப் பார்ப்பன ஒழிப்புப் பிரச்சாரம் செய்து வருகிறோமே எவ்வளவு பேசியிருக்கிறோம்! அதனால் இதுவரை ஏதாவது கலவரம் உண்டாயிற்றா? ஒரு பார்ப்பனனுக்கு ஒரு சிறு அடியாவது பட்டிருக்குமா? ஒரு பார்ப்பனப் பெண்ணின் உடம்பிலாவது கை மேலே பட்டிருக்குமா? மற்றும் எந்தப் பார்ப்பான் வீட்டிலாவது நாங்கள் புகுந்து கலவரம் செய்தோமா? பார்ப்பனர்களுடைய கொள்கைகளை அவற்றின் சூதுகளை திராவிட மக்களுக்கு எடுத்துக்காட்டி, அவர்கள் விடுதலை பெற வேண்டும் என்று பிரச்சாரம் செய்து வந்தோமே தவிர, வேறு என்ன செய்தோம்?

சமுதாயத்தில் அவர்கள் வேறு; நாம் வேறு. நம் விடுதலைக்கு – முற்போக்குக்கு நம் மக்கள் நடந்துகொள்ள வேண்டியதை நாம் பேசுகிறோம். விஷயங்களை எடுத்துச் சொல்கிறோம். கொள்கையின் அடிப்படையிலே பேதப்படுத்துகிறோம் என்ற நாகரிகமான முறையில் இருக்கிறோமே தவிர, "குத்து, வெட்டு, கொலை, பலாத்காரம், நாசம், ஒழுங்கு மீறிய காரியம் செய்; கொள்ளையடி' என்றா சொல்லிக்கொண்டு திரிந்தோம்? அப்படியெல்லாம் செய்யாததால் எங்கள் கருத்து சிறிதும் வெற்றி பெறாமலேயே போய்விட்டது.

கம்யூனிஸ்டுகளுடைய கஷ்டமே தீர்ந்தது என்றால், எப்படித் தீர்ந்தது? "புத்தி வந்தது, இனிமேல் நாங்கள் பலாத்காரத்தில் ஈடுபட மாட்டோம்; "பார்லிமெண்டரி' முறையிலேயே இருக்கிறோம். "அண்டர் கிரவுண்ட்' வேலையெல்லாம் வைத்துக் கொள்வதில்லை' என்றெல்லாம் சர்க்காரிடத்தில் சொல்லிக்கொண்டதால்தானே, அவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள்! சிறையில் இருந்தவர்கள் விடுதலையடைந்தார்கள், வழக்குகள் சில வாபஸ் வாங்கப்பட்டன. நான் அதை ஒன்றும் கேவலமாகச் சொல்லவில்லை. பலாத்காரத்தை விட்டுவிட்டு எந்தக் காரியத்தையும் நேரிடையாகச் செய்ய ஆரம்பிப்பது என்றாலே அதிலே நிச்சயம் ஜெயம் உண்டு. அதை யாரும் மறுக்க முடியாது.

 – முற்றும்

(பொன்மலையில் 10.9.1952ல் ஆற்றிய உரை)