தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதை ஒடுக்கப்பட்டசமூகத்தினரின் வாக்கெடுப்பைப் பொறுத்து ஒதுக்கினால், அது நெடுங்காலத்திற்கு நீடிக்கும் என்பது, தலைவர்களின் கருத்தாக இருந்தது.இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை டாக்டர் அம்பேத்கர் முன்வைத்தார். இது, சாதி இந்துக்களின் வட்டாரத்தில் பெரும் அமளியை ஏற்படுத்தியது. தீண்டாமை அடுத்த 25 ஆண்டுகளுக்குப் பிறகு இருக்காது என்பதை நான் நம்பத் தயாராக இல்லை என்று டாக்டர் அம்பேத்கர் அவர்களிடம் தெளிவாகக் கூறினார். எனவே, பொது வாக்கெடுப்பை கட்டாயமாக்கினால்தான் தீண்டத்தகாத மக்கள் மீது சாதி இந்துக்கள் கொண்டுள்ள மனிதத் தன்மையற்ற கண்ணோட்டத்தை மாற்றிக் கொள்ள அவர்கள் நிர்பந்திக்கப்படுவர் என்று அவர் கூறினார்.

“பத்து ஆண்டுகள் கழித்து பொது வாக்கெடுப்பிற்கு காந்தி ஒப்புக் கொள்ள வேண்டும் என டாக்டர் அம்பேத்கர் விரும்பினார். காந்தி இப்போது ஓரளவு நலமாக இருந்தார். மெதுவாகவும், திட்டமிட்டும் பேசினார். “தங்களின் தர்க்க ரீதியான நிலை மறுக்க முடியாதது'' என்றார். “ஆனால் பொது வாக்கெடுப்பு அய்ந்து ஆண்டுகள் முடிந்ததும் இருக்கட்டும். சாதி இந்துக்களின் நேர்மையை நிரூபிக்க அய்ந்து ஆண்டுகள் போதுமானதாகும். ஆனால், வாக்கெடுப்பை மேலும் தள்ளி வைக்க வேண்டுமென நீங்கள் வலியுறுத்தினால், தாங்கள் விரும்புவது சாதி இந்துக்களின் நேர்மையை சோதிப்பதற்கல்ல, மாறாக, வாக்கெடுப்பில் பாதகமான நிலையை ஏற்படுத்த ஒடுக்கப்பட்ட மக்களைத் திரட்டுவதற்குதான் தாங்கள் விரும்புகிறீர்கள் என்று நான் சந்தேகப்படத் தொடங்குவேன். இருப்பினும் நல்லெண்ணம், நம்பிக்கை இருக்க வேண்டுமென்று அவர் உணர்ச்சியுடன், வேண்டுகோள் விடுத்தார்.

சகமனிதரை தீண்டத்தகாதவர் என்று எண்ணும், தீங்கான கருத்துக்கு எதிராக 12 வயதிலிருந்து தாம் இருந்து வந்துள்ளதாகவும், எனவே அந்தத் தீங்கிற்கு எதிராக விடாப்பிடியாகப் போராடி வந்திருப்பதாகவும் அவர் கூறினார். செய்யப்பட்ட நூறு சதவிகித பாதுகாப்புக்கு சட்டரீதியாக வழிவகை வேண்டுமென நீங்கள் விரும்புவதற்கு தங்களுக்கு முழு உரிமை உண்டு. ஆனால், அந்த உரிமையை வலியுறுத்தாதீர்கள் என்று அனல் கக்கும் இந்தப் படுக்கையிலிருந்து உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். இன்று இங்கே நான் கேட்டுக் கொள்ளப் போவதெல்லாம் சாதி, இந்துக்களுக்கும் அவகாசம் கொடுங்கள் என்பதுதான்.

“அவர்களது மனச்சான்று தட்டியெழுப்பப்பட்டிருப்பதற்காக கடவுளுக்கு நன்றி செலுத்த வேண்டும். அவர்களிடமிருந்து நூறு சதவிகிதப் பாதுகாப்பை எவ்வகையிலாவது சட்ட ரீதியாக பெற்றுவிட வேண்டுமென்று நீங்கள் செயல்பட்டால் என்ன நேரும் தெரியுமா? மனதைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர்களிடையே துரிதமாக வளர்ந்து வரும் ஆர்வப்போக்கை அது தடுத்து நிறுத்தும். தீண்டத்தகாத மக்களுக்கு இழைக்கப்பட்டு வரும் இந்த அநீதி, சிறிது காலத்துக்குத் தடுத்து நிறுத்தப்படலாம்; ஆனால், இந்து மதத்திற்கு ஏற்பட்டுள்ள இந்தக் கறை அப்படியே இருந்துவிடும். இவ்வாறு ஆழமாகப் பதிந்துள்ள இந்தக் கறையின் வெளிப்பாடே தீண்டாமை என்பது. இது, இந்து மதத்திலிருந்து முழுவதுமாக நீக்கப்படாவிடில், அது மீண்டும் பல்வேறு வழிகளில் வெளிப்பட்டு, நமது முழு சமூக, அரசியல் அமைப்பில் நஞ்சை கலக்கத் தொடர்ந்து முயலும்.

“எனவே, தனது கடந்தகாலக் குற்றத்திற்கு அதுவாகவே பிராயச்சித்தம் செய்துகொள்ள ஒரு கடைசி வாய்ப்பை இந்து மதத்திற்கு அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். சாதி இந்துக்கள் மத்தியில் பணியாற்ற எனக்கு ஒரு வாய்ப்பை அளியுங்கள். இது நியாயமான வேண்டுகோள். இதற்கு 10 அல்லது 15 ஆண்டுகள் என்று நீங்கள் கேட்டால், அந்த வாய்ப்பு கைநழுவிப் போய்விடும். இந்துக்கள் தங்களைப் பற்றி நல்ல கருத்தை அய்ந்து ஆண்டுகளுக்குள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படி இல்லையெனில், அவர்களுக்கு இதுபோன்ற வாய்ப்பு கிடைக்காமலே போகலாம். எனவே, பொது வாக்கெடுப்பு அவசியம் வேண்டும். அய்ந்து ஆண்டு கால எல்லையைத் தாண்டி அல்ல. இந்த விஷயத்தில் நான் விடாப்பிடியாக இருக்கிறேன் என்று நண்பர்களிடம் கூறுங்கள். நான் வெறுக்கத்தக்க நபராக இருக்கலாம். ஆனால், என் மூலம் சத்தியம் பேசுமானால், நான் வெல்ல முடியாதவனாக இருப்பேன்'' (காப்பியப் புகழ்பெற்ற நோன்பு, ப. 211 – 212).

பேட்டி முடிந்தது; வேட்பாளர் பட்டியலில் எத்தனை பேர், மாகாணச் சட்டசபைகளில் எத்தனை இடங்கள், முதல் கட்ட அமைப்பின் கால அவகாசம், ஒதுக்கப்படும் இடங்களின் கால அவகாசம், பணி இடங்களின் விநியோகம் ஆகியவை பற்றிய விவரங்களை முடிவு செய்ய தலைவர்கள் தொடங்கினர். இந்தக் கூட்டம் ராஜ்பகதூர் சிவ்லால் மோதிலால் இல்லத்தில் நடைபெற்றது.

அப்பொழுது மாலை நான்கு மணி. காந்தியின் உடல் நிலை மோசமாயிற்று. அவர் தமது சக்தியை வேகமாக இழந்து கொண்டிருந்தார். காந்தியின் புதல்வரான தேவதாஸ் காந்தி, தமது தந்தையின் நிலையை கண்ணீர் வழியும் கண்களுடன் டாக்டர் அம்பேத்கருக்கு விவரித்துக் கொண்டிருந்தார். பொதுவாக்கெடுப்பை வலியுறுத்துவதன் மூலம் ஒப்பந்தம் ஏற்படுவதைத் தடுத்து நிறுத்தும்படி டாக்டர் அம்பேத்கரை அவர் கேட்டுக் கொண்டார். இறுதியில் இந்த விஷயத்தை காந்தியிடம் தெரிவிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

அம்பேத்கர் முக்கியத் தலைவர்களுடன் இரவு 9 மணிக்கு சிறைச்சாலைக்குச் சென்று காந்தியைப் பார்த்தார். பொது வாக்கெடுப்பு என்ற கருத்தை காந்தி ஒப்புக் கொண்டார். ஆனால், அது அய்ந்து ஆண்டுகள் கழித்து நடைபெற வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். காந்தியின் குரல் மிகவும் தாழ்ந்தது. சிறைச்சாலை மருத்துவர்கள் தலையிட்டு மேற்கொண்டும் பேச்சுவார்த்தைகளை தடை செய்தனர். மேலே இருந்த மாமர இலைகளும் அசைய மறுத்தன. அங்கு பரிபூரண அமைதி நிலவிற்று. அவரைக் காண வந்தவர்கள் திரும்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. டாக்டர் அம்பேத்கர் தமது கருத்தை விட்டுக் கொடுக்க தயாராக இல்லை. அவரது மனோபலம், மிகுந்த சோதனைக்குள்ளாயிற்று. அவரது உயிரை அச்சுறுத்தும் கடிதங்கள் குவிந்தன.

அத்தகைய ஒரு கடிதம் இதோ :

“டாக்டர் அம்பேத்கர்,

நான்கு நாட்களுக்குள் மகாத்மா காந்தியின் கோரிக்கையை நீங்கள் ஏற்றுக் கொள்ளா விடில், உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும். உங்கள் உயிரை நீங்கள் காப்பாற்றிக் கொள்ள விரும்பினால், காந்தியின் கோரிக்கையை ஏற்று, அவரது உண்ணா நோன்பு உடனடியாக முடிவதற்கு உதவ வேண்டும். இது உங்களுக்கு ஓர் எச்சரிக்கை. உங்களுடைய பிடிவாதத்தை நீங்கள் கைவிடாவில்லை எனில், நீங்கள் கொலை செய்யப்படுவீர்கள்.''

– ஹரிபாய் கே. பட், பிபிஇஇ

உறுப்பினர் மற்றும் தொழிலாளி

தெருவில் கொலைவெறிப் பார்வைகள் அவர் மீது வீசப்பட்டன. தலைவர்கள் சிலர் மூளை குழம்பி, அவரது முதுகுக்குப் பின் அவதூறை வீசினர். பூனாவின் தீண்டத்தக்க சமூகத்தைச் சார்ந்த சில இளைஞர்கள், டாக்டர் அம்பேத்கரை கொலை செய்ய ஓர் ரகசிய சதித் திட்டம் தீட்டியது பற்றி "ஜனதா' (24.9.32, பக்கம் 8) பின்வருமாறு செய்தி வெளியிட்டது :

“டாக்டர் அம்பேத்கரின் உயிருக்கு ஆபத்து. பூனா மாணவர்கள் ரகசியக் கூட்டத்தில் கொலை மிரட்டல்'' – பூனா, நாள் 23.9.32 இரவு 8 மணி "ஜனதா'வின் சிறப்புச் செய்தியாளர் அளித்த தகவல்.

“இரு நாட்கள் கழிந்தன. பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. டாக்டர் அம்பேத்கரை நிர்பந்திக்கப் பல்வேறு முயற்சிகள் நடந்து வருகின்றன. ஆளுநரைச் சுட்ட கோகேட் சமயக் குழு ஆதரவு மாணவர்கள் ரகசியமாக திட்டம் தீட்டி வருகிறார்கள் என்று தெரிகிறது. களத்திலிருந்து டாக்டர் அம்பேத்கர் அகற்றப்பட் டால் பிரச்சினை தீர்ந்துவிடும். காந்தியின் உயிர் பாதுகாக்கப்படும் என்று கூறப்படுவதாகச் சொல்லப்படுகிறது. இது பற்றி டாக்டர் அம்பேத்கருக்கு தெரிவித்தபோது, அவர் அதைக் கேட்டுச் சிரித்தார். அவருடைய பயமற்ற சிரிப்பு, எத்தகைய ஒரு மரணத்திற்கும் அவர் பயப்படவில்லை என்பதை உணர்த்திற்று.

எனினும், டாக்டர் அம்பேத்கரின் பாதுகாப்பு குறித்து உள்ளூர் தீண்டத்தகாத சமூகத்தினர் கவலை கொண்டுள்ளனர். அவர்கள் மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் இருக்கிறார்கள். டாக்டர் அம்பேத்கருக்கு ஒரு சிறு காயம் ஏற்பட்டாலும், கடுமையான விளைவுகள் ஏற்படும். அவருக்காக எத்தகைய தியாகத்தை யும் புரிய ஆயிரக்கணக்கான தீண்டத்தகாத இளைஞர்கள் தயாராக உள்ளனர்.

சனிக்கிழமை 8 மணிக்கு மாநாட்டில் தலைவர்கள் கூடுகிறார்கள்; மீண்டும் விரைவில் காந்தியை சந்திப்பார்கள். பரவலான கருத்து என்னவெனில், ஒரு முழுமையான ஒப்பந்தத்தை அடைவது எட்டக்கூடிய தூரத்தில் உள்ளது என்பதுதான்,

முற்றிலும் எதிர்பாராத கெடுவாய்ப்பு ஏதேனும் நிகழவில்லையெனில், ஒரு திட்டவட்டமான ஒப்பந்தம் ஏற்பட்ட மகிழ்ச்சிகரமான செய்திகளை பூனா சனி நடுப்பகலில் வெளியிட முடியும்.

மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்த கருத்து வேறுபாடுகள் ஏறக்குறைய தீர்க்கப்பட்டன. ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் பொது வாக்கெடுப்பு என்ற பிரச்சினையைப் பொருத்தவரை, அதை எப்போது வைத்துக் கொள்ளலாம் என்ற விஷயத்தைப் பொருத்தவரை, அதில் தத்துவார்த்த ரீதியான கருத்து வேறுபாடுதான் நிலவிற்று. 10 ஆண்டுகளுக்குப் பின் வாக்கெடுப்பை வைத்துக் கொள்ளலாம் என்று தலைவர்கள் ஒப்புக் கொள்ளலாம் என்று கருதப்படுகிறது. ஒப்புக் கொள்ளப்பட்ட விஷயங்களில் கீழ்க்கண்டவையும் அடங்கும் என்று கூறப்படுகிறது : 1. ஒவ்வொரு இடத்துக்கும் வேட்பாளர் பட்டியலில் 4 பேர் இருப்பர். 2. ஒற்றை வாக்குமுறை கடைப்பிடிக்கப்படும். 3. எல்லா மாகாணக் கவுன்சில்களிலும் தீண்டத்தகாத சமூகத்தினருக்கு இடம் ஒதுக்கப்படும். அவை, 150க்கும் 155க்கும் இடையில் உயர்த்தப்படும். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ தீர்ப்பின்படி, இது 71 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

அதிகாலையில் பண்டிட் மாளவியாவின் இல்லத்தில் கூடிய மாநாடு, இடைவெளியில்லாமல் 13 மணிநேரம் நடைபெற்று இரவு 9.30 மணிக்கு முடிவுக்கு வந்தது. அதை அடுத்து, பண்டிட் மாளவியா, திரு. சி. ராஜகோபாலாச்சாரி, திரு. ஜெயகர், டாக்டர் சப்ரு, டாக்டர் அம்பேத்கர் ஆகியோரும் மற்றவர்களும் எரவாடா சிறைச்சாலைக்கு விரைந்தனர். மாளவியாவின் இல்லத்தில் நடைபெற்ற இம்மாநாடு மக்கள் கூட்டத்தை ஈர்த்தது. இரவு 9.30 மணிக்கு தலைவர்கள் கூட்டம் முடிந்து எழுந்தபோதிலும், அன்று இரவு ஏதேனும் ஒப்பந்தம் ஏற்படும் என்ற நம்பிக்கை எதுவும் இருக்கவில்லை.

சாதி இந்துக்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்தினரது தலைவர்களின் மாநாடு இன்று காலை 9 மணிக்கு மாளவியாவின் இல்லத்தில் ரகசியமாகக் கூடிற்று. பல பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டு, தேர்தல்களுக்கு வேட்பாளர் பட்டியல் பற்றியும் அய்க்கிய மாகாணத்தை தவிர பிரதிநிதித்துவத்துக்கான அடிப்படை பற்றியும் ஓர் ஒப்பந்தம் எட்டப்பட்டதாக தெரிய வந்தது. ஆனால், இந்த விஷயம் குறித்து முடிவாக இன்னமும் எதுவும் கூறப்படவில்லை. வேட்பாளர் பட்டியலில் 2 பேர் இருக்க வேண்டும் என்று டாக்டர் அம்பேத்கர் கோரினார். காந்தி 5 பேர் இருக்க வேண்டும் என்று டாக்டர் அம்பேத்கர் கோரினார்; காந்திஜி 5 பேர் இருக்க வேண்டும் என்று யோசனை கூறினார். பிறகு அது நான்கு என்று நிர்ணயிக்கப்பட்டது.

மாநாட்டிற்குப் பிறகு டாக்டர் அம்பேத்கர் பின்வருமாறு கூறினார் : “சூழ்நிலை நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த கருத்து வேறுபாடுகள் வெகுசிலவே. ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. உண்ணா நோன்பின் காரணமாக காந்தி பலவீனமாக இருந்தார். எனினும் எங்களுடன் பதினைந்து நிமிடங்கள் விவாதித்தார்.'' சனிக்கிழமை காலை விவாதங்கள் மீண்டும் தொடங்கின. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மாகாண சட்டசபைகளில் மொத்த இடம் 148 ஆக முடிவு செய்யப்பட்டது. மேலும், பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து மத்திய சட்டசபைக்கான இந்துக்களின் இடங்களில் 10 சதவிகிதம் ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு கொடுக்கப்பட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. முன்பு போலவே வாக்கெடுப்பு பற்றிய பிரச்சினை மீது பலமணி நேரம் விவாதம் நடந்தது. டாக்டர் அம்பேத்கரின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள எவரும் தயாராக இல்லை. இது தொடர்பாக காந்தியை மீண்டும் சந்திப்பதுதான் சரியானதாக இருக்கும் என அம்பேத்கர் நினைத்தார். டாக்டர் சோலங்கி மற்றும் ராஜகோபாலாச்சாரி உடன்வர காந்தியை காண அவர் வந்தார்.

அம்பேத்கரின் தர்க்க ரீதியான நிலை மறுக்க முடியாதது என்று காந்தி அவரிடம் கூறினார். சட்ட ரீதியான உத்திரவாதம் அளிப்பதால் மட்டும் நோயைக் குணப்படுத்தி விட முடியாது. எனவே, இந்து மதத்திற்கு ஒரு வாய்ப்பை அளிக்கும்படி காந்தி டாக்டர் அம்பேத்கரை கேட்டுக் கொண்டார். இந்துக்களது கடந்தகால பாவத்திற்கு பிராயச்சித்தம் செய்வதற்கு அவர்களுக்கு கடைசி வாய்ப்பு அளிக்கும்படி கேட்டுக் கொண்டார். பொது வாக்கெடுப்பு அய்ந்து ஆண்டுகளுக்கு அதிகமாக இல்லாமல் நடக்க வேண்டும் என்றார். "அய்ந்து ஆண்டுகளா அல்லது எனது உயிரா' என்று முடிவான தொனியில் காந்தி கூறினார்.

விவாதம் நடந்த இடத்திற்கு திரும்பி, வாக்கெடுப்பு காலம் பற்றிய விஷயத்தில் தாம்விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்று டாக்டர் அம்பேத்கர் கூறினார். அது 10 ஆண்டுகளுக்கு குறையாமல் இருக்க வேண்டும் என்றார். சுமார் ஒரு மணி நேரம் கழித்து, வாக்கெடுப்பு காலம் பற்றி எதையும் இணைக்காமல் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்தனர்! இதை சிறைச்சாலையில் 3 மணிக்கு காந்திக்கு ராஜகோபாலாச்சாரி விளக்கினார். அற்புதமான ஏற்பாடு எனக் கூறி காந்தி தமது ஒப்புதலை அளித்தார்.

ராஜகோபாலாச்சாரி, ராமகிருஷ்ண பண்டார்கர் சாலையில் உள்ள சிவ்வால் மோதிலால் பங்களாவிற்கு அதிவேகமாக வந்தார்; ஒப்பந்தத்திற்கு அவர் ஒப்புதல் அளித்ததாக மகிழ்ச்சி பொங்க அறிவித்தார். ஒப்பந்தத்தை வரைவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளவில்லை. மகிழ்ச்சியும் புத்துணர்வும் கலகலப்பும் கலந்த சூழ்நிலையில் செப்டம்பர் 24 சனிக்கிழமை மாலை அய்ந்து மணிக்கு ஒப்பந்தம் கையெழுத்தாயிற்று; அது பூனா ஒப்பந்தம் என்று வரலாற்றில் இடம்பெற்றது.

– வளரும்