ஓர் ஆய்வுக் கட்டுரையாக இது அமைந்திருக்க வேண்டும். ஆனால், உணர்வுள்ள எவர் ஒருவராலும் ‘சித்தி'க்களின் கதையைக் கேட்கும்போதும், அவர்களைப் பார்க்கும்போதும் சடுதியில் ஓர் ஆய்வுக்கட்டுரையொன்றை எழுதித் தள்ளிவிட முடியாது. ஏனெனில், வலியும் ரணமும் கலந்த வரலாறது. புரட்சி எப்போதும் வெல்லும் என்ற வீரஞ்செறிந்த சொல்லாடல்கள் எல்லாம் வெற்றிக்கானவையல்ல; மாறாக வெற்றுச் சொல்லாடல்களே என்று மெய்ப்பித்த கண்ணீர் கலந்த வரலாறுதான் சித்திக்களின் வரலாறு.

siddis_630

வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி, முகந்தெரியாத மொழி தெரியாத வேறொரு இடத்தில் அடிமைகளாக வாழப் பணிக்கப்பட்ட மக்கள் – மீண்டும் வேர் பிடித்ததே ஒரு மாபெரும் வெற்றிதான், புரட்சி தான். இந்த அறமும் வழுவும் அற்றுப்போன உலகத்தில் எந்தவொரு சின்னஞ்சிறு இனமாக இருந்தாலும், அவர்களின் வெற்றி அவர்கள் கையில்தான் என்பதற்கு ஓர் அடையாளமாக வாழ்ந்து வருபவர்கள்தான் நமது சித்திக்கள் (Siddis).

கர்நாடகாவில் வடக்கு கன்னடம் என்று அழைக்கப்படும் அரபிக்கடலை ஒட்டிய மாவட்டங்களிலுள்ள கிராமங்களுக்கு அல்லது கோவாவிற்கு செல்லும் எவர் ஒருவரும் அங்கிருக்கும் உணவு விடுதிகளில் தட்டு கழுவும் வேலையை அல்லது குற்றேவல் வேலைகளை – கரிய நிறமும் சுருட்டை முடியும் சப்பை மூக்கும் பெரிய உதடுகளும் வலிமையான உடற்கட்டும் கொண்ட ஏதாவதொரு ஆப்பிரிக்கர் செய்து கொண்டிருப்பதைக் கண்டிருக்கலாம். அது மட்டுமின்றி, அவரோடு நாம் பேசிப்பார்த்தால் – அவர் தெள்ளத் தெளிவாக கன்னட மொழியை யும், அந்தப் பகுதியின் பேச்சு வழக்குமொழி யான கொங்கணியையும் பேசுவது தெரியவரும். எப்படி ஆப்பிரிக்கர் ஒருவர் கன்னடம் பேசுகிறார் எனும் ஆச்சர்யம் எவருக்கும் வரத்தான் செய்யும். ஆனால், கன்னட மொழியை அவர் பேசுவதற்கு பின்னாலுள்ள வரலாற்றை நீங்கள் உற்று நோக்கினால் – மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதிகளில் சித்திக்கள் என்று அழைக்கப்படும் ஆப்பிரிக்க மக்கள் அடிமைகளாகப் பிடித்து வரப்பட்டு, இன்னும் இங்கு வாழ்ந்து வருவதும் அவர்களின் கண்ணீர் தோய்ந்த வரலாறும் தெரியவரும்.

சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்பாக தொடங்கிய இந்த அடிமைமுறை, உற்பத்தி உறவுகள் பாரிய அளவில் அதிகரித்ததாக சொல்லப்படும் சென்ற பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை தொடர்ந்தது. பரந்து விரிந்திருந்த ஆப்பிரிக்க கடற்கரைகளை ஒட்டி அமைந்திருக்கும் பகுதிகளே அடிமை முதலாளிகளின் விளைச்சல் நிலங்கள். அதிலும் முக்கியமாக மொசாம்பிக் மற்றும் எத்தி யோப்பியா போன்ற நாடுகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான ஆப்பிரிக்க மக்கள் அடிமை களாக ஆடுமாடுகளைப் போல – அத்தனை அய்ரோப்பிய அரசுகளாலும், வெள்ளை ஏகாதிபத்திய அரசுகளின் அடிமை எசமானர்களாலும் அரேபிய அடிமை முதலாளிகளாலும் கூட்டங்கூட்டமாக பிடிக்கப்பட்டு, அன்றைய இந்தியாவிற்கு தொண்டூழியம் செய்வதற்காக கொண்டு வரப்பட்டனர்.

அக்கால வரலாறு என்று சொல்லி பெருமை பீற்றிக்கொள்ளும் மனித இன வரலாறு, சித்திக்களுக்கு துன்பங்களின் மொழி, மறக்க முடியா வடு. அய்ரோப்பிய அரசுகளின் அடிமை எசமானர்கள் தங்களுக்கு கறுப்பின அடிமைகளைப் பிடித்துவர ஆப்பிரிக்காவில் முகவர்களாக சில ஆப்பிரிக்க குழுத் தலைவர்களைக்கூட வைத்திருந்தனர். சில சமயங்களில் இந்த முகவர்கள் தாங்களாகவோ, ராணுவத்தினர் துணையோடோ – அங்கு இருக்கும் ஆப்பிரிக்க சிறு மற்றும் குறு இனக் குழுத் தலைவர் களின் உதவியோடும் வலுவான ஆண்களை யும் பெண்களையும் சில நேரங்களில் கண்களில் தென்படும் அத்தனை பேர்களையும் அடிமைச் சந்தைகளில் விற்பதற்காகப் பிடித்து வந்தனர். இவர்களை பிடித்துச் செல்ல அடிமைகளை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் கடற்கரைகளில் காத்து நிற்கும்.

siddis_340கப்பல்கள் வரத் தாமதமானால், அடிமைகளை அங்கிருக்கும் மாட்டுத்தொழுவங்கள் போன்ற இடங்களில் ஆடுமாடுகள் போல அடைத்து வைத்து பகற்பொழுதுகளில் பல வேலைகளைச் செய்யச் சொல்வார்கள். இவ்வாறு பல லட்சக்கணக்கான அடிமைகள், பலநூறு மைல்கள் நடத்தி வரப்பட்டு கப்பல்களில் ஏற்றப்பட்டனர்.

கப்பல் வந்ததும் முக்கியமாக அடிமை எசமானர்கள் உதாரணமாக அடிமைகள் கிறித்துவர்களாக இருந்தால், அவர்கள் அனைவரும் வரிசையாக அருகிலிருக்கும் தேவாலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருக்கும் தேவாலயத்தில் ஞானஸ்நானம் செய்யப்பட்டு, அந்த அடிமைகளின் கைகளில் அவர்களின் பெயர்கள் எழுதப்பட்ட ஒரு துண்டுச்சீட்டு கொடுக்கப்படும். இது, அடிமை எசமானர்களின் மதங்களைப் பொறுத்து கிறித்துவர் என்றால் கிறித்துவர்களாகவும், இசுலாமிய அடிமை எசமானராக இருந்தால் இசுலாமியராகவும் மாற்றப்பட்டு, அந்த மதத்தின் பெயரில் அவருக்கு பெயர் சூட்டப் பட்டு ஒரு துண்டுச்சீட்டு கொடுக்கப்படும். அந்த துண்டுச்சீட்டில் எழுதப்பட்டிருக்கும் பெயரே அவர்களின் அடையாள அட்டை. பின்பு அனைவரின் நாக்கிலும் கொஞ்சம் உப்பு தடவப்பட்டு, அவர்களின் மீது ஒட்டுமொத்தமாக புனிதத் தண்ணீர் தெளிக்கப்பட்டு கப்பல்களில் ஏற்றப்படுவார்கள். அதோடு அந்த ஆப்பிரிக்கர்கள் தமது மண்ணில் இருந்து உறவுகள், சொந்தபந்தங்கள் அத்தனையையும் மறந்துவிட வேண்டியதுதான். அதனால் பல ஆப்பிரிக்கர்கள் இந்த கொடுமையிலிருந்து தப்பிக்க, கப்பல்களிலிருந்து கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட நிகழ்வுகளும் நடந்ததால், அதைத் தடுப்பதற்காக அவர்கள் அத்தனை பேரும் இரும்புச் சங்கிலிகளால் ஒன்றுசேர இணைக்கப்பட்டு, கப்பலின் அடித்தளத்தில் மொத்தமாக கட்டி வைக்கப்பட்டனர்.

கப்பல்களில் ஏற்றப்படுவதற்கு முன்பாக அடிமைகளை மதிப்பிட, அத்தனை அடிமை எசமானர்களும் பயன்படுத்திய ஒரு பொது அளவுகோலினால் இந்த அடிமைகள் அனைவரும் மதிப்பிடப்பட்டார்கள். அந்த பொது மதிப்பீட்டு அளவுகோலின் பெயர் ‘பெகாடி இண்டியா' என்பது. இந்த போர்ச்சுகீசிய மொழிச் சொல்லின் பொருள் 15இலிருந்து 35 வயது வரையுள்ள ஓர் ஆப்பிரிக்கர் என்பதாகும். எடுத்துக்காட்டாக, 8இலிருந்து 15 வயதான மூன்று ஆப்பிரிக்கர்களும், 25இலிருந்து 35 வயது வரையிருக்கும் மூன்று ஆப்பிரிக்கர்களும் இரண்டு பெகாடி இண்டியாவிற்கு மதிப்பிடப்படுவர். 35இலிருந்து 45 வயது வரையிலான மற்றும் எட்டு வயதுக்கு குறைவான சிறுவர்களும் ஒரு பெகா டி இண்டியா என்று அழைக்கப்பட்டனர். கைக்குழந்தைகள் இலவச இணைப்பு! 45 வயதிற்கு மேற்பட்டவர்களும், உடல்நிலை சரியில்லாதவர்களும் ஒரு குத்துமதிப்பாக அளவிடப்பட்டார்கள்.

சிறிய கப்பல்களில் சுமார் அறுநூறு அடிமைகள் கேரளாவிற்கு மாடுகள் ஏற்றிச் செல்வதைவிட கொடூரமாக அடைக்கப்பட்டு ஏற்றிக் கொண்டு செல்லப்படும் இவர்கள், இந்தியக் கடற்கரைகளை அடைந்ததும் அதில் உயிரோடு இருப்பவர்கள் கீழே இறக்கப்பட்டு அவர்களின் உடல்கள் நன்றாக துடைக்கப்பட்டு, அவர்களின் உடல்கள் மினுமினுப்பாக தெரியும் வண்ணம் நன்றாக எண்ணெய் பூசப்படும். அவர்களின் முகங்களில் சிவப்பு மற்றும் வெள்ளை நிற வரிக்கோடுகள் வரையப்படும். அவர்களின் வலுவான சுருட்டை முடி மஞ்சள் வண்ணம் பூசப்பட்டு, மஞ்சள் வண்ணப் பொடியால் நிரப்பப்படும். சந்தையில் அவர்களை நன்கு அழகுற காட்டுவதற்காக அவர்களின் கால்களும் கைகளும் வளையங்களால் அலங்கரிக்கப்படும். பின்பு ஒரு புதிய கோவணம் ஒன்று அணிவிக்கத் தரப்படும். அதன் பிறகு ஆண்களும் பெண்களும் வரிசையாக நிறுத்தப்படுவார்கள். அந்த வரிசையின் முடிவில் அவர்களின் எசமானரும், அவர்களின் இருபுறங்களிலும் ஆயுதமேந்திய நன்கு பழக்கப்பட்ட அடிமைகளும் காவலாளிகளாக நிற்பார்கள்.

இப்படியாக நிறுத்தி வைக்கப்பட்ட அடிமைகள் ஓர் ஊர்வலமாக நகரின் முக்கிய பகுதி வழியாகவும் சந்தைப் பகுதி வழியாக வும் மெல்லச் செல்வார்கள். எசமானர்கள் அவர்களின் அடிமைகளின் பெருமைகளை யும், விலைகளையும் பாடல் வடிவில் பாடிக் கொண்டே செல்வார்கள். யாரேனும் ஒருவர் இந்த அடிமைகளில் ஒருவரை வாங்க விரும்பினால், அவர் இந்த ஊர்வலத்தை நிறுத்துவார். பின்பு அவர் தேர்ந்தெடுத்த அடிமையின் பார்க்கும் மற்றும் கேட்கும் திறன்களை சோதித்துப் பார்த்த பிறகு அவர்களை ஓடச் சொல்லியும் நடக்கச் சொல்லியும் அடிமையின் திறன்களை சோதிப்பார். அதன் பின்பு அடிமை உறங்கும்போது குறட்டை விடவோ, பல்லை நறநறவென கடிக்கவோ மாட்டார் என்ற உத்தரவாதத்தை அடிமை முதலாளியிடம் இருந்து வாங்கிக் கொண்ட பின் – அந்த அடிமையின் மர்ம உறுப்புகளை அவர் சோதனையிடுவார். ஆப்பிரிக்க இன மக்களிடையே மர்ம உறுப்புகளை மற்றவர்களுக்கு காட்டுவதென்பது, பாரம்பரியப்படி மாபெரும் குற்றம். ஆனால், அடிமையான பின்பு பாரம்பரியமாவது, வெண்டைக்காயாவது.

அதன் பிறகு அந்த அடிமையை அவர் தனது வீட்டிற்கு கூட்டிச் செல்வார். கோவாவில் ஒவ்வொரு ஆங்கிலச் சீமாட்டியின் வீட்டிலும் ஒரு சித்தி தொண்டூழியம் செய்து வருவார். கோவா நகர வீதிகளில் சித்தி ஒருவர் குடைபிடிக்க ராசநடை நடந்து செல்வதுதான் ஆங்கிலச் சீமாட்டிகளுக்கும், இந்திய மேல்சாதி வர்க்கத்திற்கும் பெருமை. இதுமட்டுமின்றி, அடிமைகள் அவரவர் உழைக்கும் திறனைப் பொறுத்து கைமாற்றப்படுவர். இப்படியாக இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்ட ஆப்பிரிக்க மக்கள் அடிமைகளாக பல வீடுகளில் வேலை பார்த்தனர். முக்கியமாக, இவர்கள் சமையல் வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்களுடைய வலிமையான உடல்திறனை கருத்தில் கொண்டு, இவர்கள் பல இந்திய மன்னர்களின் படைகளில் படை வீரர்களாகவும் சேர்க்கப்பட்டனர்.

‘சித்தி' என்ற பெயர் அரேபிய மொழிச் சொல்லான ‘சையத்' அல்லது ‘சையதி' என்ற சொல்லிலிருந்து வந்ததாக ஆய்வறிஞர்கள் கூறுகிறார்கள். ஆனால், முரண்நகையாக அதன் பொருள் தலைவர் என்பதாகும். வட ஆப்பிரிக்காவில் ‘சித்தி' அல்லது ‘சிதி' என்றால் மரியாதையோடு அழைக்கப்படும் சொல். கர்நாடகாவைத் தவிர குஜராத்திலும், மகாராட்டிராவிலும் இவர்கள் வாழ்கிறார்கள். இதுபோக, வங்காளவிரிகுடா பகுதிகளில் மேற்கு வங்கத்திலும், ஒரிசாவிலும் சிறிய அளவில் சித்திக்கள் வாழ்கிறார்கள். அடிமை முறை ஏட்டளவில் ஒழிக்கப்பட்ட பிறகு, பிரித்தானிய இந்திய அரசு இவர்களில் பலரை விடுதலை செய்யத் தொடங்கியது. ஆனால், இந்த அடிமை முறை ஏட்டளவில் ஒழிக்கப்படுவதற்கு முன்பாகவே பலர் தாமாகவே தமது விடுதலையை உறுதி செய்து கொண்டார்கள்.

கோவாவில் இருந்து அடிமை முதலாளிகளின் பிடியில் இருந்து தப்பி வெளியேறிய இவர்கள், அப்படியே அடர்ந்த மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளில் நுழைந்து காடுகளில் தமது வாழ்க்கைப் பயணத்தை தொடங்கினர். சித்திக்கள் இந்தியா வந்தவுடன் (வரும்போது முஸ்லிம் அடிமை வியாபாரிகளால் விற்கப்பட்டவர்கள் முஸ்லிம்களாகவும், கிறித்துவர்களால் விற்கப்பட்டவர்கள் கிறித்துவர்களாகவும் மதம் மாற்றப்பட்டனர்) புதிதாக இந்து மதத்தையும் (முக்கியமாக கர்நாடகத்தின் கடற்கரையோரம் வசிக்கும் பார்ப்பனர்களின் பண்ணைகளில் கொத்தடிமை வேலைக்குச் சேர்ந்த சித்திக்கள்) பின்பற்றத் தொடங்கினர். இப்படியாக கோவாவிலிருந்து ஓடிவந்த இவர்கள், கர்நாடகாவின் மேற்கு தொடர்ச்சி மலையின் அடர்ந்த காடுகளின் ஊடாக நடையாக நடந்து பின்பு அங்கோலா, முண்டுகோடு, ஹலியால், சிர்சி, சுபா, எல்லாபுர் வட்டங்களிலும் மற்றும் பல பகுதிகளிலும் அடர்த்தியாகக் குடியேறத் தொடங்கினர்.

சித்திக்கள் ஆப்பிரிக்காவிலிருந்து தம்முடன் தமது நினைவுகளைத் தவிர எதுவும் கொண்டு வரவில்லை. அந்த நினைவுகளைக் கொண்டு இங்கு தமது வாழ்விடங்களை அமைத்துக் கொள்ள வேண்டும். அங்கு அவர்கள் வாழ்க்கை நடத்தியதுபோல இங்கு வாழ இங்குள்ள அமைப்பும் அவர்களின் அடிமை நிலைமை யும் அனுமதி தராது என்பதால், இங்குள்ள சூழலுக்கு ஏற்ப தம்மை தகவமைத்துக் கொண்டனர். ஆனால், அதே நேரத்தில் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் அவர்கள் தமது ஆப்பிரிக்க பண்பாட்டைப் பாதுகாக்க வும், அதை நீண்ட காலங்களுக்கு நீட்டித்து வரவும் மறக்கவில்லை. உண்மையைச் சொல்வதென்றால், எப்படி ஒரு மனிதனின் மூளையில் விடுதலை உணர்வு என்பது அவனையும் அறியாமல் பின்னிப் பிணைந்துள்ள÷தா அதுபோல சித்திக்களின் மூளைகளில் வரலாறுகளில் பழைய நினைவுகள் அத்தனையும் இழந்தபோதும் கூடவே வந்தது.

சித்திக்கள் ஆப்பிரிக்க வம்சாவளிகளை மறந்துவிட்டதாக பலர் கதை கட்டிக் கொண்டிருந்தாலும், அவர்கள் ஆப்பிரிக்கர்கள்தான் என்பதை அவர்களின் சுருட்டை முடிகளும், அவர்களின் கறுப்பு நிறமும் காட்டிக் கொடுத்து, மேற்கத்திய அரசுகளின் அன்றைய மனிதாபிமானமற்ற செயலுக்கு மேலும் ஓர் எடுத்துக்காட்டாக காட்சியளிக்கிறது. அதுபோக, அவர்கள் பேச்சுவழக்கிலும் (முக்கியமாக ஆப்பிரிக்க மக்களின் மொழிகளில் வரும் ‘கிளிங்' ஒலிகள் அவர்களின் தற்போதைய தாய்மொழியான கொங்கணியை பேசும்போது வருகிறது) அவர்களின் ஆப்பிரிக்க தொடர்புகள் நன்றாகத் தெரிகின்றன. நடனங்களும், பாடல்களும் மேலோட்டமாக பார்க்கும்போது இங்கிருக்கும் பழங்குடி மக்களின் ஆடல் பாடல்களைப் போல இருந்தாலும், குறித்து நோக்கினால் அவற்றிற்கிடையேயான வேறுபாடுகளும், ஆப்பிரிக்க பாடல் ஆடல்கள் மற்றும் சித்திக்களின் ஆடல்பாடல் ஆகியவற்றிற்கிடையேயான ஒற்றுமைகளும் தெள்ளத்தெளிவாகத் தெரியும். மேலும், அவர்கள் பயன்படுத்தும் இசைக்கருவி, பாடல்கள் அதில் பொதிந்திருக்கும் அர்த்தங்கள், இசையைக் கேட்ட வுடன் ஆடத் தொடங்கும் அவர்களின் உடல்கள் ஆகிய அனைத்தும் – காலகாலத்திற்கும் அவர்களின் தனித்தன்மைகளை எடுத்துக்காட்டும்.

பழங்குடியின மக்களின் இயல்பிற்கேற்ப இவர்கள் ஓர் இறுக்கமான குழுவாகவே வாழ்ந்து வருகிறார்கள். ஜனநாயகப்பூர்வமாக ஒரு தலைவரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, அவருக்கு உதவ ஒரு குழுவையும் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள். கிறித்துவ மதத்திலும், இசுலாமிய மதத்திலும் சித்திக்கள் சித்தி அல்லாதவர்களோடு பெண் கொடுப்பதும், பெண் எடுப்பதும் தற்போது நடக்கத் தொடங்கி யுள்ளது. ஆனால், இந்து மதத்தில் இணைந்த சித்திக்களுக்கு இலவசமாக கடவுள்களோடு சாதியும் வழங்கப்பட்டதால், அங்கு அவர்கள் தலித்துகளாக ம(மி)திக்கப்படுகிறார்கள். ஒரு தலித் இந்திய சமூகத்தில் அனுபவிக்கும் அத்தனை துன்பங்களையும் சித்திக்களும் அனுபவிக்கிறார்கள். எனவே, இந்து மதத்தில் இருக்கும் சித்திக்கள் இடையே சித்தி அல்லாதவர்களுக்கு பெண் கொடுத்து பெண் எடுக்கும் வழக்கம் இல்லை. ஆனால், என்னதான் மதங்கள் மறுமணத்தை எதிர்த்தாலும், அதுபற்றி எந்தக் கவலையுமின்றி இவர்கள் மறுமணம் செய்து கொள்கின்றனர்.

கோவாவிலிருந்து தப்பிவந்த மற்றும் விடுவிக்கப்பட்ட சித்திக்கள், மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளின் அடிவாரங்களில் குடியேறத் தொடங்கிய பின்பு, அங்கு எந்தப் பயனுமற்று பாடாவதியாகக் கிடந்த காடுகளை தூய்மைப்படுத்தி, அங்கு விவசாயத்தை தொடங்கினார்கள். சித்திக்களின் கடுமையான உழைப்பினால் அந்தக் காடுகள் இப்போது பொன்விளையும் நிலங்களாக மாறி நிற்கின்றன. சித்திக்கள் கள்ளங்கபடமற்றவர்கள். பல தலைமுறைகளுக்கு பணம் சேர்த்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் அற்றவர்கள். கிடைக்கும் பொருளை அவ்வப்போது செலவழித்து பகிர்ந்துண்டு வாழும் வாழ்வை மகிழ்வாகக் கொண்டாடுபவர்கள். இது, பழங்குடியின மக்களுக்கே உரிய சிறப்பியல்பு. இதை நன்கு தெரிந்து கொண்ட இதர சாதி இந்துக்களும் பார்ப்பனர்களும் சித்திக்களின் செல்வங்கொழிக்கும் நிலங்களை வெறும் சொற்பக் காசுக்கு வாங்கிக் கொண்டதால், இப்போது ஒரு காலத்தில் தமது சொந்த நிலங்களாக இருந்தவற்றில் அவர்கள் கூலி விவசாயிகளாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

கிரண்கமல் பிரசாத் என்ற மானுடவியல் ஆய்வறிஞர் (இவர் ஒரு முன்னாள் கிறித்துவ பாதிரியார்) கிறித்துவ சித்திக்களைப் பற்றிக் கூறும்போது, அவர்கள் தங்கள் குறை ஏற்பின்போது தாங்கள் எப்போதும் எந்த தவறும் செய்ததில்லை என்றே கூறுவார்கள். ஏனென்றால், அவர்கள் இது தவறு, இது சரி என்ற குற்றவுணர்வு அற்ற ஒன்றுமறியா மக்களாக இருந்தார்கள் என்று கூறுகிறார். ஆனால், இவர்களின் இந்த குற்றவுணர்வற்ற மனநிலையும் வர்க்க மனதின் ‘தவறு'களை கண்டு பெரும்பொருட்டாக மதிக்காத தன்மையையும் சித்தியல்லாதவர்கள் தங்களின் தவறான எண்ணத்திற்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

siddi_341சமூக, பொருளாதார, பண்பாட்டுச் சுரண்டல்கள் மட்டுமின்றி சித்திக்களுக்கே இருக்கும் பாலியல் தேர்வு சுதந்திரத்தையும் அம்மக்களின் அறியாமையையும் சாதி இந்துக்களும், இன்னபிற நடுத்தர வர்க்கத்தினரும் பாலியல் சுரண்டலை மேற்கொள்கின்றனர். முக்கியமாக, சித்திக்களிடையே நிலவும் ஆண் பெண் சமத்துவ நிலையை (அனைத்து சமூகப் பணிகள், சமநிலையாக பணிகள் செய்வது மற்றும் இருபாலருக்கும் இருக்கும் உழைத்த களைப்பை போக்கும் குடிப்பழக்கம்) பெண்கள் ஆண்களோடு எந்த தயக்கமும் இன்றி பழகும் தன்மையை பயன்படுத்திக் கொண்டு, சித்தி அல்லாதவர்கள் பாலியல் சுரண்டலில் ஈடுபடுகிறார்கள்.

உலகமயமாக்கலுக்கு பின்பு நாலு கால் பாய்ச்சலில் முன்னேறும் நுகர்வுப் பண்பாடு சித்திக்களையும் சீரழிக்கத் தொடங்கி விட்டது. சந்தை பொருளாதாரத்தின் விளைவான இந்நுகர்வுப் பண்பாட்டிற்குள்ளான பல சித்தி இளைஞர்கள், சித்தி பெண்களை திருமணம் செய்ய மறுக்கிறார்கள். ஏனெனில், இந்த நுகர்வுப் பண்பாட்டிற்கு மெல்ல மெல்ல அடிமையாகிவிட்ட சித்தி இளைஞர்களின் மனதில் அழகு என்றாலே சிவப்பு நிறம் என்ற எண்ணம் நுழைந்து விட்டது. அதனால் கறுப்பாகவும் சுருட்டை முடிகளோடும் இருக்கும் சித்திப் பெண்கள், சித்தி ஆண்களின் கண்களுக்கு அழகற்றவர்களாகத் தெரிகின்றனர். இப்போது சித்தி ஆண்களே சித்தி பெண்களை திருமணம் செய்ய மறுத்து, மற்ற பெண்களை திருமணம் செய்ய முற்பட்டதால், இரண்டாவது மனைவியாக திருமணம் செய்து வாழ்க்கையை நடத்தும் அவல நிலை சித்திப் பெண்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இக்கதை இத்தோடு முடிந்து விடவில்லை. அடிமைகள் இன்னும் அடிமைகளாகவே இருக்கிறார்கள். அன்று வெள்ளை எசமானர்களுக்கு அடிமைகளாக இருந்த இவர்கள், இன்று மாநிற எசமானர்களுக்கு அடிமைகளாக இருக்கிறார்கள். பல நூற்றாண்டுகளாக இந்த பாழாய்ப்போன அரசாங்கத்திற்கு தங்களது கடுமையான உழைப்பை காணிக்கையாக சித்திக்கள் அளித்திருந்தாலும், இந்த இந்திய அரசு இவர்களை கண்டுகொள்ளத் தயாராக இல்லை. அரசு 1986 இல் இவர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும், பின்பு 2003 ஆம் ஆண்டில் இவர்களை பழங்குடியினர் பட்டியலிலும் இணைத்தது. மேலும், இவர்களின் சமூக, பொருளாதார நிலை பற்றிய கணக்கீடு தகவல், இருபது ஆண்டுகளுக்கு முன்னதாக எடுக்கப்பட்ட தகவலை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது.

அண்மையில், பல அரசுசாரா நிறுவனங்களால் ஒரு சில சமூக, பொருளாதார நிலை பற்றிய ஆய்வுகள் எடுக்கப்பட்டாலும், அவை சரியாக ஆவணப்படுத்தப்படவில்லை. 1990களில் எடுத்த ஆய்வுகளின்படி, இவர்களில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை வெறும் 9.6 சதவிகிதம்தான். அதிலும் அவர்கள் அனைவரும் தொடக்க பள்ளிகளைக்கூட கடக்காதவர்கள். தற்போதைய நிலையில் வெறும் பத்துக்கும் குறைவானவர்களே இளங்கலைப் படிப்பை முடித்துள்ளார்கள் என்பதிலிருந்து, இவர்களின் முன்னேற்றமும் அதற்காக அரசு எடுத்த நடவடிக்கைகளும் நமக்கு நன்கு விளங்கும். இந்த பத்துக்கும் குறைவானவர்களும் தமது சொந்த முயற்சிகளாலேயே இந்த அளவிற்காவது முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

சித்திக்கள் தமக்காக ஒரு சில அமைப்புகளை ஏற்படுத்திக் கொண்டாலும் அந்த அமைப்புகள் வெறும் சமூக, பொருளாதார நலன்களை முன்னிறுத்தும் அமைப்புகளாகவே இருக்கின்றன. மாறாக, அரசியல் நோக்கங்களை, அதன் மூலம் அவர்களின் எதிர்காலத்தை அமைக்கும் ஓர் அமைப்பை உருவாக்க வேண்டிய தேவையை காலம் அவர்கள் முன்னிலையில் நிறுத்தியிருக்கிறது. இந்திய அரசிடம் இருந்த அவர்களுக்கான உரிமைகளை அவர்கள் அடையப் போராடுவதோடு, இன்னொன்றைப் பெறவும் அவர்கள் முயல வேண்டும் என்பதே அனைத்து முற்போக்காளர்களின் அவா. அது என்னவெனில், அடிமை விற்பனையில் ஈடுபட்டு கொள்ளை கொள்ளையாகப் பணம் சம்பாதித்த மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த அடிமை முதலாளிகள் யாரென்று கண்டறியப்பட வேண்டும் (அடிமை முறையின் கொடூரமான இயல்பு என்னவென்றால், அவை அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளதே).

இத்தகைய மாபெரும் சமூக அவலத்திற்கு ஆளாக்கிய அவர்களின் மற்றும் அவர்கள் சொந்தபந்தங்களின், பரம்பரையினரின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு, அவை சித்திக்களுக்கு பிரித்து தரப்பட வேண்டும். இந்த கோரிக்கைகளை வென்றெடுக்க சித்திக்களுக்கு உதவ வேண்டும். ஆப்பிரிக்காவில் மாபெரும் புரட்சிகள் இருபதாம் நூற்றாண்டுகளில் எழுந்தபோது, அதற்கு பக்கபலமாக நின்றவர்கள் அமெரிக்காவின் புலம்பெயர் ஆப்பிரிக்கர்களே. மாபெரும் எழுத்தாளர்களாக விளங்கிய அமெரிக்க ஆப்பிரிக்க எழுத்தாளர்களான பிரடெரிக் டக்ளஸ் போன்றவர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து பிடித்து வரப்பட்ட அடிமைகளின் வாரிசுகளே. ஆனால், கெடுவாய்ப்பாக வலிமையான புலம்பெயர் ஆப்பிரிக்க இனமாகத் திகழும் அமெரிக்க ஆப்பிரிக்கர்கள், இந்தியாவின் மூலையில் இப்படி ஒரு சிறிய எண்ணிக்கையில் ஆப்பிரிக்கர்கள் அடிமைகளாகக் கொண்டு வரப்பட்டு, சித்திக்கள் என்ற பெயரில் இன்னும் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கின்றனர் என்பது பற்றி அறியாமல் இருக்கின்றனர்.