அரசியல் சீர்திருத்தம் அதிகமாய் வழங்குவதற்காக என்று இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட சைமன் கமிஷனை, இந்த நாட்டில் 100க்கு 903/4 பார்ப்பனரும் ஆட்சேபித்து, பகிஷ்கரிக்க வேண்டுமென்கிறார்கள். சில பார்ப்பனரல்லாத சோணகிரிகளும் அவர்களைப் பின்பற்றினார்கள். ஆனால், தாழ்த்தப்பட்டு, கொடுமைப்படுத்தப்பட்டவர்களில் எல்லோருமே சைமன் கமிஷனை வரவேற்று, ஆதரித்து தங்கள் குறைகளைச் சொல்லிக் கொண்டார்கள். பகிஷ்கரித்தவர்கள் யோக்கியதையையும், ஆதரித்தவர்கள் அடைந்த பலனையும் இப்போது கவனித்துப் பார்த்தால், பகிஷ்காரக் கூச்சல் போட்டவர்கள் தங்கள் சமூக நலனுக்கும்; ஆதரித்தவர்கள் தங்கள் விடுதலைக்குமாக நடந்து கொண்டார்கள் என்பது விளக்கமாகும்.

சைமன் கமிஷனை ஆதரித்து, தங்கள் குறைகளைச் சொல்லிக் கொண்ட தாழ்த்தப்பட்ட வகுப்பார்களின் பிரதிநிதிகளாக லண்டனுக்குச் சென்ற திருவாளர்கள் டாக்டர் அம்பேத்கர், ராவ் சாஹிப் சீனிவாசன் ஆகிய இரு கனவான்களும் வெளியிட்டிருக்கும் ஒரு யாதாஸ்துப்படியும், ராவ் சாஹிப் சீனிவாசன் அவர்கள் லண்டனிலிருந்து தங்கள் வகுப்பாருக்கு அறிவித்திருக்கும் கம்பியில்லா தந்தியிலிருந்தும் நாம் அறிவது என்னவென்றால், அவர்கள் தங்கள் யாதாஸ்தில் கண்டிருப்பதானது : தங்களுக்கு இந்நாட்டின் சமத்துவமான நகர வாழ்க்கை சுதந்திரம் கிடைப்பதற்கு அடியில் கண்ட திட்டங்களைச் சட்டமாக ஆக்கச் செய்யப்பட வேண்டுமென்றும்;

பிரிட்டிஷ் அரசாங்கத்தார் தங்களுடைய மற்ற குடி ஜனங்களுக்குக் கொடுத்திருக்கும் உரிமைகளை, யாதொரு தடையுமில்லாமல் தங்களுக்கும் கொடுக்க வேண்டும். அவைகள் எந்த முறையில் இருக்க வேண்டுமென்றால், மற்றவர்கள் பொதுவாக எல்லா காரியங்களிலும் அனுபவிக்கும் சுதந்திரங்களைப் போலவே – உதாரணமாக பொதுச் சத்திரங்கள், மடங்கள், பள்ளிக்கூடங்கள், ரோடுகள், குளங்கள், கிணறுகள், இதர தண்ணீர்த் துறைகள் முதலாகியவைகளிலும்; தரையிலாவது, தண்ணீரிலாவது, ஆகõயத்திலாவது செல்லும் வாகனங்கள், நாடகசாலைகள், பொது இளைப்பாறும் இடங்கள், சந்தோஷ விளையாட்டு, களியாட்டு இடங்கள் முதலிய இடங்கள் ஆகியவை எந்த முறையில் நடத்தப்பட்டாலும், அவைகளில் சென்று, அவற்றின் பலனையும், சவுகரியத்தையும், மற்ற குடிஜனங்கள் அனுபவிப்பது போல் தாங்களும் அனுபவிக்கத் தாராளமான உரிமைகள் இருக்க வேண்டும் என்றும்;

அவ்விதச் சுதந்திரங்களை யாராவது தடுத்தால் அப்படித் தடுப்பவர்களை 5 வருஷ காலம் வரை தண்டிக்கத் தகுந்தபடி சட்டத்தில் விதிகள் இருக்க வேண்டும் என்றும்; மேல்கண்ட நிபந்தனைகளுக்கு விரோதமாய் நடக்கும் முறையில், தங்களை யாராவது, எந்தக் காரியத்திலாவது பகிஷ்காரம் செய்தால் அல்லது செய்யும்படித் தூண்டினால், அப்படிப்பட்ட கூட்டத்தார்களையோ, தனி மனிதர்களையோ, முறையே 7 வருஷம், 5 வருஷகாலம் வரை தண்டிக்கவோ அல்லது தகுந்த அபராதம் விதிக்கவோ அல்லது இரண்டும் செய்யவோ விதிகள் செய்ய வேண்டும் என்றும்;

மற்ற சமூகத்தாருக்கு இருப்பது போல், மற்றவர்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளவும், சாட்சி கொடுக்கவும், சொத்துகளை வாங்கவும், விற்கவும், குத்தகைக்கு விடவும், குத்தகை வசூலிக்கவும் சொத்துகளைச் சுதந்திரமாய் அனுபவிக்கவும்; சர்க்கார் நிர்வாகம், ராணுவம் ஆகிய துறைகளிரண்டிலும் மற்ற ஜனங்களைப் போலவே, தாங்களும் உத்தியோகங்களைத் தாராளமாய் வகிக்கவும்; எல்லாப் பள்ளிக்கூடங்களிலும் சேர்ந்து வாசிப்பதற்கும்; தேர்தெடுக்கப்படும் ஸ்தாபனங்களில் தங்கள் சமூகத்தினரின் மொத்த எண்ணிக்கைக்கு சரியான பிரதிநிதித்துவம் இருக்கவும்; கோயில்கள் பொதுமடங்கள், சத்திரங்கள் ஆகியவைகளின் சொத்துகளை மற்றவர்கள் அனுபவிப்பது போலவே தாங்களும் அனுபவிக்கவும்; தங்கள் உரிமைகளைக் காப்பாற்றிக் கொள்ளும் விஷயத்தில் மற்றவர்களுக்கு இருக்கும் சுதந்திரங்கள், சவுகரியங்கள் தங்களுக்கும் இருக்கவும்; குற்றங்களுக்குத் தண்டனைகள் விதிப்பதில் கொஞ்சமும் வித்தியாசமில்லாமல் இருக்கவும், கண்டிப்பான சட்டவிதிகள் செய்யப்பட வேண்டும்.

மற்றும், தங்கள் சமூக எண்ணிக்கைக்குச் சரியான பிரதிநிதித்துவம் அளிப்பதும்; தங்கள் பிரதிநிதிகளைத் தாங்களே தெரிந்தெடுக்கவும்; முதல் 10 வருஷத்திற்கு தனித்தேர்தல் முறை அளிக்கவும்; பிறகு சாத்தியப்பட்டால், பொதுத் தேர்தலில் சேர்த்துக் கொள்ள வசதி செய்து கொள்ளவும்; பொதுத் தேர்தல் முறையைத் தங்கள் வகுப்பார் ஆட்சேபித்தால், அவர்களை நிர்பந்தப்படுத்தாமல் இருக்கவும்; உத்தியோகத் தெரிந்தெடுப்பில், தங்கள் வகுப்பில் விகிதாச்சாரம் தெரிந்தெடுக்கவும்; உத்தியோகங்களில், இப்போது இதர சாதிகள் எத்தனை விகிதாசாரம் இருக்கின்றார்களோ, அத்தனைப் பேர்கள் விகிதாச்சாரம் வீதம், தங்கள் சமூகத்தாரும் உடனே வந்து சேர்ந்து உத்தியோகம் அடைவதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்ய வேண்டியதும்; இந்த காரியங்களுக்காக ஏற்படுத்தப்பட்ட சட்டங்களை, எந்த மாகாணமாவது சரியானபடி அமுலில் கொண்டு வரவில்லையானால், கவர்னர் ஜனரல் சபையிடம் அப்பீல் செய்து கொள்ள உரிமையிருக்கவும், அப்படிப்பட்ட அப்பீலின் மீது, கவர்னர் ஜனரல் உடனே பிரவேசித்து, மேல்படி சட்டத்தைச் சரியானபடி நடத்தி வைக்கப் பாதுகாப்புகளும் இருக்க வேண்டும்.

– தொடரும்

"குடி அரசு' தலையங்கம் – 8.2.1931

Pin It