புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியத்தைச் சேர்ந்த கருவடத் தெரு ஊராட்சி மன்றத் தலைவர் அ. கலைமணி என்ற தலித் பெண்மணி, குடியரசு நாள் விழாவில் தேசியக்கொடி ஏற்றியபோது, அதே ஊராட்சி மன்றத் துணைத் தலைவரின் மகன் 20 பேருடன் திடீரென்று புகுந்து ஊராட்சி மன்றத் தலைவரின் சாதிப் பெயரைச் சொல்லி இழிவாகப் பேசி, தாக்கி, தேசியக் கொடியை ஏற்றவிடாமல் தடுத்து தானே ஏற்றியிருக்கிறார். கலைமணி தலித் என்பதால், அவரை தேசியக் கொடி ஏற்ற அனுமதிக்கக் கூடாது என்று கள்ளர் சாதியினர் திட்டமிட்டுள்ளதை அறிந்து 19.1.2012 அன்று கண்மணி காவல் நிலையத்தில் புகார் அளித்து தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கேட்டுள்ளார். ஊராட்சி மன்றத் தலைவரின் புகாரை காவல் துறை அலட்சியப்படுத்தியுள்ளது  ("தி இந்து' 29.1.2012).

இன்றளவும் சமத்துவத்தைப் பேண இந்து சமூகம் தயாரில்லை என்பதுமட்டும் அல்ல; அத்தகைய சமத்துவத்தைப் பேணும் தலித் மக்களையும் அதனால் சகித்துக் கொள்ள முடியவில்லை என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு : ஒரிசா மாநிலத்தில் உள்ள போலாங்கிர் மாவட்டத்தைச் சேர்ந்த லாத்தூரில் 22.1.2012 அன்று 9 ஆம் வகுப்பு படிக்கும் தலித் மாணவன் கணேஷ் சுனா, தனக்கென ஒரு புதுச்சட்டை வாங்குவதற்காக உள்ளூரில் உள்ள ஒரு துணிக்கடைக்கு சென்றிருக்கிறார். கடையில் அந்த மாணவர் விசாரித்துக் கொண்டிருக்கும்போது, அவர் சட்டைக்கு உள்ளே பனியன் அணிந்திருப்பதை அந்த சாதி இந்து கடைக்காரர் கவனித்திருக்கிறார். இது, அவர் கண்ணை உறுத்தியிருக்கிறது. ஆனால், இதை வெளிப்படுத்தாமல் அந்த மாணவர் தன் கடைக்கு திருட வந்ததாகச் சொல்லி கடுமையாகத் தாக்கியிருக்கிறார். இதைக் கண்டித்த அவரது தாத்தாவும் தாக்கப்பட்டுள்ளார். மேலும், இம்மாணவர் வசிக்கும் சேரிக்கு திரண்ட  சாதி இந்து கும்பல்  50 வீடுகளையும், அவர்களது உடைமைகளையும் எரித்துச் சாம்பலாக்கியுள்ளது ("தி இந்து', 25.1.2012).

மகாராட்டிர மாநிலத்தில் உள்ள முல்கான் கிராமத்தில் 42 வயதான தலித் பெண்ணின் ஆடைகளை அவிழ்த்து, தாக்கி, நிர்வாணமாக நடக்கவிட்டுள்ளனர். இப்பெண்ணின் மகன் ஒரு சாதி இந்து பெண்ணுடன் ஒரு மாதத்திற்கு முன்பு ஊரைவிட்டு ஓடிவிட்டான். இதனால்

ஆத்திரமடைந்த சாதி இந்துக்கள், பட்டப்பகலில் அனைவரின் முன்னிலையிலும் இக்கொடுமையை நிகழ்த்தியுள்ளனர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் இப்பெண் அளித்த புகாரை போலிஸ் வாங்க மறுத்திருக்கிறது. பாதிக்கப்பட்ட அப்பெண்மணி கூறுகிறார் : "சாதி இந்து பெண்கள் என்னை கீழே தள்ளி என் புடவையை உருவி நிர்வாணமாக்கினர். அதற்குப் பிறகு என்னைச் செருப்பாலும் கம்புகளாலும் அடிக்கத் தொடங்கினர். இரண்டு மணி நேரம் என்னை இப்படியே துன்புறுத்தினர்' ("தி இந்து', 12.1.2012).

தலித் மக்கள் உண்ணும் உணவுகூட இங்கு கொச்சைப்படுத்தப்படுகிறது. "தமிழக முதல்வர் ஜெயலலிதா எப்போதோ மாட்டிறைச்சி உண்டார்' என்று உண்மைக்கு மாறான ஒரு தகவலைச் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தியது "நக்கீரன்' ஏடு. மாட்டிறைச்சி உண்பது கேவலமானது என்ற கருத்தின் அடிப்படையில், அது உண்மையில் தலித் மக்களைத்தான் கொச்சைப்படுத்தி யிருக்கிறது. சமூகத்தில் நிலவும் தவறான புரிதல்களை ஒழிக்க முன்வராமல், அதையும் வியாபாரமாக்கும் சூழ்ச்சி இது. இவ்வாறு தலித்துகளை கொச்சைப்படுத்துவதற்குப் பெயர் கருத்துச் சுதந்திரம் என்று "நக்கீரனு'க்கு வக்காலத்து வாங்குகிறவர்களும் நாட்டில் இருக்கிறார்கள்!

இது தொடர்பாக தமிழக முதல்வர் தாக்கல் செய்துள்ள அவமதிப்பு வழக்கில், "இச்செய்தி பிராமண சமுதாயத்தில் இருந்து வந்த முதல் அமைச்சர் மாட்டுக்கறி உண்பாரா? என்ற தவறான எண்ணத்தை மக்கள் மனதில் உருவாக்கிவிட்டது'' என்று குறிப்பிட்டுள்ளார் ("தினத்தந்தி' 12.1.2012). முதல்வர் குறிப்பிடும் "தவறான எண்ணம்' எது?  "மாட்டிறைச்சி உண்பது  கேவலமானது' என்பதுதானே? மாட்டின் உழைப்பைச் சுரண்டுவதும், ஜல்லிக்கட்டு என்ற பெயரில் அதைக் கொடூரமாக துன்புறுத்துவதும் தமிழ்ச்சமூகத்திற்கு பண்பாடு! ஆனால், அதை உண்பதும், உண்பவர்களும் மட்டும் கேலவமானவர்கள். சாதியற்ற சமத்துவப் பண்பாடே தலித் மக்களின் வாழ்க்கைமுறை என்பதால்தான் சாதி இந்து சமூகம் அதை (சமத்துவத்தை) அருவெறுப்பாகப் பார்த்து, ஜாதியைப் (சமத்துவமின்மையை) போற்றுகிறது போலும்!

இந்தியாவில் நாள்தோறும் நடத்தப்படும் வன்கொடுமைகளால் பாதிப்பிற்குள்ளாவது தலித் மக்கள்தான் எனினும், அது அவர்கள் செய்த தவறுகளால் விளைந்தது அல்ல. சமூக, பொருளியல் வாழ்க்கையில் தலித் மக்கள் சமத்துவத்தை நிலைநாட்டும் போதுதான் அவர்கள் தாக்கப்படுகின்றனர். இது, தலித் மக்களுக்கு நேரும் அவமானம் என்று கருதி இச்சமூகம் வேடிக்கை பார்க்கிறது. மாறாக, இது, இந்து சமூகத்திற்கும், இந்திய ஜனநாயகத்திற்கும் நாள்தோறும் ஏற்படும் அவமானம். ஆனால், சல்மான் ருஷ்டிக்கு கருத்துச் சுதந்திரம் மறுக்கப்படுவதற்காக கூச்சல் போடுகிறவர்கள், இந்நாட்டின் 25 கோடி மக்களுக்கான சுதந்திரம் மறுக்கப்படுவதைப் பற்றிப் பேசுவதில்லை. வன்கொடுமைகளுக்கு காரணமான ஜாதிய சமூக அமைப்பை கேள்விக்குள்ளாக்காமல், நாள்தோறும் நடைபெறும் கொடுமைகளை மட்டும் கண்டிப்பது போலித்தனமானது. சமத்துவமின்மையை கருவறுக்கும் இந்து கருத்தியலுக்கு உரமிரட்டுக் கொண்டு, சமூக ஜனநாயகத்தை மலரச் செய்ய முடியாது. அது அரசியல் ஜனநாயகத்தையும் பாழ்படுத்திவிடும்.