பூனா ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தும் தீர்மானத்தை ஆதரித்து டாக்டர் அம்பேத்கர் பேசியபோது பலத்த கரவொலி எழுந்தது.  "சில நாட்களுக்கு முன்பு எந்த மனிதரும் என்னைவிட மிக அதிக இக்கட்டான நிலையில் வைக்கப்பட்டிருந்திருக்க மாட்டார் என்று கூறுவது, எல்லா வகையிலும் மிகைப்படுத்தப்பட்ட கூற்று அல்ல என்று நம்புகிறேன். என் முன் வைக்கப்பட்ட இரு கடினமான விஷயத்தில் ஒன்றை நான் தேர்ந்தெடுக்க வேண்டி யிருந்தது. ஒரு புறம், இந்தியாவில் மிகச் சிறந்த மனிதரின் உயிர் காப்பாற்றப்பட வேண்டியிருந்தது. இன்னொருபுறம் வட்டமேசை மாநாட்டில் எந்த சமூகத்தின் நலன்களைப் பாதுகாக்க நான் முயன்றேனோ அந்தப் பிரச்சினையும் இருந்தது.

"நம் அனைவரின் ஒத்துழைப்பால் காந்தியின் உயிரைக் காப்பாற்றவும் அதே நேரம் எதிர்காலத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் உரிமைகளைப் பாதுகாக்கும் அவசியத்திற்கு ஒரு தீர்வு காணவும் முடிந்தது என்று கூற முடிவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். இது தொடர்பான எல்லாப் பேச்சுவார்த்தைகளிலும் அதிக அளவிலான பெருமை காந்தி அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டுமெனக் கருதுகிறேன். நான் அவரை சந்தித்தபோது அவருக்கும் எனக்கும் இடையில் பொதுவான அம்சங்கள் அதிகம் இருந்தது கண்டு பெரிதும் வியப்படைந்தேன் என்பதை நான் ஒப்புக் கொண்டாக வேண்டும் (கரவொலி).

"உண்மையில் அவரிடம் எடுத்துச் சொல்லப்பட்ட பிரச்சினைகள் பற்றி சர். தேஜ் பகதூர் சப்ரு உங்களிடம் கூறியிருக்கிறார். அவை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். வட்டமேசை மாநாட்டில் எனது கருத்துகளிலிருந்து பெரிதும் மாறுபட்ட கருத்துகளை கொண்டிருந்த ஒரு மனிதர் என்னைக் காப்பாற்ற – மறுதரப்பில் உள்ளவர்களை அல்ல – எப்படி உடனே முன் வந்தார் என்பதைப் பார்த்தபோது, நான் வியப்பால் திணறினேன். மிகவும் இக்கட்டான நிலையிலிருந்து என்னை விடுவித்ததற்காக காந்திக்கு நான் பெரிதும் நன்றிக் கடன்பட்டுள்ளேன்.

"எனது ஒரே வருத்தம், வட்டமேசை மாநாட்டில் காந்தி ஏன் இந்த கண்ணோட்டத்தை மேற்கொள்ளவில்லை என்பதுதான்.

அப்போது என்னுடைய கருத்து விஷயத்தில் இதே பரிவை அவர் காண்பித்திருந்தால், இந்தக் கடுமையான சோதனைக்கு அவர் தம்மை உட்படுத்திக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. எனினும் இவை எல்லாம் நடந்து முடிந்து போன விஷயங்கள். இப்போது இந்தத் தீர்மானத்தை ஆதரிக்க நான் முன்வந்திருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

"ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் அனைவரின் ஆதரவையும் இந்த ஒப்பந்தம் பெறுமா என்று பத்திரிகைகள் கேள்வி எழுப்பியுள்ளன. நான் தெளிவாக ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். என்னைப் பொருத்தவரையிலும் இந்த ஒப்பந்தத்திற்கு ஆதரவாக நாங்கள் இருப்போம் என்பதை உறுதியுடன் என் சார்பிலும் நம்மிடையே இங்கிருக்கும் ஏனையோர் சார்பிலும் கூறிக் கொள்கிறேன். இது பற்றி எந்த சந்தேகமும் இருக்க வேண்டியதில்லை. எனக்குள்ள ஒரே கவலை என்னவெனில் இந்து சமூகம் இதை ஒப்புக் கொள்ளுமா என்பதுதான் (குரல்கள் : ஆம், நாங்கள் ஒப்புக் கொள்வோம்). கெடுவாய்ப்பாக, இந்து சமூகம் ஓர் ஒன்றிணைந்த சமூகமாக இல்லை. மாறாக, அது பல சிறிய சமூகங்களின் கூட்டமைப்பாக இருக்கிறது. இந்துக்கள் இந்த ஆவணத்தைப் புனிதமானதாகக் கொண்டு கண்ணிய உணர்வுடன் செயல்படுவர் என்று உறுதியாக நம்புகிறேன்.

"நான் சொல்ல வேண்டிய மற்றொரு விஷயத்தையும் கூற விரும்புகிறேன். இந்தப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்ற அனைத்து நண்பர்களுக்கும் நான் பெரிதும் கடமைப் பட்டுள்ளேன். அதிலும் முக்கியமாக தேஜ் பகதூர் சப்ருவையும் திரு. ராஜகோபாலாச்சாரியையும் குறிப்பிட்டுக் கூற விரும்புகிறேன். சர் தேஜ் பகதூர் இல்லாவிடில், எல்லா விஷயங்களையும் விவாதத்திற்கு கொண்டு வருவது சிரமமாக இருந்திருக்கும். ஒரு விஷயத்தை நான் ஒப்புக் கொண்டாக வேண்டும்.

Ambedkar_Title_370"வகுப்புப் பகைமைக்கு அப்பாற்பட்ட மனிதர் எவரேனும் இந்தியாவில் இருக்கிறார் என்றால், அவர் சர் தேஜ் பகதூர் சப்ருதான் என்பதை, கடந்த இரு ஆண்டுகளாக நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் அவர் பற்றிய எனது அனுபவத்தின் வாயிலாக இதை நான் கூற முடியும். அவருடைய நேர்மை நோக்கும், நியாயத் தன்மையும் புதிய அரசியல் சாசனத்தில் சில பாதுகாப்புகளைப் பெற ஏங்கும் எல்லா சிறுபான்மை யினருக்கும் அவர் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்கிறார்.

"எனது நண்பர் ராஜகோபாலாச்சாரியைப் பற்றி நான் அவசியம் குறிப்பிட்டாக வேண்டும். பேச்சுவார்த்தைகள் அநேகமாக முறியும் கட்டத்திற்கு வந்தபோது, எங்களை விடுவிக்க அவர்தான் வந்தார். அவரது நுண்மதியின் துணை இல்லா விடில், ஒருவேளை ஒப்பந்தம் ஏற்படாமல் போயிருக்கக் கூடும். இந்த காரசாரமான விவாதங்களில் கடுமையான சொற்கள் பறிமாறப்பட்டபோது, பண்டித மதன்மோகன் மாளவியா காட்டிய கண்ணியம் மற்றும் பொறுமைக்காக அவருக்கும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளேன்.

"தனித் தேர்தல் தொகுதிகள் நாட்டு நலன்களுக்கு தீங்கானவை என்ற கருத்தை வலியுறுத்தியதால்தான் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத் தீர்ப்பில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. இந்த வாதத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பதை நான் ஒப்புக் கொண்டாக வேண்டும். பெரும்பான்மையினர் பிரதிநிதித்துவத்திற்கு தனித்தொகுதிகள் தீங்கானவை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியும். ஆனால், சிறுபான்மையினரைப் பிரதிநிதித்துவப் படுத்த, தனித் தொகுதிகள் தீங்கு விளைவிப்பவை என்பதை என்னால் இன்னமும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

"இந்து சமூகத்தில் ஒடுக்கப்பட்ட சாதியினரை ஈர்த்துக் கொள்ளும் பிரச்சினைக்கு, கூட்டுத் தொகுதிகள் இறுதியான தீர்வாக இருக்க முடியும் என்று நான் நம்பவில்லை. பரந்துபட்ட சமூகப் பிரச்சினைக்கு எந்தத் தேர்தல் ஏற்பாடும் ஒரு தீர்வாக இருக்க முடியாது என நான் கருதுகிறேன். எந்த அரசியல் தீர்வுக்கும் அதிகமாக அதற்குத் தேவைப்படும். இன்று நாம் செய்துவரும் அரசியல் ஏற்பாட்டிற்கு அப்பாலும் சென்று, ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் இந்து சமூகத்தின் பிரிக்க முடியாத பகுதியினராக ஆவதற்கு மட்டுமின்றி, சமூகத்தில் அவர்கள் ஒரு கவுரவமான இடத்தையும் சமத்துவமான நிலையையும் பெறுவதற்கான வழிமுறைகளைக் கண்டறிவது சாத்தியம் என்றும் நான் நம்புகிறேன்.

"ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் அறியாமையில் மூழ்கி இருக்கும்வரை, சுயமரியாதை உணர்வைப் பெறாதவரை, இந்து சட்டம் அவர்களுக்கு சாத்தியமாக இருக்கலாம். ஆனால், அவர்கள் கல்வி அறிவு பெறப்பெற இந்து சமூகச் சட்டங்களின் கீழ் அவர்கள் விவேகமாக நடந்து கொள்ளத் தொடங்குவர். இந்து சமூகத்திலிருந்து அவர்கள் பிரிந்து போகும் ஒரு பேரபாயமும் உள்ளது. இதை உங்கள் மனதில் இருத்திக் கொள்ளும்படி உங்களை கேட்டுக் கொள்கிறேன். இது விஷயத்தில் ஆவன செய்வீர்களெனவும் நம்புகிறேன்.''

1932 செப்டம்பர் 26 அன்று மேன்மை தாங்கிய மன்னர்  அரசாங்கம் பூனா ஒப்பந்தத்திற்கு அங்கீகாரம் அளிக்க, நாடாளு மன்றத்திற்குப் பரிந்துரை செய்யப் போவதாக அறிவித்தது. 1932 செப்டம்பர் 26 அன்று உள்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. எச்.ஜி. ஹய்க், மத்திய சட்டப் பேரவையில் அவரது அறிக்கையை அளித்தார்.

வகுப்புவாரித் தீர்ப்பு பற்றி சர்.சி.பி. ராமசாமி அய்யர் : அய்யா, வழக்கமான கேள்வி நேரத்தில் மாற்றம் செய்யும்படி கேட்டுக் கொள்ள அனுமதிப்பீர்களா? ஏனெனில், எனது சக உள்துறை உறுப்பினர் ஒரு முக்கியமான அறிக்கையை வெளியிட வேண்டியுள்ளது. அறிக்கையை கேட்கும்போது இந்த மாற்றம் நியாயமானது என்று அவை என்னோடு உடன்படும் என்றும் உறுதியாக நம்புகிறேன். அவ்வாறு செய்ய எங்களை அனுமதிப்பீர்களா?

அவைத் தலைவர் இப்ராகிம் ரகீம்டுலா : என்ன அறிக்கை?

சி.பி. ராமசாமி அய்யர் : வகுப்புவாரி தீர்ப்பு குறித்தும், ஒடுக்கப்பட்ட வகுப்பினர் மாட்சிமை தங்கிய மன்னர் அரசின் முடிவு பற்றியும் உள்துறை அமைச்சர் ஓர் அறிக்கை அளிக்க விரும்புகிறார்.

அவைத் தலைவர் (மாண்புமிகு இப்ராகிம் ரகீம்டூலா) : இந்தக் கூட்டத்தில் அறிக்கையை அளிக்க தனிச்சலுகை அளித்து அங்கீகரிக்கிறது.

மாண்புமிகு எச்.ஜி.ஹய்க் (உள்துறை அமைச்சர்) : ஏற்பட்டுள்ள உடன்பாடு தொடர்பாக மாட்சிமை தாங்கிய மன்னர் பிரான் அரசு விடுத்த அறிக்கையை தங்கள் அனுமதியுடன் அவையில் படிக்கிறேன். புதிய சட்ட சபைகளில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு பிரதிநிதித்துவம் பெறுவது பற்றியும் மற்றும் அவர்களது நலம் பற்றியும் பூனாவில் சனிக்கிழமை ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் மற்றும் பிற இந்து சமூகத்தினருக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதை அறிந்து மன்னரின் அரசு மிகவும் திருப்தியடைகிறது. ஆகஸ்ட் 4 ஆம் தேதி அரசு தீர்ப்பில் கண்டுள்ள பொதுத் தொகுதிகள், அத்துடன் இணைந்த ஒடுக்கப்பட்ட வகுப்பினர் சிறப்புத் தொகுதிகள் என்பதற்கு பதிலாக, ஒப்பந்தம் பொதுத் தொகுதிகளுக்கும் அத்துடன் ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் என்ற முறையில் நிரப்பப்பட வேண்டும் என்ற நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஒதுக்கப்படுகின்றன.

சமூகங்களிடையே ஒப்பந்தம் இல்லாதபோது அளிக்கப்பட்ட தீர்ப்பில் ஒடுக்கப்பட்ட வகுப்பினர் தொடர்பாக போதுமான பாதுகாப்பு அளிப்பது பற்றியும், இவ்வகுப்பினரின் நலன்கள் புதிய சட்டசபைகளில் கவனிக்கப்பட வேண்டும் என்பதே அரசின் அக்கறையாக இருந்தது. இப்பொழுது மன்னரின் அரசுக்கு அனுப்பியுள்ள திட்டம் இந்த நோக்கத்திற்கு போதுமானது என்று ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் மற்றும் மற்ற இந்துக்களின் பிரதிநிதிகள் கூட்டாகச் சேர்ந்து நம்புவதால், தங்களது தீர்ப்பான பதில் 4இல் வகுத்தபடி, தீர்ப்பின் 9ஆவது தீர்ப்பில் வகை செய்யப்பட்டதற்குப் பதிலாக, மாகாண சட்டசபைகளுக்கு பிரதிநிதித்துவம் அளிப்பது பற்றிய விதிகளை ஏற்பதற்காக உரிய நேரத்தில் அரசாங்கம், நாடாளுமன்றத்திற்குபரிந்துரை செய்யும்.
இவ்வொப்பந்தப்படி, ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களையும் சேர்த்து பொது இடங்களின் மொத்த எண்ணிக்கை, மன்னர் அரசின் முடிவில் வகை செய்யப்பட்டிருந்த பொது இடங்கள், அத்துடன் ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கான சிறப்பு இடங்களும் சேர்ந்து எத்தனை இடங்கள் இருந்ததோ, அதே எண்ணிக்கையில் ஒப்பந்தப்படியான மொத்த இடங்கள் இருக்கும் என்று புரிந்து கொள்ளப்படுகிறது.

தங்களது ஆகஸ்ட் தீர்ப்பின் எல்லைக்கு வெளியே சில கேள்விகளை ஒப்பந்தம் கையாள்கிறது என்று மன்னரின் அரசாங்கம் கவனத்தில் கொள்கிறது. விதிகள் 8 மற்றும் 9  பொதுவான விஷயங்களைக் குறிப்பிடுகிறது. அவை நடைமுறைப்படுத்தப்படுவது, முக்கியமாக அரசியல் சாசனம் செயல்படுவதைப் பொறுத்து இருக்கலாம். தீர்ப்பின் நோக்கத்திற்கு அப்பால் இரண்டு விஷயங்கள் உள்ளன: (1) ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் வாக்குரிமை, வாக்குரிமை (லார்டு லோதியனின்) குழு பரிந்துரை செய்தபடி இருக்க வேண்டுமென்றும் ஒப்பந்தம் ஆலோசிக்கிறது. ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் வாக்குரிமை அளவு (பொதுவாக மற்ற இந்துக்களும்தான்) மற்ற சமூகங்களுக்கு ஏற்ப தீர்த்து வைக்கப்பட வேண்டும். விஷயம் முழுவதும் மன்னர் அரசின் பரிசீலனையில் இருக்கிறது.

Ambedkar_620

(2) ஒப்பந்தம் சட்டசபைகளுக்கும் ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவதற்கும் ஒரு குறிப்பிட்ட முறையில் வகை செய்கிறது. இதுவும் இந்தத் தீர்ப்பின் (விதிகளுக்கு) எல்லைக்கு அப்பால் உள்ளது. ஒப்பந்தத்தில் முன்வைக்கப் பட்டுள்ளவற்றிற்கு மன்னர் அரசு எதிராக உள்ளது என்று கருதக் கூடாது. ஆனால், இந்த விஷயங்கள் இன்னமும் பரிசீலனையில் உள்ளன. தவறாகப் புரிந்து கொள்வதைத் தடுப்பதற்காக, 18 சதவிகிதம் என்பதை, பிரிட்டிஷ் இந்தியாவில் மத்திய சட்ட சபைக்கு ஒதுக்கப்படும் இடங்களில் எத்தனை இடங்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்பது, அவர்களுக்கும் பிற இந்துக்களுக்குமிடையே தீர்க்கப்பட வேண்டிய விஷயமாகும்.

மாலையில் சிறைச்சாலையின் முற்றத்தில் வழிபாடுகள் நடைபெற்றன. பிறகு கஸ்தூரிபாய் ஆரஞ்சுப் பழரசத்தை காந்திக்கு அளித்தார்: அவரது சீடர்கள் மற்றும் அவரைப் போற்றுகிறவர்கள் – கவிஞர் தாகூர், சரோஜினி நாயுடு, சர்தார் பட்டேல், சுவரூப் ராணி, நேரு ஆகியோர் உட்பட 200 பேர்கள் திரண்டிருந்த கூட்டத்தில் காந்தி தமது உண்ணா நோன்பை முடித்துக் கொண்டார்.

வகுப்புவாரித் தீர்ப்பு, தீண்டத்தகாதவர்களுக்கு இரண்டு நலன்களை வழங்கியது: 1. தாழ்த்தப் பட்டவர்களின் தனி வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்படும் இடங்கள் நிர்ணயிக்கப்பட்டன 2.இரட்டை வாக்கு – ஒன்று தனி வாக்காளர் பட்டியல் மூலம்; பொது வாக்காளர் தொகுதிகளில் மற்றொன்று.

இப்பொழுது, பூனா ஒப்பந்தம் நிர்ணயிக்கப்பட்ட இடங்களின் அளவை அதிகரித்தது எனில், இரட்டை வாக்குரிமையை அது எடுத்துக் கொண்டு விட்டது. இடங்களின் எண்ணிக்கையிலான உயர்வை, இரட்டை வாக்களிப்பதை இழந்ததற்கு இழப்பீடாகக் கொள்ள முடியாது. வகுப்புவாரித் தீர்ப்பில் கொடுக்கப்பட்ட இரண்டாவது வாக்குரிமை விலை மதிக்க முடியாத சிறப்புரிமையாகும். ஓர் அரசியல் ஆயுதம் என்ற அதன் மதிப்பு கணக்கிலடக்க முடியாதது. ஒவ்வொரு தொகுதியிலும் தீண்டத்தகாதவர்களின் வாக்கு பலம் பத்துக்கு ஒன்றாகும்.

சாதி இந்துக்களின் வேட்பாளர்களின் தேர்தலில் இந்த வாக்கு பலத்தைப் பயன்படுத்தும் உரிமை இருந்தால், பொதுத் தேர்தலில் தீர்மானிக்கும் நிலையில் இல்லை எனினும் ஒரு நிலையில் தீண்டத்தகாதவர்கள் இருந்திருப்பர்.

தனது தொகுதியில் எந்த சாதி இந்து வேட்பாளரும் தீண்டத்தகாதவர்களை அலட்சியப்படுத்த துணிந்திருக்க மாட்டார்; அல்லது தீண்டத்தகாதவர்களின் வாக்குகளை அவர் சார்ந்திருக்கும்படி செய்யப்பட்டால், அவர்களுக்கு விரோதமான நிலையில் அவர் இருக்கமாட்டார். இன்று வகுப்புவாரித் தீர்ப்பு வழங்கியதை விட தீண்டத்தகாதவர்களுக்கு சில அதிக இடங்கள் உள்ளன. அவர்களுக்கு இருப்பது இது மட்டுமே. ஒரு பாதி உறுப்பினர்கள் விரோதமாக இல்லையென்றாலும் அலட்சியமாக உள்ளனர். இரட்டை வாக்களிப்பு முறையுடன் வகுப்புவாரித் தீர்ப்பு நடைமுறையில் இருந்தால், தீண்டத்தகாதவர்கள் சில குறைவான இடங்களைப் பெற்றிருப்பர்;

உறுப்பினராக இருந்திருப்பர். இடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு தீண்டத்தகாதவர்களுக்கு தனித் தொகுதி மற்றும் இரட்டை வாக்குரிமைக்கு இழப்பீடாகிவிடாது. இந்துக்கள், பூனா ஒப்பந்தத்தைக் கொண்டாடாத போதிலும், அதை அவர்கள் விரும்பவில்லை. காந்தியின் உயிரைக் காப்பதற்கான கலவரமான சூழ்நிலையில், அவரது உயிரைக் காப்பதற்கான விலை மிக அதிகமாக இருக்கலாம் என்ற உணர்வுப்பூர்வமான, திட்டவட்டமான எண்ணம் இருந்தது. எனவே, ஒப்பந்தத்தின் விதிகளை கண்டபோது, அதை மிக திட்டவட்டமாக அவர்கள் விரும்பவில்லை. ஆனால், அதை நிராகரிக்கும் துணிவு அவர்களுக்கு இருக்கவில்லை. இந்துக்கள் விரும்பாமலும், தீண்டத்தகாதவர்களால் ஏற்கப்படாமலும், இரு புறமும் பூனா ஒப்பந்தத்திற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டு இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அது இணைக்கப்பட்டது.

பூனா ஒப்பந்தத்திற்குப் பிறகு, மூன்றாவது வட்டமேசை மாநாடு இங்கிலாந்தில் நடைபெற்றது. இம்மாநாட்டில் பங்கேற்க 1932  நவம்பர் 7 அன்று டாக்டர் அம்பேத்கர் இங்கிலாந்திற்கு கிளம்பினார். காந்தியின் உண்ணாநோன்பும் பூனா ஒப்பந்தமும் எங்கெங்கும் விவாதிக்கப்பட்ட விஷயங்களாகும்.

"கப்பலில் பல பயணிகள் இந்தியாவை உலுக்கிய பூனா ஒப்பந்தம் பற்றியும் காந்தியின் உண்ணா நோன்பு பற்றியும் பேசினர். உண்ணா நோன்பு அவர்களிடம் ஆழமான உணர்வை ஏற் படுத்தியது. அம்பேத்கரைச் சுட்டிக்காட்டி பேசிய ஓர் அய்ரோப்பியப் பயணி, "இந்திய வரலாற்றின் புதிய பக்கங்களை எழுதிக் கொண்டிருக்கும் இளைஞர் இவர்தான்'' என்று சொன்னார்.   

– முற்றும்
ஆதாரம் : பாபாசாகேப் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 17(1)