water_tho_620

புதுவை மாநிலம் மற்றும் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் "சுனாமி'யைவிட (2004),  பத்து மடங்கிற்கும் அதிகமான பேரழிவை 2011இல் "தானே' புயல் உருவாக்கிச் சென்றிருக்கிறது! உயிர் இழப்புகளின் எண்ணிக்கை குறைவென்றாலும், வாழ்வாதாரங்களின் இழப்புகளை முழுமையாக வகைப்படுத்தவே இயலவில்லை. கடலூர் மாவட்டத்தில் புயல் பாதித்த சுமார் 650 கிராமங்களில் வாழ்வே இல்லை என்பதுதான் உண்மை. புயலடித்து வீழ்ந்த மரங்களின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்படுகிறது; பாதிக்கப்பட்ட வீடுகள் பட்டியலிடப்படுகின்றன. விவசாய நிலங்களும், பயிர்களும்கூட இழப்பீட்டிற்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. ஆனால், ஓர் அய்ம்பது ஆண்டுகளுக்கான வாழ்வாதாரங்களின்றி அங்கு மக்கள் எப்படி வாழ முடியும் என்பது குறித்து எவரும் சிந்திக்கவில்லை.

அதிலும் குறிப்பாக, தாங்கள் வாழ்ந்து வந்த குடிசை வீட்டை புயலுக்குப் பறிகொடுத்துவிட்டு, கூலிவேலை கூட இல்லாமல், தலித் மக்கள் சந்திக்கும் மனித வாழ்வின் அவலமும், அச்சமும் எப்போதும் போலவே புறக்கணிப்பிற்கு ஆளாகியுள்ளன.  இத்தகைய கொடுமைகள் புயல் பாதித்த சில நாட்களிலேயே நடந்தேறி உள்ளன. புயலடித்த நாட்களிலேயே குடிதண்ணீருக்காக கொடூரமான தீண்டாமை வன்கொடுமைக்கு ஆளாகியுள்ள தலித் மக்களின் வாழ்வு, எதிர்வரும் காலங்களில் என்ன நிலைக்கு ஆளாகும் என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.

நிகழ்வு : 1

புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் கொம்யூனில் உள்ளது சாத்தமங்கலம் ஊராட்சி. வன்னியர்கள் மட்டுமே வாழ்கின்ற மேல்சாத்தமங்கலமும், தலித் மக்கள் மட்டுமே வாழ்கின்ற கீழ்சாத்தமங்கலமும்  இந்த ஊராட்சியில் உள்ளன. டிசம்பர் 30 அன்று வீசிய "தானே' புயலால் தலித் கிராமம் பெரிதும் பாதிக்கப்பட்டது. 70க்கும் மேற்பட்ட குடிசைகளின், ஓலைகள் மற்றும் ஆஸ்பெஸ்டாஸ்  கூரைகள் காற்றில் பிய்த்தெறியபட்டன. மின்சாரக் கம்பங்கள் ஒடிந்து விழுந்தன. குடிக்க நீரின்றி தலித் மக்கள் பெரிதும் அவதியுற்றனர். குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் என உண்ண உணவின்றியும், உறங்க இடமின்றியும், குடிக்க நீரின்றியும் தவித்தனர். இந்நிலையில், தலித் மக்களுக்கான சிறப்பு நிதியிலிருந்து கீழ்சாத்தமங்கலம் தலித் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள  மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் 31.1.11 அன்று காலையும், மாலையும் ஊராட்சித் தலைவரிடம் சாவி வாங்கி தண்ணீர் பிடித்துள்ளனர் தலித் மக்கள்.

இதனால் ஆத்திரமுற்ற, இக்குடிநீர்த் தொட்டியின் ஆபரேட்டரான மேல்சாத்தமங்கலம் கிராமத்தின்  வன்னியர்  சாதியைச் சேர்ந்த வரதராஜன், அன்று மாலை தனது உறவினர்கள் சிலரை அழைத்துக்கொண்டு தலித் குடியிருப்பிற்குச் சென்று, தண்ணீர் பிடித்த தலித் இளைஞர்களை தரக்குறைவாக, இழிவுபடுத்திப் பேசி தாக்க முயன்றார். அப்போது  தலித் இளைஞரான ஏழுமலையின் தாயார், ""இவ்வளவு நாளா தாயா பிள்ளையா பழகியிருக்கோம், இந்தக் கஷ்டத்துல தண்ணிபிடிச்சதுக்குப்போயி இப்படி செய்றீங்களே. இருங்க பேசிக்கலாம். எங்க பசங்க தப்பு செஞ்சிருந்தா நாங்க கண்டிக்றோம்'' என்று கூறி சண்டையை தடுக்க முயன்றுள்ளார். ஆனால், வரதராஜன் ஏழுமலையின் தாயாரை, ""நீ என்ன பெரிய இவளா, இப்பதான் பேச வந்துட்ட'' எனக்கூறி தாக்கியுள்ளார். தடுக்க முயன்ற ஏழுமலையையும் அடித்துள்ளார்.  31.12.11 அன்று  ஏழுமலையும், அவரது தாயாரும் வரதராஜன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் தங்களுக்குப் பாதுகாப்பு கேட்டும் அன்று இரவே காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால், காவல்துறையினர் தாக்குதல் நிகழ்த்திய ஆதிக்கச் சாதியினருக்குச் சாதகமாக, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்தனர். 

2012 சனவரி முதல் நாளின் விடியல் இத்தலித் மக்களுக்கு கொடுமையான நாளாகத் தொடங்கியது. காலை 6.30 மணியளவில், மேல்சாத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த வன்னியர்கள் சுமார் 300 பேர் ஒரே மாதிரி "ஷாட்ஸ்' என்கிற அரைக்கால் சட்டை மட்டும் அணிந்து கொண்டு, அனைவரும் கடப்பாரை, கோடரி, கத்தி, பனைமரத்து கருக்குப் பட்டை, டியூப் லைட், மரக்கட்டை, இரும்புக் கம்பி, தடி ஆகியவற்றுடன் தலித் குடியிருப்பிற்குள் புகுந்தனர். வன்னியர்கள் 300 பேரும், தலித் குடியிருப்பில் இருந்த வீடு, ஓடு, கூரை, வீட்டிலிருந்த பாத்திரங்கள் அனைத்தையும் அடித்து உடைத்தனர். கண்ணில்பட்ட தலித் மக்களையும் தாக்கி காயப்படுத்தினர். தலித்துகள் வைத்திருந்த 4 இருசக்கர வாகனங்களையும் அடித்து உடைத்தனர். மேலும், ஒரு பெரிய வாகனம், ஒரு டாடா ஏஸ் மற்றும் ஒரு சுமோ ஆகிய வாகனங்களை தீயிட்டுக் கொளுத்தினர். மிகவும் திட்டமிட்டு, சுமார் ஒரு மணி நேரம் இவ்வன்கொடுமைத் தாக்குதல் நடந்திருக்கிறது. "தானே' புயலைவிட, சாதி ஆதிக்கத்தின் பெயரால் நிகழ்த்தப்பட்ட இத்தாக்குதலின் பாதிப்பே மிக மிக அதிகம்.

இத்தாக்குதல் தொடர்பாக பாதிக்கப்பட்ட தலித் மக்கள் போலிசாரிடம் உடனடியாகப் புகார் அளித்தனர்.  ஆனால், போலிசார் வழக்கம் போலவே வன்னியர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்தனர்.  கிராமத்திற்குச் சென்ற ஆய்வாளர் பாஸ்கரனிடம், தங்கள் புகார் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரியுள்ளனர், அதற்கு ஆய்வாளர் பாஸ்கரன், ""நீங்க தந்த புகார வச்சியெல்லாம் அவங்க பேர்ல கேசும் போடமுடியாது; நடவடிக்கையும் எடுக்க முடியாது. என்னோட வேலைக்கு உலை வைக்கலாம்னு நினைக்கிறீங்களா?'' என வெளிப்படையாகப் பேசி நடவடிக்கை எடுக்க மறுத்துள்ளார். அதன்பிறகு அங்கிருந்த தலித் பெண்கள் தங்கள் பாதிப்புகளைக் கூறி நடவடிக்கை கேட்டுள்ளனர். அதற்கு ஆய்வாளர், ""உங்களுக்கெல்லாம் வேலை செய்றதுக்கு, இந்த யூனிபார்மை பிச்சிப் போட்டுட்டு பேசாம பிச்ச எடுக்கப் போகலாம்'' என்று வன்மத்துடன் பேசியுள்ளார்.

அன்று காலையில் புயல் சேதத்தைப் பார்வையிட வந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தேனி ஜெயக்குமார், தாக்குதல் நடத்தச் சென்ற வன்னியர்களிடம் "இதெல்லாம் வேண்டாம்; எதுவாக இருந்தாலும் பேசிக்கலாம்' என்று கூறியுள்ளார். ஆனால் அவரிடம் பேசிய வன்னியர்கள், ""நாங்கதான் இப்ப ஆளுங்கட்சி. உங்களுக்கு ஒண்ணும் இது வேலையில்ல. பேசாம நீங்க பாட்டுக்கு போங்க'' என்று கூறியுள்ளனர். சாதி இந்து சட்டமன்ற உறுப்பினரான அவரும் மிக அமைதியாக அவ்விடத்தை விட்டுச் சென்றுள்ளார். பல்வேறு அழுத்தங்களுக்குப் பிறகு, போலிசார் முன்தேதியிட்டு, பாதிக்கப்பட்ட தலித் மக்கள் மீது இரண்டு வழக்குகளும், வன்கொடுமை நிகழ்த்திய ஆதிக்க சாதியினர் மீது இரண்டு வழக்குகளும் பதிவு செய்துள்ளனர்.

நிகழ்வு  2

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ளது பாலூர் கிராமம். "தானே' புயலில் பாதிக்கப்பட்ட இக்கிராமத்திலும் மரங்கள் வீழ்ந்தன. குடிசைகள் காற்றில் பறந்தன. மின் கம்பங்கள் ஒடிந்து வீழ்ந்தன. மின்சாரமில்லாமல் மனிதர்கள் வாழ்வே முடங்கிப்போனது. கொஞ்சமேனும் வாழ்வு மிச்சமுள்ளது என்பதற்கு தண்ணீர் மட்டும் லாரிகள் மூலம் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது. கிராமத்தின் தலைவராக உள்ள வன்னியர் சாதியைச் சேர்ந்த சரவணன் என்பவர், லாரிகள் மூலம்  கொண்டு வரும் தண்ணீர் போதவில்லை என்பதால், ஜெனரேட்டர் மூலமும் தண்ணீர் பெற மக்களுக்கு வசதி செய்து கொடுத்தார். ஆனால், இந்த குடிநீர் நிவாரணத்தைப் பெறுவதற்கு வேண்டிய ஒரே தகுதி நீங்கள் தலித் அல்லாத சாதி இந்துவாக இருக்க வேண்டும். ஆம், நடுக்காலனியில் உள்ள தலித் மக்களைத் தவிர கிராமத்திலுள்ள அனைவருக்கும் குடிநீர் வழங்கினார் ஊராட்சித் தலைவர். இந்நிலையில், இந்த நடுக்காலனி தலித் மக்கள் தங்கள் பகுதியின் ஊராட்சிமன்ற உறுப்பினரான மகாலட்சுமியின் கணவர் முருகனிடம் தலைவரிடம் பேசி தண்ணீர் பெற ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். 

அதன் அடிப்படையில் 7.1.12 அன்று மாலை 4 மணியளவில் ஊராட்சி மன்ற உறுப்பினர் மகாலட்சுமியின் கணவர் முருகன் அவர்களது உறவினர் ஜெயச்சந்திரன் ஆகிய இருவரும் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்குச் சென்றனர். அங்கிருந்த ஊராட்சி மன்றத் தலைவர் சரவணன், முருகனைப் பார்த்து, ""உனக்கு இங்கு என்ன வேலை,  போடா'' என்று கூறி அவமானப் படுத்தியுள்ளார். அதைப்பொருட்படுத்தாத முருகன், ""எங்க பகுதிக்கு மட்டும் இத்தனை நாளாகியும் இன்னும் குடி தண்ணீர் வரல. மக்கள் எல்லாம் கேட்கிறார்கள். எங்களுக்கும் கொஞ்சம் தண்ணி கொடுங்க'' என்று கூறியுள்ளார். அப்போது தலைவர் சரவணன், ""நான் சொல்லிக்கிட்டே இருக்கேன், நீ பாட்டுக்கு என்னடா வந்துகிட்டே இருக்கே'' என்று கூறியபடியே முருகனின் சட்டையைப் பிடித்து அடித்துள்ளார். தடுக்க முயன்ற ஜெயச்சந்திரனையும் சரவணனின் ஆதரவாளர்கள் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இருவரையும் மரத்தோடு சேர்த்து வைத்து பிடித்துக் கொண்டு கயிற்றால் கட்ட முயன்றுள்ளனர். அங்கிருந்த வேறு சிலர் தடுத்துள்ளனர். அதன்பிறகு முருகனும், ஜெயச்சந்திரனும் வீடு திரும்பியுள்ளனர்.

மறுநாள் 08.01.12 அன்று காலை தலித் மக்கள் சுமார் 50 பேர் ஒன்று திரண்டு நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றனர். அப்போது காவல் நிலையத்திலிருந்த ஆய்வாளர் குமார் வெளியில் வந்துள்ளார். சில நிமிடங்களில் பஞ்சாயத்து தலைவர் சரவணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிலரும் காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்துள்ளனர். அங்கிருந்த காவல் உதவி ஆய்வாளர் அன்பரசு அவர்களிடம் புகார் அளித்துள்ளனர். அவர் புகாரை வாங்க மறுத்து, ஆய்வாளர் வருவார் அவரிடம் கொடுங்கள் என்று கூறியுள்ளார். இவ்வாறு கூறியபடியே அன்று நாள் முழுவதும் புகாரைப் பெறாமல் காவல் நிலைய வாசலிலேயே தலித் மக்கள் காக்க வைக்கப்பட்டுள்ளனர். மாலை 5.30 மணி வரை ஆய்வாளர் வராத நிலையில் அனைவரும் வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் 09.01.12 அன்று அதிகாலையில் 4.30 மணியளவில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த முருகனை 20 போலிசாருடன் சென்று எழுப்பி கைது செய்துள்ளார் நெல்லிக்குப்பம் ஆய்வாளர் குமார். கொலை செய்தவர்களைக் கூட கைது செய்து அவ்வளவு சீக்கிரத்தில் சிறையில் அடைத்திருக்க மாட்டார்கள். காலை 7 மணியளவில் காவல் நிலையம் சென்று பார்ப்பதற்குள் முருகன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். எந்தவிதத் தவறும் செய்யாமல், எல்லோருக்கும் வழங்குவதுபோல் எங்கள் மக்களுக்கும் குடி நீர் வழங்குங்கள் என்று கேட்டதற்காக, கொலை முயற்சி மற்றும் பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில்  வழக்குப் பதிவு செய்யப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த பிணை மனுவிற்கு அரசுத் தரப்பு வழக்குரைஞர் எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இக்கட்டுரை எழுதப்படும் இன்றுவரை (24.1.12) முருகன் சிறையில் உள்ளார்.

tree_370மழை, வெள்ளம், புயல் போன்ற பேரிடர் காலங்களில் நிகழும் நிவாரணம், மீட்பு மற்றும் மறுவாழ்வுப் பணிகளில் தீண்டாமைப் பாகுபாடுகளோ, புறக்கணிப்புகளோ நடைபெறுகின்றதா என்பதைக் கண்காணிக்கின்ற "தேசிய தலித் கண்காணிப்பகம்' என்ற அமைப்பு, 20.01.12 அன்று இக்கிராமத்தை ஆய்வு செய்தது. அப்போதுவரை தலித் மக்களின் குடியிருப்பிற்கு மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. அரசு அதிகாரிகளும் ஒருமுறை கூட எட்டிப்பார்க்கவில்லை.

நிகழ்வு 3

விழுப்புரம் அருகே உள்ளது சொர்ணாவூர் கீழ்பாதி கிராமம். இங்கு சுமார் 400 தலித் குடும்பங்கள் மட்டுமே வாழ்கின்றனர். புயலின்போது ஊரிலுள்ள ஒரு சில கல்வீடுகளைத் தவிர கீற்று, கூரை, ஓட்டு வீடுகள் அனைத்தும் பெரிதும் பாதிக்கப்பட்டன. முழுவதும் சேதமடைந்த வீடுகளில் வாழமுடியாத நிலையில், சுமார் 150 பேர் இருக்கவேண்டிய ஒரு சமூகக்கூடத்தில் 200 குடும்பங்களைச் சேர்ந்த பெண்களும், குழந்தைகளும் 7 நாட்கள் தங்கியுள்ளனர். சொந்த கிராமத்திலேயே அகதிகளைப் போன்று முகாம்களில் தங்கியிருந்தனர்.

மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், வட்டாட்சியர் மற்றும் "தானே' புயல் சேதத்தை மதிப்பிட வந்த மத்தியக் குழு என எல்லோரும் இந்த முகாமைப் பார்வையிட்டுச் சென்றனர். இக்கிராமத்தில்தான் புயலினால் ஒருவர் இறந்துள்ளார். மூன்று பேர் கடுமையாக காயமடைந்துள்ளனர். ஒருவர் உயிர்பிழைக்க வழியின்றி மருத்துவ சிகிச்சையில் உள்ளார்.  நிவாரணமாக ஒரு லிட்டர் தண்ணீர் வழங்கக் கூட அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் சுரேஷ் அவர்களின் முயற்சியால் மின்சாரம் வரும் வரையிலான 10 நாட்களும் மக்களுக்கு லாரியில் குடிநீரும், முகாமிலிருந்த 7 நாட்களுக்கு உணவும் அளிக்கப்பட்டது.

நிகழ்வு 4

கடலூர் மாவட்டம் மழை, வெள்ளப் பாதிப்பை ஒவ்வொரு ஆண்டும் சந்தித்து வந்தாலும், இதுபோன்ற புயலைச் சந்தித்தது இதுவே முதன்முறை. அதனால் ஏழை, எளிய மக்களுக்கு புயலின் பாதிப்புகள் எப்படியிருக்கும் எனத் தெரியாமல், எப்போதும் போல மழை காற்றுதானே என இருந்துவிட்டனர். அரசும் புயலின் தீவிரத்தை மக்களுக்கு உணர்த்தவில்லை. இதனால் கூரை மற்றும் குடிசை வீடுகளில் வாழ்ந்த சுமார் 80 சதவிகித மக்களின் உணவுப் பொருட்கள், உடைகள் அனைத்தும் பாதுகாக்க வழியின்றி குடிசைகளைப் போன்றே பாழாய்ப் போனது. உயிர்பிழைத்தால் போதுமென கிடைத்த இடங்களில் மக்கள் பதுங்கியிருந்தனர். பெண்கள் குழந்தைகளுடன் விடிய விடிய கழிப்பறை, குளியலறைகளில் தங்கியிருந்த அவலத்தையெல்லாம் அழுதபடியே கூறியதைக் காணமுடிந்தது. பரங்கிப்பேட்டை அருகே உள்ள கரிகுப்பம் கிராமத்தில் உள்ள இரு குடும்பத்தினர் இன்று வரை கிராமத்தின் பள்ளிக்கூடத்தில் தங்கியுள்ளனர். அரசும் இன்றுவரை இவர்களின் குடிசைகளைச் சரிசெய்யவோ, தற்காலிக தங்குமிடம் அமைக்கவோ ஒரு சதவிகிதம் கூட முயலவில்லை.

இந்நிலையில்தான் சிதம்பரம்  கவரப்பட்டு அருகே உள்ள அம்பேத்கர் நகரில் இருந்த 40 குடிசைகளும் காற்றில் பறந்து ஓடின. அனைத்துக் குடும்பத்தினரும் கட்டிய உடையுடன் உயிர் பிழைத்தனர். குடிக்க நீர் கிடையாது; உண்ண உணவு இல்லை;  உடைகளும் பறிபோயின. இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மய்யம் மூலம் இங்குள்ள 40 குடும்பங்களுக்கும் அரிசி, பருப்பு, போர்வை, பாய் போன்ற உடனடி நிவாரணப் பொருட்களை அளிப்பதற்காக லாரியில் சென்றபோது, ஒரே குடும்பமாக அக்கிராமத்தில் வாழும் நாடார் சமூகத்தைச் சேர்ந்த சிவமணி என்பவர் லாரியை மறித்துள்ளார்.

ஒருங்கிணைப்பாளர் கரிகாலன் காரணம் கேட்டுள்ளார். அதெப்படி நீ உங்க ஆளுங்களுக்கு மட்டும் தருவ; எல்லாருக்கும் கொடுங்க என்று கூறியுள்ளார். ஆத்திரமடைந்த கரிகாலன், மிகவும் அமைதியாக, ""அடிச்ச புயல்ல உங்க கல்வீடு உடைஞ்சு விழுந்திடுச்சா, இல்ல  வீட்டுல இருந்த அரிசி, பருப்பு எல்லாம் மழையில் நனைஞ்சு வீணா போச்சா. எதுவுமில்லாம உங்களுக்கு எப்படிங்க தருவாங்க?'' என்று கேட்டார். அதன்பிறகும் சிவமணி லாரியை மறித்துக்கொண்டு தகராறு செய்தார். அதன்பிறகு போலிசாரின் பாதுகாப்புடன் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்திலிருந்து சிதம்பரம் நோக்கிச் செல்லும் அனைத்துச் சாலைகளும் மழைக்காலங்களில் தண்ணீரில் மூழ்கிவிடும். இந்தப் புயலின்போது சாலைகள் முழுவதும் மரக்கிளைகளாலும், வேரோடு சாய்ந்த மரங்களாலும், மரங்களின் இலை, தழைகளாலும் மறைக்கப்பட்டிருந்தன.  புயலுக்குப் பிந்தைய நாட்களில் மனிதர்களால் சாலைகள் நிரப்பப் படுகின்றன. இதுவரையில்லாத வகையில் பல இடங்களில் சாலை மறியல்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

24.01.12 அன்று மட்டும் சுமார் 12 இடங்களில் சாலை மறியல் நடந்துள்ளது. காரணம் ஒன்றே ஒன்றுதான். புயல் நிவாரணம் வழங்கப்படுவதில்லை. வழங்குவதிலும் பெருமளவில் முறைகேடுகள். மேலும் பல கிராமங்களுக்கு இன்னும் மின்சாரமும், குடிநீரும் வழங்கப்பட வில்லை.

இந்நேரத்தில், எல்லோரைப் போல நாமும் முல்லைப் பெரியாறு பற்றிப் பேசாமல் இருக்க முடியவில்லை. முல்லைப் பெரியாறின் உரிமைக்காக உலகத் தமிழர்கள் எல்லாம் முழங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், உள்ளூர்த் தமிழனுக்கு குடிக்க ஒருவாய் தண்ணீர் தர வக்கில்லை. மீறி பிடித்தாலோ, கேட்டாலோ தாக்குதலும், பொய்வழக்கும், சிறையுமே மிஞ்சுகிறது. "போங்கடா நீங்களும் உங்க தேசியமும்' என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.  

பேரிடர்கால நிவரணத்தில் நிகழும் பாகுபாடுகள் குறித்து கள ஆய்வு செய்த 'தேசிய தலித் கண்காணிப்பக'த்தின் பரிந்துரைகள் :

பேரிடர் காலங்களில் தலித் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மீது நிகழும் வன்கொடுமை மற்றும் நிவாரணங்களில் புறக்கணிப்பு போன்றவற்றைத் தீர்க்கும் வகையில் தேசியப் பேரிடர் கொள்கையில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.

பேரிடரில் மிகவும் பாதிப்புற்ற தலித் மக்களுக்கு, தேர்தலில் வாக்களிக்கவில்லை என்பதற்காக நிவாரணம் வழங்க மறுத்து, உதவி செய்யுமாறு கோரிய ஊராட்சி மன்ற உறுப்பினரின் கணவரைத் தாக்கி. இழிவு செய்து, பொய் வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்துள்ள பாலூர் ஊராட்சி மன்றத் தலைவரும் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவருமான சரவணன் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புகார் கொடுக்கச் சென்ற தலித் மக்களை, ஒரு நாள் முழுவதும் காவல் நிலையத்தில் காத்திருக்கச் செய்து. அலைக்கழித்து, புகாரைப் பெற மறுத்த உதவி ஆய்வாளர் அன்பரசன். ஆய்வாளர் குமார் ஆகியோர் மீது வன் கொடுமைத் தடுப்புச் சட்டப்பிரிவு 4இன் கீழ் வழக்குப் பதிவு செய்யவேண்டும்.

வன்கொடுமைக்கு ஆளான முருகன் கொடுத்த புகாரினைப் பெறாமலும், தாக்கியோர் மீது நடவடிக்கை எடுக்காமலும், குற்றமிழைத்தோருக்கு ஆதரவாக செயல்பட்டு, பாதிக்கப்பட்ட முருகனை பொய்வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்த ஆய்வாளர் குமாரை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்து, துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

கள ஆய்வுக் குழு : வே.அ.ரமேசுநாதன் - இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மய்யம் - திண்டிவனம்; ரேவதி ராதாகிருஷ்ணன் - ஆவணப் பட இயக்குநர்., சென்னை விஸ்வேஸ் சேகர் - வழக்குரைஞர், கர்நாடக உயர்நீதிமன்றம்; பாபி - சட்ட வல்லநர், புதுடெல்லி; வேங்கடசந்திரிகா - அமைதி மற்றும் நீதிக்கானப் பிரச்சாரம், சென்னை