மதமாற்றத்திற்கு ஆதரவான வாதங்களில் குற்றம் குறை காண்பதற்காகப் பலர் காத்திருக்கும் நிலையில், சந்தேகத்தையோ, தவறான கருத்தையோ உருவாக்கிவிட எந்தவொரு வாய்ப்பையும் தராமல் இருப்பது நல்லது. எனவே, உறவு என்ற பந்தத்தை மதம் எவ்வாறு, எந்த முறையில் உருவாக்குகிறது என்பதை விளக்குவது நல்லது. இதற்கான விடை மிக எளிதானது. அது, ஒன்றாக உண்பதன் மூலமும், குடிப்பதன் மூலமும் அதைச் செய்கிறது. இந்துக்கள் தங்களுடைய சாதிய அமைப்புகளுக்கு ஆதரவாக வாதிடும்பொழுது சமபந்தி விருந்து என்பதை கேலி செய்கிறார்கள். அவர்கள் கேட்கிறார்கள் : சமபந்தி விருந்தில் என்ன இருக்கிறது?

அதில் அனைத்தும் இருக்கிறது என்பதுதான் சமூகவியல் கண்ணோட்டத்தில் இதற்குக் கூறப்படும் பதிலாகும். உறவு என்பது சகோதரத்துவம் என்பதன் சமூக ஒப்பந்தமாகும். அனைத்து ஆவணங்களையும் போல அது அனைவரையும் கட்டுப்படுத்து வதற்கு முன்பு கையொப்பம் இடப்பட்டு, முத்திரையிடப்பட்டு வெளியிடப்பட வேண்டும். கையொப்பமிடல், முத்திரையிடல் மற்றும் வெளியிடல் ஆகியவற்றுக்கான முறையானது மதத்தி னால் வகுக்கப்பட்டுள்ள முறையாகும்...

ambed_1_250தாங்கள் தனிமைப்படுத்தப்படுவதற்கும், அதனால் ஏற்படும் இடையூறுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க, வெறும் குடியுரிமை மட்டும் தீண்டத்தகாதவர்களுக்குப் போதாதென்றால், உறவுமுறை என்பதுதான் ஒரே தீர்வாக இருக்குமென்றால், யாருடைய உறவுமுறையை அவர்கள் விரும்புகிறார்களோ, அந்த சமூகக் குழுவின் மதத்தை தழுவுவதைத் தவிர வேறெந்த வழியும் கிடையாது.

இதுவரை முன்வைக்கப்பட்ட வாதங்கள் அனைத்தும் தீண்டத்தகாத வர்கள் தனிமைப்படுத்தப் படுவதற்கு, மதமாற்றம் எவ்வாறு தீர்வாக இருக்கும் என்பதை வெளிப்படுத்துவதற்காகச் சொல்லப்பட்டது. ஆராய வேண்டிய வேறு இரண்டு கேள்விகளும் உள்ளன. முதலாவது கேள்வி மதமாற்றம் அவர்களுடைய தாழ்வு மனப்பான்மையைப் போக்குமா? இந்த கேள்விக்கு "ஆம்' என்ற பதிலைச் சொல்வதற்கு எவரும் தயங்க வேண்டியதில்லை. தீண்டத்தகாதவர்களின் தாழ்வுமனப்பான்மையானது, அவர்கள் தனிமைப்படுத்தப்படுவது, அவர்களுக்கெதிராக பாரபட்சம் காண்பிக்கப்படுவது, நட்புறவற்ற சூழ்நிலை நிலவுவது போன்ற சமூக சூழ்நிலைகளின் விளைவாகும். இவைதாம், தான் உதவியற்றவன் என்ற உணர்வை தீண்டத்தகாதவர்களுக்கு ஏற்படுத்தி தாழ்வுமனப்பான்மைக்கு காரணமாகியுள்ளது. அது தம்மை நிலைநிறுத்திக் கொள்ளும் சக்தியை அவர்களுக்கு இல்லாமல் செய்துவிடுகிறது.

தீண்டத்தகாதவர்களின் இந்த மனோபாவத்தை மதம் மாற்ற முடியுமா? மனோவியலாளர்களின் கருத்துப்படி, மதம் சரியான வகைப்பட்டதாயிருந்தால் இதைக் குணப்படுத்த முடியும் என்று கருதுகிறார்கள். அந்த மதமானது அந்த தனிநபரை தரந்தாழ்ந்த, பயனற்ற தாழ்த்தப்பட்டவர் என்று அணுகாமல் சமமான மனிதன் என்று அணுகினால்தான் இதைக் குணப்படுத்த முடியும். பிற மனிதர்களைப் போல தானும் சம உரிமை பெற்ற மனிதன்தான் என்று அவர் உணர்வதற்கான சாத்தியப்பாடுகளை கொண்டுள்ள ஒரு சூழ்நிலையை மதம் அளிக்க வேண்டும். அவ்வாறானால், தீண்டத்தகாதவர்கள் அத்தகைய மதத்திற்கு மாறுவது என்பது அவர்களுடைய தாழ்வு மனப்பான்மைக்குக் காரணமான மிக நீண்ட காலத்திய நம்பிக்கையின்மையை ஏன் அகற்ற முடியாது?...

மதமாற்றம் என்பது தீண்டத்தகாத மக்களின் பொதுவான சமூக நிலையை உயர்த்துமா என்பதற்கு இருவேறு பதில்கள் இருக்க முடியாது.

ஒரு பெயரில் என்ன இருக்கிறது என்று கேட்ட கேள்விக்கு ஷேக்ஸ்பியரின் அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் விடையானது, பெயர் தொடர்புடைய பிரச்சினை போதுமான அளவு புரிந்துகொள்ளப்படவில்லை என்பதையே காட்டுகிறது. ஒரு ரோஜாவை மற்றொரு பெயரில் அழைத்தாலும் அது மணக்கும் என்று கூறுவது எப்பொழுது உண்மையாகும் என்றால், பெயர்களுக்கு எவ்வித நோக்கமும் இல்லாமல் மக்கள் பெயர்களை மட்டுமே சார்ந்திராமல் ஒவ்வொரு விஷயத்தையும் ஆராயும் சிரமத்தை எடுத்துக்கொண்டு தங்களுடைய கருத்து களையும், அணுகுமுறைகளையும் உருவாக்கிக் கொள்ளும்போதுதான் அது உண்மையாகும்.

கெடுவாய்ப்பாக, பெயர்கள் ஒரு முக்கியமான நோக்கத்தைக் கொண்டுள்ளன. அவை சமூக, பொருளாதார நிலையில் ஒரு மகத்தான பங்கை வகிக்கின்றன. பெயர்கள் என்பவை அடையாளக் குறியீடுகள். ஒவ்வொரு பெயரும் ஒரு குறிப்பிட்ட விஷயம் பற்றிய குறிப்பிட்ட கருத்துகளையும் எண்ணப்போக்கையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. அது ஓர் அடையாளச் சீட்டு. இந்த அடையாளச் சீட்டிலிருந்து அது என்ன என்பதை மக்கள் தெரிந்து கொள்கிறார்கள். தனித்தனியாக ஒவ்வொன்றையும் ஆராய்ந்து ஒரு குறிப்பிட்ட பொருளுடன் தொடர்புபடுத்திக் கூறப்படும் கருத்துகளும், எண்ணப்போக்குகளும் உண்மையானவைதானா என்று தங்களுக்குத் தாங்களே தீர்மானிக்கும் சிரமத்திலிருந்து அது அவர்களை காக்கிறது.

– தொடரும்

Pin It