“நாம் ஒரு தேசமாக இருப்பதாக நம்பினால், நாம் மிகப்பெரியதொரு மாயையில் இருப்பதாகப் பொருள். பல்லாயிரம் ஜாதிகளாகப் பிரிந்திருக்கும் மக்கள் எப்படி ஒரு தேசமாக முடியும்? நாம் சமூக ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் ஒரு தேசமாக இல்லை என்பதை எவ்வளவு விரைவில் உணர்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது...  அமெரிக்காவில் ஜாதிப் பிரச்சனை இல்லை. இந்தியாவில் ஜாதிகள் இருக்கின்றன. ஜாதிகள் தேசியத்திற்கு எதிரானவை. முதலில் அவை சமூக வாழ்க்கையில் பிளவை ஏற்படுத்துகின்றன; அவை தேசியத்திற்கு எதிரானவை ஏனெனில், அவை ஜாதிகளுக்கிடையே பொறாமையையும், பகைமையையும் உருவாக்குகின்றன. ஆனால், நாம் உண்மையில் ஒரு தேசமாக விரும்பினால், இவை அனைத்தையும் வென்றாக வேண்டும்.''

– டாக்டர் அம்பேத்கர், ஆங்கில நூல் தொகுப்பு 13, பக்கம்: 1217

முல்லைப் பெரியாறு அணைச்சிக்கல், பல்வேறு விவாதங்களுக்கு வழிவகுத்திருக்கிறது. இந்தியாவின் இரு மாநிலங்களுக்கிடையிலான பிரச்சனையில், அநீதி இழைக்கும் கேரள அரசின் பக்கம் நிற்கிறது, தேசியம் பேசும் காங்கிரஸ் அரசு. நாட்டின் ஒருமைப்பாட்டை கட்டிக்காப்பதாக நொடிதோறும் கூச்சலிடும் பார்ப்பன ஆளும் வகுப்பினரும், ஊடகங்களும் நீரை நியாயமாகப் பங்கிடக் கோரும் தமிழர்களின் உரிமையை கொச்சைப்படுத்துகின்றன. இந்நிலையில், கேரளத்தில் வாழும் தமிழர்கள் தாக்கப்படுவதும், தமிழகத்தில் உள்ள மலையாளிகளின் உடைமைகள் தாக்கப்படுவதும் ஒரு மாத காலமாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

கடந்த ஓராண்டாக, ஊழல்தான் இந்நாட்டின் முக்கியப் பிரச்சனை என்பதுபோல அசாரேக்களும் ஊடகங்களும் மக்களிடையே கருத்தைத் திணித்து வருகின்றன. இந்நிலையில், தேசியம்தான் நம் அடிப்படையான பிரச்சனையோ என்று இந்நாட்டின் பெரும்பான்மை மக்கள் குழம்பித் தவிக்கின்றனர். ஒரே மொழி பேசும் ஒவ்வொரு மாநில மக்களும் படிநிலைப்படுத்தப்பட்ட பல்வேறு ஜாதிகளாகப் பிரிந்திருக்கின்றனர் என்ற பேருண்மையை, மொழி வழி தேசியம் பேசுவோர் மறுக்கின்றனர் அல்லது அலட்சியப்படுத்துகின்றனர். பல்வேறு ஜாதிகளாக மட்டுமல்ல, அதற்கப்பால் அவர்கள் 'ஊர்' என்றும் 'சேரி' என்றும் பிளவுபட்டுள்ளனர்.

ஒரே மொழி பேசும் ஒரு மாநில மக்கள், பொதுக் குளத்தில் இருக்கும் நீரை நாயும், பன்றியும் குடிக்க அனுமதிக்கின்றனர்; ஆனால், அந்நீரை அம்மொழியையே பேசும் சேரிக்காரனுக்கு மறுக்கின்றனர். அண்டை மாநிலத்தவனுக்கு நீரைக் கொடுப்பதில் கூட பிரச்சனை இல்லை; கொடுக்கும் அளவில்தான் அவனுக்குப் பிரச்சனை. ஒரு மாநிலத்தின் விளைச்சல் இன்னொரு மாநிலத்திற்கு செல்வதில்கூட தடையேதும் இல்லை. இத்தகு மோதல் ஏற்படும் நிலையில் கூட அதைத் தீர்க்க நீதிமன்றங்கள் உள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் உள்ள சேரிகளுக்கு சமூக மற்றும் பொருளாதாரத் தடைகளை விதித்திருக்கும் கிராமங்களைக் கண்டிக்க இங்கு நாதியில்லை.

ஒரே மொழி பேசுபவனுக்கு தண்ணீர் மறுக்கப்பட்டால், இவர்களுக்கு அது தேசியப் பிரச்சனை அல்ல; அதற்காக யாரும் யாரையும் தாக்குவதில்லை. அதனால்தான் சொல்கிறோம்: மொழி வழி தேசியம் ஜாதிகளாகப் பிரிந்திருக்கும் மக்களை இணைக்கவில்லை. ஜாதிகளை இணைத்துவிடக்கூடாது என்பதில் மட்டும் எல்லா தேசியங்களும் ஒன்றுபடுகின்றன. இந்நிலையில், தேசிய இனங்களுக்கிடையிலான முரண்களையே முதன்மையாக்குவது, கடைந்தெடுத்த முரண்பாடில்லையா? மொழிவாரி மாநிலங்களில் உள்ள தலித், பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மக்களை அவர்களின் மொழி இணைக்கவில்லை; ஆனால் ஜாதி, அவர்களை (ஜாதி இந்துக்களை) இணைத்துமிருக்கிறது; (சேரி மக்களை) பிரித்தும் வைத்திருக்கிறது!

மலையாள மொழி பேசும் தலித், பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மக்களும்;  தமிழ் மொழி பேசும் தலித், பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மக்களும் – ஜாதி ரீதியாக தீண்டாமையையும், பிற்படுத்தப்பட்ட தன்மையையும் – ஒருசேர அனுபவிக்கின்றனர். சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டு நிலைகளில் அவர்களுக்குரிய பிரதிநிதித்துவம் மறுக்கப்படுவதற்கு அவர்கள் பேசும் மொழி காரணமல்ல. ஊரையும் சேரியையும் ஒன்றிணைக்காத 'ஜாதி காப்பாற்றும் மொழி(கள்)', இன்னொரு மொழிக்காரனுக்கு எதிராக மட்டும் ஓர்மையைப் பெற்றுத் தருமா? ஆனால் மொழி, ஓர்மையை வென்றெடுக்கும் என்று இங்கு கற்பிக்கப்படுகிறது.

காலங்காலமாக தமிழ் பேசும் ஊர்க்காரனால் தாக்கப்படும் தமிழ் பேசும் சேரிக்காரனின் நிலைகண்டு எந்த தேசியவாதியும், சினிமாக்காரனும் பதற்றப்படவில்லையே ஏன்? கேரளாவில் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டிப்பவர்கள், இங்கே மலையாளிகளின் உடைமைகள் தாக்கப்படுவதைக் கண்டிக்க முன்வரவில்லை. இரண்டையும் கண்டிப்பதுதான் அறிவு நேர்மை. தலித்துகள் நாள்தோறும் சாதி இந்துக்களிடம் வன்முறையை சந்திக்கின்றனர். அதற்கு எதிர்வினையாக, இன்னொரு ஊரில் இருக்கும் சாதி இந்துக்களையோ, அவர்களின் உடைமைகளையோ தாக்கினால், அது நியாயமாகுமா? நாம் ஜாதியால் ஒடுக்கப்பட்டிருக்கிறோம்; மொழியால் அல்ல. ஜாதி அமைப்பை உடைப்பதே ஓர்மைக்கு வழிவகுக்கும்; அணையை உடைப்பதோ, இந்தியாவை உடைப்பதோ அல்ல!

Pin It