பழங்குடிச் சமூகங்கள் குறித்த ஆய்வும், அவை குறித்த இனவரைவியலும் இல்லாத சூழலில் குறவர்கள் திணைவழிச் சமூகமாக இன்றுவரை அறியப்படுகின்றனர்.இம்மக்களின் இன வரைவியலை, தன் பட்டத்திற்கான ஆய்வாக எடுத்துக் கொண்டு – விளிம்பு நிலை சமூகங்களின் அறியப்படாத வரலாறுகளைத் தொகுக்கும் முக்கியத்துவத்தை உணர்த்தும் முக்கியப் பங்கினை ஆற்றியவர் மணி கோ. பன்னீர் செல்வம்.

manikko-photo2_370காலனிய ஆதிக்கம் அழிந்து போன இக்காலங்களிலும் குற்றப்பரம்பரையாகப் பார்க்கப்படும் குறவர் சமூகத்தின் வரைவியலை வரைந்ததன் மூலம், தன் அறிவால் மானுட சமூகத்திற்கு ஆற்ற வேண்டிய அரும்பணியை மிகவும் நேர்த்தியாகவும் நேர்மையாகவும் செய்திருக்கிறார் பன்னீர்.

திண்டுக்கல் மாவட்டம் சில்க்வார்பட்டியில் பிறந்து தஞ்சையில் தொடக்கக் கல்வியும், பூண்டி புஷ்பம் கல்லூரியில் இளங்கலையும், கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் தமிழ் முதுகலையும் பயின்றார் பன்னீர் செல்வம். பிறகு தன் ஆய்வுப் படிப்பை, தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்திலும், முனைவர் படிப்பை பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி நாட்டார் வழக்காற்றியல் துறைத் தலைவர் பேரா. ஆ. தனஞ்செயன் அவர்களிடம் முடித்திருக்கிறார்.

இத்தகைய கல்விப் பின்புலத்தில் பன்னீரின் இரண்டு ஆய்வுகளும் சமூகம் சார்ந்தவையாக இருந்ததால், அவை நூல் வடிவம் பெற்றிருக்கின்றன. இரண்டு நூல்களும் தமிழ் மானுடவியலில் முக்கியப் பங்காற்றக் கூடியவை. அவருடைய ஆய்வு நிறைஞருக்கான களம், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் ஒலிப்பேழைகளில் இருக்கும் பாடல்கள். நாட்டுப்புறக்கலையின் உயிர்நாடியாக இருக்கும், உழைக்கும் மக்களின் பாடல்கள் அரசியல் படுத்தப்படும்போது, அது நிகழ்த்துகிற மாற்றத்தை நோக்கிய செயல்பாடுகளை அவர் ஆய்வு விளக்குகிறது.

ஓர் இயக்கத்தின் பிரச்சாரப் பாடல்கள், அவ்வியக்கத்திற்குச் சேர்க்கின்ற வலிமையையும் உலகம் தழுவிய விடுதலை இயக்கங்கள் பயன்படுத்துகிற பாடல்களையும் அவ்வாய்வு விரிவாகப் பேசுகிறது. அதுமட்டுமல்ல; அந்நூலின் மிக முக்கியத் தன்மை, அரசியல் மயமாக்கப்பட்ட நாட்டுப்புறப் பாடல்கள் உழைக்கும் மக்களின் எந்தப் பாடலிலிருந்து எடுக்கப்பட்டது என்பதைப் பேசுவதுதான். மக்களிடமிருந்து எடுத்து மக்களுக்கே தருகின்ற சிறந்த தன்மை ஆய்வுக்கானதாக மாறியது என்பது, ஆதிக்க மனநிலையில் இருக்கும் கல்விப் புலத்தில் மிக முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

ஓர் அரசியல் இயக்கத்தின் கொள்கைகளை, அதன் பாடல் வடிவத்திற்காக உயர் கல்வி நிலையங்களில் பயன்படுத்தும் அரசியல் உளவியல் என்பது, விடுதலைக்கான கல்வியைக் கொண்டுவரும் செயல்திட்டமாகும். இந்த வகையில் கூடுதலாகப் பாராட்டப்பட வேண்டியவர் பன்னீர் .

அவருடைய முனைவர் ஆய்வின் களம் "தமிழகக் குறவர்களின் சுயக்கருத்துருவம் மற்றும் அடையாள உருவாக்கத்தில் மக்கள் வழக்காறுகளின் பங்கு'. இது, குறவர் "பழங்குடி இனவரைவியல் ஆய்வு' என்னும் தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது. இந்நூல் பண்பாட்டுத்தளத்தில் முக்கியத்துவம் கொண்டதாக அமைந்திருக்கிறது. குறவர்களின் அரைநாடோடித்தனமான வாழ்க்கையும், அவர்களின் கைவினைத் தொழிலும் அவர்களின் அடையாளம். அவர்களின் உணவு, சடங்குகள், தொழில், இசைக்கருவிகள், கூத்து, வேட்டைக் கருவிகள், பழங்குடித் தன்மை எனப் பல்வேறு ஆய்வுப் பொருட்களை அந்நூல் தன்னகத்தே கொண்டுள்ளது.

"மலையின மக்கள், சான்றிதழுக்காகவும், வாழ்வுக்காகவும் போராடிக் கொண்டிருக்கிற ஒரு சமூகத்தின் பண்பாட்டுக் கூறுகளை, அச்சமூகம் வைத்திருக்கும் தொல் இலக்கியச் சான்றுகளைஎல்லாம் தரவுகளாகத் தந்து, நிகழ்காலத்தில் இத்தகைய விளிம்பு நிலைச் சமூகங்கள் பெறக்கூடிய அங்கீகாரத்தையும் அரசியலையும் அடையாளத்தையும் நிலை நிறுத்தும் அரிய பணியை இவ்வாய்வில் மணிகோ. பன்னீர் செல்வம் ஆற்றியிருக்கிறார்.

எழுதுவதில் எப்படி ஈடுபாடு ஏற்பட்டது என்ற கேள்விக்கு, தஞ்சை மாவட்டத்தின் மக்கள் கலை இலக்கியக் கழக விவசாய தோழர்கள், கையில் ரஷ்ய இலக்கியங்களை வைத்திருப்பார்கள், படிக்கத் தூண்டுவார்கள். அத்தகைய சூழ்நிலையில் எழுதுவது எனக்குள் இயல்பாக இருந்தது என்கிறார். கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டிருக்கும் பன்னீர், கவிதைகளையும் வடிப்பார். அவர் பல கவியரங்குகளில் கவிதைகளை வாசித்த அனுபவம் உடையவர். அவருடைய மேடைக் கவிதைகள் சமூக அக்கறையோடு இயங்கக் கூடியவை. பறையடிக்க மறுத்த தலித்துகளின் கட்டை விரலை வெட்டிய குருங்குளம் என்னும் ஊரில், அவர் வாசித்த "வெண்மணி முதல் மேலவளவு வரை' என்ற சாதி ஆதிக்கத்திற்கெதிரான கவிதை அனைவராலும் பாராட்டப்பட்டது.

"புதிய கலாச்சாரம்' இதழில் அவர் எழுதிய "பார்ப்பனிய வெப்பமானி' என்ற கவிதை, சாதி ஆதிக்கத்திற்கு எதிரான அதிர்வுகளை ஏற்படுத்தியது. அக்கவிதையை இன்குலாப் போன்றவர்களின் கவிதையோடு ஒப்பிட்டு, அவரை இலக்கிய நண்பர்கள் வட்டத்தில் பேசவைத்தது. இன்றைக்கும் பல்வேறு சிற்றிதழ்களில் அவரின் ஆக்கங்கள் சாதிக்கெதிரான பங்களிப்பை ஆற்றிக்கொண்டிருக்கின்றன. இன்றைய கவிதைகள் குறித்து அவரிடம் கேட்டதற்கு "நுண்ணுணர்வுகளைப் பேசக்கூடிய, செய்யுள் தன்மை கொண்டவையாக தற்கால கவிதைகள் இருக்கின்றன' என்கிறார்.

தலித் இலக்கியத்தின் இருப்பு குறித்த கேள்விக்கு, அவர் விடுத்த பதில், “நாம் எதிர்பாராதது. அவர்கள் எதிர்பார்ப்பது இப்போதும் நடந்து கொண்டுதானே இருக்கிறது. பரமக்குடி படுகொலையை தலித்துகள் எதிர்பார்க்கவில்லை. ஆனால், சாதி இந்துக்கள் அதை எதிர்பார்த்தார்கள். அது நடந்தேறிக்கொண்டேயிருக்கிறது, ஆகையால் தலித் இலக்கியம் தன் வேலையை செய்துகொண்டேயிருக்க வேண்டிய அவசியம் இன்றளவும் இருக்கிறது.

குறவர் மக்களின் வாழ்வியல் குறித்து இன்னும் இலக்கியம் ஏதும் வரவில்லையே என்ற கேள்விக்கு, "கொறபுத்தி'என்னும் தன்வரலாற்று நாவல் ஒன்றை எழுதிக்கொண்டிருப்பதாக அவர் கூறினார். அந்த நாவலில் இதுகாறும் உள்ள குறவர் சமூகத்தின் பண்பாடுகள் அவர்கள் மீது நிகழ்த்தப்படும் முரண்கள் என அதன் ஊடாக தூத்துக்குடி – பசுவந்தனை வட்டார சாதி ஒடுக்குமுறை வரலாற்று இலக்கியமாக அது இருக்கும் என்றும் அவர் கூறினார்.

மணிகோவின் இன்னொரு முக்கியமான நூல் "பாவேந்தரும் விளிம்பு நிலை மக்களும்', இதுவும் ஆய்வு நோக்கில் எழுதப்பட்ட ஒரு நூலாகும். தமிழ்த்தேசியத்தின் அடையாளமாகப் பார்க்கப்பட்ட பாரதிதாசன் பாடல்களை வேறு நோக்கில் பார்க்கும் நூலாக அது அமைந்துள்ளது. விளிம்புநிலை மக்களின் வாழ்வியலை அளவுகோலாக வைத்து அந்நூல் எழுதப் பட்டிருக்கிறது.

பாரதிதாசனை நாம் அப்படிப் பார்க்க முடியுமா எனக் கேட்டபோது, பாவேந்தர் போன்றவர்கள் முற்போக்கு சூத்திர மனப்பான்மையுடையவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். அவர்களின் இந்தத் தன்மையை நாம் மிகவும் காத்திரமாக, விமர்சனம் செய்தாக வேண்டும் என்றும், எடுத்துக்காட்டாக பாரதிதாசனின் "குடும்ப விளக்கு' என்னும் நூலில், அவர் கட்டமைக்கும் பெண் எப்படிப்பட்டவராக இருக்கிறார் என்பதை மறுவாசிப்புக்கு ஆட்படுத்துங்கள் என்கிறார். பெண் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்னும் அவருடைய வரையறை, பெண்ணை அடிமைப்படுத்துவதாகவே இருக்கிறது. ஏன் அத்தகைய இலக்கணத்தை ஆணுக்கானதாக அவர் பேசவில்லை என்ற வினாவை எழுப்புகிறார்.

விமர்சனத்தைக் கறாராக வைக்க வேண்டும். எப்போதும் நமக்குள் ஒரு தணிக்கையாளன் இயங்கிக் கொண்டே இருக்கிறான். அவனைத் தலைமேல் அடித்து உள்ளே தள்ளிவிட்டு, நாம் வெளிப்படையாகப் பேசவேண்டும் என்றும் நம்மின் உறக்கத்தில் அவர்கள் எப்படி கனவு காணமுடியும் என்றும் அவர் வினவுகிறார்.

தொண்ணுறுகளில் வெளியான "மக்கள் பண்பாடு' என்ற இதழைத் தொகுத்து அறுநூறு பக்க அளவில் புத்தகமாகத் தன் சொந்த செலவில் கொண்டு வந்திருக்கிறார் பன்னீர். பல சமூக முன்னோடிகள் எழுதிய முக்கியமான ஆக்கங்கள் அதில் இடம்பெற்றுள்ளன. அந்தத் தொகுப்பு இந்துத்துவ அரசியலுக்கு எதிரான கட்டுரைகளையும், மரண தண்டனைக்கு எதிரான அப்போதைய பின் நவீனத்துவ உரையாடல்களை கொண்டிருக்கிறது.

மிக முக்கியமான ஆவணமாக அதைத் தமிழுக்கு தருகிறேன் என்று கூறும் பன்னீர், எப்போதும் சமூகத்திற்கு தொண்டாற்றும் பக்குவம் கொண்டவராக இருக்கிறார். பழங்குடி மக்களின் வாழ்வியலுடனான புனைகதைத் தொகுப்பு ஒன்றை உலகத் தமிழாராய்ச்சி நிறுவன மொழியியல் சிந்தனையாளர் டாக்டர் க. சுசீலா அவர்களோடு இணைந்து வெளியிடவிருக்கிறார். மார்க்சிய – லெனினிய சிந்தனையோடு உழைப்பாளிகள் ஒன்றிணைந்து நடத்துகிற விடுதலைக்கானப் போராட்டத்தில், தன்னை இணைத்துக் கொள்வதே குறிக்கோள் என்னும் மணிகோ.பன்னீர் செல்வம் விசைத்தெறிப்பான ஓர் ஆளுமையே.

மணிக்கோ. பன்னீர்செல்வம்

தொடர்பு கொள்ள : 94426 83661 – யாழன்ஆதி