நம்முடைய முயற்சிகள், தொழிலாளி – முதலாளி ஆகியோர் கூட்டாளிகள் என்கிறதான தன்மை ஏற்பட வேண்டும் என்பதற்கே. அதற்கு பலாத்காரம்தான் சாதனம் என்பது அல்ல! அல்லது ஸ்டிரைக் செய்துதான் அந்த காரியத்தை சாதித்துக் கொள்ள வேண்டும் என்ற தன்மை இருக்கக்கூடாது. வேறு முறைகளைக் கையாள வேண்டும். முதலாளிகளை மிரட்டுவது என்பதையே லட்சியமாகக் கொண்டிருக்கக் கூடாது. முதலாளி முறை ஆட்சியிலுள்ள வரையில் முதலாளிகளை நம்மால் ஒன்றும் செய்து விட முடியாது.Periyar_370

சில ஆயிரம் ரூபாக்கள் அவர்களுக்கு நஷ்டம் ஏற்படும்படி செய்வதால் அவர்கள் இணங்கிவிட மாட்டார்கள். கூட்டுக் கம்பெனிக்கு, "லிமிடெட் கம்பெனிக்கு' முதலாளியே கிடையாது. நிர்வாகிகளோடு செய்யும் போராட்டம் கல்லிலே முட்டிக்கொள்வது போன்றதேயாகும். அவர்களோடு போராடுவதால், அவர்களுக்கு நம் மீது பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம்தான் தோன்றும். நம் கஷ்டங்களுக்குப் பரிகாரம் செய்யவேண்டும் என்கிற புத்தி தோன்றாது; இது இயற்கை. இந்த இடத்தில் நமக்குதான் அதிகப் பொறுப்பும் சரியான வழியும் தேவையாக இருக்கின்றன.

அடிக்கடி சோஷலிஸ்டுகள் "ரயில்வே பொது ஸ்டிரைக்' என்று சர்க்காரை மிரட்டுவதும், அதனால் தங்களுக்கு வசதியும் பெருமையும் சம்பாதித்துக் கொள்வதுமாய் இருக்கின்றனரே, இதைச் சர்க்கார்தான் மதிக்குமா? மற்ற கட்சிகள்தாம் மதிக்குமா? பொதுமக்கள்தாம் மதிப்பார்களா? சில கட்சிகளுக்கு இது ஒரு "பிஸினஸ்' வியாபாரமாகப் போய்விட்டது என்பதாகத்தானே ஆகிவிட்டது! ஸ்டிரைக் முறை தொழிலாளிகளுக்கு வெற்றி தரவில்லை என்பதை அனுபவ மூலமாக இந்த ஆண்டுகளில் உணர்ந்துவிட்டோம்.

மற்றும் அடுத்தபடியாக இன்று பார்த்தால், முதலாளிக்கும் தொழிலாளிக்கும் பரஸ்பரம் நல்லுறவு என்பதே கிடையாது. ஒருவருக்கொருவர் துவேஷமும் வெறுப்பும் இல்லாதபடி நடந்து கொள்ள முடியவில்லை. தொழிலாளியை கண்டால் முதலாளிகள், மேலதிகாரிகள் "உர்' என்று இருப்பதும் மேலதிகாரிகளைக் கண்டால் தொழிலாளர்கள் கொடூரமாக இருப்பதுமாகவே எங்கும் இருந்து வருகிறது. இந்த நிலை யாருக்கும் நல்லதல்ல; நாட்டுக்கும் பொதுமக்களுக்கும் செல்வ வளர்ச்சிக்கும் கேடானது. ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்பு, நல்லெண்ணம் இருக்க வேண்டும்; ஒருவருக்கொருவர் தனிப்பட்ட முறையில் தாக்கிக் கொள்ளக்கூடாது; கலவரத்தை உண்டாக்கிக் கொள்ளக் கூடாது. ரயிலில் இருப்பவர்கள் எங்கள் சிற்றப்பன், பெரியப்பனல்ல! எல்லாம் கடைந்தெடுத்த பார்ப்பனர்கள்தாம். பின் ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால், கலவரத்தையும் பலாத்காரத்தையும் நாமே பழக்கித் தந்தால், மக்கள் கதியும் நாட்டின் பொது நிலையும் என்னாவது?

மற்றும் சொல்கிறேன், தொழிலாளர்களுக்குள் நல்ல ஒற்றுமையும், கட்டுப்பாடும் வேண்டும். குறிப்பாக எடுத்துக்கொண்டால், தொழிலாளிகள் அனைவரும் ஒரே சாதி மக்கள் என்ற உணர்ச்சி வேண்டும். தொழிலாளிகள் என்றால் யார்? எல்லோரும் திராவிட மக்கள்தாமே! திராவிட மக்கள்தாம் உழைக்கும் மக்களாய், பாடுபடும் பாட்டாளிகளாய் இருக்கிறார்களே தவிர, எந்தப் பார்ப்பான் தொழிலாளியாய் இருக்கிறான்?

தொழிலாளர்களுக்காகப் பாடுபடுகிறோம் என்று சொல்கிறவர்களெல்லாம் இந்தச் சங்கதியை, பேதத்தை அதாவது திராவிட மக்கள்தாம் தொழிலாளிகள்; திராவிட மக்களாய் இருப்பதாலேயே சமுதாயச் சூழ்நிலையும், விதி, மத, சாத்திர முறையும் அவர்களைத் தொழிலாளியாக்கி வைத்திருக்கிறது. அதுபோலவே, பார்ப்பானாய் இருப்பதாலேயே முதலாளி சாதி மகனாய், உட்கார்ந்து சாப்பிடும் வசதி வாய்ப்பு உடையவனாய், சமுதாய நடப்பும், தன்மையும் இருக்கின்றன என்கிறதை யாரும் எடுத்துச் சொல்லவில்லை. சொல்லாததோடு மட்டுமல்ல, இந்த சங்கதி தொழிலாளி மகனுக்குத் தெரியக்கூடாது என்றும் நினைக்கிறார்கள்...

இதைப்பற்றி நாங்கள்தான் கவலை எடுத்துக்கொண்டு காரியம் செய்து வருகிறோம். ஏன்? இது உங்கள் நாடு; எங்கள் முதல்; தொழிலாளிகள் எங்கள் சாதி இவை மூன்றும் பார்ப்பனருக்குக் கிடையாது; அறவே கிடையாது.

திராவிட மக்கள் அனைவரும் தொழிலாளிகள்: திராவிட மகனாய் இருக்கிறதாலே அவன் தொழிலாளியாகவும்: பார்ப்பானாய் இருக்கின்றதாலே இன்னொருவன் முதலாளியாகவும், முதலாளி சாதியாகவும் இருக்கிறான் என்பதை நன்றாய் ஞாபகத்தில் வையுங்கள். இந்த பேதம் இருக்கக்கூடாது. தொழிலாளிகளின் கவனம் ஸ்டிரைக், சம்பள உயர்வு, அடிதடி என்கிற பக்கத்திலே செலுத்தப்பட்டதே தவிர, இந்த பேதத்தை ஒழிக்கும் முயற்சியிலே திருப்பி விடப்படவில்லை என்பதை திரும்பவும் கூறுகிறேன். உள்ளபடியே சொல்கிறேன், இந்த ரயில்வே தொழிலாளர்கள் மட்டுமாவது இந்த இன உணர்ச்சியோடு, பார்ப்பான் திராவிடர் என்ற உணர்ச்சியோடு அதைப்பற்றிக் கவலை எடுத்துக்கொண்டு பாடுபட்டிருப்பார்களேயானால், இந்நேரம் இந்த ரயிலே நமக்கு ஆகி இருக்குமே!

– தொடரும்

பொன்மலையில் 10.9.1952 இல் ஆற்றிய உரை