கறுப்பு மை குறிப்புகள் – 8

sathyapal_600

            ஓர் உரை உங்கள் சிந்தையைத் தெளிவுறச் செய்யுமெனில், ஓர் உரை உங்களின் கற்பிதங்களைத் தகர்க்குமெனில், ஓர் உரை நீங்கள் யார் என்பதை, உங்கள் வேர்எதுவென்பதை, உங்களின் நண்பர்களையும் எதிரிகளையும் அடையாளப்படுத்துமெனில், ஓர் உரை வரலாற்றின் மீது ஒளி பாய்ச்சி, திசைகாட்டியாக உங்களுக்கு வழிகாட்டுமெனில்... வேறென்ன வேண்டும் தோழர்களே! ஆந்திர பல்கலைக்கழகத்தில் மானுடவியல் பேராசிரியராகப் பணிபுரியும் டாக்டர் பி.டி. சத்யபால் அவர்களின் உரையை அண்மையில் (மே 28, 2011) கேட்டபோது, மேற்சொன்ன அத்தனை விஷயங்களும் கண்கூட சாத்தியப்பட்டது.

எப்படிப் போகிறதென உணர முடியாத எட்டு மணி நேர நீண்ட உரையில், உணர்ச்சிப் பிழம்பான வார்த்தை விளையாட்டுகளோ, பேச்சாற்றலின் சூட்சமங்களான ஏற்ற இறக்கங்களோ, உறைய வைக்கும் உடல் மொழியோ எதையுமே பார்க்க முடியவில்லை. ஆழக் கற்றறிந்த பேராசிரியராக முன் நின்று, இச்சமூகம் குறித்த உண்மைகளை, வெறும் உண்மைகளை அடுக்கடுக்காகப் பேசிக் கொண்டே போகிறார். சமூகத்தின் கற்பிதங்கள் மேல் விழுந்து கிடக்கும் முடிச்சுகளை தன் ஆழ்ந்த அறிவாலும், வற்றாத நினைவாற்றலாலும், எளிய வார்த்தைகளைக் கொண்டு லகுவாக அவிழ்த்தெடுக்கிறார். பகுத்தறிவால் பட்டறிந்த உண்மைகளுக்கு அறிவியல் பூர்வமான நியாயங்களும், வரலாற்று ரீதி யான விளக்கங்களும் கிடைக்கும்போது, உள்ளூர ஓர் உற்சாகம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. இப்படியாக தன் உரை முழுக்க, நம்மை உற்சாகப்படுத்தும் கருத்துகளைக் கூறிக் கொண்டே இருக்கிறார் சத்யபால்.

boole_173ஆரியர்கள் வந்தேறிகள் எனத் தெரியும். அவர்கள் இந்த மண்ணின் பூர்வகுடிகளல்லர் என்பதும் தெரியும். ஆனால், அவர்கள் எதற்காக, எப்படி வந்தேறினார்கள் என்ற காரணம் மேம்போக்காகவே நமக்குள் புகுத்தப்பட்டிருக்கிறது. ஆரியர்கள் இந்நாட்டிற்குள் படையெடுத்து வந்ததாகக் கூறும் டாக்டர் சத்யபால், 1996 முதல் 2001 வரை நடத்தப்பட்ட மானுடவியல் ஆய்வு முடிவுகளை வைத்து – ஆரியர்களின் படையெடுப்பை உறுதிப்படுத்துகிறார். இந்த ஆய்வு இரண்டு முக்கியமான உண்மைகளுக்குச் சான்றாகிறது.

ஒன்று, பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் சாதியினரின் தாய் வழி மரபணுக்களும்; தந்தை வழி மரபணுக்களும் ஆசியர்களுக்குரியது என ஆய்வில் கண்டறியப்பட்டது. அதே வேளை முன்னேறிய சாதியினரான பார்ப்பன, வைசிய, சத்திரியர்களில் 40 சதவிகிதம் பேருக்கு தாய் வழி மரபணுக்கள் ஆசியர்களுக்குரியதாகவும்; தந்தை வழி மரபணுக்கள் கிழக்கு அய்ரோப்பியர்களுக்குரியதாகவும் இருப்பது தெரிய வந்தது. இவர்கள் இந்நாட்டின் பூர்வகுடிகளாக இருப்பார்களெனில், அவர்களின் மரபணுக்கள் பொய் சொல்ல வாய்ப்பில்லையே. சரி, இவர்களின் தாய் வழி மரபணுக்கள் மட்டும் எப்படி ஆசியர்களுக்குரியதாக இருக்க முடியும்? இக்கேள்விதான் ஆரியர்கள் நம் நாட்டிற்கு எப்படி வந்தேறினார்கள் என்பதற்கான பதிலாக மாறுகிறது.

“இடப்பெயர்ச்சி காரணமாக வந்திருந்தால், பெண்கள் மற்றும் குழந்தைகளோடு ஆரியர்கள் குடும்பம் குடும்பமாகவே வந்திருப்பர். அப்படியல்லாமல் படையெடுத்து வந்ததாலேயே, அவர்கள் இங்குள்ள பெண்களோடு வாழ நேர்ந்தது. இந்து இதிகாசங்களும், புராணங்களும் பெண்களை இழிவு படுத்துவதன் பின்னணி இதுதான். இங்குள்ள சாதி இந்து பெண்கள் ஆரியர்களல்லர் என்பதாலேயே, நம் பெண்களை இழிவுபடுத்தி அடிமைப்படுத்தும் நோக்கோடு இந்து அடிமை விதிமுறைகளை அவர்கள் உருவாக்கினர்'' என்கிறார் சத்யபால்.

இந்த ஆய்வு வலியுறுத்தும் இரண்டாவது உண்மை, எண்ணற்ற சாதியினராகப் பிரிந்து கிடக்கும் பிற்படுத்தப்பட்டோரும், தலித் மக்களும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது – படிநிலைப்படுத்தப்பட்ட சமூக அமைப்பில் தலித் மக்களை விட உயர்ந்தவர்களாக பிற்படுத்தப்பட்டோர் நம்ப வைக்கப்பட்டிருந்தாலும், மரபணுக்கள் சொல்லும் உண்மை இரு பிரிவினருடையதும் ஒன்றே என்பதுதான். பிரித்தாளும் சூழ்ச்சியிலேயே ஓரின அடையாளம் அறுத்தெறியப்பட்டது. பிற்படுத்தப்பட்டோரும் பட்டியல் சாதியினரும் ஏன் ஒன்றிணைந்து சமூகச் சமன்பாட்டிற்கு உழைக்க வேண்டும் என்பதற்கான நியாயங்களை, இந்த ஆய்விலிருந்துதான் முன் வைக்கத் தொடங்குகிறார் டாக்டர் சத்யபால்.

கி.மு. 3000 ஆண்டில் சிந்து சமவெளி நாகரிகத்தோடு வரலாற்றைப் புரட்டத் தொடங்கி, அம்பேத்கர் வரையிலும் – சமூகத்தின் இருப்பையும் அதன் மாற்றங்களையும் தெள்ளத் தெளிவாகப் புரிய வைக்கிறார். சிந்து சமவெளி நாகரிகத்தைச் சேர்ந்தவர்களான நம் (இன்றைய பிற்படுத்தப்பட்டோரும் பட்டியல் சாதியினரும்) மூதாதையர்கள், அப்போதே வளர்ச்சி மிகுந்தவர்களாகவும், விவசாயத்தைப் பெருக்குவோர்களாகவும், தாய் வழிச் சமூகத்தினராகவும், தாய் கடவுளை வணங்குபவர்களாகவும், தாமிரம் / பித்தளை இவற்றால் கடினமான பொருட்களை உற்பத்தி செய்யக் கூடிய உழைப்பாளிகளாகவும், மிக முக்கியமாக அமைதியை விரும்புகிறவர்களாகவும் இருந்தனர் என்ற தகவலை சத்யபால் அவர்கள் சொல்லும் போது, பெண்கள் மேல் மரியாதை கொண்ட, ஆயுதங்களற்ற, சகோதரத்துவம் நிறைந்த அக்காலம் குறித்து ஓர் ஏக்கமே உண்டாகிறது. நம்முடைய நாகரிகத்தில் ஆயுதங்கள் கண்டறியப்படவே இல்லை. அதற்கான தேவையையும் நாம் உருவாக்கிக் கொள்ளவில்லை.

அதிலிருந்து ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் படையெடுத்து வந்த ஆரியர்கள், இவற்றுக்கு நேரெதிரான வாழ்க்கை முறையைக் கொண்டிருந்தனர். ஆரியர்கள் ஆண் தலைமையைக் கொண்டாடினர். இரும்பை எளிதாக உருக்கி, தேர்களையும் ஆயுதங்களையும் செய்தனர். ஆதிக்கமும் ஆயுதங்களும் ஆரியர்களின் இரு கண்களாகவே இருந்தன. அவர்கள் ஒருபோதும் அமைதியையும் சகோதரத்துவத்தையும் விரும்பினார்களில்லை. சுமார் 1500 ஆண்டுகள் பார்ப்பனியம் ஆழ வேரூன்றிய நிலையில்தான் பவுத்தம் தோன்றுகிறது.

புத்தர் குறித்து இச்சமூகத்தில் விதைக்கப்பட்டிருக்கும் அத்தனை மூடக் கருத்தியல்களையும் தன் உரையின் போக்கில் தகர்த்துச் செல்கிறார் சத்யபால். அரண்மனையில் பிறந்த சீமானாக, செல்வச் செழிப்போடு வாழ்ந்த புத்தர் மரணத்தைக் கண்டு அஞ்சி, துயரம், பசி போன்ற வாழ்வியல் எதார்த்தங்களை தாள முடியாமலேயே துறவறம் பூண்டதாக நமக்கு கற்பிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் உண்மை அதுவல்ல. "சாக்கியர்' (இன்று அது பீகாரில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருக்கிறது. புத்தர் ஷத்ரியர் அல்லர்; ஷேத்ரியர்) என்ற குடியில் பிறந்த புத்தரின் மனதை துயரப்படுத்தியவை வர்ணாசிரம விதிமுறைகள்தான். பார்ப்பனியத்தை ஏற்ற பெரும்பான்மை வாழ்வின் கட்டாயங்களை நிராகரித்ததால் புத்தர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டு, பின்னர் தன் வாழ்நாள் முழுவதும் பார்ப்பனியத்தின் பிடியிலிருந்து மக்களை மீட்கப் போராடினார்.

புத்தர் கனவு மனிதரல்ல. உண்மைக்கு ஒவ்வாத வார்த்தைகளை ஒருபோதும் அவர் கூறவில்லை. ஆழ்ந்த திட்டமிடலோடும், அறிவார்ந்தும், ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்தும், மனித வாழ்க்கையின் நெறிகளாகவும் இருந்தன அவரது அறிவுரைகள். பகுத்தறிய வாய்ப்புகளற்ற காலகட்டத்தில் புத்தரின் பார்ப்பனிய எதிர்ப்பை, உலகின் முதல் உளவியல் புரட்சி என குறிப்பிடுகிறார் சத்யபால்.

அக்கால துறவிகள் கடுந்தவம் செய்வதாகவும், அவ்வழியாக கடவுளுடன் தொடர்பில் இருப்பதாகவும் சமூகத்தை நம்ப வைத்து ஏமாற்றிக் கொண்டிருந்தபோது, பகுத்தறிவாளரான புத்தர் பட்டினி கிடந்து, போதி மரத்தினடியில் கடுந்தவம் புரிந்ததன் நோக்கம் கடவுளை அடைவது அல்ல. கடுந்தவம் என்ற பெயரில் பட்டினி கிடந்தால், உடம்பு இளைத்து எலும்புகள் துருத்துவதைத் தவிர ஒரு பலனும் உண்டாகப் போவதில்லை என்ற உண்மையை உணரவும், பார்ப்பனர்கள் கட வுளின் பெயரால் அவிழ்த்துவிட்ட கட்டுக்தைகளை நம்பிக் கொண்டிருந்த இச்சமூகத்திற்கு உள்ளதை உணர்த்தவுமே தவம் புரிந்தார். போதி மரத்தினடியில் தவம் செய்தபோது அவரின் தலைக்குப் பின்னால் ஒளி எதுவும் தோன்றவில்லை. இதெல்லாம் திரிபுகள் என்று சொல்லும் சத்யபால், அப்படியெனில், அன்றைய காலகட்டத்தில் எல்லோருமே போதி மரத்தடியில் உட்கார்ந்து ஒளியைப் பெற்றிருக்கலாமே என்று நகைச்சுவையாக வினவுகிறார்.

அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் ஆட்சிக்கு வந்த மன்னர்கள் பவுத்த வழியிலேயே ஆட்சி புரிந்தனர். ஆதிக்கத்தாலும், வேதம் ஓதுதல் போன்ற சடங்குகளாலும் சமூகத்தை ஏய்த்துப் பிழைத்துக் கொண்டிருந்த பார்ப்பனர்கள், இதனால் கி.மு. 365இல் சந்திரகுப்த மவுரியரின் ஆட்சிக் காலத்தில் பிழைப்பிற்காக பார்ப்பனர்கள், விவசாயிகளாகவும் போர்ப்படை வீரர்களாகவும் மாற வேண்டியிருந்தது. அதன் பின்னர் கி.மு. 265 இல் பவுத்த நெறிமுறைகளைப் பின்பற்றியே ஆட்சி புரிந்தார் அசோகர். சாலைதோறும் மரம் வளர்த்தார் என்பது மட்டுமே அசோகரின் அடையாளமாக நிலைநாட்டப்பட்டிருக்கிறது. உண்மையில், அசோகர் ஒரு ஜனநாயகவாதி என்கிறார் சத்யபால். சட்டத்தின் முன் எல்லோரும் சமம் என்ற நவீன வரலாற்றிற்கு அடித்தளமிட்டவர் அசோகர். அவருடைய ஆட்சி சட்டத்திற்குக் கட்டுப்பட்டு நடந்தது. இலவச கல்வி யையும் மருத்துவ வசதிகளையும் கட்டாயமாக்கினார் அவர். இவற்றையெல்லாம் அசோகர் செயல்படுத்தக் காரணம், அவரோடு இருந்த பிக்குகள்தான். அசோகரின் ஆட்சியில் பின்பற்றப்பட்ட மக்கள் நலத் திட்டங்களால், பார்ப்பனர்கள் அதிகளவில் போர்ப்படையில் இணைந்தனர்.

நீதியின் வழியில் மக்களை வழிநடத்திய புத்தரால் சுமார் அய்நூறு ஆண்டுகளுக்கு அடக்கி வைக்கப்பட்ட பார்ப்பனியம், அசோகரின் பேரனான ப்ரிஹந்தரின் ஆட்சியில் புஷ்யமித்ர சுங்கா என்ற ஆரியப் பார்ப்பனரால் மீட்டெடுக்கப்படுகிறது. பார்ப்பனியத்தின் ஆட்சி முழு வீச்சோடு தொடங்கிய காலகட்டம் இதுதான். சேனாதிபதியாக இருந்த புஷ்யமித்ர சுங்கா அரசவையிலேயே ப்ரிஹந்தரைக் கொன்று ஆட்சியைப் பிடிக்கிறான். அதன் பின்னர் நடந்ததெல்லாம் ஆதிக்க வெறி யாட்டம். பவுத்தம் தகர்க்கப்பட்டு, சதுர்வர்ணம் என்ற நான்கு பிரிவு பல்லாயிரக்கணக்கான ஜாதிகளாகப் பிரிக்கப்பட்டு, மனிதர்கள் கும்பல் கும்பலாக துண்டாடப்படுகின்றனர். மநுதர்மம் எழுதப்படுகிறது. ஊர்களும் சேரிகளும் உருவாக்கப்படுகின்றன.

இந்த அநீதியை ஏற்காத மக்கள், புஷ்யமித்ர சுங்கனோடு சண்டையிட்டு காடுகளில் வாழத் தொடங்குகின்றனர். அவர்களே இன் றைய பழங்குடியினர். சிலர் எதிர்த்துப் போராடி தோற்கடிக்கப்பட்டு, ஊருக்கு வெளியே வாழ நேரிடுகிறது. வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டு, இறந்த விலங்குகளை உணவாக்கும் நிலைக்கு விடப்பட்ட அவர்களே தீண்டத்தகாதோர். துப்புரவுப் பணியைப் போன்ற கடைநிலை வேலைகள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டன. புஷ்யமித்ர சுங்கனிடம் சரணடைந்து, பார்ப்பனியத்தை ஏற்றுக் கொண்டவர்கள் சூத்திரர்களாக நிலைத்துவிட்டனர். இப்படியாக சாதியின் பிறப்பை, அது நம்மை பிரித்து முடக்கிய விதத்தை – நாகரிகம் தோன்றிய காலந்தொட்டு நவீன வரலாற்றில் கொண்டு வந்து முடிக்கிறார் சத்யபால்.

புலே முதல் அம்பேத்கர் வரையிலான சமூகப் போராளிகளைப் பட்டியலிட்டு அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் எடுத்துரைக்கிறார். இப்போராளிகள் பற்றி நாம் அறிய முடிகிற புதிய தகவல்கள் ஒவ்வொன்றும் வியக்க வைக்கின்றன. தந்தையின் காய்கறிக் கடையில் வேலை செய்து வந்த புலே, பார்ப்பன நண்பரின் திருமணத்தில் அவமானப்படுத்தப்பட்டு திரும்பி வந்து புரட்சியைத் தொடங்கும் காட்சிகளை சத்யபால் விவரிக்கும்போது சிலிர்ப்பு உண்டாகிறது. தான் பட்ட அவமானத்திற்கு புலே பதில் சொன்ன விதம்தான் அவரை வரலாறாக்குகிறது. இந்தியாவின் முதல் பெண்கள் பள்ளி, தாழ்த்தப்பட்டோர் பள்ளி, இரவுப் பள்ளி, "தீனபந்து' என்ற பெயரில் செய்தித்தாள், சணல் மற்றும் பருத்தி ஆலை ஊழியர்களுக்கான இந்தியாவின் முதல் தொழிற்சங்கம் (இன்று நாம் அனைவரும் அனுபவிக்கும் எட்டு மணி நேர பணி நேரத்தையும், ஒரு நாள் வார விடுப்பையும் போராடிப் பெற்று தந்தவர்கள் புலேயும் அவரது நண்பரான நாராயண் மெகாஜி லோகாண்டேவும் தான்) என தன் வாழ்நாள் முழுவதும் ஆதிக்கவாதிகளை அச்சுறுத்தும் சமத்துவவாதியாக செயல்பட்டுக் கொண்டே இருந்தார் புலே.

narayan_meghaji_lokhande_28அது மட்டுமல்ல, சாதியக் கட்டமைப்பை தகர்க்க விழைகிறவர்கள் பகுத்தறிவின்றி, பார்ப்பனியத்தை கேள்விக்குட்படுத்தாமல் அதை செய்யவியலாது. புலே, தனது "குலாம் கிரி' என்ற நூலில் அவதாரங்களின் உண்மை முகத்தை கிழித்தெறிகிறார். கல்வி, விவசாயம், தொழிற்சாலை, அரசு நிர்வாகம் அனைத்திலும் பிரதிநிதித்துவம் வேண்டுமென ஒலித்த முதல் குரல் புலேவினுடையது. அதனாலேயே அவர் பிரதிநிதித்துவத்தின் தந்தையாகப் போற்றப்படுகிறார். காந்தியை தாகூர்தான் மகாத்மாவாக்குகிறார். ஆனால், அதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே மக்கள் புலேவிற்கு மகாத்மா என்ற பட்டத்தை அளித்துவிட்டனர்.

வரலாற்றை கரைத்துக் குடித்து, அம்பேத்கரையும் பெரியாரையும் ஆழப் படித்தவர்களும் கூட, பல புதிய தகவல்களை சத்யபாலின் உரையில் கண்டறிய முடியும். மானுடவியல் அறிஞர் என்பதால், மனித இனக்குழுக்களின் தோற்றம், அவற்றின் வளர்ச்சி, வீழ்ச்சி, வாழ்க்கை முறை, நம்பிக்கைகள் – அவை உருவான கதைகள் குறித்து நாவின் நுனியில் தகவல்களை திரட்டி வைத்திருப்பதே அதற்கு காரணம். இந்து சமூகம் கடவுளின் பெயரில் அரங்கேற்றும் மதச் சடங்குகள் உருவான விதத்தைச் சிறு சிறு தகவல்களாக பேச்சினூடே முழுவதுமாகத் தூவிச் செல்லும் போது, அது சில இடங்களில் சிரிப்பையும் சில இடங்களில் அதிர்ச்சியையும், வேறு சில இடங்களில் வியப்பையும் உண்டாக்குகிறது.

நடு நெற்றியில் பொட்டு வைப்பது, காக்கை பறப்பது, விளக்கேற்றுவது, கோலம் போடுவது போன்ற சடங்குகளுக்கு அறிவியல் ரீதியான காரணங்களை கற்பிக்க விழைவது மதவாதிகளின் வழக்கம்! ஆனால், இந்த சடங்குகள் தோன்றிய உண்மையான காரணங்கள் நம் கற்பனைகளுக்கு எட்டாததாகவே இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, ப்ரிஹந்தரைக் கொன்று பவுத்தத்தை அழித்து பார்ப்பனிய ஆட்சியை நிறுவிய புஷ்யமித்ர சுங்கா, பவுத்த பிக்குகளைப் பார்த்ததும் அவர்களின் தலையை உடைக்க உத்தரவிட்டான். பிக்குகளின் உடைந்த தலைகளைக் கொண்டு வருகிறவர்களுக்கு தங்க நாணயங்களைப் பரிசாக அறிவித்தான். இதுவே பின்னாளில் தேங்காய் உடைக்கும் வழக்கமாக மாறியது. அதற்கு முன்னர் இந்து மதத்தினரிடையே கடவுளுக்கு காணிக்கையாக தேங்காய் உடைக்கும் வழக்கம் இருந்ததற்கான சான்றுகள் இல்லை.

இந்து மதத்தின் உரிமையாளர்களாக தங்களை முன்னிறுத்தி, அதன் பெயரால் ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் வன்செயல்களைத் தொடர்ந்து நிகழ்த்தி வரும் ஆதிக்க சாதியினரான பார்ப்பன, வைசிய, சத்ரியர்களோடு இந்து மதமும் வந்ததாக நாம் நம்புகிறோம். உண்மையில் இந்து மதம் என்ற ஒன்று அக்காலங்களில் இல்லவே இல்லை. சிறுபான்மையாக இருந்த ஆரியப் பார்ப்பனியமே பின்னாளில் பெரும்பான்மையை வேண்டி – பிற்படுத்தப்பட்டோரையும் பட்டியல் சாதியினரையும் ஒன்றிணைத்து இந்து மதமாக மாறியது. 1920 வரையிலும் தங்களை ஆரியர்களாகவே இவர்கள் அடையாளப்படுத்திக் கொண்டனர்.

1920களில் இந்திய சுதந்திரப் போராட்டம் உக்கிரத்தில் இருந்த காலகட்டத்தில், தங்களை இந்துக்களாக அறிவிக்காமல் போனால் நாடற்றவர்களாக தனித்து விடப்படுவோம் என்ற அச்சத்திலேயே இந்துத்துவ அரசியலை பார்ப்பனர்கள் கையிலெடுக்கின்றனர். அதுவரையிலும் ஆரியர்களாக இருந்தவர்கள் இந்துக்களாக மாறி, 1922 இல் இந்து மகா சபையை உருவாக்கி, மத அரசியலை தொடங்குகின்றனர். இந்த தகவல் பலரையும் ஆச்சர்யப்படுத்தவே செய்யும்.

இந்து (மதம்) என ஒன்று உண்மையில் இல்லை. இக்கருத்தைப் புரிய வைக்க சத்யபால் அவர்கள் ஓர் அருமையான எடுத்துக்காட்டை முன் வைக்கிறார். மளிகைக் கடையில், நாம் எல்லா பொருட்களையும் வாங்க முடியும்; ஆனால் "மளிகை'யை வாங்க முடியாது. அது போல, இந்து மதம் வெறுமனே ஜாதிகளின் தொகுப்பு தான். அதில் ஒவ்வொரு வரும் ஜாதியாகவே இருக்கிறார்கள்; இந்துவாக அல்ல. ஆரியப் பார்ப்பனியமாகவே இருந்த வரையிலும், பூர்வகுடிகளான பெரும்பான்மைச் சமூகத்தின் அச்சுறுத்தலை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆக, இந்து மதம் என்பது சங்கிலி. ஒவ்வொரு சாதியும் அதன் கண்ணிகள். இந்த கண்ணிகள் அறுந்துவிடுமானால் பார்ப்பனியம் அழிந்துவிடும். பகுத்தறிவினாலோ, வேறு மதங்களாலோ கண்ணிகளில் விரிசல் வருமானால் பார்ப்பனர்கள் பதற்றமடைவது அதனாலேயே!

கடவுளின் பெயராலேயே சாதி உருவாக்கப்பட்டது; கடவுளின் பெயராலேயே அது பாதுகாக்கப்படுகிறது. என்று சொல்லும் சத்யபால், இங்கு சாதி இல்லாத இடமே இல்லையென்கிறார். வேற்று மதங்களிலும் சாதிப் பாகுபாடு இருப்பதை விரிவாகப் பேசும்போது, முஸ்லிம்களிடையே மூவர்ண பாகுபாட்டைச் சுட்டிக் காட்டுகிறார். இந்தியாவின் சிறுபான்மையினமாக இருக்கும் முஸ்லிம்கள், மக்கள் தொகையில் 13 சதவிகிதம் உள்ளனர். முஸ்லிம்கள் ஓரினம் என்பதுகூட ஒருவித மாயைதான். இந்திய முஸ்லிம்களில் அஷ்ரப், அஜலால், அரசல் என மூன்று பிரிவுகள் இருக்கின்றன. இதில் "அஷ்ரப்' என்பவர்கள் இஸ்லாத்தை தழுவிய பார்ப்பனர்கள். அஷ்ரப் (1.7%), பிற்படுத்தப்பட்டோர் அஜலால் (62%), தலித்துகள் அரசல் (25%). இஸ்லாத்திலும் பார்ப்பனர்கள் சிறுபான்மையினர்தான் என்றாலும், "பட்' முஸ்லிம் என்றழைக்கப்படும் பார்ப்பனர்களே அதிகாரத்திலும் செல்வாக்கிலும் மேலே நிற்கின்றனர்.

இந்தியாவில் புகழ் பெற்று விளங்கும் "ஆசாத்'துகளும், "பட்'களும் பார்ப்பன முஸ்லிம்களே. 1922 தொடங்கி 2011 வரை நடந்தேறிய மதக் கலவரங்களில் இருதரப்பிலும் கொல்லப்பட்டதும் கொலை செய்ததும் – பிற்படுத்தப்பட்டோரும் தாழ்த்தப்பட்டோரும்தான். எந்தவொரு வன்முறையிலும் முல்லாக்களோ, பூசாரிகளோ பலியாவதில்லை. ஆக, பார்ப்பனர்கள் எங்கிருந்தாலும் பாதுகாப்பாகவே இருக்கிறார்கள்.

சத்யபால் அவர்களின் உரையைக் கேட் கும் போது வரலாற்றை அறிந்து கொண்டிருக்கிறோம் என்ற உணர்வை விடவும், வாழ்க் கைக் கதையைக் கேட்பதைப் போன்ற ஆர்வமே உந்தி எழுகிறது. வரலாற்று நூல்களையும், மானுடவியல் ஆய்வு நூல்களையும் படித்துப் பெறக்கூடிய அறிவையும் தெளிவையும் ஓர் உரை கொடுத்துவிடுமெனில், வாழ்நாளில் ஓர் எட்டு மணி நேரத்தை அதற்காக செலவு செய்வதும்கூட, நம் ஒவ்வொருவரின் சமூகக் கடமையாகக் கொள்ளலாம்.

அறிவைத் திரட்டிக் கொள்ளும் ஆர்வமும், அந்த அறிவு உண்மைக்கு பக்கத் துணையாக இருக்கிறதா என ஒப்பு நோக்கும் சிரத்தையும், கற்றறிந்த உண்மையைக் கொண்டு சமூகத்தை விழிப்படையச் செய்ய வேண்டுமென்ற முனைப்பும், அதற்காகவே தன் வாழ்க்கையை வடிவமைத்துக் கொள்ளும் துணிவும் – எல்லா அறிவுஜீவிகளிடமும் இருந்துவிடக் கூடிய குணமல்ல. சத்யபால் அவர்கள் இவற்றை தன் வாழ்வியல் நெறியாகக் கொண்டு இயங்கி வருகிறார் என்பதால், எட்டு மணி நேரத்தில் ஒரு நொடி கவனம் சிதறினாலும் அது பெருங்குற்றமே.

ஏனெனில், வரலாறும், உண்மைகளும் ஆதிக்கவாதிகளின் கையில் சிக்குண்டு பொய்களே வரலாறாக எழுதப்படும் அவல நிலையைத் தடுத்து நிறுத்த முடியாத சூழலில், நம் அறிவை உரமேற்ற மிக அரிதாகவே நமக்கு சத்யபால் போன்றோர் கிடைக்கின்றனர். எதிர்காலத்தை வடிவமைக்க கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் உணர்ந்திருத்தல் அவசியம். சாதியொழிப்பு ஒன்றே நம் எதிர்காலமெனில், நம் அறிவைக் கூர் தீட்டிக் கொள்ள சத்யபால் போன்ற சமகால, உண்மையான அறிவுஜீவிகளுக்கு நாம் நேரம் ஒதுக்க வேண்டும். ஏனெனில், இது போன்ற உரைகளை தவறவிடுகிறவர்களுக்கு நிச்சயமாக அது வாழ்நாள் இழப்பு என்பதை உறுதியாகக் கூற முடியும்.