kashmir_343

(கீகார் சிங், காஷ்மீரில் உள்ள கிராமத்தில் கண்ணிவெடியில் சிக்கி, தன்னுடைய வலது காலை இழந்தவர். அவருக்கு செயற்கைக்கால் பொருத்தப்பட்டுள்ளது. 'ஜம்மு காஷ்மீர் மாற்றுத் திறனாளிகள் சங்கம்' நடத்திய ஆய்வின்படி, இம்மாநிலத்தில் 3.62 லட்சம் மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். இதில் 50 ஆயிரம் பேர், கடந்த 20 ஆண்டுகளில் இங்கு நடந்த போரால் கால்களை இழந்துள்ளனர்.)

மெல்லிய நீரோடைகள்
கண்ணாடித் திரவமாய்
பூமியின் உடல் காட்டி ஓடும் ஓசை
காற்றில் கரையும் நீர்த் திவலைகள்
அருவிகளிலிருந்து பறக்கும்
சிறுபறவைகள்
பசுங்கானகங்கள்
பாடல் புதையல்கள்
மென்னலைகள் ஆடும்
நதிச்சமவெளி
அழகில் கண்வளர்க்கும் நீர்நிலம்
நீலக்கடல் பரந்திருக்கும்
திரவச்சிற்பம்
மலைவயல் பாலைவனம்
பாதங்கள் பதியும் கடற்கரை
மனிதர் வாழ
மனிதர் புசிக்க
மனிதர் துய்க்க
திகட்டாத தேன்கிண்ணம் பூமி
யாரதிர்வும் கேட்காத சிறுபுழுவின்
வாழ்வும் உன்னதம்
நிலம் விரட்டி
அடிமைகள் பிடித்து
எண்ணெய் குடிக்க
அடுத்து தண்ணீருக்காக
போர் நடத்தி
போர் நடத்தி
உலகழிக்கும்
மனிதர்களே
போரற்ற பூமியொன்றை
யார் செய்யக் கூடும்
துன்பமில்லா மனிதம்
எப்போது வந்து சேரும்?