யாரோ இரண்டொருவர் அடிகளாகவும், சுவாமிகளாகவும், பண்டார சந்நதிகளாகவும், பெரியாராகவும், ராஜாவாகவும், மந்திரியாகவும், "சர்' ஆகவும் ஆக்கப்பட்டு விடுவதில் திராவிட சமுதாயமோ அல்லது இப்படி அழைக்கப்பட்ட ஆட்களோ – உயர்ந்த பிறவி ஆகிவிட்டதாகக் கருதுவது முட்டாள்தனமேயாகும். எப்படி ஒரு ஒழுக்கங்கெட்ட அயோக்கியப் பார்ப்பானும் உயர்ந்த பிறவியாக மதிக்கப்படுகிறானோ, அப்படியே எவ்வளவு உயர்ந்த பட்டம் பதவி பெற்ற ஒழுக்கமான திராவிடனும் கீழ் பிறவியாகத்தான் மதித்து நடத்தப்படுகிறான்.

ஆதலால், நாம் ஒரு சரிசமமான மனிதப் பிறவி என்கின்ற உரிமை பாராட்டிக் கொள்ள வேண்டுமானாலும், ஆரிய சர்வத்திலிருந்தும் விடுபட வேண்டும். ஏன் நான் இப்படிச் சொல்லுகிறேன் என்றால், சில விஷயங்களில் மாத்திரம் தங்களைத் திராவிடர்கள் என்றும், திராவிடம் வேறு என்றும் சொல்லிக் கொண்டு – வேறு அநேக விஷயங்களில் ஆரியத்திற்கு அடிமையாக நடந்து கொண்டால், இரண்டுங்கெட்ட இழிநிலையைத்தான் அடைகிறோமே ஒழிய வேறில்லை. ஆதலால்தான் ஆரியப் பண்டிகைகளைப் பற்றியும், ஆரியக் கடவுள் தத்துவங்களைப் பற்றியும், அவை சம்மந்தப்பட்ட ஆதாரங்கள் பற்றியும் பேச வேண்டியதாயிருக்கிறது.

உதாரணமாக, சமீபத்தில் வரப்போகும் தீபாவளிப் பண்டிகையை எடுத்துக் கொள்ளுங்கள். சுமார் 15 வருஷ காலமாகவே திராவிடர்கள் தீபாவளிப் பண்டிகை கொண்டாடுவதானது, தங்களை ஆரிய அடிமை என்று முத்திரை போட்டுக் கொள்வதாக ஆகுமென்று எழுதியும் சொல்லியும் வருகிறேன். ஆனால், திராவிடர் பெரும்பாலோர் எனது வார்த்தையை மதித்ததாகவோ, நடந்ததாகவோ பெருமை பாராட்டிக் கொள்ள முடியாதவனாக இருக்கிறேன்.

தமிழ் மக்கள் அடியோடு தீபாவளி முதலிய ஆரியப் பண்டிகைகளை வெறுக்க வேண்டும். தீபா வளிப் பண்டிகை என்பது ஆரிய புராணக் கதையைச் சேர்ந்ததே ஒழிய, மற்றபடி வேறு எந்த ஆதாரத்தை யும் பொறுத்ததல்ல. புராண காலம் எது என்று முடிவுக்கு வந்தோமானால், தீபாவளி எப்பொழுது ஏற்பட்டது? எது முதல் கொண்டாடி வரப்படுகிறது? என்பது பச்சையாகத் தெரிந்துவிடும். மற்றும் அப்பண்டிகையின் ஆதாரத்தில் சம்மந்தப்பட்ட தேவர்கள் யார்? அசுரர்கள் யார் என்பதைத் சிறிது உணர்ந்தாலும் இப்பண்டிகை திராவிடனுக்கு இழிவைத் தருவதா, இல்லையா என்பது விளங்கிவிடும். இந்த ஒரு காரியத்தை நிறுத்தவே நாம் 15 வருஷமாகப் பாடுபட்டும் முடியவில்லையென்றால், மற்ற எத்தனையோ காரியங்கள் எப்படி முடிவு பெறப் போகிறது என்று பயப்பட வேண்டியவனாக இருக்கிறேன்.

திராவிடனுக்கு விக்கிரக ஆராதனை என்னும் உருவ வழிபாடும், ஆலயங்கள் என்னும் கோயில்களும் உண்டா என்று யோசித்துப் பாருங்கள். உலகத்திலேயே இன்று ஆரியர்களைத் தவிர வேறு யாருக்கும், எந்தச் சமயத்துக்கும் மதத்துக்கும் சேர்ந்த கடவுள்களுக்கு – எனக்குத் தெரிந்தவரை, உருவம், பெண்டு பிள்ளைகள், பந்து மித்திரர்கள், உற்சவங்கள் கிடையவே கிடையாது. அதிலும், திராவிடனுக்கு இருந்ததாகச் சொல்லவே முடியாது. திராவிடர்களுக்கு கோயில்களே கிடையாது என்று பந்தயம்கட்டிக் கூறுவேன். ஆரியச் செல்வாக்குப் பெற்ற தொல்காப்பியத்தில்கூட, இந்தக் கோயில்கள் இல்லை என்றால், வேறு எதில் இருந்திருக்க முடியும்?

ஆலயம் என்பதற்குத் தமிழில் வார்த்தையே இல்லை. கோயில் என்றால் அரண்மனையே ஒழிய ஆலயம் அல்ல. மலையாளத்தில் கோயில் என்பது அரண்மனைக்குதான் சொல்லப்படுகிறது. அங்கு அம்பலம் என்று சொல்லப்பட்டாலும் அம்பலம் என்பதற்கு வெளியிடம் என்றுதான் பொருளே ஒழிய, உள் இடம் அல்ல. வடமொழியில் உள்ள ஆலயம் என்பதுகூட கடவுள் வசிக்குமிடம் என்றோ, கடவுள் இருக்குமிடம் என்றோ பொருள் கொண்டது அல்ல. ஆலயம் என்பது கடவுள் இருக்குமிடமானால், தேவõலயம் என்று சொல்ல வேண்டியதில்லை.

வடமொழியில் தேவஸ்தானம் என்று சொல்லப்படும் வார்த்தையும் இரட்டை வார்த்தையே ஒழிய ஒற்றை வார்த்தையல்ல. ஆகவே, நமக்கு கோயில்கள் கிடையவே கிடையாது என்பதோடு, கடவுள் இருக்கும் வீடு என்பதற்கு வார்த்தையும் கிடையாது.

அன்பும் ஒழுக்கமும் தொண்டும் கடவுள் தன்மை என்று சொல்லப்படுமானால் – கல், உலோகம், மரம் சித்திரம் ரூபமாகக் கடவுள் இருக்க முடியுமா? இப்படி உள்ள கடவுள் தன்மையில் மேல் கண்ட உயரிய குணங்கள் இருக்குமா? உண்டாகுமா? என்று பாருங்கள். இந்தக் கோயில்கள், இந்த உருவங்கள் ஆகியவைகளால் திராவிடனுக்கு லாபமா? ஆரியனுக்கு லாபமா? இவற்றால் திராவிடன் செலவு செய்துவிட்டு இழிவையும் அடைகிறான். இதைச் சொன்னால் நமது பண்டிதர்கள் கடவுள் போச்சு, கோயில் போச்சு, கலைகள் போச்சு என்று மாய்மால அழுகை அழுகிறார்கள். நமது கோயில்கள் என்பவை எல்லாம் திராவிடத்தில் ஆரிய ஆதிக்கம் ஏற்பட்ட பிறகு ஏற்பட்டவைகளே தவிர, அதற்கு முன் ஏற்பட்டவை அல்ல.

– தொடரும்