தமிழகத்தில் பல்லாண்டு காலத்திற்கு முன்பு வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்களை, பஞ்சமர்கள் அல்லாதவர்கள் பட்டா மாறுதல் செய்து வைத்திருப்பதாகவும், காலப்போக்கில் அவற்றைப் பல்வேறு தரப்பினர் ஆக்கிரமிப்பு செய்து அனுபவித்து வருவதாகவும், ஆக்கிரமிப்பு செய்த நிலங்கள் பலவற்றில் தொழிற்சாலைகள் நிறுவப்பட்டுள்ளதாகவும்; ஒப்படை நிபந்தனைகள் மீறப்பட்டு, கிரயம் செய்யப்பட்டு பலருக்கு கைமாற்றப்பட்டுள்ளதாகவும்; அடிக்கடி அரசுக்கு முறையீடுகள் வருவதோடு, ஏடுகளிலும் செய்திகள் வருகின்றன. பஞ்சமி நிலம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளையும் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு பரிசீலனை செய்து, அவர்களிடமே திரும்ப ஒப்படைப்பதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி ஆய்வு செய்து, அரசுக்குப் பரிந்துரைகள் வழங்குவதற்கு, உயர் நீதிமன்றத்திலிருந்து ஓய்வு பெற்ற நீதியரசர் ஒருவர் தலைமையில் குழு அமைப்பதென அரசு முடிவு செய்துள்ளது'' என்று ஆளுநர் உரை வாயிலாக தமிழக சட்டமன்றத்தில், 7.1.2011 அன்று ஆளும் தி.மு.க. அரசு அறிவித்தது.

farmers_360அது, "கொக்கு தலையில் வெண்ணெய்யை வைத்து, அந்தக் கொக்கை வெயிலில் நிற்க வைத்து, அந்த வெண்ணெய் உருகி கொக்கின் கண்களை மறைக்கும் போது கொக்கைப் பிடித்துவிடலாம்' என்று கூறுவதைப் போன்ற ஒரு சதித்திட்டமே! இந்த அறிவிப்பின் அடுத்த கட்டமாக, ஓய்வு பெற்ற நீதிபதி மு. மருதமுத்து அவர்கள் தலைமையில், ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரிகள் அய்.வி. மணிவண்ணன், வி. கருப்பன், நில நிர்வாக ஆணையர் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட குழு ஒன்றும் தற்பொழுது அமைக்கப்பட்டுள்ளது.

119 ஆண்டுகளுக்கு முன்னர், 1892 இல் பிரிட்டிஷ் அரசால் ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தில் தலித் மக்களுக்கு 12 லட்சம் ஏக்கர் நிலங்கள் வழங்கப்பட்டன. ஆனால், இன்றளவில் ஒரு சிறு பகுதியைத் தவிர மீதியனைத்தும் பிற சமூகத்தினரால் பல்வேறு வகைகளில் அபகரிக்கப்பட்டு, அவர்கள் அனுபவத்திலுள்ளன. பஞ்சமி நிலம் குறித்த சட்டவிதிகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளது தற்செயலானதல்ல; திட்டமிட்ட சதி என்பது அனைத்து அரசுகளும் அறிந்ததே!

பஞ்சமி நிலம் என்பதே மறந்து போன சூழலில், புரட்சியாளர் அம்பேத்கர் நூற்றாண்டில் ஏற்பட்ட தலித் எழுச்சி, 1994 இல் பஞ்சமி நில மீட்புப் போராட்டமாக முன்னெடுக்கப்பட்டது. அந்த எழுச்சியை ஒடுக்கும் விதமாக செங்கல்பட்டு காரணையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஜான் தாமஸ், ஏழுமலை ஆகியோர் பலியாகினர். அவர்களுடைய தியாகம் பல தலித் அமைப்புகளை, இயக்கங்களை பஞ்சமி நில மீட்பிற்காக செயல்படத் தூண்டியது.

பஞ்சமி நில மீட்பு இயக்கங்கள் தொடர்ச்சியாக தமிழக அரசை வலியுறுத்தி வந்துள்ள போதிலும், இன்றுவரையில் அரசு பஞ்சமி நிலங்கள் குறித்த தகவல்களை நேர்மையாகவும், முழுமையாகவும் திரட்டவுமில்லை; அது குறித்து அக்கறைப்படவுமில்லை. மேலெழுந்தவாரியாக அரசு சேகரித்த தகவல்களின்படி, பஞ்சமி நிலங்கள் 72 ஆயிரம் ஏக்கர் என்றும், அவற்றில் 10 ஆயிரம் ஏக்கர் நிலம்தான் தலித் அல்லாதவர் கைகளில் உள்ளது என்பது போன்ற அறிக்கையை அரசு பெற்றுள்ளதாகத் தெரிகிறது. ஆனால், இது சரியான, முழுமையான தகவல் அல்ல. மேலும், தலித்தல்லாதவர்களிடம் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்க மேற்கொள்ளப்படும் போராட்டங்களை வலுவிழக்கச் செய்யும் முயற்சியாகவே இதை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

அதனடிப்படையில், கடந்த இரு பதின்ம ஆண்டுகளாக தலித் இயக்கங்கள் மேற்கொண்டுவரும் பிரச்சாரத்தின் காரணமாக, பஞ்சமி நில மீட்பு சட்ட ஆட்சியின் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. இந் நேரத்தில் மாட்டிற்கு முன்னால் வண்டியைக் கட்டும் வகையில், பஞ்சமி நில மீட்பு நடவடிக்கைகளை பின்னடையச் செய்ய வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் தி.மு.க. அரசு வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பை, தலித் உணர்வுள்ள ஒவ்வொருவரும் வன்மையாகக் கண்டிக்க வேண்டும். இந்த அறிவிப்பு வெறும் கண்துடைப்பு நாடகம் மட்டுமல்ல; இத்தனை ஆண்டுகளாய் இழந்த பஞ்சமி நிலங்கள் மீட்கப்படும் என்னும் தலித் மக்களின் நம்பிக்கைத் துளிர்களில் வெந்நீர் பாய்ச்சும் நடவடிக்கையாகவே கருத வேண்டியுள்ளது.

தனக்கு நெருக்கடி வரும் நேரங்களிலெல்லாம் "திராவிடம்', "தலித்' என்ற கவர்ச்சியான சொல்வித்தையை தமிழக முதல்வரும், அவரது தலைமையிலான தி.மு.க. அரசும் கையாளுகின்றனர். தலித்துகளின் மேம்பாட்டிற்காக எந்த ஒரு சிறப்பு முயற்சியும் இதுவரை மேற்கொள்ளப் பட்டதில்லை. மாறாக, தலித் மக்களைச் சுரண்டும், பின்னோக்கித் தள்ளும் நடவடிக்கைகளை தங்கள் சுயலாபத்திற்காக தந்திரமாகப் பின்பற்றி நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

கடந்த ஜெயலலிதா ஆட்சியின் இறுதியில், தி.மு.க. தலைவரின் குடும்பத் தொலைக்காட்சியின் ஊடகச் செல்வாக்கைக் கட்டுப்படுத்த அரசு கேபிள் டிவி நிறுவனம் தொடங்க சட்டம் இயற்றப்பட்டபோது, ஆளுநரிடம் தங்களுடைய தனிப்பட்ட செல்வாக்கைப் பயன்படுத்தி, அதற்கு ஒப்புதல் தரவேண்டாம் என தி.மு.க. தலைவர் கேட்டுக் கொண்டார். ஆனால், அவர் கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர் ஏற்பட்ட குடும்பச் சண்டை ஒன்றில், மாறன் சகோதரர்களின் ஊடகச் செல்வாக்கை வீழ்த்தும் விதமாக, தானே எதிர்த்த அரசு கேபிள் டிவி நிறுவனத்தை மீண்டும் இயக்க அய்.ஏ.எஸ். அலுவலர் உமாசங்கரை நியமித்தார். கொடுக்கப்பட்ட பணியில் தீவிரமாக ஈடுபட்டு, அவர் அரசு நிறுவனம் களவாடப்பட்டதைக் கண்டறிந்து அதை மீட்க நடவடிக்கை எடுத்தபோது, குடும்பச் சண்டை தீர்ந்த நிலையில், உமாசங்கர் மீது அபாண்டமாக குற்றம் சாட்டி, அவர் தலித் என்பதை முதல்வர் வசதியாக மறந்துவிட்டு, உமாசங்கர் தலித்தே அல்லர் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். ஆனால், தி.மு.க.வின் அமைச்சர் ராஜாவிற்கு நெருக்கடி ஏற்பட்டபோது, அவர் "தலித்' என்பதால்தான் இப்படி செய்கிறார்கள் என்றார்.

சிறப்பு உட்கூறுத் திட்டம் எவ்விதத்திலும் தலித் மக்களுக்கு சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி, சட்டமன்ற கட்டடம் உள்ளிட்ட பொதுவான திட்டங்களுக்கு செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதை மறுத்து, வெற்றுப் புள்ளிவிவர அறிக்கையை மட்டுமே அரசு வெளியிட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டுக்கான தி.மு.க.வின் சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில், சிறப்பு உட்கூறுத் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது, நகைச்சுவையின் ஒரு புதிய பரிமாணம்.

சென்னை உள்ளிட்ட மாநகரங்களை வசதிகொண்டவர்களுக்காக அழகுபடுத்த "சேரிகளை' அகற்றுவதில் தி.மு.க. அரசு முனைப்பாக செயல்பட்டு வருகிறது. கூவம் ஆற்றோரம் உள்ள சேரிகளை அப்புறப்படுத்துவதுகூட, சேரிகள் இருந்த இடங்களை தனியார் நிறுவனங்களின் பொழுதுபோக்கு வணிக வளாகங்களுக்கு தாரை வார்த்துக் கொடுப்பதற்காகத்தான் என்பது வெளிப்படையாகவே அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல், மீனவ மக்களின் வாழ்வாதாரமாகத் திகழும் கடலையொட்டிய அவர்களது சீனிவாசபுரம் போன்ற குடியிருப்புகளை அகற்றிவிட்டு, ஆடம்பர வணிக வளாகங்களுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகரிலிருந்து இரக்கமற்ற வகையில் சூழ்ச்சியுடன் கட்டாயப்படுத்தி வெளியேற்றப்பட்ட தலித் மக்களை அடிப்படை வசதிகளற்ற – ஆடு மாடுகள்கூட தங்க லாயக்கில்லாத – 110 சதுரடி குடியிருப்புகளில் கண்ணகி நகரில் கழிவுகளைப் போல் அரசு குவித்து வருகிறது. அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தைத் தேடி நகரத்திற்கு வரக்கூட போக்குவரத்து வசதிகள் இன்றுவரை செய்து தரப்படவில்லை. இது தவிர, கண்ணகி நகர் பகுதி சட்டவிரோத கும்பலின் கூடாரமாக அனைத்து சூழலும் உருவாக்கப்பட்டு, புறக்கணிப்பு தொடர்கிறது.

தலித் மாணவ/மாணவியருக்கான கல்வி மறுக்கப்படும் விதமாக, தமிழகமெங்கும் உள்ள அரசு, ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. பல இடங்களில் கல்விக்கூடங்கள் மூடப்படுகின்றன அல்லது அடிப்படை வசதிகள்கூட அற்றுள்ளன.

சென்னையிலேயே, மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கும் வியாசர்பாடி கல்யாணபுரத்தில் மேல்நிலைப்பள்ளியில் மின்வசதி, குடிநீர், கழிவறை, அறிவியல் ஆய்வுக்கூடம், ஆசிரியர்கள் போன்ற அடிப்படை வசதிகள்கூட இல்லையென்ற செய்தி, சென்னை மாநகர மேயரின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதிலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக ஓர் ஆங்கில நாளேட்டில் வெளியான செய்தியின் அடிப்படையில், இக்கட்டுரையாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்த பின்னரே, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. இருப்பினும், மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியர்கள் இதுவரை நியமிக்கப்படவில்லை.

தமிழகம் முழுவதிலுமே ஆதிதிராவிடர் நலத்துறை நடத்தும் மாணவ/மாணவியர் விடுதிகளில் அடிப்படை வசதிகள் இருப்பதில்லை. அண்மையில், சென்னை மாநகரில் எம்.சி. ராஜா விடுதி மாணவர்கள், அடிப்படை வசதிகள் இல்லாததைக் குறித்து கவனப்படுத்தும் வகையில் நடத்திய சாலை மறியல் போராட்டம் பற்றி மிகப் பெரிய அளவில் பத்திரிகைகளில் வெளியான பின்பும்கூட, அது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்க குழு ஏற்படுத்தப்பட்டபோதும், இன்றுவரை சிறிதளவுகூட முன்னேற்றம் ஏற்படவில்லை.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதைக் கண்காணிக்க, வன்கொடுமைத் தடுப்புச் சட்ட விதிகளின்படி, ஒவ்வொரு மாநில அரசும் அம்மாநில முதல்வரின் தலைமையில் ஓர் உயர் மட்டக் குழுவை அமைக்க வேண்டும். அக்குழுவின் கூட்டம் ஆண்டிற்கு இருமுறை, சனவரி மற்றும் சூன் ஆகிய மாதங்களில் நடத்தப்பட வேண்டும். ஆனால் தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்த 2006 ஆம் ஆண்டில் 25 உறுப்பினர்களைக் கொண்ட இந்த உயர்மட்டக் குழுவை அமைத்து ஆணை பிறப்பித்ததுடன் தனது கடமையை முடித்துக் கொண்டது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக, சனவரி 2011 உட்பட, இக்குழு கூட்டம் நடத்தப்படவில்லை. செப்டம்பர் 2010 இல் இது தொடர்பாக நெல்லையைச் சார்ந்த தலித் செயல்பாட்டாளர் பூ. கோபாலன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டு, அக்குழுவின் தலைவரான முதல்வருக்கும் நீதிமன்ற அறிவிக்கை 29.09.2010 அன்று அனுப்பப்பட்டது. தி.மு.க. அரசே வெளியிட்ட 3.8.2006 நாளிட்ட அரசாணையின்படி, முதல்வர்தான் இக்குழுவின் தலைவர். இருப்பினும், இவ்வழக்கை திசை திருப்பும் விதமாக துணை முதல்வர் தலைமையில் இக்குழு கூட்டம் 3.11.2010 அன்று கூட்டப்பட்டது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வுடன் தொடர்புடையது எனக் கூறப்படும் சிறுதாவூர் நிலப்பிரச்சனையை, தனது அரசியலுக்காக தி.மு.க. அரசு கையிலெடுத்தது. அந்நிலம் தலித் மக்களுக்கு அரசால் வழங்கப்பட்ட நிலம் என்றும், அது தற்போது தலித் மக்களிடமிருந்து அபகரிக்கப்பட்டுள்ளது என்றும் கூறி, அது தொடர்பாக விசாரிக்க நீதிபதி திரு. கே.பி. சிவசுப்பிரமணியம் தலைமையில் தமிழக அரசு குழு அமைத்தது. விசாரணையை முடித்து, குறிப்பிட்ட அந்நிலத்தின் பெரும்பகுதி தலித் மக்களிடமிருந்து விலைக்கு வாங்கப்பட்ட நிலம் என்றும், அரசு வழங்கிய நிலத்தை அக்குறிப்பிட்ட தலித் மக்கள் நிபந்தனையை மீறி விற்பனை செய்ததால், அந்த நில ஒப்படையை ரத்து செய்து, அந்நிலத்தை மீட்டு தகுதியுள்ள வேறு தலித் மக்களுக்கு ஒப்படை செய்ய வேண்டும் என்று அக்குழு பரிந்துரைத்தது. ஆனால், இன்றுவரை அதை நோக்கி சிறு துரும்பும்கூட நகர்த்தப்படவில்லை என்பதே தி.மு.க. அரசின் "தலித் மேம்பாடு' நடவடிக்கைகளுக்கு ஒரு பானைச் சோற்றுப் பதம்.

அதே போல், உயர் நீதிமன்ற நீதிபதி பி.டி. தினகரன் காவேரிராஜபுரத்தில் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள நிலங்கள் தலித் மக்களுக்கு வழங்கப்பட வேண்டியவை என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிக்கை வழங்கினார். அப்பிரச்சனையின்போது, "தலித் மக்களின் நிலங்களை ஆக்கிரமித்துள்ளவர்கள் நீதிபதியாக இருந்தாலும், முன்னாள் முதல்வராக இருந்தாலும் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார் தமிழக முதல்வர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

தருமபுரி மாவட்டத்தின் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய இரண்டு வட்டங்களி லுள்ள சுமார் 1000 ஏக்கர் பஞ்சமி நிலம் மாற்று சமூகத்தினரால் அபகரிக்கப்பட்டது குறித்து ஆதாரங்களுடன் மீட்பு நடவடிக்கை எடுக்கக் கோரி 2006 முதல் அயராத முயற்சிகள் எடுத்து வருகிறார், இந்திய குடியரசுக் கட்சியைச் சேர்ந்த தலைவர் பி.வி. கரியமால் எனும் 81 வயது இளைஞர். இது தொடர்பாக, 2009 இல் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் தொடுத்துள்ள பொதுநல வழக்கில், பஞ்சமி நிலத்தை மீட்டு மீண்டும் தலித் மக்களுக்கு ஒப்படைக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றி இரு வாரங்களுக்குள் அறிக்கை அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும், இதுநாள் வரை அவ்வழக்கில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்யாமல் இழுத்தடித்து வருகிறது.

பஞ்சமி நிலம் குறித்து அரசாணைகள், அரசுக் கடிதங்கள், சுற்றறிக்கைகள், நீதிமன்றத் தீர்ப்புகள் என அனைத்தும் குழப்பமேதுமில்லாமல் தெளிவாக அமைந்துள்ளன. பஞ்சமி நிலங்கள் தலித் அல்லாதவர்களின் கைகளுக்கு சென்றதன் காரணம் சட்டத்திலுள்ள தெளிவின்மையல்ல; அரசு தொடங்கி, நில நிர்வாக ஆணையர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், பதிவுத் துறை வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர், பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்ட அனைத்து அதிகார அமைப்புகளும் – உள்நோக்கத்துடன் பஞ்சமி நிலம் குறித்த சட்ட நடைமுறைகளை நடைமுறைப்படுத்தாததும், விதிமீறல்களை கண்டுகொள்ளாத போக்கும்தான் காரணம். பஞ்சமி நில மீட்பு என்று எடுத்துக் கொண்டால், அரசு இதுவரை மீட்டது என்று கூறிக் கொள்ள குறிப்பிடத்தக்க அளவில் ஏதுமில்லை.

"பஞ்சமி நிலத்தை மீட்பதற்கான சாத்தியக் கூறுகள்' என்பதாக அல்லாமல் இக்குழுவின் பணி "பஞ்சமி நில மீட்பு நடவடிக்கைகளாக' இருக்க வேண்டும். இதனடிப்படையில் –

1. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலுமுள்ள பஞ்சமி நிலங்கள் அடையாளம் காணப்பட்டு, அவை குறித்த தகவல்கள் முழுமையாக சேகரிக்கப்பட்டு அரசு ஆவணமாக வெளியிடப்பட வேண்டும்.

2. தலித் மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட அந்நிலங்களை ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்ட விதிகளின்படி மீட்க வேண்டும்.

3. மீட்கப்பட்ட பஞ்சமி நிலத்தை தலித் மக்களுக்கு ஒப்படை செய்ய ஒவ்வொரு மாவட்டத்திலும் "பஞ்சமி நில மீட்புக் குழு' ஒன்றை மாவட்ட ஆட்சியரின் கீழ் ஏற்படுத்தி செயல்படுத்தப்பட வேண்டும்.

4. அவ்வாறான குழுவிற்கு பஞ்சமி நிலம் தொடர்பான முழுமையான சட்ட நடைமுறைகள் அடங்கிய வழிகாட்டு விதிகளை வகுத்து நடைமுறைப்படுத்த தக்க அறிவுரைகள் வழங்கப்பட வேண்டும். 

எங்கே போயின பஞ்சமி நிலங்கள்?

 1892 இல் தலித்துகளுக்கு கொடுக்கப்பட்ட பஞ்சமி நிலங்கள் மொத்தம் 12 லட்சம் ஏக்கர். அரசு ஆணை எண்.1010 நாள் : 30.09.1892

 நில நிர்வாகத் துறை ஆணையர் மற்றும் சிறப்பு ஆணையர் கடித எண். ந.க. எப்1/20616/2006 நாள் : 26.7.2006 சேப்பாக்கம், சென்னை – 5 கடிதத்தின்படி 1,26,113.06 ஏக்கர் பஞ்சமி நிலங்கள் தமிழகத்தில் உள்ளன.

 சென்னை, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர் போன்ற 6 மாவட்டங்களில் பஞ்சமி நிலங்கள் இல்லை என்று தமிழக நில நிர்வாகத் துறை ஆணையர் மற்றும் சிறப்பு ஆணையர் அலுவலகம் ந.க.எண். எப்1/20616/2006 சேப்பாக்கம், சென்னை – 5 கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

 நில நிர்வாகத்துறை ஆணையர் நிலங்கள் மற்றும் சிறப்பு ஆணையர் அலுவலகம், தூத்துக்குடி மாவட்டத்தில் பஞ்சமி நிலங்கள் இல்லை என்கிறது. ஆனால், தூத்துக்குடி மாவட்ட ஆதி திராவிட நல அலுவலர் கடிதம் ந.க.ஆ.7/4537/06 நாள் : 17.07.2006 இன்படி 5 ஏக்கர் 17 சென்ட் இருக்கிறது என்று சொல்கிறது.

 நில நிர்வாகத் துறை ஆணையர் சிறப்பு ஆணையர் அலுவலகம் 26.07.2006 கடித எண் படி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கின்ற பஞ்சமி நிலங்கள் மொத்தம் 8.38 ஏக்கர்; பிற சாதியினரால் ஆக்கிரமிக்கப்பட்ட பஞ்சமி நிலங்கள் 39.06 ஏக்கர். இப்படி இருக்க மொத்த நிலம் எப்படி 8.38 ஏக்கர் இருக்க முடியும்?

 ஆனால், நாகப்பட்டினம் மாவட்ட வருவாய் அலுவலர் ந.க.எண். 13491/2004/3 நாள் : 18.07.2006 மேற்படி மாவட்டத்தில் பஞ்சமி நிலங்கள் இல்லை என்கிறார்.

 நில நிர்வாகத்துறை ஆணையர் மற்றும் சிறப்பு ஆணையர் சேப்பாக்கம், சென்னை – 5 அவர்கள் கடலூர் மாவட்டத்தில் 188.26 ஏக்கர் பஞ்சமி நிலம் இருக்கிறது என்கிறார். ஆனால் கடலூர் மாவட்ட கலெக்டர் ந.க.ப 3/42168/2006 நாள் : 13.07.2006இன்படி 139.08.5 ஹெக்டேர் (343.52 ஏக்கர்) இருக்கிறது என்கிறார்.

 தமிழக நில நிர்வாகத்துறை ஆணையர் மற்றும் சிறப்பு ஆணையர் அலுவலகம் 26.07.2006 இன்படி வேலூர் மாவட்டத்தில் 20,339.44 ஏக்கர் இருக்கிறது என்கிறது. ஆனால், வேலூர் மாவட்ட ஆட்சியர் கடிதம் ந.க.பி2/3403722006இன்படி 20,852.97 ஏக்கர் உள்ளது.

 திருநெல்வேலி மாவட்டத்தில் நில நிர்வாகத்துறை கடிதத்தின்படி 2473.99 ஏக்கர் உள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆனால், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கடித எண். ந.க.எண். ஜி.1/52435/2006 இன்படி 572.23 ஏக்கர் உள்ளதாகக் கூறியிருக்கிறார்.

 நீலகிரி மாவட்டத்தில் நில நிர்வாகத்துறை கணக்குப்படி, 3777.46 ஏக்கர் உள்ளதாகக் கூறியுள்ளனர். ஆனால் நீலகிரி மாவட்ட ஆட்சியர் கடித எண். ந.க.யூ.2 எண்.402/8/06இன்படி, 38.59 ஏக்கர் உள்ளதாகக் கூறியுள்ளார்.

 தேனி மாவட்டத்தில் நில நிர்வாகத்துறை கடிதத்தின்படி, 1010.01 ஏக்கர் உள்ளதாக தெரிவித்துள்ளார்கள். ஆனால், தேனி மாவட்ட ஆட்சியர் கடிதம் ந.க.எண். 6175/2006 இன்படி 2724.23 ஏக்கர் உள்ளது.

 கோயம்புத்தூர் மாவட்டத்தில் நிர்வாகத்துறை கடிதத்தின்படி, 1836 ஏக்கர் உள்ளதாக கூறியுள்ளார்கள். ஆனால், கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் கடிதம் ந.க. 11372/2006 அதன்படி 1411.79 ஏக்கர் உள்ளது.

 1892 ஆம் ஆண்டு 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் தலித்துகளுக்கு கொடுத்ததாக அரசு ஆணை சொல்கிறது. தற்பொழுது 1,26,113.06 ஏக்கர்தான் இருக்கிறது என்கிறது, தமிழக நில நிர்வாகத்துறை ஆணையர் மற்றும் சிறப்பு ஆணையர் அலுவலகம். அப்படி என்றால் மீதமுள்ள 10,73, 887 ஏக்கர் பஞ்சமி நிலங்கள் எங்கே?

 தற்பொழுது அரசு வழங்கியுள்ள ஆவணங்களின்படி, பஞ்சமி நிலங்கள் "ஏ' ரிஜிஸ்டர் பதிவு முறையில் மாவட்ட நிர்வாகத்திற்கும், மாநில நில நிர்வாகத்துறை ஆணையர் மற்றும் சிறப்பு ஆணையர் அலுவலகத்திற்கும் அதிக வேறுபாடு உள்ளது. இதிலிருந்து பஞ்சமி நிலங்கள் பற்றிய ஆவணங்களை அரசு சரியாகப் பராமரிக்கவில்லை என்பது தெளிவாகிறது.

 1892க்குப் பின் பல முறை யூ.டி.ஆர். சர்வே நடந்துள்ளது. ஒவ்வொரு ஜமாபந்தி நடைபெறும்பொழுதும் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும், அந்தந்த கிராமம் மற்றும் பர்க்காவில் எத்தனை ஏக்கர் பஞ்சமி நிலங்கள் இருக்கின்றன என்பது பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படவில்லை.

 வருவாய்த்துறையினால் பஞ்சமி நிலங் கள் பற்றிய புள்ளி விவரங்கள் "ஏ' ரிஜிஸ்டரில் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளது. இல்லை என்றால் 12 லட்சம் பஞ்சமி நிலங்கள் எங்கே இருக்கின்றன?

– இவை அனைத்தும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவல்களாகும்