வங்கத்தைச் சேர்ந்த பிரபல மேஜிக் நிபுணர் பி.சி. சர்க்கார் (சீனியர்) அவர்களது மேஜிக் திறமைகள் குறித்து பல கதைகளை வங்காளிகள் பலரும் கூறுவர். அவற்றில் ஒன்று, அவர் ஒரு முறை தனது மேஜிக் திறமையால் அவர் மேஜிக் நிகழ்ச்சி நிகழ்த்திக் கொண்டிருந்த அரங்கிற்குள் அமர்ந்திருந்த பல அறிவுசால் பெருமக்களை அணிவகுத்து தனக்குமுன் நிறுத்திவிட்டார் என்பதாகும். அவர் உண்மையிலேயே மிகப் பெரிய திறமைசாலி. அவர் மேஜிக் தெரிந்தவர் மட்டுமல்ல; மேஜிக் குறித்த தவறான கருத்துக்கள் பலவற்றை களைந்தவரும் ஆவார். புத்தி சாதுரியத்துடனும் மித மிஞ்சிய கவனம் மற்றும் ஈடுபாட்டுடனும் செய்யப்படுவதே மேஜிக் என்பதை மக்களுக்கு எடுத்துரைத்தவரும் மேஜிக் குறித்து நிலவிய பல மூட நம்பிக்கைகளைப் போக்கியவரும் ஆவார் அவர்.

எத்தனை திறமை படைத்தவராக இருந்தாலும் அவரால் செய்யப்பட்ட மேஜிக் வித்தைகள் உண்மையானவையோ நீடித்து நிற்கக் கூடியவையோ அல்ல. ஒரு பொய்யான தோற்றத்தை அனைவரும் வியக்கும் வண்ணம் தற்காலிகமாக பார்ப்பவர் கண்முன் நிறுத்துவதே மேஜிக். பி.சி. சர்க்கார் அவர்களையும் மிஞ்சும் விதத்தில் பல பொய்த் தோற்றங்களை மிகவும் நிரந்தரமானவைகள் போல் காட்ட முயல்வனவாக உள்ளன நமது நாட்டின் கல்வி முதலாளிகளின் நடவடிக்கைகளும் அவர்களுக்கு மிகவும் உறுதுணையாகவும் பக்கபலமாகவும் உள்ள நமது பத்திரிக்கைகளின் சாதுர்யங்களும்.

சுருங்கிவரும் தகவல் தொழில் நுட்ப வேலை வாய்ப்புகள்

உலகம் முழுவதுமே இப்போது ஒரு மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இந்தியா போன்ற நாடுகளில் உலகமயத்தின் விளைவாக உருவாகி வளர்ந்து வந்த பல வேலை வாய்ப்புகள் தற்போது பெருமளவு குறைந்துள்ளன. அவ்வேலை வாய்ப்புகளில் மிகப் பெரும்பான்மையானவை தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்தவையாகும். அவை தவிர அமெரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்த மக்களின் பொழுது போக்குக்காக உருவான கால்சென்டர் போன்றவையும் ஆகும்.

அமெரிக்காவில் தோன்றிய பொருளாதார நெருக்கடி தற்போது அம்மக்களின் வாங்கும் சக்தியை மிகப் பெருமளவு குறைத்துள்ளது. அதனால் பிறநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து கொண்டிருந்த பல பொருள்களின் தேவை பெரிதும் குறைந்துள்ளது. அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கே அனுதினமும் அல்லாடிக் கொண்டிருக்கும் அமெரிக்க மக்கள் பொழுது போக்குத் தேவைகளுக்காக எவ்வாறு செலவிடமுடியும்?

இந்நிலையில் நமது நாட்டின் தகவல் தொழிற்நுட்பப் பணிகளும் கால்சென்டர் வேலைகளும் பெரும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளன. இதன் வெளிப்பாடே கல்லூரி வளாகங்களுக்குள் நேர்காணல்கள் நடத்தி 2007- ம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப வேலைகளுக்காக பல பெரிய நிறுவனங்களால் தேர்வு செய்யப்பட்ட பலரும் இதுவரை பணியில் வந்து சேர்ந்து கொள்ள அழைக்கப்படாதிருப்பதாகும். அத்துடன் ஏற்கனவே அந்நிறுவனங்களில் பணிபுரியும் பலரும் லே ஆப், பணிநீக்கம் போன்ற அபாயங்களை பெரிதும் எதிர்கொண்டுள்ளனர்.

மக்களின் பொது அறிவை மழுங்கடிக்கும் முதலாளித்துவ ஊடகங்கள்

இந்நிலையில் இதன் காரணமாக நமது நாட்டில் இந்த உலகமயத்தின் விளைவாக உருவான தகவல் தொழில்நுட்ப வேலை வாய்ப்பை அடிப்படையாகக் கொண்டு திறக்கப்பட்ட நூற்றுக் கணக்கான பொறியியற் கல்லூரிகளில் தகவல் தொழில்நுட்ப, கணிணித் துறைகள் பெருமளவில் மாணவர் சேர்க்கை இல்லாது பாதிப்பிற்கு ஆளாகியிருக்க வேண்டும். ஆனால் இதற்கு மாறாக ஏற்கனவே இருக்கும் கல்லூரிகளோடு புதிது புதிதாக இந்தப் பாடப்பிரிவுகளை மையமாகக் கொண்ட கல்லூரிகள் பல இன்னும் திறக்கப்பட்டுக் கொண்டுள்ளன. மொத்தத்தில் இந்த ஆண்டில் தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 400-க்கும் மேல் பெருகிஉள்ளது.

இது ஒரு வினோதமான சித்திரத்தை மக்களின் கண்களின் முன் நிறுத்துகிறது. பகுத்தறிவுப் பூர்வமாக பார்ப்பவர்கள் அனைவருக்கும் நமது மக்கள் விழித்துக் கொண்டே கிணற்றில் விழத் தயாராபவர்களாக ஆகிவிட்டனரா என்ற எண்ணம் இயல்பாகவே உருவாகிறது. ஆனால் மக்கள் அவர்களாகவே அத்தனை ஏமாளிகளாகவும் பொது அறிவு அற்றவர்களாகவும் இல்லை.

மக்களின் கருத்துக்களை உருவாக்குவதில் முதலாளித்துவ ஊடகங்களின் பங்கும் அவற்றின் பிரமிக்கத்தக்க விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சிகளைப் பின்பலமாகக் கொண்ட வளர்ச்சியும் மக்களிடையே நிலவும் அனைத்துக் கருத்துக்களையும் உருவாக்கி விட வல்லவை என்ற சூழ்நிலையை உருவாக்கியுள்ளன. குறிப்பாக சமூகத்தின் பொதுக் கருத்துக்களின் நிலைக் கலன்கள் என்று கருதப்படும் மத்தியதர வர்க்கம் தங்களது அன்றாட வாழ்க்கைச் செலவினங்களை ஈடுகட்டுவதற்கே அல்லும் பகலும் ஆளாய்ப்பறக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அதன் காரணமாக பொறுமை மற்றும் நிதானத்துடன் எந்தவொரு பிரச்னையையும் சிந்திக்கும் சூழ்நிலை மக்களுக்கு இல்லாமல் போய்விட்டது.

எதிர் நீரோட்டத்தை உருவாக்கத் திராணியற்றுப் போன இடதுசாரிகள்

அதுமட்டுமல்ல; முதலாளித்துவப் பிரச்சார சாதனங்கள் முதலாளித்துவ நலன்களைப் பேணிப் பாதுகாக்கும் அடிப்படையில் உருவாக்கி முன்வைக்கும் கருத்து நீரோட்டத்திற்கு எதிரான, எதார்த்த நிலையை உள்ளது உள்ளபடியே உயர்த்திப் பிடிக்கும் உழைக்கும் மக்களின் பிரச்சார எதிர் நீரோட்டம் அறவே இல்லை. அது அதனை உருவாக்கி வளர்க்கப்பட வேண்டியவர்களால் வளர்க்கப்பட வில்லை.

நமது நாட்டைப் பொறுத்த வரையில் சமூக மாற்றத்திற்காக என்ற அடிப்படையில் உருவான அரசியல் கட்சிகளும் கூட சீர்திருத்தவாதச் சிந்தனைப் போக்கில் தஞ்சம் புகுந்து அத்தகைய எதிர் நீரோட்டத்தை உருவாக்கத் திராணியற்றவையாக ஆகிவிட்டன. இதன் விளைவாக சமூகக் கருத்துக்களின் மொத்தக் குத்தகைதாரர்களாக முதலாளித்துவ பிரச்சாரச் சாதனங்கள் ஆகிவிட்டன. அந்தச் சாதனங்கள் இந்தக் கல்வி முதலாளிகளின் நலன்களை பாதுகாப்பதற்காகத் தேவைப்படும் விதங்களில் எல்லாம் புதுப்புதுக் கருத்துக்களை உருவாக்கி வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன.

சமுதாயப் பிரச்னைகள் அனைத்திற்கும் இங்குள்ள முதலாளித்துவ உற்பத்தி முறையே காரணம்; அது இருக்கும் வரை நெருக்கடிகள் தோன்றிக் கொண்டே இருக்கும்; அந் நெருக்கடிகளிலிருந்தான முற்றான தீர்வு முதலாளித்துவ உற்பத்தி முறை சமூகத்தில் நிலவும் வரை வரவே வராது என்ற சரியான புரிதல் மக்கள் பலரைச் சென்றடையாத நிலையே நிலவுகிறது. அவ்வாறு சென்றடைந்துள்ள ஒரு சிலரிடமும் அது குறித்த நம்பிக்கை உணர்வு குறைவாக உள்ளது. அதற்கான காரணம் உலக அளவில் பல நாடுகளில் சோசலிசம் என்ற மாற்று அமைப்பு இல்லாமல் போய்விட்ட நிலையே யாகும்.

அதனால் மக்களின் மனநிலையே இந்த அமைப்பிற்குள் ஒரு தீர்வினைத் தேடுவதாக அதாவது கானல் நீரை நோக்கி ஓடுவதாக ஆகிவிட்டது. அந்த மனநிலையை சாதகமாக்கிக் கொண்டு முதலாளித்துவ ஊடகங்கள் தங்களது கருத்து உற்பத்தியைத் தங்களுக்கே உரிய, முதலாளித்துவத்தின் நலன்களுக்கு உகந்த விதத்தில் செய்து வெளியிடுகின்றன.

எடுத்துக் காட்டாக தகவல் தொழில்நுட்பம் சார்ந்த வேலை வாய்ப்புகள் பெரிதும் குறைந்துள்ளதை மறுக்கவோ மறைக்கவே முடியாத நிலையில் அது குறித்துத் தங்களது திறமை அனைத்தையும் பயன்படுத்தி சாதுர்யமாக செய்திகள் வெளியிடுகின்றன. அதாவது உலகம் முழுவதிலும் உள்ள முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்கள் எந்த வகையான பகுப்பாய்வையும் மேற்கொள்ளாமல் கூறிவரும், இந்த நெருக்கடி இன்னும் சிறிது நாளில் சரியாகிவிடும் என்பதை வேதவாக்காக எடுத்துக் கொண்டு நமது பத்திரிக்கைகள் “தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகள் மீண்டும் விரைவில் நெருக்கடியில் இருந்து மீண்டு தலைதூக்கிவிடும்” என்று கூறுகின்றன.

கல்வி முதலாளிகள் காசு சேர்க்க காரியமாற்றும் ஊடகங்கள்

ஆனால் முன்பு போல் அனைத்துப் பொறியியல் பட்டம் பெற்றவர்களையும் உள்வாங்கிக் கொண்டிருந்த தகவல் தொழில் நுட்பத் துறை, அதுபோல் அந்த அளவிற்கு இல்லாவிடினும் கணினி விஞ்ஞானம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் கற்றவரை மட்டுமாவது உள்வாங்கிக் கொள்வதாக இனிமேல் ஆகிவிடும் என்று அவை மேலும் கூறுகின்றன. இவ்வாறு கூறுவதன் மூலம் பல பொறியியற் கல்லூரிகளில் உள்ள தகவல் தொழில்நுட்ப, கணினி விஞ்ஞான படிப்புகளுக்கு ஆள்சேர்த்துவிடும் வேலையை அவை மிகவும் சாதுர்யமாகச் செய்கின்றன. அதாவது மிக அதிகம் பாதிப்பிற்கு ஆளாகியுள்ள நிறுவனங்களை ஓரளவிலான எதிர்காலம் அவற்றினால் கற்பிக்கப்படும் கல்விக்கு இருப்பதாகச் சாதுர்யமாகக் கூறி கல்வி முதலாளிகள் அந்த இடங்களை நிரப்பி காசு சேர்க்க நமது ஊடகங்கள் பேருதவி செய்கின்றன.

பொய்யில் அடித்தளமிட்டு எழுப்பப்படும் புனை கதைக் கட்டமைப்புகள்

இவ்வாறு ஒருபுறம் கல்வி முதலாளிகளின் நலன்களைப் பாதுகாப்பதற்காக உரிய பிரச்சார வேலைகளைச் செய்துவிட்டு மறுபுறம் முதலாளித்துவ உலகம் சந்தித்துக் கொண்டிருக்கக் கூடிய உற்பத்தித் தேக்க நெருக்கடியால் பாதிக்கப்படாமல் இருப்பது கல்வித் தொழிற்சாலைகளே என்ற கருத்தையும் அவை முன்வைக்கின்றன. அதாவது ஊடகங்கள் முதற்கண் தோன்றியுள்ள இந்த நெருக்கடி இன்னும் ஓரிரு ஆண்டுகளில் சரியாகிவிடும் என்ற பொய்யான ஒரு கூற்றை முன்வைக்கின்றன. அது எவ்வாறு சரியாகும் என்பது குறித்து எந்தப் பகுப்பாய்வையும் அவை முன்வைப்பதில்லை.

மாறாக இதற்கு முன்பு இவ்வாறு தோன்றிய நெருக்கடிகள் எத்தனை ஆண்டுகளில் சரியாகின என்பதை ஆதாரமாக எடுத்துக் கொண்டு இத்தனை ஆண்டுகளில் சரியாகிவிடும் என்ற கூற்றை அவை முன் வைக்கின்றன. அப்போது முதலாளித்துவப் பொருளாதாரங்கள் மீட்சி பெறுவதற்கு எந்தெந்த புறச்சூழ்நிலைகள் உதவின? அந்தப் புறச்சூழ்நிலைகள் இன்று உள்ளனவா? என்று அதனை ஆய்வு செய்து கூட அவர்கள் தங்களின் கருத்துக்களை முன்வைக்கவில்லை.

30 -களில் மீண்டதைப் போல் இப்போது மீள முடியாது

1930-களில் தோன்றிய பொருளாதார நெருக்கடியில் இருந்து முதலாளித்துவம் மீட்சி பெறுவதற்கு அடுத்து ஏற்பட்ட உலக யுத்தத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் உதவின. அதைப்போல் உலகின் பல நாடுகள் பின்தங்கிய நிலையில் இருந்ததும் அந்நாடுகளில் முதலாளித்துவ ரீதியிலான தொழில் வளர்ச்சி குன்றி இருந்ததும் நெருக்கடியில் இருந்து மேலைநாட்டு முதலாளித்துவம் மீள்வதற்கு உதவி செய்தன. இன்று இவ்விரு நிலைகளும் இல்லை. போர் நடவடிக்கைகளை மேற்கொண்டு நாடுகளைச் சேதப்படுத்தி அவற்றைக் கைப்பற்றி தங்களின் காலனிகளாக்கிச் சுரண்டும் முறையை ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகள் ஏறக்குறையக் கைகழுவிவிட்டன. அதற்குப் பதிலாக உலக வர்த்தக அமைப்பு போன்ற அமைப்புகளை ஏற்படுத்தி உலக அளவிலான வர்த்தகத்தில் ஈடுபட்டுத் தங்கள் நாட்டு முதலாளிகள் அதிக லாபம் ஈட்டும் வாய்ப்பு வசதிகளை அவை நம்பிக் கொண்டுள்ளன.

அதாவது ஒரு பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்த நாடும் அவ்வாறு வளர்ச்சியடையாத வேறொரு நாடும் ஒரு பேரத்தில் ஈடுபட்டால் அந்த பேரம் பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்த நாட்டிற்குச் சாதகமானதாகவே இருக்கும் என்ற அடிப்படையில் உலக நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தில் முதலாளித்துவ இலாபம் ஈட்டுதல் நடைபெற்றுக் கொண்டுள்ளது. அத்துடன் தற்போது முதலாளித்துவ உற்பத்தி முறையின் பரவல், உலகமயத்தின் விளைவாக உலகளாவியதாக மாறியுள்ளது. அதாவது தொழிலாளரின் உழைப்புத்திறன் உட்பட அனைத்து உற்பத்தி சாதனங்களும் உலகச் சந்தையின் விற்பனைப் பொருட்களை உற்பத்தி செய்வதற்காக என்று மாறியுள்ளது. அது இன்றைய காலகட்டத்தில் எவ்வளவு தூரம் அனைத்து நாடுகளிலும் முதலாளித்துவம் அதிகபட்சம் வளர முடியுமோ அத்தகைய வளர்ச்சியைக் கொண்டுவந்துள்ளது.

உண்மையான வளர்ச்சியும் - முதலாளித்துவ கண்ணோட்ட ரீதியிலான வளர்ச்சியும்

வளர்ச்சி குறித்து நாம் விவாதிக்கும்போது ஒரு விசயத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது மக்கள் அனைவருக்கும் தேவையான அனைத்துப் பொருட்களையும் மக்களின் தேவைக்குகந்த வகையில் உற்பத்தி செய்ய முனையும் உண்மையான வளர்ச்சிக்கும், முதலாளித்துவ ரீதியிலான வளர்ச்சிக்கும் ஒரு பெரிய வேறுபாடு உள்ளது. முதலாளித்துவ ரீதியான வளர்ச்சி மக்களின் வாங்கும் சக்தியை ஆதாரமாகக் கொண்டது. மக்களின் வாங்கும் சக்தி முதலாளித்துவச் சுரண்டலால் மென்மேலும் சூறையாடப்பட்டுக் கொண்டே உள்ளது. எனவே மக்களின் உபயோகப் பொருள் தேவை எத்தனை அதிகம் இருந்தாலும் அவர்களது வாங்கும் சக்தி எவ்வளவு பொருட்களை வாங்க அனுமதிக்குமோ அவ்வளவு பொருட்களை உற்பத்தி செய்தால் மட்டுமே முதலாளிகள் லாபம் ஈட்ட முடியும்.

அவ்வாறு உற்பத்தியே ஒரு கட்டுப்பாட்டுக்குள் நடைபெறும்போது அது உண்மையான வளர்ச்சியை அதாவது மக்களின் பொருள் தேவையைக் கணக்கிலெடுத்துக் கொண்டு நடைபெறும் வளர்ச்சியை ஒரு போதும் நிகழ்த்தாது. எனவேதான் இயற்கை வளங்கள் எவ்வளவு இருந்தாலும் அதனைப் பயன்படுத்தவல்ல மனித சக்தி எவ்வளவு இருந்தாலும் உற்பத்தியை நடத்துவதற்குத் தேவையான விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி எவ்வளவு இருந்தாலும் தங்களுக்கு லாபம் கிட்டுவதற்கு எவ்வளவு பொருட்களை உற்பத்தி செய்தால் தங்களுக்குக் கிட்டும் இலாபம் அதிகபட்சமாக இருக்குமோ அந்த அளவிற்கே பொருள் உற்பத்தியை முதலாளிகள் நடத்துவர்.

அந்த விதத்திலான முதலாளித்துவத் தொழில் வளர்ச்சி உலகமயத்திற்குப் பின் எவ்வளவு தூரம் நடைபெற முடியுமோ அவ்வளவு தூரம் உலகின் பல நாடுகளிலும் நடந்து முடிந்துவிட்டது. இந்த நிலையில் 1930-களில் உலகப் பொருளாதார நெருக்கடி தோன்றிய போது அதிலிருந்து மீள்வதற்குச் சாதகமாக உலக முதலாளிகளுக்கு இருந்த இரண்டு சாதகமான அம்சங்களும் இன்று இல்லை. அதாவது போரினால் சேதமடைந்தவற்றின் புனரமைப்பை அடிப்படையாகக் கொண்ட வளர்ச்சிக்கான வாய்ப்புமில்லை; உலகின் பல பின்தங்கிய நாடுகளில் முதலீடுகள் செய்து அதன்மூலம் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு வழிதேடும் வாய்ப்புமில்லை.

வங்கிக் கடன் வழங்கி வளர்ச்சியை ஏற்படுத்த முடியுமா?

இந்நிலையில் பொருளாதார மீட்சிக்காக என்று அனைத்து முதலாளித்துவ நாடுகளும் செய்து கொண்டிருப்பது வங்கிகள் வழங்கும் கடன்களுக்கான வட்டியைக் குறைத்து கூடுதல் கடன் பெறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கி அதன் மூலம் பொருளாதார மீட்சியைக் கொண்டுவர முடியும் என்பதே. ஆனால் பொருளாதார மீட்சிக்கு மிக அடிப்படையாக இருக்க வேண்டியது மக்களின் வாங்கும் சக்தியின் உயர்வே. அதற்காக ஒரு நடவடிக்கையும் முதலாளித்துவ அரசுகளால் எடுக்கப்படவில்லை; எடுக்கப்படவும் முடியாது. மாறாக நமது நாட்டைப் போன்ற நாடுகளில் ஓரளவு வாங்கும் சக்தி உள்ளவர்களாக இருக்கும் அலுவலகப் பணிபுரியும் மத்தியதர வர்க்கத்தின் வாங்கும் சக்தியும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துவரும் கல்வி செலவினங்களால் மிகப் பெருமளவில் சூறையாடப் படுகிறது.

மக்களின் வாங்கும் சக்தி உயராத வரை வட்டியை குறைத்து வங்கிக் கடன் வசதியை அதிகாரித்தாலும் உற்பத்திப் பொருட்கள் விற்காது என்பதால் முதலீடுகள் செய்ய முதலாளிகள் முன்வரமாட்டார்கள். அதனால்தான் வட்டி விகிதங்கள் கணிசமாக குறைக்கப்பட்டிருந்தாலும் வங்கிக் கடன்கள் அதிகரிக்கவில்லை. இதையே 2009-10 நிதியாண்டின் முதல் காலாண்டில் வெளியிடப்பட்ட வங்கிகளின் செயல்பாடு குறித்த புள்ளி விபரங்கள் தெளிவுபடுத்துகின்றன. அதாவது முன்பிருந்தது போல் கடன் தவணைகள் செலுத்தப்பட்டாலும் செலுத்தப்படாவிட்டாலும் கடனுக்கான வட்டியினைச் சேர்த்து வருவாயை அதிகரித்துக் காட்டும் போக்கு அனுமதிக்கப்பட்டிருந்தால், வங்கிகளும் கண்ணை மூடிக் கொண்டு கடன் வழங்க முன்வரும்; முதலாளிகளும் விழுங்கி ஏப்பம் விடுவதற்காகவே கடன் வாங்க வருவர்.

தற்போது புது நியதிகள் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டதால் கண்ணை மூடிக் கொண்டு கடன் வழங்க வங்கிகள் தயாராக இல்லை. திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் கடன் வாங்க முதலாளிகளும் தயாராக இல்லை. எனவே ஓரிரு ஆண்டுகளில் தற்போதுள்ள நெருக்கடி தீர்ந்துவிடும் என்பது ஒரு பொய்யான நம்பிக்கையே. அந்தப் பொய்யை அடிப்படையாக வைத்துக் கொண்டு மேலும் பல பொய்கள் அதாவது நெருக்கடி தீர்ந்துவிடும்; அது தீர்ந்தபின் தகவல் தொழில்நுட்ப வேலைகள் மென்மேலும் உருவாகி வளர்ச்சியடையும்; அதனால் குறைந்தபட்சம் தகவல் தொழில்நுட்ப, கணினி விஞ்ஞான கல்வி கற்றவர்களுக்கு வாய்ப்புகள் உருவாகும் என்பன போன்ற பொய்யான நம்பிக்கைகள் நமது ஊடகங்களால் உருவாக்கப்படுகின்றன.

அமெரிக்கப் பொருளாதார நிபுணர் 'பால் கிரக்மென்' போன்றவர்களே அமெரிக்கத் தொழிலாளரின் ஊதியங்களும் அவர்களின் பொருள்வாங்கும் திறனும் பெருமளவில் குறைந்துவருவது குறித்துக் கவலை தெரிவிக்கின்றனர். இந்நிலையில் அமெரிக்கா போன்ற நாடுகளின் வாங்கும் சக்தியை ஆதாரமாகக் கொண்டு வளர்ந்து வரும் நமது நாட்டின் வேற்றிட வேலைவாய்ப்பினைப் பெருமளவு நம்பியுள்ள நிறுவனங்கள் எவ்வாறு தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்? அதுவும் இன்று நாட்டில் மழைக்காலத்தில் வளரும் காளான்களைப் போல் பெருமளவு பல்கிப்பெருகியுள்ள பொறியியல் கல்லூரிகளில் உருவாகும் மாணவர்கள் அனைவரையும் உள்வாங்கும் அளவிற்கு எவ்வாறு வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்?

வழிதெரியாது மழுப்பல் வேலையில் ஈடுபடும் அறிவுஜீவிகள்

எத்தனை மிகப்பெரும் அறிவாளிகளாக இருந்தாலும் கூட முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்கள் அனைவரும் இன்றைய நிலையில் எந்தத் தீர்வையும் தெரிவிக்காமல் குருட்டு நம்பிக்கைகளை மட்டும் உருவாக்குபவர்களாக ஆகியுள்ளனர். நோபல் பரிசு பெற்ற இந்தியப் பொருளாதார நிபுணர் அமர்தியா சென் போன்றவர்கள் கூட உற்பத்தித் தேக்கத்தையோ, பொருளாதார நெருக்கடி பற்றியோ சிந்திக்காமல் அவைகுறித்துக் கவலை கொள்ளாமல் இருங்கள்; அதுவே அந்நெருக்கடிக்குக் தீர்வாக இருக்கும் என்று கூறும் நிலையிலேயே உள்ளனர்.

எனவே இன்றைய நிலையில் இன்றுள்ள முதலாளித்துவ அமைப்பு இன்று அதனைச் சூழ்ந்துள்ள நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு முற்றிலும் கையாளாகததாக ஆகியுள்ளது என்பதும் அந்த முதலாளித்துவ நலனை பாதுகாக்கும் ஊடகங்களும் அதனைச் செய்வதற்கு சாதுர்யமாக பல பொய்களை உண்மைகள் போல் மக்கள் ஏற்றுக் கொள்ளும் விதத்தில் முன்வைக்கும் வேலையையே செய்து கொண்டுள்ளன என்பதும் மூடிமறைக்க முடியாத ஒளிவுமறைவற்ற உண்மைகள் ஆகிவிட்டன. இதையே கல்வி முதலாளிகளின் நலன் காக்க நமது பத்திரிக்கைகள் போன்ற ஊடகங்கள் முன்வைக்கும் கருத்துக்கள் வெளிப்படுத்துகின்றன.

Pin It