டாக்டர் அம்பேத்கரால் தயாரிக்கப்பட்ட, பின்னணியுடன் கூடிய ஆவணத்தின் வாசகம் பின்வருமாறு :

“1930 நவம்பர் 12இல், காலஞ்சென்ற மேன்மை தாங்கிய அய்ந்தாம் ஜார்ஜ் மன்னர் இந்திய வட்டமேசை மாநாட்டை முறைப்படி தொடக்கி வைத்தார். இந்தியர்களின் கண்ணோட்டத்தில், வட்ட மேசை மாநாடு மகத்தான முக்கியத்துவமுடைய ஒரு நிகழ்ச்சியாகும். இந்தியாவுக்கு ஓர் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கும் விஷயத்தில் கலந்தாலோசிக்கப்படுவதற்கு, இந்தியர்களுக்குள்ள உரிமையை மேன்மை தாங்கிய அரசு அங்கீகரித்திருப்பதில்தான் அதன் முக்கியத்துவம் அடங்கியுள்ளது.

தீண்டத்தகாதோர்களுக்கு இது, அவர்களின் வரலாற்றில் ஒரு மைல் கல்லாகும். ஏனெனில், தீண்டத்தகாதோர், முதன் முறையாக, இரு பிரதிநிதிகளால் பிரதிநிதித்துவப்படுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். நானும் திவான் பகதூர் ஆர். சீனிவாசனுமே இப்பிரதிநிதிகள். தீண்டத்தகாதோர், இந்துக்களுக்கு அப்பாற்பட்ட ஒரு தனி இனமாகக் கருதப்பட்டனர் என்பது மட்டுமன்றி, இந்தியாவுக்கான ஓர் அரசமைப்புச் சட்டத்தை வகுப்பதில் கலந்தõலோசிக்கப்படும் உரிமை பெறும் அளவிற்கு முக்கியத்துவம் பெறுகின்றனர் என்பதும் இதன் பொருளாகும்.

மாநாட்டின் பணி ஒன்பது குழுக்களிடையில் பகிர்ந்து கொடுக்கப்பட்டது. இக்குழுக்களில் ஒன்று, சிறுபான்மையோர் குழு என்றழைக்கப்பட்டது. வகுப்புவாதப் பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் கண்டறியும் மிகவும் கடினமான பணி இக்குழுவிடம் விடப்பட்டது. இந்தக் குழு மிகவும் முக்கியமான குழு என்பதை முன்கூட்டியே அறிந்து, பிரதமர், காலஞ்சென்ற திரு. ராம்சே மெக்டொனால்ட் அவர்களே இதனுடைய தலைமைப் பொறுப்பை ஏற்றார். சிறுபான்மையோர் குழுவின் நடவடிக்கைகள் தீண்டத்தகாதோருக்கு மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனெனில், காங்கிரசுக்கும் தீண்டத்தகாதோருக்கும் இடையில் வேறுபாடு ஏற்பட்டதன் பெரும் பகுதியும், அவர்களுக்கு இடையில் மனக்கசப்பை ஏற்படுத்தியதுமான இதை அந்தக் குழுவின் நடவடிக்கைகளில் காணலாம்.

வட்டமேசை மாநாடு, தீண்டத்தகாதோரின் கோரிக்கைகளைத் தவிர, சிறுபான்மைக் குழுக்களின் அரசியல் கோரிக்கைகளுக்கு ஒத்துக் கொண்டது என்பது நன்கு அறியப்பட்டதே. உண்மையில், 1919ஆம் ஆண்டு அரசமைப்புச் சட்டம் அவர்களை சட்டப்படியான சிறுபான்மையோர் என்று அங்கீகரித்து, அவர்களது பாதுகாப்பு தொடர்பான விதிகளை அதில் சேர்த்திருந்தது. அவர்கள் விஷயத்தில் அந்தப் பிரிவுகளை விரிவுபடுத்துவது அல்லது அவற்றின் வடிவத்தை மாற்றியமைப்பது என்ற பிரச்சினை எழுந்தது. தாழ்த்தப்பட்ட வர்க்கங்களின் நிலைமை வேறுவிதமாக இருந்தது.

1919 ஆம் ஆண்டின் அரசமைப்புச் சட்டத்திற்கு முந்திய மாண்டேகு-செம்ஸ்போர்டு அறிக்கை, அவர்களின் பாதுகாப்புக்கு அரசமைப்புச் சட்டத்தில் வகை செய்யப்பட வேண்டுமென்று மிகவும் திட்டவட்டமாகக் கூறியிருந்தது. ஆனால் கெடுவாய்ப்பாக, அரசமைப்புச் சட்டத்தின் விவரங்கள் வகுக்கப்பட்டபோது - அவர்களின் பாதுகாப்புக்காக எந்தப் பிரிவுகளையும் வகுத்தளிப்பது மிகவும் சிரமமாக இருப்பதாக இந்திய அரசு கண்டறிந்தது. சட்டப் பேரவைகளின் நியமனத்தின் வாயிலாக அவர்களுக்கு அடையாளப் பூர்வமான பிரதிநிதித்துவம் அளிப்பதை மட்டுமே அது செய்தது.

இந்துக்களின் கொடுங்கோன்மை மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிராக, தமது பாதுகாப்பிற்காக, தீண்டத்தகாதோர் அவசியம் என்று கருதிய பாதுகாப்புகளை வரையறுத்துக் கூறுவதே செய்யப்பட்ட வேண்டிய முதல் செயல்பாடாக இருந்தது. வட்டமேசை மாநாட்டின் சிறுபான்மையோர் குழுவிற்கு ஓர் ஆவணத்தை அளிப்பதன் மூலம் இதை நான் செய்தேன். என்னால் வரையறுத்துக் கூறப்பட்ட பாதுகாப்புகள் குறித்த ஒரு கருத்தை அளிப்பதற்கு, அந்த ஆவணத்தின் வாசகத்தை நான் கீழே மீண்டும் வெளியிடுகிறேன்.

இந்திய வட்டமேசை மாநாட்டுக்கு அளிக்கப்பட்ட ஒரு சுயாட்சி கொண்ட இந்தியாவின் வருங்கால அரசமைப்புச் சட்டத்தில் தாழ்த்தப்பட்ட வர்க்கங்களின் பாதுகாப்புக்கான அரசியல் பாதுகாப்புகளின் ஒரு திட்டம். ஒரு சுயாட்சியுடைய இந்தியாவில் பெரும்பான்மையினரின் ஆட்சியின் கீழ் தங்களை இருத்திக் கொள்வதற்கு, தாழ்த்தப்பட்ட வர்க்கங்கள் கீழ்வரும் விதிகள் மற்றும் நிபந்தனைகளின் கீழ் சம்மதிப்பார்கள்.

சமத்துவக் குடியுரிமை

தாழ்த்தப்பட்ட வர்க்கங்கள், தங்களுடைய தற்போதைய பரம்பரையாக அடிமைப்பட்டவர்கள் என்ற நிலையில், பெரும்பான்மையினரின் ஆட்சிக்குத் தங்களைக் கீழ்ப்படுத்திக் கொள்வதற்கு சம்மதிக்க முடியாது. பெரும்பான்மையினரின் ஆட்சி நிறுவப்படுவதற்கு முன்னால் தீண்டாமை முறையிலிருந்து தங்களுடைய விடுதலை, நிறைவு பெற்ற உண்மையாக வேண்டும். இது, பெரும்பான்மையினரின் முடிவுக்கு விடப்படக்கூடாது. தாழ்த்தப்பட்ட வர்க்கங்கள் சுதந்திரமான குடியுரிமை பெற்றவர்களாக வேண்டும். நாட்டின் பிற குடிமக்களைப் போன்றே அனைத்துக் குடியுரிமையின் அனைத்து உரிமைகளுக்கும் தகுதியுள்ளவர்களாக்கப்பட வேண்டும்.

(அ) தீண்டாமை ஒழிப்பை சாத்தியமாக்குவதற்கும், குடிகளின் சமத்துவ உரிமையைத் தோற்றுவிப்பதற்கும், கீழ்வரும் அடிப்படை உரிமை, இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தின் ஓர் அங்கமாக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கை செய்யப்படுகிறது.

அடிப்படை உரிமை

“இந்தியாவிலுள்ள அனைத்துக் குடிமக்களும் சட்டத்தின் முன் சமமானவர்கள். அவர்களுக்கு சமத்துவ சிவில் உரிமைகள் உண்டு. தீண்டாமையின் காரணமாக, எந்த அபராதமோ, பாதிப்போ, இயலாமையோ சுமத்தப்படுவதற்கும் அல்லது நாட்டின் எந்த ஒரு குடிமக்களுக்கு எதிராகவும் எந்தப் பாரபட்சமோ காட்டப்படுவதற்கும் வகை செய்யும் - தற்போதிருந்து வரும் எந்த சட்டமோ, விதியோ, உத்தரவோ, வழக்கமோ அல்லது சட்டத்தின் வியாக்கியானமோ, இந்த அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வரும் நாளிலிருந்து இந்தியாவில் எந்தப் பாதிப்பும் ஏற்படுத்துவதினின்றும் ரத்தாகும்.”

(ஆ) 1919ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டத்தின் 110, 111ஆவது பிரிவுகளின்படி, நிர்வாக அதிகாரிகள் அனுபவித்துவரும் காப்புரிமைகளும் விதிவிலக்குகளும் ரத்து செய்யப்படும். மேலும், நிர்வாக ரீதியிலான நடவடிக்கைக்கு அவர்கள் உள்ளாகும் நிலைமை, ஓர் அய்ரோப்பிய பிரிட்டிஷ் குடிமக்களுக்கு உள்ளது போன்று அதே நிலைமையில் வைக்கப்படும்.

நிபந்தனை 2

சம உரிமைகளைத் தங்கு தடையின்றி அனுபவித்தல்

தாழ்த்தப்பட்ட வர்க்கங்களுக்கு சம உரிமைகள் உண்டு என்று பிரகடனம் செய்வதால் மட்டும் பயனில்லை. தாழ்த்தப்பட்ட வர்க்கங்கள் குடிமக்களின் சம உரிமைகளைச் செயல்படுத்த முயலும் போது, வைதிகச் சமூகத்தின் முழு எதிர்ப்பு சக்தியையும் எதிர்கொள்ள நேரும் என்பதில் எவ்வித அய்யப்பாடும் இல்லை. எனவே, உரிமைகள் பற்றிய இந்தப் பிரகடனங்கள் வெறும் புனிதமான அறிவிப்புகள் என்ற அளவில் இல்லாமல், அன்றாட வாழ்க்கையின் எதார்த்தங்களாக தாழ்த்தப்பட்ட வர்க்கங்கள் உணர வேண்டுமெனில், இந்த அறிவிக்கப்பட்ட உரிமைகளை அவர்கள் அனுபவிப்பதற்கு இடையூறாக தலையிடுபவர்களுக்கு போதிய தண்டனையும் - அபராதமும் விதிக்கப்படும் வகையில் அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

(அ) எனவே, குற்றங்கள், நடவடிக்கை, அபராதங்கள் தொடர்பான 1919ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டத்தின் 11ஆம் பகுதியின் கீழ்வரும் பிரிவுகள் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டுமென்று தாழ்த்தப்பட்ட வர்க்கங்கள் அறிவிக்கை செய்கின்றன.

(டி) குடியுரிமையை மீறும் குற்றம்

“எந்த நபருக்காவது, சட்டப்படியல்லாது, எல்லா வர்க்கங்களுக்கும் பொருந்துகின்ற, முந்தைய தீண்டாமை நிலைமையைக் கணக்கில் கொள்ளாது எந்த சலுகைகள், அனுகூலங்கள், வசதிகள், விடுதிகளில் தங்கும் உரிமைகள், கல்வி நிலையங்கள், சாலைகள், நடைபாதைகள், தெருக்கள், குளங்கள், கிணறுகள், இதர நீர்நிலைகள், நிலம், வானம் அல்லது நீரில் பொதுப் போக்கு வரத்து வாகனங்கள், திரை அரங்குகள் அல்லது பொது மகிழ் இடங்கள், விடுதிகள் அல்லது கழிப்பிடங்கள் - பொதுமக்களின் நன்மைக்காக நிறுவப்பட்டவை அல்லது பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பராமரிக்கப்படுபவை அல்லது லைசென்சுக்கு விடப்பட்டவை ஆகியவற்றைப் பயன்படுத்துவதை யாராவது மறுத்தால் - அவர்கள் தண்டிக்கப்படுவார்கள், சிறைத்தண்டனை விதிக்கப்படுவர்; அது அய்ந்தாண்டுகள் வரை நீடிக்கக்கூடும், மேலும் அபராதமும் விதிக்கப்படும்.”

(ஆ) தாழ்த்தப்பட்ட வர்க்கங்கள் தமது உரிமைகளை அமைதிப் பூர்வமாக அனுபவிப்பதற்கு எதிராக வைதிகத் தனிநபர்கள் செய்யும் இடையூறுகள் மட்டுமே ஆபத்தானதல்ல. மிகவும் வழக்கமான இடையூறின் வடிவம் சமூகப் புறக்கணிப்பு ஆகும். வைதிக வர்க்கங்களின் கைகளில் அதுதான் மிகவும் வலிமையான ஆயுதமாகும். அதைக் கொண்டு அவர்கள் தாழ்த்தப்பட்ட வர்க்கங்களின் எந்த நடவடிக்கைக்கான முயற்சியையும், அது அவர்களுக்கு செறிக்க முடியாததாகயிருந்தால், முறியடிக்கிறார்கள். அது செயல்படும் முறையும், அது செயலாக்கப்படும் சந்தர்ப்பங்களும் 1928 இல் பம்பாய் அரசு நியமித்த குழுவின் அறிக்கையில், நன்கு விவரிக்கப்பட்டுள்ளது. “ராஜதானியில் தாழ்த்தப்பட்ட வர்க்கங்களின் (தீண்டத்தகாதோரின்) மற்றும் பழங்குடிகளின் கல்வி, பொருளாதார மற்றும் சமூக நிலைமையை விசாரணை செய்வதற்கும், அவர்களின் முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகளைப் பரிந்துரை செய்வதற்கும் இக்குழு அமைக்கப்பட்டது. அந்த அறிக்கையின் ஒரு பகுதி பின் வருமாறு :

தாழ்த்தப்பட்ட வர்க்கங்களும் சமூகப் புறக்கணிப்பும்

“102. அனைத்துப் பொது வசதிகளிலும் தாழ்த்தப்பட்ட வர்க்கங்கள் தமது உரிமைகளைப் பெறுவதற்குப் பல்வேறு தீர்வுகளை நாங்கள் பரிந்துரை செய்துள்ளபோதிலும், நீண்ட காலத்திற்கு அவர்கள் அவற்றை நடைமுறைப்படுத்தும் வழியில் சிரமங்கள் இருக்கும் என்று நாங்கள் அஞ்சுகிறோம். முதலாவது இடையூறு, வைதிக வர்க்கங்கள் அவர்களுக்கு எதிராக பகிரங்கமான வன்முறையில் ஈடுபடுவார்கள் என்ற அச்சம். ஒவ்வொரு கிராமத்திலும் தாழ்த்தப்பட்ட வர்க்கங்கள் ஒரு சிறிய சிறுபான்மையோராக இருக்கின்றனர். அவர்களுக்கு எதிராக வைதிகர்கள் மிகப்பெரும்பான்மையினராக உள்ளனர். அவர்கள், தாழ்த்தப்பட்ட வர்க்கங்களிடமிருந்து ஏற்படப் போவதாகக் கருதப்படும் எந்தப் படையெடுப்பினின்றும் தமது நலன்களையும் சமூக நிலையினையும் காப்பாற்றிக் கொள்வதற்கு அவர்கள் (வைதிகர்கள்) மூர்க்கமாக உள்ளனர். போலிசாரால் வழக்குத் தொடரப்படக்கூடும் என்ற பயம், வைதிக வர்க்கங்கள் வன்முறையைப் பயன்படுத்துவதற்கு ஒரு எல்லை வரம்பை விதித்துள்ளன. எனவே, இதன் விளைவாக அத்தகைய வன்முறை நிகழ்வுகள் அரிதாக உள்ளன.

“தாழ்த்தப்பட்ட வர்க்கங்கள் இன்று இருந்துவரும் அவர்களுடைய பொருளாதார நிலையிலிருந்து இரண்டாவது சிரமம் ஏற்படுகிறது. ராஜதானியின் பெரும்பாலான பகுதிகளில் தாழ்த்தப்பட்ட வர்க்கங்களுக்கு பொருளாதார சுதந்திரம் இல்லை. சிலர் வைதிக வர்க்கங்களின் நிலங்களை, அவர்களுடைய வாரிசுதாரர்கள் தங்களுடைய விருப்பத்தின் பேரில் பயிரிடுகின்றனர். சிலர் வைதிக வர்க்கங்களினால் வேலைக்கு வைத்துக் கொள்ளப்பட்ட விவசாயத் தொழிலாளிகள் என்ற முறையில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு வாழ்கின்றனர். மற்றவர்கள், கிராம வேலையாட்கள் என்ற வகையில் வைதிக வர்க்கங்களுக்கு தொண்டு புரிவதற்காக, அவர்களால் வழங்கப்படும் உணவு அல்லது தானியத்தைக் கொண்டு உயிர் வாழ்கின்றனர்.

கிராமங்களில் தாழ்த்தப்பட்ட வர்க்கங்கள் துணிந்து தமது உரிமைகளை நடைமுறைப்படுத்த முயன்றபோது, அவர்களுக்கு எதிராக வைதிக வர்க்கங்கள் தமது பொருளாதார வலிமையை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்திய எண்ணற்ற எடுத்துக்காட்டுகளை நாம் கேள்விப்பட்டுள்ளோம். அவர்கள் நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்களுக்கு வேலை கொடுக்க மறுத்துள்ளனர். கிராம வேலையாட்கள் என்ற வகையில் அவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய ஊதியத்தை நிறுத்திவிட்டனர். இந்தப் புறக்கணிப்பு அடிக்கடி, ஒரு பரந்த அளவில் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இதில், தாழ்த்தப்பட்ட வர்க்கங்கள் பொதுப் பாதைகளில் நடமாடுவதினின்றும் தடுக்கப்படுவது, கிராமக் கடைக்காரர்கள் அவர்களுக்கு வாழ்க்கைத் தேவைகளை விற்பதற்கு மறுப்பது ஆகியவையும் அடங்கும்.

நமக்குக் கிடைத்துள்ள சாட்சியங்களின்படி சில நேரங்களில், தாழ்த்தப்பட்ட வர்க்கங்களுக்கு எதிராக ஒரு சமூகப் புறக்கணிப்பை பிரகடனப்படுத்துவதற்கு சிறிய காரணங்கள் போதுமானதாக உள்ளது. அடிக்கடி, பொதுக் கிணற்றைப் பயன்படுத்துவதற்கு தாழ்த்தப்பட்ட வர்க்கங்கள் தமது உரிமையைச் செயலாக்கும் போது, இவ்வாறு சமூகப் புறக்கணிப்பு அறிவிக்கப்படுகிறது. தாழ்த்தப்பட்ட வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு நபர் பூணூலைப் போட்டுக் கொண்டாலோ, ஒரு துண்டு நிலத்தை வாங்கினாலோ, நல்ல துணிமணிகளை அல்லது நகைகளை அணிந்து கொண்டாலோ, அல்லது பொதுவான தெருவில் மணமகன் குதிரை மீது அமர்ந்தபடி திருமண ஊர்வலம் எடுத்துச் செல்லப்பட்டாலோ, ஒரு கடுமையான புறக்கணிப்பு பிரகடனம் செய்யப்பட்ட சம்பவங்கள் அரிதானதல்ல.

தாழ்த்தப்பட்ட வர்க்கங்களை ஒடுக்குவதற்கு இந்த சமூகப் புறக்கணிப்பைக் காட்டிலும் கூடுதல் பயனுறுதியான வேறு எந்த ஆயுதமும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கக் கூடும் என்பதை நாம் அறியோம். பகிரங்கமான வன்முறை அதற்கு முன்னால் பிசுபிசுத்துப் போய்விடும். ஏனெனில், அது மிகவும் தொலைவீச்சுடைய மற்றும் பயங்கரமான விளைவுகளை கொண்டதாகும். அது மிகவும் ஆபத்தானது. ஏனெனில், அது ஒரு சட்டப்பூர்வமான முறை என்பதாகவும், தொடர்பு கொள்வதற்குரிய சுதந்திரம் என்ற தத்துவத்திற்கு இசைவுடையதாகும் என்று போக்கு காட்டுகிறது. தாழ்த்தப்பட்ட வர்க்கங்களுக்கு, அவர்களின் மேம்பாட்டிற்குப் பேச்சுரிமையையும், செயல் உரிமையையும் நாம் உறுதிப்படுத்த வேண்டுமென்றால், பெரும்பான்மையினரின் இந்தக் கொடுங்கோன்மைக்கு உறுதியாக முடிவு கட்டப்பட வேண்டும் என்று நாம் ஒப்புக் கொள்கிறோம்.

தமது பேச்சுரிமைகளுக்கும் சுதந்திரங்களுக்கும் எதிரான இந்த வகைப்பட்ட பேராபத்தைப் போக்குவதற்குரிய ஒரே வழி, சமூகப் புறக்கணிப்பை சட்டப்படி தண்டிக்கப்படத்தக்க ஒரு குற்றமாக்குவதுதான் என்று தாழ்த்தப்பட்ட வர்க்கங்கள் கருதுகின்றன. எனவே, 1919 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டத்தில் குற்றங்கள், நடைமுறை மற்றும் அபராதங்கள் தொடர்புடைய ஐஐஆவது பாகத்தில், கீழ்வரும் பிரிவுகளையும் சேர்க்க வேண்டும் என்று அவர்கள் நிச்சயம் வற்புறுத்துவார்கள்.

புறக்கணிப்பு என்ற குற்றத்தின் விளக்கம்

(அ) ஒரு நபர் எந்த வீட்டையோ, நிலத்தையோ வாடகைக்கு விடுவதற்கு, அல்லது பயன்படுத்துவதற்கு அல்லது வசப்படுத்திக் கொள்வதற்கு அல்லது அதைக் கையாள்வதற்கு மறுத்தால், கூலிக்கு வேலை செய்வதற்கு அல்லது மற்றொரு நபருடன் வியõபாரம் செய்வதற்கு மறுத்தால் அல்லது ஒருவருக்கு சேவை செய்வதற்கு அல்லது அவரிடமிருந்து சேவையைப் பெற்றுக் கொள்வதற்கு மறுத்தால் அல்லது சாதாரணமாக அத்தகைய விஷயங்கள் பொதுவாக எந்த நிபந்தனைகளின் பேரில் செய்யப்படுகிறதோ அவ்வாறு செய்வதற்கு மறுத்தால் அல்லது

(ஆ) சமுதாயத்தில் இருந்து வரும் பழக்க வழக்கங்களைக் கருத்தில் கொண்டு செய்யப்படும் சமூக,தொழில் அல்லது வர்த்தக உறவுகளில் ஈடுபடாமல் நிறுத்திக் கொண்டால், அரசமைப்புச் சட்டத்தில் பிரகடனம் செய்யப்பட்டுள்ள எந்த அடிப்படையான உரிமை அல்லது இதர குடிஉரிமைகளுக்கு முரணில்லாத வகையில், அந்த நபருடன் உறவு கொள்ள மறுத்தால் அல்லது (இ) எந்த வகையிலாவது ஒரு நபர் தனது சட்டப்படியான உரிமைகளைப் பயன்படுத்துவதனின்றும் அந்த நபரைக் காயப்படுத்தினால், அல்லது கோபமூட்டினால் அல்லது தலையிட்டால் அது புறக்கணிப்பாகக் கருதப்படும்.

II புறக்கணிப்பிற்கு தண்டனை

எந்த ஒரு நபராவது, மற்றொரு நபரின் விஷயத்தில், அவர் சட்டப்படி செய்வதற்கு உரிமையுள்ள எந்த ஒரு செயலையும் செய்ததற்காக அல்லது சட்டப்படி செய்யாமலிருப்பதற்கு உரிமையுள்ள எந்த செயலையாவது செய்யாமல் விடப்பட்டதற்காகவோ அல்லது சட்டப்படி செய்வதற்குக் கடமையில்லாத எந்த ஒரு செயலையும் செய்யும்படி நிர்பந்தப்படுத்தினாலோ, அத்தகைய நபருக்கு உடல் ரீதியிலோ, உள்ள ரீதியிலோ தீங்கு ஏற்படுத்த முயற்சித்தாலோ, அவருடைய செல்வாக்குக்கும் அல்லது சொத்துக்கும் பாதிப்பு ஏற்படுத்த முயன்றாலோ, அவருடைய தொழில் அல்லது வாழ்க்கை சாதனத்திற்கு பாதிப்பு ஏற்படுத்த முயன்றாலோ, தன் விருப்பத்தின்படி அத்தகைய ஒரு நபரை புறக்கணித்தாலோ, அத்தகைய நபர் சிறை வாசம் மூலம் தண்டிக்கப்பட வேண்டும். அந்த தண்டனை ஏழாண்டுகளுக்கு நீடிக்கப்படலாம் அல்லது அபராதம் விதிக்கப்படலாம் அல்லது சிறைத்தண்டனையும் அபராதமும் சேர்ந்து விதிக்கப்படலாம்.

இந்தப் பிரிவின் கீழ் எந்தக் குற்றமும் செய்யப்பட்டதாகக் கருதப்படாவிட்டால், குற்றம் சாட்டப்பட்ட நபர் எந்த நபரின் தூண்டுதல் பேரிலோ அல்லது வேறு எந்த நபருடனும் உடந்தையாக இருந்தோ அல்லது எந்த சதியின் படியோ, அல்லது புறக்கணிப்பதற்கு எந்த உடன்பாடு அல்லது இணைந்த முறையில் செயல்பட்டோ, குற்றம் புரியவில்லை என்று நீதிமன்றத்திற்கு நிறைவு ஏற்பட்டால், அவர் தண்டிக்கப்படாமலிருக்கலாம்.

III ஒரு புறக்கணிப்பைத் தூண்டுவதற்கோ அல்லது அதை நடத்துவதற்கோ ஆன தண்டனை யாரொருவர்,

(அ) புறக்கணிப்பிற்கான ஓர் அறிவிக்கையை பகிரங்கமாக வெளியிட்டாலோ, அல்லது பிரசுரித்தாலோ அல்லது சுற்றுக்கு விடுத்தாலோ, அல்லது

(ஆ) புறக்கணிப்பை ஏற்படுத்தும் சாத்தியப்பாடு உடையது என்று நம்புவதற்குக் காரணமுள்ள எந்த அறிக்கை வதந்தி அல்லது செய்தியை பிரகடனம் செய்தாலோ, பிரசுரித்தாலோ அல்லது சுற்றுக்கு விடுத்தாலோ, அல்லது,

(இ) எந்த ஒரு நபரை அல்லது நபர்களின் வர்க்கத்தை புறக்கணிப்பதற்கு வேறு எந்த வகையிலாவது தூண்டினாலோ அல்லது நடத்தினாலோ, சிறைத் தண்டனை மூலம் தண்டிக்கப்படுவார். அது, அய்ந்தாண்டுகள் வரையில் இருக்கக்கூடும் அல்லதுஅபராதம் விதிக்கப்படலாம் அல்லது இருவித தண்டனைகளும் வழங்கப்படலாம்.

விளக்கம் : இந்தப்பிரிவின் கீழான ஒரு குற்றம் - இங்கே குறிப்பிடப்படும் இயற்கையின் எந்த செயலினால் பாதிக்கப்படுகின்ற அல்லது பாதிக்கப்படும் சாத்தியப்பாடுடைய நபர் பெயரினாலோ அல்லது வர்க்கத்தினாலோ குறிப்பிடப்படாமல், அவருடைய செயல் அல்லது, சில குறிப்பிடப்படாமல், அவருடைய செயல் அல்லது, சில குறிப்பிட்ட முறையில் செயல்படுவதின்றும் தவிர்த்துக் கொண்டாலும், (குற்றம்) புரிந்ததாகக் கருதப்படுவார்.

IV புறக்கணிப்பு செய்யப் போவதாக அச்சுறுத்துவதற்கும் தண்டனை

யாராயிருந்தாலும், வேறொரு நபர் - சட்டப்படி செய்வதற்கு உரிமையுள்ளவர் - எந்த செய்கையையும் செய்ததற்காக அல்லது சட்டப்படி செய்யாமலிருப்பதற்கு உரிமையுள்ளவர் செய்யாமலிருந்ததற்காக அல்லது சட்டப்படி செய்வதற்குக் கடமைப்பட்டிராத எந்த செய்கையையாவது செய்யும்படி நிர்பந்தித்தாலோ, அல்லது சட்டப்படி செய்வதற்கு உரிமையுள்ளவர் செய்யாமலிருக்கும் நிலைமையில் அக்கறையுள்ள நபர், அத்தகைய நபரை புறக்கணிக்கப் போவதாக அச்சுறுத்தினாலோ, அவர் சிறை தண்டனை மூலம் அய்ந்தாண்டுகள் வரை தண்டிக்கப்படுவார் அல்லது அபராதம் விதிக்கப்படுவார் அல்லது இரண்டு தண்டனையும் விதிக்கப்படலாம்.

(டி) ஓர் உண்மையான தொழில் தகராறின் காரணமாக எந்த செய்கையையும் செய்வது.

(டிடி) வர்த்தகப் போட்டி என்ற சாதாரண நடைமுறைப்போக்கில் மேற்கொள்ளும் எந்த ஒரு நடவடிக்கை.

பின்குறிப்பு : இந்தக் குற்றங்களெல்லாம் தெரிந்துகொள்ளத்தக்க குற்றங்கள் என்றே கருதப்படவேண்டும்.

நிபந்தனை ஐஐஐ பாரபட்சத்திற்கு எதிராகப் பாதுகாப்பு

வருங்காலத்தில் சட்டத்தின் மூலமாகவோ அல்லது நிர்வாக உத்தரவின் மூலமாகவோ பாரபட்சம் காட்டப்படலாம் என்று தாழ்த்தப்பட்ட வர்க்கங்கள் மிகவும் அச்சமடைந்திருக்கின்றன. எனவே, தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக, சட்டசபையினாலோ அல்லது நிர்வாகத்தினாலோ மனக்கசப்பை உண்டாக்கும், பாரபட்சம் காட்டுவதை சட்டப்படி அசாத்தியமாக்கினாலொழிய, அவர்கள் பெரும்பான்மையோரின் ஆட்சியின் கீழ் தங்களை கட்டுப்படுத்திக் கொள்வதற்கு ஒத்துக்கொள்ள முடியாது. எனவே, இந்தியாவின் அரசியல் சாசனப்படியான சட்டத்தில் கீழ்வரும் சட்ட விதி சேர்க்கப்படவேண்டுமென்று அறிவிக்கை செய்யப்படுகிறது.

“இந்திய டொமினியனின் அதிகார வரம்பிற்குட்பட்ட எல்லாப் பிரதேசங்களிலும், முன்பு எத்தகைய தீண்டாமை இருந்ததையும் பொருட்படுத்தாது, நாட்டின் குடிமக்களின் உரிமைகளைப் புறக்கணிக்கும் வகையில் இந்தியாவில் எந்த சட்டமன்றமோ அல்லது நிர்வாகமோ ஒரு சட்டம் இயற்றவோ அல்லது ஓர் உத்தரவு, விதி அல்லது கட்டுப்பாட்டை வெளியிடுவதற்கோ தகுதி உடையதல்ல.

(1) ஒப்பந்தங்களை செய்து கொள்வதற்கும், நடைமுறைப்படுத்துவதற்கும், வழக்குத் தொடர்வதற்கும்,சாட்சியம் கூறுவதற்கும், அசையா சொத்துகளையும்,சொந்த தனிப்பட்ட சொத்துகளையும் வாரிசுரிமையாகப் பெறவும், வாங்கவும், குத்தகைக்கு விடுவதற்கும், விற்கவும், வைத்திருக்கவும், கைமாற்றிக் கொடுப்பதற்கும் உரிமையுண்டு.

(2) சிவில் மற்றும் ராணுவ வேலைவாய்ப்புக்கும் அனைத்துக் கல்வி நிலையங்களிலும் நுழைவதற்கு உரிமை உண்டு. நாட்டின் குடிமக்களின் அனைத்து வர்க்கங்களுக்கும் உரிய மற்றும் போதிய பிரதிநிதித்துவம் அளிப்பதன் தேவையை முன்னிட்டு இதற்கு நிபந்தனைகளும் வரம்புகளும் விதிக்கப்படக்கூடும்.

(3) விடுதிகளில் தங்கும் வாய்ப்பு, அனுகூலங்கள்,வசதிகள், கல்வி நிலையங்கள், ஓட்டல்களில் தங்கும் தகுதிகள், நதிகள், ஓடைகள், கிணறுகள், குளங்கள், சாலைகள், வழித்தடங்கள், தெருக்கள், நிலம், வான் மற்றும் நீரில் செல்லும் பொது ஊர்திகள், திரை அரங்குகள் மற்றும் பிற பொது பொழுதுபோக்கு, உல்லாச இடங்கள் ஆகியவற்றை முழுமையாகவும், சம உரிமையுடனும் பயன்படுத்திக் கொள்வதற்கு (அனுபவிப்பதற்கான) உரிமை - ஒவ்வொரு இனம், வர்க்கம், சாதி, நிறம் அல்லது மத நம்பிக்கையுடைய அனைத்துக் குடிமக்களுக்கும் ஒன்றுபோல் பொருந்தச் செய்வதை முன்னிட்டு, தேவையான நிபந்தனைகளும், வரம்புகளும் விதிக்கப்படக்கூடும்.

(4) அனைத்துப் பொதுமக்களுக்கு அல்லது ஒரே நம்பிக்கை மற்றும் மதத்தைச் சார்ந்தவர்களுக்கு என்று உரிமம் வழங்கப்பட்டுள்ள அல்லது எந்த மத அல்லது மனிதநேய அறக்கட்டளையின் அனுகூலங்களை வேறுபாடின்றி பகிர்ந்து கொள்வதற்கு வல்லவர்கள் என்று கருதப்படுவார்கள்.

(5) எத்தகைய முந்தைய தீண்டாமை நிலைமை மற்றும் தண்டனை, நிர்பந்தம், அபராதம் மற்றும் வேறு எதையும் பொருட்படுத்தாமல், பிற குடி மக்கள் அனுபவிப்பதைப் போல் தனி நபரின் மற்றும் சொத்தின் பாதுகாப்புக்காக அனைத்து சட்டங்கள் மற்றும் நடைமுறைகளின் முழு மற்றும் சம அனுகூலத்தைக் கோரலாம்.

நிபந்தனை எண் ஐங

சட்டப் பேரவைகளில் போதிய பிரதிநிதித்துவம்

தமது நல்வாழ்வைப் பேணும் நோக்கத்திற்காக,சட்டப் பேரவையின் மற்றும் நிர்வாகச் செயல்பாடுகளின் மீது செல்வாக்கு செலுத்துவதற்காக தாழ்த்தப்பட்ட வர்க்கங்களுக்குப் போதிய அரசியல் அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.இதை முன்னிட்டுத் தங்களுக்குக் கீழ்வரும் உரிமைகள் கிடைக்கப் பெறுவதற்காகத் தேர்தல் சட்டத்தில் கீழ்வரும் விதிகள் சேர்க்கப்பட வேண்டுமென்று அவர்கள் கோருகின்றனர் :

(1) நாட்டின் - மாகாண மற்றும் மத்திய சட்டப் பேரவைகளில் போதிய பிரதிநிதித்துவம் பெறுவதற்கான உரிமை.

(2) தங்களுடைய சொந்த நபர்களைத் தமது பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுப்பதற்கான உரிமை -

(அ) வயது வந்தோருக்கு வாக்குரிமை வாயிலாக மற்றும்

(ஆ) முதல் பத்தாண்டுகளுக்குத் தனி (தேர்தல்) தொகுதிகள்; அதற்குப் பின்னர், கூட்டுத் தொகுதிகள் மற்றும் ரிசர்வ் (தனியாக ஒதுக்கப்பட்ட) இடங்கள் வாயிலாக; கூட்டுத் தொகுதிகளுடன் கூடவே வயது வந்தோருக்கு வாக்குரிமை வழங்கப்பட வேண்டும். அவ்வாறில்லாவிட்டால், கூட்டுத் தொகுதிகளை தாழ்த்தப்பட்ட வர்க்கங்கள் மீது நிர்பந்தமாக திணிக்கக்கூடாது.

பின் குறிப்பு: பிற சமூகங்களுக்கு எந்த அளவு பிரதிநிதித்துவம் அனுமதிக்கப்பட்டுள்ளது என்பது தெரிகின்ற வரையில், தாழ்த்தப்பட்ட வர்க்கங்களுக்கான போதிய பிரதிநிதித்துவத்தின் அளவை நிர்ணயித்துக் கூறமுடியாது. ஆனால், தாழ்த்தப்பட்ட வர்க்கங்கள், தங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள பிரதிநிதித்துவத்தைக் காட்டிலும் அதிகமான அளவில் வேறு எந்த சமூகத்திற்காவது பிரதிநிதித்துவம் அனுமதிக்கப்பட்டிருந்தால், அந்த நிலையைத் தாழ்த்தப்பட்ட வர்க்கங்கள் ஒத்துக் கொள்ள மாட்டா என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். எப்படியாயினும், பம்பாய் மற்றும் சென்னையின் தாழ்த்தப்பட்ட வர்க்கங்களுக்கு - மாகாணங்களில் பிற சிறுபான்மையோருக்கு அனுமதிக்கப்பட்டுள்ள பிரதிநிதித்துவத்தின் அளவு எத்தகையதாயிருந்த போதிலும், மக்கள் தொகையுடனான பிரதிநிதித்துவத்தின் தகவுக்கு மேலாக மதிப்பு தரப்பட வேண்டும்.

நிபந்தனை ங

பணிகளில் போதிய பிரதிநிதித்துவம்

பொது சேவைகளை ஏகபோகமாகக் கொண்டுள்ள உயர் சாதி அதிகாரிகளினால் தாழ்த்தப்பட்ட வர்க்கங்கள் பெருமளவு தொல்லைகளுக்கு ஆளாகியுள்ளனர். அவர்கள் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தியும் அல்லது சட்டத்தை நிர்வகிப்பதில் தமக்குள்ள தன் விருப்புரிமையை தவறாகப் பயன்படுத்தி, தாழ்த்தப்பட்ட வர்க்கங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளனர். நீதி, சமத்துவம் அல்லது நல்ல மனச்சான்றைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் சாதி இந்துக்களுக்கு ஆதாயம் தேடித் தந்துள்ளனர். இந்தக் களங்கத்தை, பொது சேவைகளில் சாதி - இந்துக்களின் ஏகபோகத்தை ஒழிப்பதன் மூலமும், அவற்றுக்கு ஆட்களை வேலைக்குச்சேர்ப்பதை, தாழ்த்தப்பட்ட வர்க்கங்கள் உள்ளிட்ட எல்லா சமூகங்களுக்கும் அவற்றில் போதிய பிரதிநிதித்துவம் கிடைக்கும் வண்ணம் முறைப்படுத்துவதன் மூலமும் தவிர்க்க முடியும். இந்த நோக்கத்திற்காக, தாழ்த்தப்பட்ட வர்க்கங்கள் கீழ்வரும் அறிவிக்கைகளை முன்வைக்க வேண்டியுள்ளது.

(1) பொதுப்பணிகளுக்கு நபர்களை வேலைக்கு சேர்ப்பதற்கும், கட்டுப்பாடு செய்வதற்கும் இந்தியாவிலும், இந்தியாவின் ஒவ்வொரு மாகாணத்திலும் ஒரு தேர்வாணையம் ஏற்படுத்தப்பட வேண்டும்.

(2) தேர்வாணையத்தின் எந்த ஓர் உறுப்பினரும் சட்டப் பேரவையினால் நிறைவேற்றப்படும் ஒரு தீர்மானத்தின் மூலம் அல்லது பதவியினின்று அகற்றப்படக் கூடாது. அதேபோன்று அவர் ஓய்வு பெற்ற பின்னர், அரசின் எந்தப் பதவிக்கும் நியமிக்கப்படவும் கூடாது.

(3) வரையறுக்கப்படும் திறமை பற்றிய சோதனைகளுக்கு உட்பட்டு, தேர்வாணையம் கீழ்வருமாறு செயல்பட வேண்டியது அதனுடைய கடமையாகும்:

(அ) எல்லா சமூகங்களுக்கும் உரிய மற்றும் போதிய பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் நபர்களை வேலைக்கு சேர்க்க வேண்டும்.

(ஆ) எந்த ஒரு குறிப்பிட்ட பணியிலும் பல்வேறு சமூகங்களுக்கு அப்பொழுது இருந்துவரும் பிரதிநிதித்துவத்தின் அளிவிற்கு ஏற்ப வேலைவாய்ப்பில் அவ்வப்போது முன்னுரிமையை முறைப்படுத்த வேண்டும்.

நிபந்தனை எண் ஙஐ

காழ்ப்புணர்ச்சியான நடவடிக்கை அல்லது நலன்கள் புறக்கணிப்புக்கு உரிய நிவாரணம்

வருங்காலத்தில் பெரும்பான்மையோரின் ஆட்சி வைதிகர்களின் ஆட்சியாக இருக்கும் என்பதால், அத்தகைய பெரும்பான்மையோரின் ஆட்சி தங்களுக்கு அனுசரணையான ஆட்சியாக இருக்காது என்றும், தங்களுடைய நலன்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும், தமது வாழ்வாதாரத் தேவைகள் புறக்கணிக்கப்படும் என்றும் தாழ்த்தப்பட்ட வர்க்கங்கள் பயப்படுவதைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இருக்க முடியாது. அதற்கு

எதிராக அவர்களுடைய நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும். ஏனெனில், தாழ்த்தப்பட்ட வர்க்கங்களுக்கு போதிய அளவு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டாலும், அனைத்து சட்டப்பேரவைகளிலும் அவர்கள் சிறுபான்மையோராகவே இருப்பார்கள். அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள நிவாரணம் பெறுவதற்கான வழிவகை தங்களுக்கு இருக்க வேண்டியது அவசியமென்று தாழ்த்தப்பட்ட வர்க்கங்கள் நினைக்கின்றன. எனவே, இந்திய அரசியல் சட்டத்தில் கீழ்வருமாறு வகை செய்யப்பட வேண்டும்:

“ஒவ்வொரு மாகாணாகத்திலும் மாகாணத்திற்கும் மற்றும் இந்தியாவிலும் தாழ்த்தப்பட்ட வர்க்கங்களின் கல்வி, சுகாதாரம், பொதுப்பணிகளுக்கு ஆட்களை சேர்ப்பதும் மற்றும் சமூக, அரசியல் முன்னேற்றம் தொடர்புடைய பிற விஷயங்களுக்குப் போதிய வகை செய்ய வேண்டியதும் அவர்களை பாதிக்கக்கூடிய எந்த விஷயத்தையும் செய்யாதிருப்பதும் சட்டப்பேரவை மற்றும் நிர்வாகத்தினுடைய அல்லது சட்டத்தின்படி நிறுவப்பட்ட எந்த அதிகார அமைப்பினுடைய கடமையாகவும் பொறுப்பாகவும் இருக்க வேண்டும்.

“(2) எந்த மாகாணத்திலாவது அல்லது இந்தியாவிலாவது இந்த சட்டத்தின் பிரிவுகள் மீறப்பட்டால், எந்த மாகாண அதிகார அமைப்பின் எந்த சட்டம் அல்லது முடிவின்படி கவர்னர் - ஜெனரலுக்கு மேல் முறையீடு செய்து கொள்ளப்படலாம். அது போன்றே, இந்த விஷயம் தொடர்பாக மத்திய அதிகார அமைப்பின் எந்த சட்டம் அல்லது முடிவின்படி இந்திய அமைச்சருக்கு (செக்ரட்ரி ஆப் ஸ்டேட்) மேல் முறையீடு செய்து கொள்ளலாம்.

“(3) அத்தகைய ஒவ்வொரு வழக்கு விஷயத்திலும், இந்தப் பிரிவின் விதிகளை முறைப்படி நிறைவேற்றுவதற்குரிய நடவடிக்கைகளை, மாகாண அதிகார அமைப்போ அல்லது மத்திய அதிகார அமைப்போ எடுத்துக் கொள்ளவில்லை என்று கவர்னர்- ஜெனரலுக்கோ அல்லது இந்திய அமைச்சருக்÷கா  (செக்ரட்ரி ஆப் ஸ்டேட்) தோன்றினால், அப்பொழுது அத்தகைய ஒவ்வொரு சம்பவம் தொடர்பாகவும், ஒவ்வொரு சம்பவத்தின் சூழ்நிலைகளுக்குத் தேவைப்படுவதற்கு ஏற்ப, கவர்னர்-ஜெனரலோ அல்லது இந்தியா அமைச்சரோ, ஒரு மேல்முறையீட்டு அதிகார அமைப்பாகச் செயல்பட்டு, அவர்கள் பொருத்தமானது என்று கருதும் காலகட்டத்திற்கு, இந்தப் பிரிவின் விதிகளும் அதனுடைய எந்த முடிவுகளும் உரிய முறையில் நிறைவேற்றப்படுவதற்கு பரிகார நடவடிக்கை களை மேற்கொள்ளலாம். யாருக்கு எதிராக மேல்முறையீடு செய்து கொள்ளப்பட்டதோ , அவர்களையும் இது கட்டுப்படுத்தும்.

நிபந்தனை எண் ஙஐஐ

சிறப்பு துறை ரீதியான பாதுகாப்பு

தாழ்த்தப்பட்ட வர்க்கங்களின் உதவியற்ற, அநாதையான, நிர்கதியான நிலைமைக்கு வைதிக மக்களின் மூர்க்கமான, நிர்கதியான நிலைமைக்கு - வைதிக மக்களின் மூர்க்கமான, விடாப்பிடியான எதிர்ப்பே முற்றிலும் காரணமாகும். அவர்கள் தாழ்த்தப்பட்ட வர்க்கங்களுக்கு சம நிலையை, சமமாக மதிக்கப்படுவதை மறுத்துவிடுகின்றனர். அந்த வர்க்கங்கள் வறுமை வயப்பட்டவர்கள் அல்லது அவர்கள் நிலமற்ற தொழிலாளர்கள் என்று - இந்த இரண்டு கூற்றுகளும் உண்மையென்ற போதிலும் - அவர்களின் பொருளாதார நிலைமையைப் பற்றிக் கூறினால் மட்டும் போதாது. தாழ்த்தப்பட்ட வர்க்கங்களின் வறுமை, பெருமளவு சமூகக் காழ்ப்புணர்ச்சிகளினால் ஏற்படுகிறது. இதன் விளைவாக, வாழ்க்கைக்கு ஊதியம் பெறுவதற்கான பல வேலைகள் அவர்களுக்கு மறுக்கப்படுகின்றன.

தாழ்த்தப்பட்ட வர்க்கங்களின் நிலைமையை, சாதாரண சாதி இந்து தொழிலாளியின் நிலைமையிலிருந்து வேறுபடுத்துவது உண்மையாகும். இது, அடிக்கடி இந்தஇரு தரப்பாரிடையில் சச்சரவுக்கு ஆதாரமாக இருக்கிறது. மேலும், தாழ்த்தப்பட்ட வர்க்கங்களுக்கு எதிராகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் கொடுங்கோன்மை மற்றும் ஒடுக்குமுறையின் வடிவங்கள் பலவகைப்பட்டவை. அதே நேரத்தில் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு, தாழ்த்தப்பட்ட வர்க்கங்களுக்கு உள்ள ஆற்றல் மிகவும் வரம்புக்குட்பட்டதாகும்.இது தொடர்பாக கிடைக்கும் விவரங்கள் - இவை இந்தியா முழுவதிலும் பொதுவாக ஏற்படுகின்றவை - சென்னை மாகாண அரசின் ரெவின்யூ போர்டின், நவம்பர் 5, 1892 நாளிட்ட எண் 723 நடவடிக்கைகளின் விவரக் குறிப்பில் நன்கு விவரிக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து ஒரு பகுதி கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

“134. இதுவரையில் சுட்டிக்காட்டப்பட்ட இந்த ஒடுக்குமுறை வடிவங்களைப் பற்றி, குறைந்தபட்சம் மேலோட்டமாகவாவது குறிப்பிட்டாக வேண்டும். கீழ்ப்படியாததற்காக பறையர்கள்; தண்டிக்கப்படுவதற்கு, அவர்களது எஜமானர்கள்.

(அ) கிராம நீதிமன்றத்திலோ அல்லது குற்றவியல் நீதிமன்றங்களிலோ பொய்யான வழக்குகளைக் கொண்டு வருகிறார்கள்.

(ஆ) விண்ணப்பத்தின் பேரில், பறைச்சேரியை சுற்றியுள்ள தரிசு நிலங்களை அரசிடமிருந்து பெறுவது;

பறையர்களின் கால்நடைகளைப் பட்டியினுள் அடைத்து வைப்பதற்காக அல்லது அவர்கள் கோயிலுக்குச் செல்லும் பாதையை இடைமறிப்பதற்காக இவ்வாறு செய்வது.

(இ) பறைச் சேரிக்கு எதிராக, அரசுக் கணக்கில் மிராசுதார்களின் பெயர்களை மோசடியான முறையில் பதிவு செய்வது.

(ஈ) குடிசைகளைப் பிய்த்தெறிவது, புழக்கடைகளிலுள்ள செடிகளை அழித்து நாசப்படுத்துவது.

(உ) ஏதோ ஒரு பழங்காலத்தில் வழங்கப்பட்டுள்ள உப-குத்தகைகளில் வசப்படுத்திக் கொள்ளும் உரிமைகளை மறுப்பது.

(ஊ) பறையர்களின் பயிர்களை பலவந்தமாக வெட்டுவது. இதை எதிர்க்கும் போது, அவர்கள் மீது திருட்டு மற்றும் கலகம் செய்ததாகக் குற்றச்சாட்டுப் பதிவு செய்வது.

(எ) தவறான அனுமானங்களின்படி, சில ஆவணங்களில் அவர்களிடம் கையெழுத்து வாங்குவது; பின்னர் அதன் விளைவாக அவர்களை சீரழிப்பது.

(ஏ) அவர்களின் நிலங்களுக்குத் தண்ணீர் பாயவிடாமல் தடுப்பது.

(அய்) சட்டப்படியான நோட்டீஸ் கொடுக்காமலே, நிலச்சுவான்தார்களின் நிலவரி பாக்கிக்காக உப குத்தகைதாரர்களின் சொத்துகளை ஜப்தி செய்வது.

“135. இந்த இடுக்கண்கள் எதற்கும் நிவாரணம் பெறுவதற்கு சிவில் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்கள் உள்ளன என்று கூறப்படலாம். இவை நீதிமன்றங்கள் என்பது உண்மையே. ஆனால் இந்தியா கிராம நீதிபதிகளை உருவாக்குவதில்லை. நீதிமன்றங்களுக்குச் செல்வதற்கு ஒருவருக்குத் துணிவு இருக்க வேண்டும். சட்ட அறிஞர்களை வழிகாட்டச் செய்வதற்கும், நீதிமன்றச் செலவுகளுக்கும் பணம் இருக்க வேண்டும். வழக்கு நடக்கும்போதும், மேல் முறையீடுகளின் போதும் உயிர் வாழ்வதற்கான வாய்ப்பு வசதி இருக்க வேண்டும். மேலும் பெரும்பாலும் வழக்குகள் முதல் நீதிமன்றத்தின் முடிவைப் பொறுத்ததாக இருக்கும். இந்த நீதிமன்றங்களுக்கு அதிகாரிகள் தலைமை தாங்குவார்கள். இவர்கள் சில நேரங்களில் லஞ்ச ஊழலுக்கு ஆட்பட்டிருப்பார்கள். இவர்கள் பொதுவாக, வேறு காரணங்களுக்காக, பணக்காரர்களுக்கும் நிலவுடைமையாளர்களுக்கும் பரிவு காட்டுவார்கள். ஏனெனில், அவர்களே அந்த வர்க்கங்களைச் சேர்ந்தவர்கள்.

“136, அதிகாரிகள் உலகத்துடன் (அதிகார) வர்க்கத்துடன் இந்த வர்க்கங்களின் செல்வாக்கை மிகைப்படுத்திக் கூற முடியாது. சுதேசி மக்களுடன் அவர்களது செல்வாக்கு கடைக்கோடி எனில், அய்ரோப்பியர்களிடம் கூட அவர்களது செல்வாக்கு உயர்ந்த நிலையில் இருக்கும். ஒவ்வொரு அலுவலகத்திலும் மிக உயர்ந்த பதவியிலிருந்து கீழ்நிலை வரையிலும் அவர்களது பிரதிநிதிகளே நிறைந்திருப்பார்கள். அவர்களின் நலன்களைப் பாதிக்கும் எந்தப் அறிவிக்கையும் இருக்காது; ஆனால், தொடக்கம் முதல் நடைமுறை வரையிலும் அவர்கள் பெரும் செல்வாக்கை ஏற்படுத்த முடியும்.”

இந்த சூழ்நிலைமைகளை முன்னிட்டு, தாழ்த்தப்பட்ட வர்க்கங்களின் முன்னேற்றமானது - இந்தப் பணி அனைத்து அரசு நடவடிக்கைகளிலும் முன்னணியில் வைக்கப்பட்டாலொழிய, சம வாய்ப்புகள் ஒரு திட்டவட்டமான கொள்கையின் வாயிலாக நடைமுறையில் எய்தப்பட்டு, அரசின்பால் உறுதியான முயற்சி மேற்கொள்ளப்பட்டாலொழிய (தாழ்த்தப்பட்ட வர்க்கங்களின் முன்னேற்றம்) ஆர்வக் கனவாக மட்டுமே இருக்கும். இதை எய்துவதற்கு, தாழ்த்தப்பட்ட வர்க்கங்களின் பிரச்சினைகளை கவனிப்பதற்காக, எல்லா நேரங்களிலும் ஒரு துறையை பராமரிப்பது, இந்திய அரசின் மீது சட்டத்தின்படியான ஒரு கடப்பாட்டை அரசியல் சட்டம் ஏற்படுத்த வேண்டும் என்பது, அம்மக்களின் அறிவிக்கையாகும். இதற்காக இந்திய அரசு சட்டத்தில் பின்வரும் பகுதியை சேர்க்க வேண்டும் :

“1. இந்த அரசியல் சாசனத்தைப் அறிவிக்கை செய்யும் பொழுதே, இதனுடைய பகுதியாக, இந்திய அரசில் ஓர் துறை ஏற்படுத்தப்பட வேண்டும். ஓர் அமைச்சர் இதற்குப் பொறுப்பாக இருக்கவேண்டும். தாழ்த்தப்பட்ட வர்க்கங்களின் நலன்களைக் கண்காணித்து, அவர்களுடைய நல்வாழ்வை ஊக்குவிப்பது, இந்தத் துறையின் பணியாக இருக்கும்.

“2. மத்திய சட்டப்பேரவையின் நம்பிக்கையைப் பெற்றிருக்கின்ற வரையில், அந்த அமைச்சர் இந்தப் பதவியை வகிப்பார்.”

“3. சட்டத்தின்படி இந்த அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அல்லது அவருக்கு மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மற்றும் கடமைகளை செயல்படுத்தும் வகையில், நடவடிக்கைகளைத் தயாரிப்பதற்கும், அவற்றைப் பயனுறுதியான முறையில் நிறைவேற்றுவதற்கும் ஒருங்கிணைப்பதற்கும், தாழ்த்தப்பட்ட வர்க்கங்களுக்கு எதிரான சமூக அநீதி செயல்கள், கொடுங்கோன்மை அல்லது ஒடுக்குமுறையைத் தடுப்பதற்கு தேவையான மற்றும் இந்தியா முழுவதிலும் அவர்களின் நல்வாழ்விற்கு தேவையான எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டியது, அந்த அமைச்சரின் கடமையாக இருக்கும்.

“4. கவர்னர் - ஜெனரல் சட்டப்படி பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

(அ) கல்வி, நல்வாழ்வு முதலியவை தொடர்பான எந்த சட்டத்தின் பயனாக எழுகின்ற, தாழ்த்தப்பட்ட வர்க்கங்களின் நல்வாழ்வு தொடர்பான அனைத்து அதிகாரங்கள் அல்லது கடமைகளை அமைச்சருக்கு மாற்றிக் கொடுக்கலாம்.

(ஆ) ஒவ்வொரு மாகாணத்திலும் அமைச்சரின் அதிகாரத்தின் கீழும், அவருடன் ஒத்துழைத்தும் செயல்படுவதற்கு தாழ்த்தப்பட்ட வர்க்கங்களின் நல்வாழ்வு குழுக்களை நியமிக்கலாம்.

நிபந்தனை எண் ஙஐஐஐ

தாழ்த்தப்பட்ட வர்க்கங்களும் அமைச்சரவையும்

சட்டப் பேரவையில் இடங்களின் வாயிலாக, அரசாங்க நடவடிக்கையின் மீது செல்வாக்குச் செலுத்துவதற்கு - தாழ்த்தப்பட்ட வர்க்கங்களுக்கு அதிகாரம் இருக்க வேண்டியது அவசியம் என்பது போலவே, அரசின் பொதுவான கொள்கையை வகுப்பதற்கான வாய்ப்பும் தாழ்த்தப்பட்ட வர்க்கங்களுக்கு இருக்க வேண்டியது விரும்பத்தக்கதாகும். அமைச்சரவையில் ஓர் இடத்தைப் பெற்றால் மட்டுமே அவர்களால் இதைச் செய்ய முடியும். எனவே, இதர சிறுபான்மையினரை போன்றே தங்களுடைய தார்மீக உரிமைகள் அமைச்சரவையில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட வேண்டியவை, அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று தாழ்த்தப்பட்ட வர்க்கங்கள் உரிமை கொண்டாடுகின்றன.

இந்த நோக்கத்தை கருத்தில் கொண்டு, தனது அமைச்சரவையில் தாழ்த்தப்பட்ட வர்க்கங்களுக்குப் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுத் தருவதற்கு முயற்சி செய்வதற்கு ஆணைகளின் பத்திரத்தில் கவர்னர் மீதும், கவர்னர்-ஜெனரலின் மீதும் ஒரு கடப்பாடு சுமத்தப்பட வேண்டும் என்று தாழ்த்தப்பட்ட வர்க்கங்கள் அறிவிக்கை செய்கின்றன.”

இந்த அடிப்படை உரிமைகள் பிரகடனத்தின் சில பிரதிகளை டாக்டர் அம்பேத்கர், இந்தியாவிலுள்ள தன்னைப் பின்பற்றுவோருக்கு அனுப்பி வைத்து, சிறுபான்மையோர் துணைக் குழுவுக்கு அளிக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு ஆதரவாக வெவ்வேறு நகரங்களில் கூட்டங்கள் நடத்துமாறு கேட்டுக் கொண்டார். மேலும், தீர்மானங்களின் பிரதிகளை ராம்சே-மெக்டொனால்டுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இந்தக் கோரிக்கைகள் தாழ்த்தப்பட்ட வர்க்கங்களின் விருப்பப் பூர்வமான ஒத்துழைப்புக்கு குறைக்கப்பட முடியாத குறைந்த பட்சமானவை என்றும், இல்லாவிட்டால் சுயாட்சிக்கான எந்த அரசியல் சாசனத்திற்கும் தாங்கள் ஒத்துக் கொள்ள மாட்டோம் என்றும் அந்தத் தீர்மானங்களில் கூறப்பட்டிருக்க வேண்டும் என்று டாக்டர் அம்பேத்கர் ஆணையிட்டிருந்தார். எனவே அதன்படி, இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் ஏராளமான தந்திகள் பிரிட்டிஷ் பிரதமரின் அலுவலகத்தில் வந்து குவிந்தன.”