“மிகவும் முக்கியமான பிரச்சினை சிறுபான்மையோர் பிரச்சினைதான் என்பதில் அய்யமில்லை. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணாமல், இந்தியாவுக்கு சுதந்திரம் இருக்க முடியாது. கெடுவாய்ப்பாக, மாநாடு இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு தவறிவிட்டது. அரசியல் சீர்திருத்தத் திசை வழியில் மேற்கொண்டு எந்த நடவடிக்கைகளும் எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன்னால் ஒரு தீர்வு காணப்பட்டாக வேண்டும். அரசியல் அதிகாரம் வழங்கப்படுவது சிறுபான்மையோர் பிரச்சினைக்கு ஓர் ஒத்துக்கொள்ளப்பட்ட தீர்வின் மீது சார்ந்துள்ளது என்பதை மாநாடு நடைமுறையில் கூறியுள்ளது என்பதை இந்தியாவில் அவர் உணரவில்லை என்று தோன்றுகிறது.

திரு. ஆர்.எம். சீனிவாசனும் நானும் மாநாட்டில் பிரதிநிதித்துவப்படுத்தி, தாழ்த்தப்பட்ட வர்க்கங்களின் பிரச்சினைப் பொருத்தமட்டிலும் வருங்கால இந்திய அரசியல் சாசனத்தில் அவர்களுடைய இடம் பாதுகாப்பாக உள்ளது என்பதினாலும், அவர்களுடைய இயலாமைகள் இல்லாது போகும் என்பதனாலும் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.”

“இந்த சமயத்தில், வட்டமேசை மாநாட்டின் இரண்டாவது கூட்டத் தொடருக்õன பிரதிநிதிகளின் பெயர்கள், சூலை மூன்றாவது வாரத்தில் அறிவிக்கப்பட்டன. லண்டனில் நடைபெறவிருக்கும் இந்த மாநாட்டில் பங்கேற்கும்படி டாக்டர் அம்பேத்கர் சாஸ்திரி (ரைட் ஹானரபிள் வி.எஸ். சீனிவாச சாஸ்திரி), சாப்ரூ, ஜெயகர், செதல்வாட், மாளவியா, சரோஜினி நாயுடு, காந்தி, மீர்ஸா இஸ்மாயில், ஜின்னா, ராமசாமி முதலியார் மற்றும் பிறர் அழைக்கப்பட்டனர். வட்டமேசை மாநாட்டின் முதல் கூட்டத் தொடரின்போது, சமஷ்டிக் கூட்டமைப்புக் குழுவிலிருந்து டாக்டர் அம்பேத்கர், திட்டமிட்டு நீக்கப்பட்டார். அவருடைய தேசப்பற்று மனப்பாங்கும், சாதாரண மக்களுக்கும் ஜனநாயகத்திற்கும் ஆதரவாக அச்சமின்றி அவர் பேசி வந்ததும் பிரிட்டிஷ்காரர்களை முகம்சுளிக்க வைத்தது. ஆனால் இந்த நேரத்தில் அவர் சமஷ்டிக் கூட்டமைப்புக் குழுவுக்குத் தேர்வு செய்யப்பட்டார். இது, நடைமுறையில் இந்தியாவின் புதிய அரசியல் சாசனத்தை வரைவதுடன் தொடர்பு கொண்டிருந்தது.

இந்தியாவின் எல்லா பகுதிகளிலிருந்தும், இங்கிலாந்திலிருந்தும் கூட, டாக்டர் அம்பேத்கருக்குப் பாராட்டுகள் வந்து குவிந்தன. எதிர் முகாமைச் சேர்ந்த பத்திரிகைகளும் கூட அவருடைய நாட்டுப்பற்றையும், ஜனநாயகத்தின் மீதான அவருடைய நேசத்தையும் சாதாரண மக்களின் நல்வாழ்வு தொடர்பான அவருடைய அக்கறையையும் பாராட்டத் தொடங்கின. ‘கொலாபா சமச்சார்' என்ற ஒரு பிரபல மாவட்டப் பத்திரிகை - சமூக சீர்திருத்தங்கள் தொடர்புடைய விஷயங்களில் அவருக்கு எதிராக இருந்த இந்த இதழ் - சிமர் விசாரணையில் நாட்டுக்கு ஆற்றிய தொண்டுக்காக டாக்டர் அம்பேத்கருக்கு நன்றிக் கடன் பட்டிருப்பதாக எழுதியது. சைமன் ஆணையத்தின் வருகையின் போதும், வட்டமேசை மாநாட்டின் முதலாவது கூட்டத் தொடரிலும் அவரது பணிகளை அது நினைவு கூர்ந்தது. டாக்டர் அம்பேத்கர் ஒரு மெய்யான நாட்டுப் பற்றாளர் என்றும், நாட்டின் அடிமைத்தளைகளை முறிப்பதற்கு அவர் போராடுவார் என்றும், இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் அவ்வாறு செய்வதற்கு மற்றவர்களுக்கு அவர் உதவுவார்” என்று அது மேலும் கூறியது.

‘தி சண்டே கிரானிகில்' இதழ், தனது 1931, சூலை 26 நாளிட்ட பதிப்பில், ஏ.டி.டி. என்ற முன்னெழுத்துக்களின் கீழ் ஓர் உண்மையான தேசியவாதி என்ற முறையில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் பணிகளைப் பாராட்டி இவ்வாறு எழுதியது: “சமஷ்டிக் கட்டமைப்புக் குழுவுக்கு நியமனம் செய்யப்பட்டவர்களில் எனது நண்பர் டாக்டர் அம்பேத்கரும் ஒருவராவார். கடந்த ஆண்டு அவர், வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக லண்டனில் இருந்தபோது, நான் அவருடைய சிறப்புகளைப் பெருமளவு அறிந்து கொண்டேன். ஓர் உண்மையான தேசியவாதியின் உள்ளம் கொண்டிருந்த அவர், பிரிட்டிஷ் பழமைவாதிகளின் வசப்படுத்தும் வார்த்தை விளையாட்டுகளுக்கு எதிராக ஓர் உறுதியான போராட்டம் நடத்தினார். அவரைத் தங்கள் பக்கம் வெல்வதற்கு அவர்கள் மிகவும் ஆர்வத்துடனிருந்தனர்.

அதே பொழுதில், தனது சக பிரதிநிதி ராவ் பகதூர் சீனிவாசனை தேசியவாத அரவணைப்புக்குள் இருத்தி வைத்துக் கொள்வதற்கான அவருடைய ஆர்வம், அவருடைய பணியைக் கூடுதல் சிரமத்துக்குள்ளாக்கியது. செஸ்டர்பீல்டு பூங்காவில், அவர், பரஸ்பரம் விட்டுக் கொடுக்கும் நிகழ்வுப் போக்கில், சர் தேஜ் பகதூர் சுதேச மன்னர்களுக்கு அதிகம் வழங்கி வருகிறார் என்று மீண்டும் மீண்டும் புகார் செய்தார். ஆனால் சர் தேஜ், மிகவும் சிரமமான சூழ்நிலையில் விவேகமாக நடந்து கொள்ள வேண்டியிருந்தது.”

“டாக்டர் அம்பேத்கரின் நியமனம் குறித்து’கேசரி'யும் வேறுபல செய்தித் தாள்களும் திருப்தி தெரிவித்தன. டாக்டரையும் என்.எம்.ஜோஷியையும் பாராட்டி, இந்திய சேவா சங்கத்தின் சஞ்சிகை இவ்வாறு எழுதியது. “சமுதாயத்தின் மிகவும் கீழ்த்தட்டிலிருந்து வந்தவர்கள், ஒருவர் தொழிலாளி வர்க்கத்தைப் பிரதிநிதித்துப்படுத்துபவர். மற்றவர் தாழ்த்தப்பட்ட வர்க்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர். இந்த நாட்டில்அறியப்பட்ட ‘உயர் அரசியலுக்கு' அவர்கள் இயல்பாகவே அந்நியமானவர்கள். எளிய மக்களின் எளிய நம்பிக்கையை அவர்கள் பெற்றிருந்தன. அவர்களது நலனுக்காக அவர்கள் பாடுபட்டனர். தங்களைச் சுற்றியுள்ள உயர் பிரமுகர்களின் கர்வத்துடன் கூடிய புன்னகை, புறக்கணிக்கப்பட முடியாதவை என்று தங்களுக்குப் போதிக்கப்பட்டுள்ள சில கோட்பாடுகளை நடைமுறையில் பயன்படுத்த வேண்டும்என்று வலியுறுத்துவதினின்றும் அவர்களைப் பின்வாங்கச் செய்யாது.”

இதற்கு சிறிது காலத்திற்கு முன்பு, பம்பாயின் ஒருபிரபல தேசிய நாளிதழான”ப்ரீ பிரஸ் ஜர்னலின் லண்டன் பிரதிநிதி, மிஸ்மேயோவுக்கு விடுத்த பதிலில், வட்டமேசை மாநாட்டின் முதலாவதுகூட்டத் தொடரில் டாக்டர் அம்பேத்கர் ஆற்றிய பணிகளைப் புகழ்ந்துரைத்து, இவ்வாறு கூறியிருந்தார்: “டாக்டர் அம்பேத்கர் ஓர் அச்சமற்ற, சுதந்திரமான, மற்றும் நாட்டுப் பற்று உள்ள தலைவர். அவருடைய அச்சமற்ற தன்மையை இந்துக்கள்,முஸ்லிம்கள் ஆகிய இரு சாராராலும் சகித்துக் கொள்ள முடியவில்லை. வட்டமேசை மாநாட்டின் முதல் கூட்டத் தொடரில் அவருடைய தொடக்க உரை,மாநாட்டின் நிகழ்ச்சிகள் முழுவதிலுமே சிறந்த உரையாகும்.”

காந்தி வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்வாரா என்பது அப்பொழுது இன்னும் முடிவாகாமல் இருந்தது. இயல்பாகவே எல்லோருடைய பார்வையும், பம்பாயில் ‘மலபார் ஹில்' பகுதியிலுள்ள மணிபவன் மீது குவிமய்யப்பட்டிருந்தது. காந்தி பேச்சுத்திறன் மற்றும் அரசியல் அறிவுடைமை ஆகியவற்றினால் ஒருமர்மச் சூழல் உருவாக்கப்பட்டிருந்ததே இதற்குக் காரணமாகும்.பரபரப்பான சூழ்நிலையில், அம்பேத்கரின் கோரிக்கைகள் யாவை என்பதை அவரிடமிருந்து அறிந்து கொள்வதற்கு காந்தி விரும்பினார். எனவே, அவர் 1931, ஆகஸ்ட் 6 இல் அம்பேத்கருக்கு எழுதிய கடிதத்தில், டாக்டர் அம்பேத்கர் நேரம் ஒதுக்க முடியுமென்றால், அவரை அன்றிரவு எட்டு மணிக்கு வந்து சந்திப்பதாக, அவருக்குத் தெரிவித்திருந்தார். மேலும் டாக்டர் அம்பேத்கருக்கு வசதியாயிருந்தால்,மகிழ்ச்சியுடன் அவருடைய வீட்டுக்கே வந்து அவரை சந்திப்பதாகவும் கூறியிருந்தார்.”

எனவே அதன்படி, அம்பேத்கர் - காந்தி சந்திப்பு 1931, ஆகஸ்டு 14 இல் மணி பவனில், பிற்பகல் 2 மணிக்கு நடைபெற்றது.