வட்டமேசை மாநாட்டில் பங்கு கொள்வதற்காக முல்தான் கப்பலில் பயணம் தொடங்குவதற்கு முன் காந்தியை சந்தித்த தாழ்த்தப்பட்ட வர்க்கங்களின் தலைவர் டாக்டர் அம்பேத்கர், தீண்டத்தகாதவர்களின் கோரிக்கைகள் தொடர்பாக காங்கிரசின் நேர்மையற்ற கண்ணோட்டம் குறித்து காந்தியிடம் ஒருசில அப்பட்டமான உண்மைகளைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. “நாடு முழுவதும் தீண்டாமையில் நம்பிக்கை கொண்டிருக்கும்போது, அப்பாவி ‘மகாத்மா' என்ன செய்ய முடியும்?”

மறுநாள், 1931, ஆகஸ்டு 15. ஏறக்குறைய அனைத்து வட்டமேசை மாநாட்டுப் பிரதிநிதிகளும் எஸ்.எஸ். முல்தான் கப்பலில் லண்டனுக்குப் புறப்பட வேண்டியிருந்தது. பம்பாயில் பல்லார்டு கப்பல் துறை அன்று கோலாகலமாகக் காட்சியளித்தது. மன்னர்களிலிருந்து சாதாரணக் குடிமகன் வரை அனைத்து வகைப்பட்ட மக்களும் துறைமுகத்திற்கு வந்திருந்தனர். நண்பர்கள், ஆதரவாளர்கள்,தொண்டர்கள் தமது இளவரசர்களுக்கும் கதாநாயகர்களுக்கும் “சென்று வருக, வென்று வருக” என்று வழியனுப்புவதற்குக் கூடியிருந்தனர். ஆனால், காரிலிருந்து கீழே இறங்கியதும் பெரிய கரவொலி,வாழ்த்தொலிகள் பெற்ற ஒரே தலைவர் டாக்டர் அம்பேத்கர் தான். வெளியில் சாலையில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் கூடிநின்று, மோல் நிலையத்திற்கு வந்துசேர்ந்ததும் அவரை, “டாக்டர் அம்பேத்கர் வாழ்க!”, “டாக்டர் அம்பேத்கர் நீடூழி வாழ்க!” என்ற முழக்கங்களுடன் அவரை வரவேற்றனர்.”

கப்பலில் பிரயாணத்தின்போது, சர். பிரபா சங்கர் பட்டானி என்பவரை டாக்டர் அம்பேத்கர் சந்தித்தார். காந்தியுடனான சந்திப்பின் விளைவு என்ன என்று அவர் கேட்டார். பேட்டியின் மத்தியில் தான் மண்டபத்தை விட்டு வெளியே சென்று விட்டதால், பேட்டியின் விளைவோ முடிவோ தனக்குத் தெரியாது என்று சர். பிரபாசங்கர் டாக்டர் அம்பேத்கரிடம் கூறினார். அவருடைய குரலின் விநோதமான தொனியில் சந்தேகமடைந்த டாக்டர் அம்பேத்கர், பேட்டியின் மத்தியில் அவர் ஏன் மண்டபத்தை விட்டு வெளியேறினார் என்று கேட்டார்.

இந்து வேதங்களின்படி, பழித்துக்கூறும் ஒருவர் ஒரு நல்ல மனிதரை வசைபாடினால், ஒரு கனவான் அந்த இடத்திலிருந்து வெளியேறி விட வேண்டும் என்றும், அவ்வாறு அவர் வெளியேற முடியாவிட்டால், பழி கூறுபவரின் நாக்கை அந்த இடத்திலேயே அறுத்துவிடவேண்டும் என்றும் கடுமையாகக் கூறினார். பிரபாசங்கரின் விவேகமற்ற காழ்ப்புணர்ச்சி கண்டு துணுக்குற்ற அம்பேத்கர், முகத்தில் எந்தவித எரிச்சலின் அடையாளத்தையும் வெளிப்படுத்தாமல், ஓர் அப்பட்டமான பாசாங்குக்காரனுக்கும், அடிமைப் புத்தியின் காரணமாக நேருக்கு நேர் முகஸ்துதி செய்பவருக்கும் பட்டானியின் இந்து வேதங்கள் என்ன தண்டனையைப் பரிந்துரைக்கின்றன என்று கேட்டார். இவ்வாறு அம்பேத்கர் சூடு கொடுத்ததும் பட்டானி ஆத்திரமடைந்து, இவ்வாறு தன்னைக் கடுமையாகத் தாக்கிப் பேசியதன் பொருள் என்ன என்று டாக்டர் அம்பேத்கரைக் கேட்டார்.

பட்டானி என்ன புரிந்து கொண்டாரோ அதுதான் அதன் பொருள் என்றும், அவரைப் போன்ற அப்பட்டமான முகஸ்துதி செய்வோரின் பிடியிலிருந்து காந்தி விடுவிக்கப்பட வேண்டுமென்றும் அவர் மேலும் கூறினார். போலிஸ் கமிஷனர் வில்சன் குறிக்கிட்டு, மேற்கொண்டு நிலைமை மோசமாகாமல் தடுத்தார். பட்டானி கொஞ்சம் விவேகம் பெற்று திரும்பியிருக்கக்கூடும். உண்மையில், அனைத்துப் பெருமக்களும் தங்களைத் தாங்களே சுய பரிசோதனை செய்துகொண்டு, தங்களைச் சுற்றியுள்ள முகஸ்துதி செய்யும் நிகழ்ச்சிகளிலிருந்து தங்களை விலக்கிக் கொண்டால், உலகத்திற்கு எவ்வளவோ நன்மை ஏற்படும்!

காந்தி தனது பயணத்தை அதுவரை முடிவு செய்யாததால், அதே கப்பலில் பயணம்செய்யவிருந்த சரோஜினி நாயுடுவும், மாளவியாவும் தமது பயணங்களை ரத்து செய்தனர். கப்பலில் டாக்டர் அம்பேத்கர் கொடுத்த பேட்டியில், வட்டமேசை மாநாட்டில் பங்கேற்க காந்தி மறுத்ததைக் குறிப்பிட்டு, பர்தோலியின் நலன்களை இந்தியாவின் நலன்களுக்கு மேலானதாக வைப்பதும், “அற்பக் குறைபாடுகளைப் பற்றிக் கவலைப்படுவதும், அதனிலும் பெரிய பிரச்சினையைப் பற்றி - அதற்கு தீர்வு காண்பதும், அவர் குறிப்பிடும் அந்த அதிகாரிகளின் மீதே கட்டுப்பாடு செலுத்த வகை செய்யும் என்பதை - மனதில் கொள்ளாமலிருப்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.” அது மடமைøயின் உச்சநிலை என்று குறிப்பிட்டார்.

தன்னுடைய கோரிக்கைகளை எதிர்ப்பதென்ற காந்தியின் முடிவு குறித்து அம்பேத்கர் இப்பொழுது ஆழமாக சிந்தித்துக் கொண்டிருந்தார். எனவே அவர், கூட்டங்களை நடத்தும்படியும், தங்களுடைய கோரிக்கைகளின் பாலான காந்தியின் கண்ணோட்டத்தைக் கண்டனம் செய்யுமாறும், தனது மக்களுக்குத் தனது செயலாளர் மூலம் தந்தி அனுப்பினார். சூயஸிலிருந்து சிவதர்க்காருக்கு அனுப்பிய மற்றொரு கடிதத்தில், வட்ட மேசை மாநாட்டின் முதல் கூட்டத் தொடரில் சிறுபான்மையோர் துணைக் குழுவுக்கு அளித்த விண்ணப்பத்தின் பிரதிகளை அனுப்பும்படி அவர் கேட்டிருந்தார். தான்விட்டு விட்டுப் போன தோல் பையை ராவ் பகதூர் ஆர். சீனிவாசனிடம் கொடுத்து அனுப்பி வைக்கும்படி அவர் கேட்டிருந்தார்.

தீண்டத்தகாதவர்களின் தலைவராக இருப்பதற்காக, மூஞ்சே டாக்டர் அம்பேத்கருக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் அளவிற்குச் சென்றார். அவர்கள் தங்களுடைய லட்சியத்திற்கு டாக்டர் அம்பேத்கரின் பணிகளைத் தெரிந்து கொள்ளும் அளவிற்கு உணர்வுடன் இருக்கிறார்கள். தங்களுக்கு நன்மை செய்யவிழையும் தலைவர்களைத் தெரிந்து கொள்ளாமலிருக்கும் சாதி இந்துக்களைப் போல் அவர்கள் அசட்டையாகவும், நன்றியற்றவர்களாகவும் இருக்கவில்லை.

ஆகஸ்டு 29இல் லண்டனைச் சென்றடைந்தபோது, டாக்டர் அம்பேத்கர் ‘இன்புளுயென்ஸா' காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். வாந்தி மற்றும் பேதியினால் மிகவும் கஷ்டப்பட்டார். இந்த உடல்நலக் குறைவு அவருடைய ஆற்றலை மிகவும் வற்ற வைத்தது. இதனால் அவர் சிவதர்க்கருக்கு எழுதிய கடிதத்தில், தனது உடல்நிலை ஒரு நெருக்கடியின் விளிம்பில் இருக்கிறது என்று அவர் எழுதினார். செப்டம்பர் 7 முதல் அவர் உடல் நலம்தேறி வருவதாக உணரத் தொடங்கினார். இருப்பினும் பலவீனம் இருந்தது. தனது உடல் நலக்குறைவு குறித்து தன் மனைவிடம் ஒரு வார்த்தைக்கூடக் கூறக்கூடாது என்று அவர் சிவதர்க்கரிடம் தொடர்ந்து கூறிவந்தார். ஒரு விஷயம் அவரிடம் பலமாகக் குடிகொண்டது. மஹத் சப் ஜட்ஜ் நீதிமன்றத்தில் தோல்வியடைந்த வைதிக இந்துக்கள், தாணாவிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்கள். தாணா மாவட்ட நீதிபதியின் தீர்ப்பு நிலுவையிலிருந்தது. தீர்ப்பு வழங்கப்பட்டவுடனே அதுபற்றி தனக்குத் தெரிவிக்கும்படி சிவதர்க்கருக்குத் தெரிவித்திருந்தார்.

- தொடரும்