காதல் என்கின்ற வார்த்தை தமிழா? வடமொழியா என்பது ஒரு புறமிருந்தாலும், தமிழ் மொழியாகவே வைத்துக் கொண்டாலும் - அதற்கு ஆண் பெண் கூட்டுத் துறையில் அன்பு, ஆசை, ஆவல், நட்பு, நேசம், விரகம் என்பவைகளைத் தவிர வேறு பொருள் எங்கும் எதிலும் காணப்படவில்லை. அதன் வேறு விதமான பிரயோகமும் நமக்குத் தென்படவில்லை.

மற்றபடி, தனித் தமிழ் மொழியில் பார்த்தாலும் ஆண் பெண் சேர்க்கை - கூட்டு முதலாகியவை சம்மந்தமான விஷயங்களுக்கும், அன்பு, ஆசை, நட்பு, நேசம் என்பவைகளைத் தவிர வேறு தமிழ் மொழியும் நமக்குக் காணப்படவில்லை. இவைகளுடன் காதல் என்பதைச் சேர்த்துக் கொண்டாலும், இக்கருத்துகளையேதான் மாற்றி மாற்றி ஒன்றுக்கு மற்றொன்றாகக் கூறப்படுகின்றதே தவிர, காதலுக்கென்று வேறு பொருளில்லை. ஆதலால் இவைகளின்றி காதல் என்பதற்கு வேறு தனி அர்த்தம் சொல்லுகின்றவர்கள், அதை எதிலிருந்து எந்தப் பிரயோகத்திலிருந்து கண்டுபிடித்தார்கள் என்பதும் நமக்கு விளங்கவில்லை.

இந்தப் படியும் கூட ஓர் ஆணுக்கு ஒரு பெண்ணிடத்தில் காதல் ஏற்பட்டு, அந்தப் பெண்ணுக்கு அந்த ஆணிடத்தில் காதல் ஏற்படாமல் போனாலும் போகலாம். இந்தப்படியே ஒரு பெண்ணுக்கு ஓர் ஆணிடம் காதல் ஏற்பட்டு, அந்த ஆணுக்கு அந்தப் பெண்ணிடம் காதல் ஏற்படாமல் போனாலும் போகலாம். எப்படியும் ஒரு மனிதன் ஒரு வஸ்துவைப் பார்த்த மாத்திரத்தில், கேட்ட மாத்திரத்தில், தெரிந்த மாத்திரத்தில் அந்த வஸ்து தனக்கு இருக்கலாம் - வேண்டுமென்பதாக ஆசைப்படுகின்றானோ, ஆவல் கொள்கிறானோ அதுபோல்தான் இந்த காதல் என்பதும் ஏற்படுவதாயிருக்கின்றதே தவிர, வேறு எந்த வழியிலாவது ஏற்படுகின்றதா என்பது நமக்குப் புலப்படவில்லை.

எப்படிப்பட்ட காதலும் ஒரு சுய லட்சியத்தை அதாவது தனது இஷ்டத்தை - திருப்தியைக் கோரத்தான் ஏற்படுகின்றதே தவிர வேறில்லை என்பதும், காதலர்கள் என்பவர்களின் மனோபாவத்தை கவனித்தால் விளங்காமல் போகாது. அதாவது அழகைக் கொண்டோ, பருவத்தைக் கொண்டோ, அறிவைக் கொண்டோ, ஆஸ்தியைக் கொண்டோ, கல்வியைக் கொண்டோ, சங்கீதத்தைக் கொண்டோ, சாயலைக் கொண்டோ, பெற்றோர் பெருமையைக் கொண்டோ, தனது போகபோக்கியத்திற்கு பயன்படுவதைக் கொண்டோ அல்லது மற்றும் ஏதோ ஒரு திருப்தியை அல்லது தனக்குத் தேவையான ஒரு காரியத்தையோ, குணத்தையோ கொண்டே தான் யாரும் எந்தப் பெண்ணிடமும், ஆணிடமும் காதல் கொள்ள முடியும். அப்படிப்பட்ட அந்தக் காரியங்களெல்லாம் ஒருவன் காதல் கொள்ளும்போது, இவன் அறிந்தது உண்øமயாகவும் இருக்கலாம் அல்லது அங்கு இருப்பதாக அவன் நினைத்துக் காதல் கொண்டு இருந்தாலும் இருக்கலாம் அல்லது வேஷ மாத்திரத்தில் காட்டப்பட்டதாக இருந்தாலும் இருக்கலாம்.

உதாரணமாக, ஒரு நந்தவனத்தில் ஒரு பெண் உல்லாசமாய் உலாத்துவதை ஓர் ஆண் பார்க்கிறான். பார்த்தவுடன் அந்தப் பெண்ணும் பார்க்கிறாள். இரண்டு பேருக்கும் இயற்கையாய் ஆசை உண்டாகிவிட்டது. பிறகு நீ யார் என்று இவர்களில் யாரோ ஒருவர் கேட்கிறார்கள். பெண் தன்னை ஓர் அரசன் குமார்த்தி என்று சொல்லுகிறாள். உடனே ஆண் காதல் கொண்டு விடுகிறான். இவனை யார் என்று அவள் கேட்கிறாள். இவன் தான் ஒரு சேவகனுடைய மகன் என்று சொல்லுகிறான். உடனே அவளுக்கு அசிங்கப்பட்டு, வெறுப்பேற்பட்டு போய்விட்டது. இது சாதாரணமாய் நிகழும் நிகழ்ச்சி. இங்கு ஏற்பட்ட காதல் எதை உத்தேசித்தது?

நிற்க, அவன் தன்னை சேவகன் மகன் என்று சொல்லாமல், தானும் ஒரு பக்கத்து தேசத்து ராஜகுமாரன் என்று சொல்லி விட்டால், அவளுக்கு அதிக காதல் ஏற்பட்டு, “மறு ஜென்மத்திலும் இவனை விட்டுப் பிரியக் கூடாது” என்று கருதிவிடுகிறாள். 4ஆம் நாள் பொறுத்த பின்புதான் காதல் கொண்டவன் அரச குமாரன் அல்ல என்றும் சேவகன் மகன் என்று அறிந்தாள் என்று வைத்துக் கொள்வோம். இந்த நிலையில் அந்தக் காதல் அப்படியே இருக்குமா? அல்லது இருந்தாக வேண்டுமா என்பதை யோசித்துப் பார்த்தால் காதல் ஏற்படும் தன்மையும், மறுக்கும் தன்மையும் விளங்கும்.

இந்தப்படிக்கே ஒரு பெண்ணை நோயல்லாதவள் என்று கருதி ஒருவன் காதல் கொண்டபின் நோயுடையவள் என்று தெரிந்தது அல்லது மற்றவனுடைய மனைவி என்று தெரிந்தது அல்லது ஒரு தாசி என்று தெரிந்தது அல்லது தன்னை மோசம் செய்து தன்னிடம் உள்ள பொருளை அபகரிக்க வந்தவள் என்று தெரிந்தது. இதுபோலவே இன்னமும் தான் முதலில் நினைத்ததற்கு அல்லது தனது நன்மைக்கும், திருப்திக்கும், இஷ்டத்திற்கும் விரோதமாயோ, தான் எதிர்பார்க்காத கெட்ட காரியத்திற்கு அனுகூலமாகவோ ஏற்பட்டுவிட்டால் அந்தக்காதல் பயன்படுமா? அதை எவ்வளவுதான் கட்டிப் போட்டாலும் அது இருக்க முடியுமா? என்பவைகளை யோசித்தால், உண்மைக் காதலின் நிலையற்ற தன்மை விளங்காமல் போகாது.

- தொடரும்

‘குடி அரசு' - 18.01.1931