பேச திராணியற்று இருக்கிறது கடைசிக் குரல்

மரணத்திற்கு முன்னான சொற்கள்

விதைக்கப்படாத தானியங்களாய்

இறைந்து கிடக்கின்றன.

 

வயல்வெளிகளில் உழவின் பாடல்கள்

உதிர்ந்துபோன மகரந்த சூல்களென கிடக்கின்றன.

 

da_40நிலங்களில் சருகுகளைப் போல

உடல்கள்

மரணத்தை அறுவடை செய்த வலி

உயிர்களில் விளைகின்றது.

 

துர்வாசம் வீசும் ஆயுதங்கள் பறித்த

வாழ்க்கையின் கரைகள்

கண்ணீரின் சிவப்பு நுரைகளால்

நிறைந்திருக்கின்றன.

 

காய்ந்த மரக்கட்டைகளும்

சாய்ந்த உடல்கட்டைகளும்

வளர்ந்த நிலத்திலேயே

அடுக்கப்படுகின்றன.

 

வீழ்த்தப்பட்ட வயல்களில்

வீழ்த்தப்பட்ட உடல்கள்

யாரின் ஆயுதங்களும்

கொத்திச் செல்ல

ஏதுவானவைதான் உழைக்கும் உயிர்கள்.

- யாழன் ஆதி