periyar_283உண்மைக் காதல் என்பது, ஒருவரை ஒருவர் பார்த்தவுடன் உண்டாகுமா? அல்லது கொஞ்ச நாளாவது பழகியவுடன் உண்டாகுமா? பார்த்ததும் ஏற்பட்ட காதல் உயர்வானதா? அல்லது சிறிது நாள் பழகியபின் ஏற்படும் காதல் உயர்வானதா? சரீரத்தைக் கூட சரியாய் தெரிந்து கொள்ளாமல் தூர இருந்து பார்ப்பதாலேயே ஏற்படும் காதல் நல்லதா? அல்லது சரீரத்தின் நிலை முதலியவைகள் தெரிந்து திருப்தி அடைந்த காதல் நல்லதா என்பவைகளை கவனிக்கும் போது - சரீர மாறுபாடாலும், பொருத்தமின்மையாலும் ஏன் எப்படிப்பட்ட உண்மைக் காதலும் மாற முடியாது என்பதற்கு என்ன விடை பகர முடியும்?

அல்லது உண்மையாகவே ஒருத்தன் ஒருத்தியுடன் காதல் கொண்டு விட்டால், ஒருத்தி தப்பாய் அதாவது வேறு ஒருவனிடம் காதல் கொண்டுவிட்டதாய் கருத நேர்ந்தால் - அது பொய்யாகவோ, மெய்யாகவோ இருந்தாலும் தன் மனதுக்கு சந்தேகப்படும்படி விட்டால், அப்போது கூட காதல் மாறாமல் இருந்தால்தான் உண்மைக் காதலா? அல்லது தன் மனம் சந்தேகப்பட்டால், அதிருப்தி அடைந்தால் நீங்கிவிடக் கூடிய காதல், குற்றமான காதலா என்பதற்கு என்ன மறுமொழி பகர முடியும்?

ஒரு ஜதை காதலர்களில் அவ்விருவரும் ஞானிகளாய் துறவிகளாய் விட்டார்களானால், இந்த சந்தர்ப்பத்தில் ஒருவரை ஒருவர் பிரிவதும் வெறுப்பதும் காதலுக்கு விரோதமாகுமா? விரோதமானால் அப்படிப்பட்ட காதல் பயன்படுமா? விரோதமில்லையானால், ஒருவர் ஞானியாகி துறவியாகிவிட்டதால் மற்றவரை விட்டுப் பிரிந்து கொள்ளுவது காதலுக்கு விரோதமாகுமா என்பதையும் கவனித்தால், காதலின் யோக்கியதை விளங்காமல் போகாது. பொதுவாக மனித ஜீவன் ஒன்றைப் பார்த்து நினைத்து ஆசைப்படுவதும், ஒன்றினிடம் பலதினிடம் அன்பு வைப்பதும் நேசம் காட்டுவதும் இயற்கையேயாகும்.

அதுபோலவே மனிதனுக்குத் தானாகவே எதிலும் விரக்தி வருவதும், வெறுப்புக் கொள்வதும், பிரிவதும் இயற்கையேயாகும், பலவீனமாய் இருக்கும் போது ஏமாந்து விடுவதும், உறுதி ஏற்பட்ட பின்பு தவறுதலைத் திருத்திக் கொள்ள முயற்சிப்பதும், அனுபவ ஞானமில்லாதபோது கட்டுப்பட்டு விடுவதும், அனுபவம் ஏற்பட்ட பிறகு விடுதலை செய்து கொள்ளுவதும் இயற்கையேயல்லவா?

உதாரணமாக, ஒரு வாலிபன் ஏமாந்து ஒரு தாசியிடம் காதல் கொண்டு சொத்துகளையெல்லாம் கொடுத்து விடுவதைப் பார்க்கிறோம். அந்த வாலிபனுக்கு அந்த தாசியிடம் ஏற்பட்டது காதல் என்பதா? அல்லது காமம் என்பதா? அதே தாசி - சில சமயத்தில் தனக்கு தாசி தொழில் பிடிக்காமல் இந்த வாலிபனிடமே நிரந்தரமாயிருந்து காலத்தைக் கழிக்கலாம் என்று கருதி விடுவதைப் பார்க்கிறோம். ஆகவே, இந்த தாசி கொண்டது காதலா அல்லது வாழ்க்கைக்கு ஒரு சவுகரியமான வழியாய் இதை வாலிபன் அறியாமல் நேசத்தை வளர்த்துக் கொண்டே வந்தால், இது ஒத்தக் காதலாகி விடுமா? இப்படியெல்லாம் பார்த்தால் காதல் என்பது ஆசை, காமம், நேசம், மோகம், நட்பு என்பதைவிட சிறிதுகூட சிறந்தது அல்லவென்பது விளங்கிவிடும்.

அதற்கு ஏதேதோ கற்பனைகளை கற்பித்து, ஆண் பெண்களுக்குள் புகுத்தி விட்டதால், ஆண் பெண்களும் தாங்கள் உண்மையான காதலர்கள் என்று காட்டிக் கொள்ள வேண்டுமென்று கருதி, எப்படி பக்திமான் என்றால் இப்படி இப்படி எல்லாமிருப்பான் என்று சொல்லப்பட்டதால், அனேகர் தங்களை பக்திமான்கள் என்று பிறர் சொல்ல வேண்டுமென்று கருதி பூச்சுப் போடுவதும், பட்டை நாமம் போடுவதும், சதா கோயிலுக்குப் போவதும், பாட்டுகள் பாடி அழுவதும் வாயில் சிவ சிவ என்று சொல்லிக் கொண்டிருப்பதுமான காரியங்களைச் செய்து, பக்திமான்களாகக் காட்டிக் கொள்ளுகின்றார்களோ அதுபோலும், உண்மையான காதலர்களானால், இப்படி இருப்பார்களே என்று சொல்லிவிட்டால் அல்லது அதற்கு இலக்கணம் கற்பித்து விட்டால், அதுபோலவே நடந்து காதலர்கள் என்பவர்களும் தங்கள் காதலைக் காட்டிக் கொள்கிறார்கள். இதற்காகவே அவர்கள் இல்லாத வேஷத்தையெல்லாம் போடுகிறார்கள்.

ஆகவே ஆசையைவிட, அன்பைவிட, நட்பைவிட காதல் என்பதாக வேறு ஒன்று இல்லை என்றும், அவ்வன்பு, ஆசை, நட்பு ஆகியவைகள் கூட மக்களுக்கு அக்ரிணைப்பொருள்கள் இடத்திலும் மற்ற உயர்திணைப் பொருள்களிடத்திலும் ஏற்படுவது போல்தானே ஒழிய வேறில்லை யென்றும், அதுவும் ஒருவருக்கொருவர் அறிந்து கொள்வதிலிருந்து, நடவடிக்கையில் இருந்து, யோக்கியதையில் இருந்து, மனப்பான்மையில் இருந்து, தேவையில் இருந்து, ஆசையில் இருந்து உண்டாவதென்றும் அவ்வறிவும் நடவடிக்கையும் யோக்கியதையும் மனப்பான்மையும் தேவையும் ஆசையும் மாறக்கூடிய தென்றும், அப்படி மாறும்போது அன்பும் நட்பும் மாற வேண்டியது தான் என்றும், மாறக் கூடியதுதான் என்றும் நாம் கருதுகின்றோம். ஆகவே இதிலிருந்து நாம் யாரிடமும் அன்பும், ஆசையும், நட்பும் பொருளாகக் கொண்ட காதல் கூடாதென்றோ, அப்படிப்பட்டதில்லை என்றோ சொல்ல வரவில்லை.

-     குடிஅரசு – 18.01.1931

Pin It