“ஜாதிதான் இந்திய சமூக அமைப்பிற்கு அடிப்படையாக உள்ளது. ஜாதியைப் பற்றிய பதிவுதான், இந்திய சமூகத்தின் பல்வேறு சமூக அடுக்குகளில் ஏற்படும் மாற்றங்களை அறிவதற்கு சிறந்த வழிகாட்டியாகும். ஒவ்வொரு இந்துவும் ஒரு ஜாதியில் பிறக்கிறார் (இந்தச் சொல் இதன் மிக விரிந்த பொருளில் பயன்படுத்தப்படுகிறது) ஜாதிதான் அவருடைய மத, சமூக, பொருளாதார, குடும்ப வாழ்க்கையை - தொட்டில் முதல் சுடுகாடு வரை தீர்மானிக்கிறது... ஒரு தேசிய அல்லது சமூக அமைப்பு என்ற முறையில் ஜாதியைப் பற்றி என்ன கருத்து கொண்டிருந்தாலும், அதைப் புறக்கணிப்பது பயனற்றது. ஒரு தனி மனிதனின் அதிகாரப்பூர்வ மற்றும் சமூக நிலையை அடையாளம் காட்டும் முக்கிய அம்சங்களில் ஒன்றாக ஜாதி பயன்படுத்தப்படும் வரை, பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அதைக் கணக்கெடுப்பது - ஓர் அமைப்பை நிரந்தரமாக்க உதவுகிறது என்று கூற முடியாது.''

- டாக்டர் அம்பேத்கர், ஆங்கில நூல் தொகுப்பு : 5; பக்கம் : 6

இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களும் ‘ஊர்' என்றும் ‘சேரி' என்றும் பல நூற்றாண்டுகளாகப் பிரிந்து கிடப்பதால், ஜாதி நிலைப் பெறவில்லையாம்; இந்தியாவில் இருக்கும் அத்துனை இந்துக்களும் - பிறக்கும் போதே ஜாதி அடையாளத்துடன் பிறந்து, செத்த பிறகும் ஜாதி அடையாளத்துடனேயே புதைக்கப்படுவதால், ஜாதி நிலைப்பெறவில்லையாம்; இந்துக்களும், இந்துக்கள் அல்லாத கிறித்துவர்களும்கூட, தங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு அவர்களுடைய சொந்த ஜாதியிலேயே வரன் வேண்டும் என்று எவ்விதக் கூச்சநாச்சமுமின்றி, நாள்தோறும் விளம்பரப்படுத்திக் கொள்வதால் ஜாதி நிலைப் பெறவில்லையாம்; இந்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஜாதி பார்த்து வேட்பாளர்களை நிறுத்துவதால், ஜாதி நிலைப் பெறவில்லையாம்; இன்றளவும் தெருக்கள், கடைகள், பள்ளிகள், அறக்கட்டளைகள் போன்ற நிறுவனங்களில் நாறும் ஜாதிப் பெயர்களால் ஜாதி நிலைப்பெறவில்லையாம்; சட்டத்திற்கு எதிரான ஜாதி அமைப்புகள், ஜாதி கூட்டங்கள் மற்றும் ஜாதிய சட்டங்களால், ஜாதி நிலைப் பெறவில்லையாம்! மக்கள் தொகை கணக்கை எடுக்கும்போது, ஜாதியை ஓர் அலகாக சேர்த்துக் கொள்வதால் மட்டுமே ஜாதி நிலைப்பெற்றுவிடும் என்று சொல்கிறார்கள், "இந்து' இந்தியாவின் ஆதிக்க ஜாதி ஆளும் வகுப்பினர்.

சாதித் தொகையை கணக்கெடுப்பதால், பெரும்பான்மையாக இருக்கக்கூடிய சாதிகள், நாட்டையே அச்சுறுத்தும் ஆபத்து இருப்பதாக ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. இந்நாட்டிலுள்ள எந்தவொரு தனிப்பட்ட சாதியும் பெரும்பான்மை ஆக முடியாது. "பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை' என்று ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, அவை 50 சதவிகிதமாக (தற்பொழுது இருப்பதைப் போலவே) மலைப்பாகத் தெரியலாம். ஆனால், எந்த இரண்டு சாதிகளும் சமமானவையாகவோ, முரணற்றவையாகவோ இல்லை என்பதுதான் உண்மை.

இந்திய ஜனநாயகத்தின் மிக முக்கியமான நான்கு தூண்களில், சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் மட்டும்தான் - பிற்படுத்தப்பட்டோருக்கும் தலித்துகளுக்கும் போதிய பிரதிநிதித்துவம் இருக்கிறது. எஞ்சிய அமைப்புகளான நீதிமன்றம், அரசு எந்திரம் மற்றும் ஊடகத் துறையில் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய இம்மக்கள், போதிய பிரதிநிதித்துவம் பெற்றிருக்கவில்லை. அவ்விடங்களை எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருக்கக்கூடிய பார்ப்பனர்களும், அவர்களுக்கு அடுத்த வர்ண நிலையில் இருக்கும் சாதிகளுமே ஆக்கிரமித்து வருகின்றனர். மண்டல் குழு பரிந்துரைக்குப் பிறகுதான் (20 ஆண்டுகளாக) 50 சதவிகிதம் இருக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, மத்திய அரசுத் துறையில் 27 சதவிகிதப் பிரதிநிதித்துவம் கிடைத்திருக்கிறது. தலித்துகளுக்கு அதற்கு முன்பே இடஒதுக்கீடு இருந்தும், அவை 10 சதவிகிதம்கூட நடைமுறைப்படுத்தப்படவில்லை என்ற உண்மை - பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை மறுப்பதற்கான காரணங்கள் ஆகா!

அரசியலில் பிற்படுத்தப்பட்டோர் ஆதிக்கம் செலுத்துவதற்குக் காரணம், அவர்கள் சமூகத் தளத்தில் செல்வாக்குப் பெற்றிருப்பதுதான். ஜாதித் தொகை கணக்கெடுப்பை நடத்தாதபோதும், அவர்கள் தலித்துகள் மீது பல்லாண்டுகளாக ஆதிக்கம் செலுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதற்குக் காரணம் ஜாதி அமைப்பு. அதைத் தகர்ப்பதற்கான போராட்டத்தையும், 5 சதவிகிதம்கூட இல்லாத பார்ப்பனர்கள், நாட்டை நிர்வகிப்பதில், பெரும்பான்மை இடங்களை அபகரித்துக் கொள்வதைத் தடுப்பதற்கு உதவும் பிரதிநிதித்துவ உரிமையையும் சேர்த்து குழப்பிக் கொள்ளக் கூடாது. சாதி - தீண்டாமையை ஒழிக்க, அதற்கு ஆதாரமாக இருக்கும் இந்து மதத்தை ஒழிப்பதே அம்பேத்கர் காட்டிய வழிமுறை.

நூறு இடங்களில், தலித் (15%) மற்றும் பழங்குடியினருக்கான (7.5%) பிரதிநிதித்துவம் மற்றும் தற்பொழுது பிற்படுத்தப்பட்டோருக்கான (27%) பிரதிநிதித்துவம் போக எஞ்சியிருப்பவற்றை, காலங்காலமாக எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருக்கக்கூடிய சாதிகள் அபகரிப்பது ஜனநாயகமா? இந்த ஆபத்துக்கு பரிகாரமாக, பெரும்பான்மை மக்களுக்கு அவர்களுடைய எண்ணிக்கைக்கேற்ப பிரதிநிதித்துவம் கேட்பது ஜனநாயகமா?