தாழ்த்தப்பட்ட மக்களின் கோரிக்கைகள் தொடர்பாக காந்தியின் நிலையை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. சுருங்கக் கூறின், அது நியாயமற்றதும் மிக மிக எரிச்சலூட்டுவதுமாகும். எந்த சமூகத்திற்காவது முழு பாதுகாப்பு தேவைப்படுகிறதென்றால், அது தீண்டத்தகாத வர்க்கங்களுக்குதான் தேவைப்படுகிறது. முஸ்லிம்களும் சீக்கியர்களும் நன்கு பாதுகாக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஒரு சக பத்திரிகை கூறுவது போல, “அவர்களாகவே உருவாக்கிக் கொண்ட அச்ச நிலைமை, காமன்வெல்த்தில் ஓர் உயர்ந்த நிலையைப் பெறுவதற்கான ஒரு முகமூடியேயாகும். வலுவான சமூகங்களின் பொய்யான உரிமைக் கோரிக்கைகளுக்கு விட்டுக் கொடுத்துவிட்டு, தீண்டத்தகாதோரின் கோரிக்கைகளை நிராகரிப்பது சரிதானா என்று இப்பொழுது "மகாத்மா'ஜியைக் கேட்கிறோம். வகுப்புவாரிப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான அவருடைய முயற்சிகள், இதுவரையில் பயனளிக்காமல் போயிருக்கிறதெனில், அதற்கு அவருக்கும் பொறுப்பு உண்டு.

“டாக்டர் அம்பேத்கரின் ஆவேசக் குமுறல்கள் வருத்தமளிக்கக்கூடியதாக இருப்பினும், அவை நன்கு ஆதாரப்பட்டவையாக இல்லாத போதும் புரிந்து கொள்ளத்தக்கதாகும். காங்கிரசின் ஆணை என்று கூறப்படுவதன் பின்னே பாதுகாப்பு தேடுவது பயனற்றதாகும். இது, நடைமுறையில் காந்தி விரும்புவது போல் நெகிழும் தன்மையுடையதாகும். தீண்டாமையை அகற்றுவது குறித்து காங்கிரஸ் மேற்பூச்சு பூசி வருகிறது. இல்லாவிட்டால், நேரு குழுவில் தாழ்த்தப்பட்ட வர்க்கங்களின் ஒரு பிரதிநிதியை ஏன் சேர்த்துக் கொள்ளவில்லை என்று நாங்கள் கேட்கிறோம்.''

“சிறுபான்மையினர் பிரச்சினை தொடர்பாக எந்த உறுதியான முடிவும் எடுப்பதற்கு காலதாமதம் ஏற்படுமானால், அதனால் சுதந்திரம் கிடைப்பதும் தாமதமாகுமேயானால், அப்பொழுது, தொடக்க கட்டத்தில் மாகாண சுயாட்சி ஏற்றுக் கொள்ளத்தக்கதாகும்.'' இவ்வாறுதான் காந்தி, தனது நண்பர்களுடைய ஆலோசனை கேட்காமலேயே, தனது விருப்பத்தை பிரிட்டிஷ் பிரதமருக்குத் தெரிவித்தார். இந்த தனிப்பட்ட உரையாடல் வெளியாவது, இந்தியப் பிரதிநிதிகளிடையில் ஒரு புயலைக் கிளப்பிவிட்டது. முற்போக்கு இந்துக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய டாக்டர் சப்ரூ, ஜெயகர் மற்றும் இந்து மகாசபையைப் பிரதிநிதித்துவப்படுத்திய டாக்டர் மூஞ்சே, மாளவியா முதலியவர்களும் அதிர்ச்சியடைந்தனர். காந்தியின் அறிக்கைகளின் உண்மை நிலையை உறுதி செய்து கொள்ள முயன்றனர்.

ஒரு பார்ப்பனரும் காந்தியுடன் நீண்டகாலத் தொடர்பு கொண்டிருந்தவருமான இந்துலால் யக்னிக், "சண்டே அட்வகேட்' என்ற இதழின் சிறப்பு செய்தியாளராக லண்டனுக்கு சென்றிருந்தார். 1931 டிசம்பர் 6 அன்று "சண்டே அட்வகேட்' இதழில் அவர் இவ்வாறு எழுதினார் :

“மாகாண சுயாட்சியை காந்தி ஏற்றுக் கொள்கிறார். ஆனால், காந்தி ஏற்கனவே, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் கனிவான கரங்களினுள் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டுவிட்டார் என்று நான் துணிந்து கூறுகிறேன். இந்தியாவிற்குப் புதிய சுயாட்சித் திட்டத்தின் முதல் தவணையாக, மாகாண சுயாட்சிக்கு ஒத்துக் கொள்வதற்கு லோதியான் பிரபுவுடன் காந்தியின் ரகசிய ஒப்பந்தம் குறித்து கடந்த வாரம் நான் ஓரளவு போகிற போக்கில் குறிப்பிட்டேன். இந்தியாவிற்கான புதிய சமஷ்டி அரசியல் சாசனத்தைத் தயாரிப்பதற்கு அதிகாரம் பெறுகின்ற அரசியல் நிர்ணயசபையை உருவாக்குவதற்கு, சுய ஆட்சி

மாகாணங்கள் மற்றும் சமஸ்தானங்களின் பிரதிநிதிகள் இறுதியில் அழைக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனைக்கு, இயல்பாகவே  அரசு உடன்படவில்லை என்று நான் அறிகிறேன்.

ஆனால் அவர்கள் விவேகத்துடன் காந்தியின் இந்த ஒப்பந்தத்தைப் பிடித்துக் கொண்டு, அதை சாத்தியமான அளவு பரவலாக அதிகாரப்பூர்வமற்ற முறையில் தான் – பிரபலப்படுத்தினார்கள். ஆனால், தேஜ்பகதூர் சப்ரூ, ஜெயகர் போன்ற மிதவாத அரசியல்வாதிகள், இந்த உரையாடல்களை கேள்விப்பட்டு மிகவும் ஆத்திரமடைந்தார்கள். இது பற்றி காந்தியுடன் வாக்குவாதம் செய்தனர். குறிப்பாக ஜெயகர், காங்கிரஸ் பிரதிநிதியுடன் மிகவும் சீற்றம் கொண்டார் என்று என்னிடம் கூறப்பட்டது. இதைக்கண்டு காந்தி மிகவும் சீற்றமடைந்து, தாம் விரும்பியதைச் செய்வதற்கு தனக்கு சுதந்திரம் இருக்கிறதென்றும், தான் செய்தவற்றுக்கெல்லாம் காங்கிரசை ஒப்புக் கொள்ளச் செய்ய முடியுமென்று தான் உறுதியாக நம்புவதாகவும் பதிலளித்ததாகக் கூறப்பட்டது.

இருப்பினும் இந்த விஷயம் பத்திரிகைகளில் மறைமுகமாக வெளியானவுடனே, காந்தி, இந்த ரகசிய ஒப்பந்தத்திலிருந்து நழுவிக் கொள்வதற்கு தன்னாலான எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டார். ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஓர் ஒருங்கிணைந்த பகுதியான இந்த நிபந்தனைக்கு அரசு ஒத்துக்கொள்ளவில்லைதான். ஆனால் இந்த விஷயம்  தொடர்பாக, "நியூஸ் கிரானிகிள்' பத்திரிகைக்கு காந்தி அளித்த சிறப்புப் பேட்டியை நுணுக்கமாக ஆராய்ந்தால், காந்தி உடனடியாக சுதந்திரம் வழங்கப் படவேண்டுமென்பதற்கு தனது விருப்பத்தைத் தெரிவிக்கும் அதேவேளை – இது பிரிட்டனுடன் பங்காளியாக இருப்பது மற்றும் இந்தியாவுடன் ஏகாதிபத்திய இணைப்பைப் பராமரிப்பது என்பதே இதன் பொருளாகும். இந்தியாவில் உடனடியாக ஒரு சமஷ்டி அரசியல் சாசனத்தைத் தொடங்கி வைப்பதில் கணிசமான இடர்ப்பாடுகள் உள்ளன என்பதை மறைமுகமாக நடைமுறையில் ஒத்துக் கொள்ளவே செய்கிறார்.''

டாக்டர் அம்பேத்கர் லண்டனை விட்டு புறப்பட்டார், 1932 சனவரி 15 இல் மார்சேல்ஸில் கப்பல் பயணத்தைத் தொடங்கி அவர், சனவரி 29 இல் பம்பாய் வந்தடைந்தார். “வாக்குரிமைக் குழு வெளியிட்ட கேள்விகளுக்கு டாக்டர் அம்பேத்கர் பதில்களைத் தயார் செய்தார். அதன் நகல்கள், பல்வேறு தனி நபர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் (காளான்கள் போல் தோன்றிய) சங்கங்களுக்கும் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. சங்கம் அல்லது தனி நபர்களின் பெயர்களை நிறைவு செய்வதற்காக, ஒவ்வொரு பாராவின் தொடக்கத்திலும் காலி இடம் விட்டு வைக்கப்பட்டது.

விநியோகம் செய்யப்பட்ட கேள்வித்தாள்களுக்கு ஒரே மாதிரியான பதில்கள் நூற்றுக்கணக்கில் வந்தன. “..... (சங்கத்தின் பெயர் இங்கு நிரப்பப்பட வேண்டும்) பொதுவாக தொகுதிகளில் தாழ்த்தப்பட்ட வர்க்கங்களுக்குப் பிரதிநிதித்துவம் கிடைக்காது என்று கருதுகிறோம். அது போன்றே தமது விருப்பப்படியான பிரதிநிதிகளையும் பெறமுடியாது. வயது வந்தோருக்கு வாக்குரிமை வழங்கப்பட்டாலும்கூட, இதுதான் நிலைமை. இதற்கான காரணங்கள் பின்வருமாறு :

(அ) ஒவ்வொரு பிரதேசத் தொகுதியிலும் தாழ்த்தப்பட்ட வர்க்கங்கள் மக்கள் தொகையில் சிறுபான்மையினராகவே உள்ளனர். தொகுதியின் வாக்காளர்களிடையிலும் அவர்கள் சிறுபான்மையோராகவே இருப்பார்கள். இவ்வளவு எண்ணிக்கையிலான வாக்காளர்களைக் கொண்டு, அவர்களால் ஓரிடத்தையும்  வெல்ல முடியாது.

(ஆ) சமூக வெறுப்புகளின் காரணமாக, ஆதிக்க சாதியைச் சேர்ந்த எந்த வாக்காளரும் தாழ்த்தப்பட்ட வர்க்கங்களின் வேட்பாளர் களுக்கு வாக்களிக்க மாட்டார்.

(இ) அதற்கு மாறாக,  ஆதிக்க சாதிகளின் மீது பொருளாதார ரீதியில் சார்ந்திருப்பதாலும், உயர் வர்க்கங்களின் சமய மற்றும் சமூக செல்வாக்கினாலும் வாக்காளர்கள், தமது சொந்த வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு வேட்பாளருக்கு எதிராக, ஓர்  ஆதிக்க சாதி வேட்பாளருக்கு வாக்களிக்கச் செல்லக்கூடும். எந்த தாழ்த்தப்பட்ட வர்க்க நபரும், ஆதிக்க சாதிகளின் ஆதரவுடன் ஒருபோதும் கவுன்சிலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை.

லார்டு லோதியான் தலைமையிலான வாக்குரிமைக் குழுவின் நடவடிக்கைகளில் பங்கேற்பதற்காக, டாக்டர் அம்பேத்கர் உடனே டில்லிக்கு புறப்பட்டுச் சென்றார். டில்லிக்கு செல்லும் வழியில் ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் தாழ்த்தப்பட்ட வர்க்கங்களினால் அவர் உற்சாகமாக வரவேற்கப்பட்டார். குறிப்பாக நாசிக், இகாட்புரி, திலோலில், மன்மாட், புசாவல் மற்றும் ஜான்சி ரயில் நிலையங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகள், வண்ணமயமாகவும் பிரமிப்பை ஏற்படுத்துவதாகவும் இருந்தன.

பிப்ரவரியின் தொடக்க நாட்களில், வாக்குரிமைக் குழு பீகாருக்கு வந்தது. ஒவ்வொரு இடத்திலும் தாழ்த்தப்பட்ட மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் டாக்டர் அம்பேத்கரை வரவேற்றனர். குழுவின் பின்னர் பாட்னா வழியாக கல்கத்தாவுக்குச் சென்றனர். அவருடைய கருத்தோட்டம் உள்ள தாழ்த்தப்பட்ட வர்க்கத் தலைவர்கள், வாக்குரிமைக் குழுவின் முன்னால் சாட்சியமளிக்கும் போது, தனித் தொகுதித் திட்டத்திற்கு ஆதரவளித்தனர். ஏனெனில், ஒதுக்கப்பட்ட இடங்களுடன் கூடிய கூட்டுத் தொகுதிகள் முறையில், தாழ்த்தப்பட்ட வர்க்கங்களின் வேட்பாளர்கள் பெரும்பான்மை வாக்காளர்களின் தயவை நம்பியிருக்க நேரிடும் என்றும் அல்லது பெரும்பான்மை சமூகத்தின் கையாட்களால் இடங்கள் வசப்படுத்திக் கொள்ளப்படுவதற்கு எல்லா சாத்தியப்பாடும் இருக்கும். கூட்டுத் தொகுதிகள் வெற்றிகரமாச் செயல்பட வேண்டுமென்றால், அதற்கு முன்னதாக, பெரும்பான்மை சமூகத்திடம் பரந்த மனப்பான்மை ஏற்பட வேண்டும் என்று தாழ்த்தப்பட்ட வர்க்கங்களின் பல தலைவர்கள் கருதினர். அத்தகைய ஒரு சாதகமான சூழ்நிலை அப்பொழுது இருக்கவில்லை என்று அவர்கள் கருதினர்.

இப்பொழுது டாக்டர் அம்பேத்கருக்கு வேறொரு இடையூறு ஏற்பட்டது. ஒதுக்கப்பட்ட (ரிசர்வ்) இடங்கள் மற்றும் கூட்டுத் தொகுதிகளின் அடிப்படையில் டாக்டர் மூஞ்சே, எம்.சி. ராஜாவுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார். எம்.சி. ராஜா, பிரிட்டிஷ் பிரதமருக்கு தனது அறிக்கையை தந்தி மூலம் தெரிவித்தார். அதில் டாக்டர் மூஞ்சேயுடனான தனது ஒப்பந்தத்தின் விவரங்களைக் கொடுத்திருந்தார். இந்த ஒப்பந்தம், டாக்டர் அம்பேத்கரை ஓர் இக்கட்டான நிலையில் வைத்துவிட்டது. எம்.சி. ராஜாதான் டாக்டர் அம்பேத்கருக்கு தந்தி மூலம், தனித்தொகுதிகளுக்கான அவருடைய கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது. தங்களுடைய துன்பங்களை காந்தி அறிய வில்லையென்பது தெளிவு என்றும், எனவேதான் அவர், கூட்டுத் தொகுதிகளை விரும்பாத தாழ்த்தப்பட்ட மக்களின் மீது திணிப்பதற்கு முயன்றுள்ளார் என்றும் ராஜா அதில் குறிப்பிட்டிருந்தார்.                               

– வளரும்

ஜி.ஏ. கவாய்க்கு அம்பேத்கர் எழுதிய கடிதம்

டாக்டர் அம்பேத்கர், அகில இந்திய தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் திரு. ஜி.ஏ. கவாய், எம்.எல்.சி. அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதம் பின்வருமாறு :

பாட்னா, பிப்ரவரி 13

உங்களை நான் லக்னோவிலும், பாட்னாவிலும் எதிர் பார்த்திருந்தேன். உங்களுடைய கடிதம் கிடைக்கின்ற வரையிலும், நீங்கள் ஏன் வரவில்லை என்று நான் வியப்படைந்தேன். நீங்கள் பயணத்தை மேற்கொள்ள முடியாததற்கு உங்களுடைய உடல்நலக்குறைவு காரணமாக இருந்தது குறித்து நான் வருத்தமடைந்தேன்.

என்னுடைய கருத்துகள் அடங்கிய கோரிக்கை மனுவின் ஒரு பிரதியை, உங்களுடைய தகவலுக்காக உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். மனுவின் கடைசி பத்தியில் நமது குழு, வகுப்பு வாரிப் பிரச்சினையை விவாதிக்க "முடியாது' எனவே, உங்களுடைய குழுவும் விவாதிக்க "முடியாது' என்றிருப்பதை நீங்கள் காண்பீர்கள். பிரதமரின் கடிதமும், குழு வெளியிட்ட கேள்வித் தாளும் இதைத் தெளிவுபடுத்துகின்றன. இப்பிரச்சினை தொடர்பாக, டில்லியிலும் லக்னோவிலும் கொடுத்த தீர்ப்பு, இந்தக் கருத்துக்கு ஏற்புடையதாக இருக்கிறது. எனவே, நீங்கள் உங்கள் குழுவிடம் அவர்கள் இப்பிரச்சினையை விவாதிக்க முடியாது என்று கூற வேண்டும். அவர்கள் வற்புறுத்தினால், அதை விவாதிப்பதற்கு நீங்கள் மறுத்துவிட வேண்டும்.

உங்களுடைய தனிக்குறிப்பு, தனித்தொகுதியா, கூட்டுத் தொகுதியா என்று விவாதிப்பதற்கு பதில், விவாதிப்பதற்கு நீங்கள் மறுப்பதாக மட்டும் சொல்லிவிட வேண்டும், ஏனெனில், அது குழுவின் விவாத விதிகளுக்கு அப்பாற்பட்டதாகும். உங்களுடைய சங்கத்திற்கு ஒரு கேள்வித்தாள் வந்துள்ளது என்பதை நான் அறிவேன். ஒரே ஒரு விஷயத்தைப் பற்றி மட்டும் நான் உங்களுக்கு சுட்டிக் காட்ட வேண்டும். திரு. ராஜா அவர்கள் தனது கருத்தை மாற்றிக் கொண்டு, இப்பொழுது கூட்டுத் தொகுதிகளுக்கு ஆதரவாகப் பேசி வருகிறார் என்பதைக் காண நான் அதிர்ச்சியுற்றேன். ஒவ்வொரு வகையிலும் தற்கொலைக்கு ஒப்பான இந்த கொள்கையில், உங்களுடைய அமைப்பு அவரைப் பின்பற்றாது என்று நான் நம்புகிறேன்.

ஆனால் அது அவ்வாறு செய்தால், நம்மிடையே ஒரு நிரந்தரப் பிளவு மற்றும் "நம்மிடையே' ஒரு போர் ஏற்படும் விளைவுகளை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். எப்படியும் அவ்வாறு ஏற்படுவதைத் தவிர்க்க நான் முயன்று வருகிறேன். எனவே, அதை வலியுறுத்த வேண்டாம். எனக்குத் தெரியாமலும், என்னுடைய ஒப்புதல் இல்லாமலும் நீங்கள் எதுவும் செய்ய மாட்டீர்கள் என்ற உங்களுடைய உறுதிமொழியைப் பெறுவதற்கு நான் மகிழ்ச்சியடைவேன்! வாக்குரிமை தொடர்பான கேள்வித்தாளுக்கு விரிவான பதில்களின் தொகுதியை நான் தயாரித்துள்ளேன். அவை தட்டச்சு செய்யப்பட்டவுடனே அதன் ஒரு பிரதியை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். உங்களுடைய கேள்வித் தாளுக்கான என்னுடைய பதில்களின் ஓர் அறிக்கையும், திருத்தப்பட்ட கேள்வித்தாளின் ஒரு பிரதியையும் உங்களுக்கு அனுப்புகிறேன். வகுப்புவாரிப் பிரச்சினை முற்றாக அகற்றப்பட்டிருப்பதை நீங்கள் காண்பீர்கள்.