கனடா – சீனாவிலிருந்தும் ரஷ்யாவிலிருந்தும் ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் இருக்கிறது. இது போன்றே இங்கிலாந்தும் பெரும் போரிலிருந்து வெளியேறியுள்ள நிலையில், தன்னால் எதுவும் செய்ய முடியாத அளவிற்கு மிகவும் களைத்துப் போயிருப்பதாக நினைக்கிறது. எனவே அது சகவாழ்வுக் கோட்பாட்டை உருவாக்கி, ஆதரிக்க விரும்புகிறது. ஆனால், அதற்கும்கூட தொலைவுதான் முக்கிய அம்சம். ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கையில், பூகோள அம்சம் மிகவும் முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும் என்பதை ஒருவர் மறந்துவிடக் கூடாது. ஒவ்வொரு நாட்டின் வெளியுறவுக் கொள்கையும், அது பரிமாற்றம் செய்யும் நாடு தொடர்புடைய பூகோள இட அமர்வுக்கேற்ப நிச்சயமாக வேறுபட வேண்டும்... Ambedkar

பின்னர், அய்யா! "சியாட்டோ' (தென் கிழக்கு ஆசிய ராணுவக் கூட்டணி) தொடர்பாக ஒரு சில வார்த்தைகளைக் கூற விரும்புகிறேன். "சியாட்டோ' தொடர்பாக பிரதமரின் கருத்துக்களை நான் மிகவும் கூர்மையாக கவனித்து வந்தேன். "சியாட்டோ' தொடர்பாக அவர் தனது முடிவான கருத்தை உருவாக்கவில்லை என்பதை அறிய நான் மகிழ்ச்சி அடைந்தேன். அவர் கூறியதை நான் சரியாகக் கேட்டிருந்தேன் எனில், ஜெனிவா முடிவுகளுக்கு ஏற்ப ஏதோ ஓர் ஆணையத்தின் தலைவர் பதவியை இந்த நாடு ஏற்றுக் கொண்டுள்ள அதே நேரத்தில் "சியாட்டோ'வில் இணைவது தனக்கும் இந்த நாட்டுக்கும் பொருத்தமாக இருக்காது என்று அவர் கூறினார். இந்த இரண்டு விஷயங்கள் ஒன்றுக்கொன்று இசைவானதல்ல என்பதில் அய்யமில்லை. ஆனால் அதற்கும் அப்பால், "சியாட்டோ'வின் தகுதிகளை பரிசீலனை செய்தாக வேண்டும் என்று நான் கருதுகிறேன்...

இரண்டாவதாக, இந்தியா "சியாட்டோ'வில் சேர்ந்தால், ரஷ்யா என்ன நினைக்குமோ என்ற அச்சம். இங்கு மீண்டும் "சியாட்டோ'வின் தகுதிகள் மதிப்பிடப்படுவதற்கான ஓரளவு பின்னணியை இந்த அவைக்குக் கொடுப்பது அவசியம் என்று நான் நினைக்கிறேன். அய்யா! இப்பொழுது இவை அனைத்துக்குமான பின்னணி என்ன? அதனுடைய பின்னணி இதுதான்.

ரஷ்ய ஆட்சியின் கீழ் வந்து விட்ட நாடுகளின் பட்டியலை நான் கொடுத்திருந்தேன். இதற்கு முக்கியக் காரணம், கடந்த உலகப் போரின்போது பெருமளவு அமெரிக்கர்களின் முட்டாள்தனத்தினால் தான் இந்நிலை ஏற்பட்டது என்று நான் கூற முடியும். இந்தப் பிரதேசங்களை ரூஸ்வெல்ட்டின் ஒப்புதலுடனும் திரு. சர்ச்சிலின் தயக்கத்துடனான சம்மதத்துடனும்தான் ரஷ்யர்கள் தங்கள் வசப்படுத்திக் கொண்டனர். போர் முடிந்தபோது, ஹிட்லருக்கான வெற்றியைப் பெறுவதன் பொருட்டு, பல நாடுகளின் சுதந்திரத்தைத் தியாகம் செய்ததில் தான் ஒரு பெரும் தவறை, ஒரு பெரிய முறைகேட்டைச் செய்துவிட்டேன் என்று சர்ச்சில் கூறினார்.

அய்யா! இப்பொழுது அமெரிக்கர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? அவர்களுடைய கொள்கையை நான் சரியாகப் புரிந்து கொள்கிறேன் என்றால், அது இதுதான். போரின்போது தனக்குக் கிடைத்த பத்து நாடுகளுடன் ரஷ்யா நிறைவடைந்து விட வேண்டும். உண்மையில், இந்த நாடுகளை விடுவிப்பதை, அமெரிக்கர்களும் பிரிட்டிஷ்காரர்களும் தங்கள் கடமையாக ஏற்றுக் கொண்டிருந்திருக்க வேண்டும் என்று நான் சிந்தித்திருக்க வேண்டும். ஆனால் அவற்றில் எந்த நாட்டுக்கும் அத்தகைய ஒரு மாபெரும் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வதற்கான உறுதியான எண்ணமோ, தார்மீக வலுவோ, விருப்பமோ இல்லை. எனவே, அவர்கள் ஓர் இரண்டாம் வரிசை தற்காப்பு என்றழைக்கப்படுவதைப் பின்பற்றி வருகிறார்கள். அந்த இரண்டாம் வரிசைத் தற்காப்பானது, சுதந்திர உலகத்தில் மேற்கொண்டு எந்தப் பகுதியையும் பிடித்துக் கொள்வதற்கு ரஷ்யாவோ, சீனாவோ அனுமதிக்கப்படக் கூடாது என்பதுதான்.

சுதந்திரத்தை நேசிக்கும் அனைத்து மக்களும் அந்தக் கோட்பாட்டை ஏற்றுக் கொள்வார்கள் என்று நான் நினைக்கிறேன். அதற்கு எந்த ஆட்சேபனை யும் இருக்க முடியாது. ரஷ்யா மேற்கொண்டு எந்த ஆக்கிரமிப்பும் செய்யாமல் தடுப்பதற்காகத்தான் அவர்கள் "சியாட்டோ'வை ஏற்படுத்துவதற்குத் திட்டமிட்டு வருகிறார்கள்." சியாட்டோ'வானது எந்த நாட்டின் மீதும் ஆக்கிரமிப்புச் செய்வதற்கான ஓர் அமைப்பு அல்ல. சுதந்திர நாடுகளின் மீதான ஆக்கிரமிப்பைத் தடுக்கும் செயல்பாட்டுக்கான ஓர் அமைப்புதான் "சியாட்டோ'. இந்தக் கோட்பாட்டைப் பிரதமர் ஏற்றுக் கொள்வதற்குத் தயாராக இருக்க மாட்டாரா என்று நான் வியப்படைகிறேன்.

எப்படி இருந்தபோதிலும், சுதந்திர உலகத்தின் அந்தப் பகுதி – அதாவது தற்செயலாக சுதந்திரமாக இருந்து வந்திருக்கும் பகுதி, சுதந்திரமாக இருப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும். அது அடிமைப்படுத்தப்படக் கூடாது. இந்தியா ஆக்கிரமிக்கப்படும் ஆபத்தில் இருக்கவில்லையா? அது ஆக்கிரமிப்புக்கு எளிதில் ஆட்படும் நிலையில் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். எனக்கு அவகாசமில்லை. இல்லாவிட்டால், எவ்வாறு இந்த நாடு ஒரு பக்கத்தில் பாகிஸ்தானாலும் பிற முஸ்லிம் நாடுகளாலும் முற்றாக சுற்றி வளைக்கப்பட்டுள்ளது என்பதை இந்த அவைக்கு எடுத்துக்காட்டுவதற்கு நினைத்தேன். என்ன ஏற்படப் போகிறது என்பது எனக்குத் தெரியவில்லை.

(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 15, பக்கம்: 879)