வெறுமைச் சுழல்காற்று பரவும்

வாழ்வின் துயரங்கள் சேர்ந்து

ஒரு விளையாட்டினை ஆடுகின்றன

அச்சுறுத்தல்களுடன் தொடங்கும் அவ்விளையாட்டு

வெம்மையாய் வயல்களிலாடி

நிலங்களைக் காயடிக்கின்றது

அறுவடைக்குப் பிறகான தானியக்கிடங்குகள்

பதர்களால் நிரம்பியிருக்கின்றன

பொய்மணிகளைத் தேடி அலுத்தவர்கள்

வீடு திரும்பாமை குறித்த கவலைகளோடு

இருந்தன பூட்டப்படாத வீடுகளின் அடுப்புகள் 

குழந்தைகளின் சிலேட்டுகளைப் பறித்து

அவர்களின் எழுத்துகளை ஆழப்புதைய வீசுகின்றது

அவ்விளையாட்டு

வயல்களுக்குள்ளும்

வரப்போரங்களிலும்

மூக்குத்திப் பூக்கள் பூத்த செடிகள் நிறைந்த

மைதானத்திலுமிருந்த வண்ணத்துப் பூச்சிகளைக்

கொன்றும் நீண்டவால் தும்பிகளின்

தலைகளைத் திருகியும் கொடூரமாகிறது விளையாட்டு

இறைந்திருக்கும் வண்ணத்துப் பூச்சிகளின்

இறக்கைகளை மிதித்துக் கொண்டே

இற்றுப்போன டயர் சக்கரங்களை

தட்டிக் கொண்டு ஓடுகின்றனர் குழந்தைகள் 

களத்தில் உதறப்பட்ட தாள்களும்

குச்சிகளாகிப் போன தாவரங்களும்

அடுப்பெரிக்கும் எரிபொருளாகின்றன

உணவுத் தானியங்கள் ஏதுமின்றி

வெப்பமேறி வெடிக்கின்ற சட்டிகள் 

விளையாட்டு தொடர்கிறது

அபத்தங்களின் காய்களை நகர்த்தி 

விளையாட்டு என்பதை

வறுமை என்றும் சொல்லலாம் அல்லது

வளர்ந்த நாடுகள் என்றும்கூட

- யாழன் ஆதி