இந்திய சாதிய சமுதாயத்தின் சலனங்களை உற்பத்தி, பரவல், வளர்ச்சி, வெளிப்பாடுகள், செயல்பாடுகள், முரண்பாடுகள் பகுத்தாய்வதையும், அச்சலனங்களுக்கு எதிரான மாற்றுச் சலனமொன்றுக்கு வித்திடுவதையுமே நோக்கமாகக் கொண்ட இத்தொடர் கட்டுரையின் முதல் பாகம், கருத்தியல் பற்றிய பொதுவான சிந்தனைகளாகும். சென்ற இதழில், சமூகப் பகுப்பாய்வில் கருத்தியல் வரையறுப்பின் புதிய பரிமாணங்களையும், சிக்கலான சமுதாயங்களில் பொதுவாக வெளிப்படும் கருத்தியல் அம்சங்களைப் பற்றியும் நமது ஆய்வுக்குத் தேவையான சில கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன.

பண்டைய சமுதாயங்களோடு ஒப்பிடும்போது இன்றைய சமூகம் (நவீன) சிக்கலானதாக, எளிதில் புரிந்து கொள்ள முடியாதவையாக உணரப்படுகின்றது. இதன் உட்பொருள் அன்றைய சமுதாயங்கள் எளிமையாகவோ, எதிர்வினையற்று ஒருங்கிணைக்கப்பட்டவையாகவோ செயல்பட்டன என்பது அல்ல. ஆனால், அவற்றுள் எழுந்து வந்த முரண்பாடுகளும் பூசல்களும் பண்பாடு, மதம், மரபு என்ற பெயர்களால் மறைக்கப்பட்டோ, மறுக்கப்பட்டோ வந்தன என்பதே உண்மை. மேலும், சென்ற இதழில் கூறியதுபோல் பல சந்தர்ப்பங்களில், பல்வேறு காரணங்களால் பொங்கி எழும் முரண்பாடுகள் முற்றி வெளிப்படும் தேவை இல்லாமல் போய் விட்டதும் மற்றொரு அம்சம். அவற்றிற்கு மாறாக இன்றையவையோ, மாறி மாறி எழும் சிக்கல்களையும் முரண்பாடுகளையும் மறைக்கவோ மறுக்கவோ முடியாமல் ‘சமாளிக்க வேண்டியவை' என்று ஏற்றுக் கொண்டு செயல்பட வேண்டிய நிர்பந்தத்திற்கு உட்பட்டவை.

இச்சிக்கல்களுக்கும் முரண்பாடுகளுக்கும் அடித்தளமாயும், அவற்றின் வெளிப்பாடுகளுக்கும் செயல்பாடுகளுக்கும் வடிகாலாகவும் அமைந்து அவை ஓர் எல்லையைத் தாண்டாமலும், அவற்றின் செயல்பாடுகளால் சமூகம் உருக்குலையாமல் காப்பதற்குக் காரணியாகவும் பயன்படுவது இந்தக் கருத்தியலே. இந்தப் பின்னணியில் இருந்து நோக்கும்போது,
அன்றைய சமூகங்களில் போல் அல்லாமல், இன்றையவற்றில் தெளிவாகவே, வெளிப்படையாகவே கருத்தியல் இருந்து பன்மையாகவும் பல திசைகளிலும் செயல்படுவதை உணரலாம். ஆயினும் இப்பன்மையையே ஒருமையாகக் காட்டும் பெரும் முயற்சிகளும், இம்முயற்சிகளுக்கு எதிர்வினையாக ஒருமையாகக் காட்டப்படும் கருத்தியலைக் கட்டவிழ்த்து, அதனுள் அடங்கிய முரண்பாடான பன்மைகளைக் கொணரும் சிறு முயற்சிகளும் தொடர்ந்து நடைபெற்றே வருகின்றன. கருத்தியல் ஒருமையாகவோ, பன்மையாகவோ உணரப்படுவதும், வெளிப்படுத்தப்படுவதும் சமூக சக்திகளின் அசைவுகளையும், நெளிவு சுளிவுகளையும், ஏற்ற இறக்கங்களையும் பொறுத்தே அமையும்.

ஆகவே, இன்றைய சமுதாயத்தில் மிக வேற்றுமையற்றதும் மிக வேற்றுமையுற்றதுமாகிய பல கருத்தியல்கள், சமூக அல்லது குழு சக்திகளின் பிரதிபலிப்பாக இயங்குவது கண்கூடு. இவையாவும் ஒரே நிலையிலோ, நேர் கோட்டிலோ செயல்படாமல் என்றும் நிலையற்றவையாக ஒன்றையொன்று வெட்டியும் ஒட்டியும், சூழ்நிலைகளுக்கும் மாறிவரும் ஈடுபாடுகளுக்கும் ஏற்றதுபோல் உருப்பெற்றுச் செயல்படுவதையும் காண்கிறோம். எனவே, சமூக இயங்கியலை மேலெழுந்த வாரியாகவோ அல்லது அதன் ஓர் அம்சத்தை மட்டும் தனிமைப்படுத்தியோ ஆய்வு செய்யும் போது, இந்தப் பன்மையான கருத்தியல் உதிரியாகச் செயல்படுகிறதென்றும், அதனை ஒரு கிரமமான கண்ணோட்டத்துக்குள் அடக்கி புரிந்து கொள்ள முடியாது என்ற முடிவுக்குமே வரவேண்டியிருக்கிறது.

மாறாக, சமூகத்தின் அடித்தள இயங்கியலை ஒட்டு மொத்தமாகவும் விமர்சனக் கண்ணோட்டத்துடனும் ஆய்வுக்குட்படுத்தும் போது, கருத்தியல்கள் உதிரியானவை அல்ல என்றும் அவை நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஒன்றோடொன்று பிணைந்தும் இணைந்தும், வெட்டியோ ஒட்டியோ செயல்படுவன என்றும் அவை அனைத்தையும் ஒரே கிரமத்துள் அடக்கிப் புரிந்து கொள்ளவியலும் என்பது தெரியவரும்.

ஆழ் மட்டத்தில் குறைந்த பட்ச பொதுப் புரிதலை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் இந்த கருத்தியலை மேலும் கூர்ந்து நோக்கினால், அது ஒரு துருவமுரண்பாட்டை, ஒரு பெரும் பிளவினை உள்ளடக்கி மேல் வாரியாக ஒருமைப்பாட்டுடன் வெளிப்படுவதாகவும் அறியப்படும். அதாவது, மேல் மட்டத்தில் பன்மையாகவும் உதிரியாகவும் தென்படும் கருத்தியல் முரண்பாடுகள், அடிமட்டத்தில் துருவ முரண்பாட்டை உள்ளடக்கிய ஒருமைக் கருத்தியலாக உணரக்கூடும். இந்தத் துருவ முரண்பாட்டை மறைத்தோ, மறுத்தோ, முரண்பாடற்ற ஒருமையாக ‘பொருளாக்கப்பட்ட', எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒருமையாக முன்வைக்கப்படுகிறது.

இயக்கத்தில் இருக்கும் எல்லா சமுதாயங்களிலும் எந்த நிலையிலாயினும் குறைந்த அல்லது நிறைந்த அளவில் ஒன்றுபட்ட கருத்தியல் உணர்வு இருக்கிறது என்றே கொள்ள வேண்டும். ஆனால், அத்துடன் அதே கூட்டுணர்வைக் குலைக்கும் எதிர்வினையாக, வலிமை படைத்த துருவ முரண்பாடுகளும் உடன்இருக்கவே செய்கின்றன. கூட்டுணர்வும், அதற்கெதிரான துருவ உணர்வும் ஒரே கருத்தியல் தொகுதியின் மாறுபட்ட முகங்களே. சிக்கலான சமுதாயத்தின் பலதரப்பட்ட செயல்பாடுகள், துருவத் தன்மையையோ, கூட்டுணர்வையோ தூண்டியும் உற்பத்தியும் செய்து விடக்கூடியவையாக இருப்பதால் இரண்டிற்குமிடையேயான சமன்நிலை, சீராகவோ, ஒரே நிலையிலோ நிலைப்பதில்லை.

சமூகச் செயல்பாடுகள் துருவமாதலை நோக்கியோ, கூட்டுணர்வை நோக்கியோ இடையறா அசைவில் இருந்து கொண்டேயிருக்கும். நெருக்கடி மிகுந்த காலங்களில் துருவநிலைகள் ஓங்கி நிற்பதும் நெருக்கடி குறைந்த காலங்களில் சமூகம் கூட்டுணர்வால் இயங்குவதாகவும் தென்படும். ஆனால், எக்காலமும் கருத்தியல் துருவங்கள் சமூகத்தின் அடிமட்டத்தில் செயல்பட்டு வருவதையும், அவற்றின் அசைவுகளைக் கூர்ந்து கவனிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் சமூக மாற்றங்களில் ஈடுபாடு உடையோர் காணவும், கணிக்கவும் தவறார்.

சமூக உறவுகளையும், ஆற்றல், அதிகார சமநிலைகளையும் தக்க வைக்கும் கருத்தியல் துருவத்தையும், அதே சமூக உறவுகளையும் அதிகார நிலைப்பாடுகளையும் தகர்க்க வைக்கும் எதிர்வினையான மாற்றுக் கருத்தியல் துருவத்தையும் ஆதிக்கமாகவும் அதற்கு எதிர்வினையான அடித்தள எழுச்சியாகவுமே புரிந்து கொள்ள வேண்டும். அதாவது துருவங்களுக்கிடையிலான மோகங்களும், மோதல்களும் அதிகாரம் பற்றியவை; செல்வாக்கு, பலம் இவற்றின் பங்கீடு பற்றியவை. போட்டியையும் போராட்டங்களையும் உள்ளடக்கியவை. அதிகாரம், செல்வாக்கு பலம், வளவாய்ப்புத் தொகுதி இவை சமூகத்துக்குள் ஒருபோதும் சமமாகப் பங்கிடப்படுவதில்லை. குறைவு - நிறைவு, ஏற்றத்தாழ்வு பங்கீட்டின்
நிரந்தரத்தன்மையாகும். இவ்விதமான சமமற்றப் பங்கீடு சமூக செயல்பாடுகளின் விளைவேயாதலால், இவற்றின் பிரதிபலிப்பான கருத்தியலும் அதிகாரப் பங்கீடு பற்றியதே.

ஆதிக்கக் கருத்தியல் துருவம், சமூகச் செல்வாக்கின் நிறைநிலையிலிருந்தும் அதற்கு எதிர்வினையான அடித்தளக்கருத்தியல் துருவம், அதே செல்வாக்கின் குறைநிலையிலிருந்தும் செயல்படுவதால் இவை இரண்டின் உற்பத்தி, தன்மை, உத்தி முதலியவற்றில் பெருத்த வேறுபாடுகள் உள்ளன. இந்த வேறுபாடுகளை உணராமல் இரண்டையும் சமநிலைப்படுத்தியோ, ஒப்புமைப்படுத்தியோ, ஒரே தன்மையுடைதாகக் காட்டுவதும் மதிப்பிடுவதும் ஆதிக்க அரசியலின் ஓர் அம்சமேயாகும்.
ஒரு சமூகத்தின் கருத்தியல் என்று விவரிக்கும் பொழுது, பொதுவாகவே அச்சமூகத்தின் ஆதிக்கக் கருத்தியல் அம்சங்களே விவரிக்கப்படுகின்றன.

ஆனால் உண்மையில் ஒரு சமூகத்தின் கருத்தியல் என்றால் அது பிளவுபட்டதும், ஆனால் பிணைந்து செயல்படுபவையுமான ஆதிக்க அடித்தள முரண்பாடான கருத்தியல்களின் நிகழ்காலத் தொகுப்பு மட்டுமே என்று கொள்ள வேண்டும். இம்மாதிரியாகப் பிளவுபட்டும் அதே சமயத்தில் பிணைந்தும் செயல்படும் தன்மை, சமூகத்திற்குச் சமூகம், ஒரே சமூகத்தில் காலத்திற்கு காலமும், இடத்திற்கு இடமும் மாறுபட்டே வரும் என்பதையும் உணரலாம்.

ஆதிக்கக் கருத்தியலின் தலையாய நோக்கம், அதன் பின்புலத்தில் அணி வகுத்துள்ள சமூக சக்திகளின் செல்வாக்கை நிலை பெறச் செய்வதே. இந்த நோக்கத்திற்குத் துணை நிற்பது பொருளாதாரம், அரசு பலம், இன்னும் மிருக பலமுமே. ஆதிக்கம் இவைகளின் அடிப்படையில் கட்டப்பெற்றதேயாயினும், நவீன சமூகங்களில் இந்த ஏனைய பலங்கள் பின்னணியிலும் கருத்தியல் பலம் முன்னணியிலுமே செயல்படுகின்றன. எவ்வளவுக் கெவ்வளவு அடித்தளப்பலங்களான பொருளாதாரம் போன்றவை முன்னணிக்கு வருவது தவிர்க்கப்படுகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு கருத்தியலின் வெற்றியாகக் கொள்ளப்படுகிறது.

ஆதிக்கக் கருத்தியலின் தலையாய நோக்கம், ஒன்றுக்கொன்று தொடர்புடைய சில உத்திகளால் நிறைவேற்றப்படுகிறது. முதல் உத்தி, ஆதிக்கத்தையும் அதன் வெளிப்பாடான கருத்தியலையும் சமூகத்துக்குள் வேறொன்றாக வெற்றிகரமாக முன் வைப்பது. ஆதிக்கக் கருத்தியல் தன் சுய அடையாளத்தை மறைத்து தனக்கு விரோதமான சக்திகள் தன்னை இனங்கண்டு கொள்ளாத நிலையில் வைத்துக் கொள்வதே அதன் வெற்றி. ஆதிக்கக் கருத்தியல் தன் மீது விழும் கவனிப்பை திசை திருப்ப இடையறாது முயல்கிறது. ஆதிக்கக் கருத்தியல் ஆதிக்கம் தொடர்புடையது அல்ல. அது ஒரு கருத்தியலே இல்லை என்ற பொது உணர்வுக்கும் ஒப்புதலுக்கும் முயல்கிறது.

அது சமூகத்துக்குள்ளான தலைமைத் தன்மை, திறமைத் தன்மை, அறிவுக்கூறுகளின் தொகுதி என்றும் முன் வைக்கிறது. இம்முயற்சியில் பெருமளவு வெற்றியும் பெறுகிறது. ஆதிக்கத்தின் வேர்களான சமூக சக்திகள் மொத்த சமூகத்தின் ஒரு பகுதியோ, பெரும்பாலும், மிகச்சிறிய பகுதியே ஆயினும் தன் செல்வாக்கான கருத்தியல் மூலம், இச்சக்திகள் தம்மையே சமூகத்தின் பெரும்பான்மையாகவும், ஏன் முழு சமூகமாகவும், கருத்தியல் ஒட்டுமொத்த சமுதாயத்தின் தத்துவமாகவோ, பண்பாடாகவோ அல்லது மதிப்பீடுகளாகவோ பேசப்படுகிறது. இக்காரணங்களைக் கொண்டே ஆதிக்கக் கருத்தியலின் மெய்யான உருவத்தை உணர, இடையறாத சிந்தனையும், விமர்சனக் கண்ணோட்டமும் தேவைப்படுகிறது. ஆதிக்கக் கருத்தியலின் இயங்கியலைப் புரிந்து கொள்வது, தெளிவாகவே ஓர் அறிவு சார்ந்த போராட்டமாகும்.

ஆதிக்கக் கருத்தியலின் மற்றுமொரு செயல்பாடு, சமூகத்தை ஓர் இயங்கும் சமுதாயமாகவும், ஒத்திசைவான சமுதாயமாகவும் நிலை நிறுத்துவது. நவீன காலகட்டத்தில் ஆதிக்கமும் ஒரு வரையறைக்குட்பட்டே செயல்பட வேண்டியிருக்கிறது. ஆகவே அதன் கருதியல், ஆதிக்கத்தின் நலன்களுக்காக மட்டுமேயன்றி ஒட்டுமொத்த சமுதாயத்தின் நலன்களுக்காகவும் செயல்பட வேண்டியிருக்கிறது; அல்லது குறைந்த பட்சமாக அவ்வாறு செயல்படுவதாக சமுதாயம் ஏற்றுக் கொள்வதற்கான சில செயல்களில் ஈடுபட வேண்டியுள்ளது.

ஆதிக்கக் கருத்தியலும் பொதுக் கருத்தியலாகச் செயல்பட வேண்டிய நிர்பந்தம் இருப்பதால், கருத்தியலுக்குள்ளே சில சலுகைகள், கண்டிப்புகளுக்கான அம்சங்களையும் உள்வாங்க வேண்டியுள்ளது. இச்செயல்பாடுகளினிடையே ஆதிக்கச் சக்திகளிடம் முரண்பாடுகள் தோன்ற வாய்ப்புண்டு. இம்முரண்பாடுகளைத் துருவ முரண்பாடாகக் கொள்ளுதல் கூடாது. சுமூகமான இயக்கத்திற்கான சில விதிமுறைகள், வழிமுறைகள், சமூகத்திற்குள் பதிக்கும்பொழுது அதன் மூலமும் சில இடைஞ்சல்கள் ஏற்படுவது உண்டு. அதைச் சமாளிக்க வேண்டிய பொறுப்பும் ஆதிக்கக் கருத்தியலுடையதே.

ஆதிக்கக் கருத்தியல் ஆற்றும் இன்னொரு பணி, சிதறிக் கிடக்கும் ஆதிக்கச் சக்திகளை ஒருங்கிணைத்துக் கட்டிக்காப்பது. சிக்கலான சமுதாயங்களில் ஆதிக்கச் சக்திகள் எல்லா நிலைகளிலும் ஒருமைப்பாட்டுடனோ, இணக்கத்துடனோ செயல்படுவதில்லை. பல நிலைகளில் ஒன்றுக் கொன்று முரணாகவோ, போட்டியாகவோ வெளிப்படுகின்றன. ஆதிக்கச் சக்திகளிடையே எழும் எளிய முரண்களை தலையாய அல்லது துருவ முரணாக முன் வைக்கும் முயற்சிகளும் நடப்பதுண்டு. ஆனால், ஆழ்மட்டத்தில் இவை யாவும் ஆதிக்க சக்திகளுக்கிடையே நிகழும் போட்டி அரசியலேயன்றி வேறல்ல. ஆதிக்கத்தை நிலை நிறுத்தும் - முன்வைக்கும் வழிமுறைகளில் ஏற்படும் கருத்து வேறுபாடுகளே. இம்மாதிரியான உட்பூசல்கள் ஒரு குறிப்பிட்ட எல்லையைத் தாண்டிப் போகாதவாறும், எக்காரணத்துக்காகவோ அடிமட்ட மக்கள் தொகுதிகளுடன் கூட்டு சேர வேண்டிய நிர்பந்தத்தை முறைப்படுத்துவதும் கருத்தியலே.

நான்காவதாக, ஆதிக்கக் கருத்தியல் எப்பொழுதும் அடிமட்டத்திலிருந்து எழ முயற்சிக்கும் எதிர்வினைக்கருத்தியலை இலக்காகக் கொண்டே செயல்படுகிறது. அடிமட்ட அல்லது அமுக்கப்பட்ட கருத்துக்களும், உணர்வுகளும், எதிர்பார்ப்புகளும், ஆதங்கங்களும் குரல் வடிவமோ, செயல் வடிவமோ பெற இயலாது தடுப்பது, ஆதிக்கக் கருத்தியலின் நிரந்தர செல்வாக்கிற்கு அவசியமாகிறது. ஆதிக்கக் கருத்துக்களைத் தவிர்த்து வேறோர் மாற்றுக் கருத்து இல்லையென்றும் ஆதிக்கக் கருத்தே அனைவரது கருத்தாகும் என்ற நிலையை அடிமட்டத்தினரும், விளிம்பு நிலை மக்களும் ஒப்புக் கொள்ளும் படியான, அவர்களே எடுத்துக் கூறும்படியான நிலைக்கு இட்டுச் செல்வதே அதன் இலக்கு.

அவ்வாறு முழுமையாக அடிமட்ட எதிர்வினைக் கருத்துக்களைத் தவிர்க்க முடியாத சந்தர்ப்பத்தில் அம்மாதிரியான மாற்றுக் கருத்துக்கள் உதிரியானவை, அதாவது முறையற்ற, விதிவிலக்காக இங்கொன்றும் அங்கொன்றுமாக வெளிப்படுவன என்றும், அவற்றில் கருத்தியல் தனிச்சிறப்பு ஏதும் இல்லை யென்றும் பிரித்து, திரித்துக் கூறி சிறுமைப்படுத்துவது, ஆதிக்கக் கருத்தியலின் அடுத்த உத்தியாகும். இவற்றையெல்லாம் மீறி அடிமட்ட எதிர்வினைக் கருத்தியல், செல்வாக்கை நோக்கி முன்னேறுமாயின், அதனை உள்வாங்கி, தன்னுடைய ஆதிக்கக் கருத்தியல் தொகுதியின் ஓர் அம்சமாகவும், ஆதியிலிருந்தே இம்மாதிரியான கருத்தசைவுகளை ஒரு பகுதியாகவே கொண்டது என்றும், தன்னுடைய வினையினால் விளைந்த வெறும் எதிர்வினையே என்றும் வாதிடும்.

ஆதிக்கக் கருத்தியலின் இம்மாதிரியான செயல்பாடுகளுக்கு ஆதார உத்தியாக அமைவது, தனக்கு அப்பால் தன்னைத் தவிர்த்து எழும் எந்த முன் முயற்சியையும் முளையிலேயே கிள்ளிவிடுவது. அது சாத்தியப்படவில்லையெனில் அம்மாதிரியான கருத்துக்கள் தன்னுடையவே எனக் கொண்டாடுவது; இதுவும் வெற்றி பெறவில்லையெனில் அடிமட்டத்தையும் அதன் கருத்தியலையும் தானே பிரதிநிதித்துவம் செய்து, சார்புரைப்பது. இவை இரண்டும், பிரதிநிதித்துவமும், சார்புரைத்தலும் இன்றைய காலகட்டத்தில் ஆதிக்கக் கருத்தியலின் விரிந்து பரந்த, மிகச்சிக்கலான, ஆனால் அதே சமயத்தில் மிகவும் வல்லமை படைத்த செயல்பாடுகள்.

இவ்விரண்டு செயல்பாடுகளும் பெரும்பாலும் அடிமட்ட எதிர்வினைக் கருத்தியலின் முன் முயற்சியை தடுத்தலும், அதனைத் திரித்து விளக்குதலும், முடிவில் முழுவதுமாக அமிழ்த்தி விடுவதற்கான உத்தியே அன்றி வேறில்லை. இதில் பிரச்சனை என்னவென்றால், பிரதிநிதித்துவ சார்புரைப்பிலும் அடிமட்டத்திற்குச் சில நன்மைகளும், அடிமட்டக் கருத்துகளுக்குச் சிறிதளவு இடமும் கிடைக்கவே செய்கின்றன. இது, கொடுப்பது போல் கொடுத்து முழுவதையுமே கொண்டு ஆள்வது போன்றது. ஆதிக்கக் கருத்தியலின் கவலையெல்லாம், தனக்கு அப்பாற்பட்டும், தன்னைத் தவிர்த்தும், பொது இடங்களில் யாதொரு முன் முயற்சி வெளிப்பாடும் கிளம்பி மேலெழுந்து விடக்கூடாதென்பதே.

-இன்னும் வரும்