செல்லப்பிராட்டி கிராமம் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு சுமார் 100 சாதி இந்து குடும்பங்களும், 50 தலித் குடும்பங்களும் வசிக்கின்றனர். இதுவரை பொதுத் தொகுதியாக இருந்த இக்கிராமம், கடந்த பஞ்சாயத்து தேர்தலின்போது தலித்துகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு, நாகலிங்கம் என்பவர் (வயது 48) தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கிராமத்து மக்களுக்கு சிறப்பாகப் பணியாற்றி வந்த நாகலிங்கத்துக்கு, வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த துணைத்தலைவர் துரைமுருகன், பல்வேறு வகையில் இடையூறாக இருந்திருக்கிறார். அவர் தொடர்ந்து கொடுத்த தொந்தரவின் காரணமாக, நாகலிங்கம் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டார். ஆனால், விசாரணை முடிந்து மீண்டும் நாகலிங்கம் பணியமர்த்தப்பட்டார். இந்நிலையில் பஞ்சாயத்து துணைத் தலைவரும், அவரது கூட்டாளிகளும் சேர்ந்து நாகலிங்கத்தை தீர்த்துக் கட்ட முடிவு செய்தனர்.

Nagalingam
அதன்படி 22.4.2008 அன்று, துரைமுருகனின் கூட்டாளி ஏழுமலை, நாகலிங்கம் வீட்டிற்கு இரண்டு வீடு தள்ளி குடியிருப்பவரின் திருமணம் போளூரில் உள்ள சேத்துப்பட்டில் நடக்கயிருப்பதால், அதற்கு வருமாறு அழைத்திருக்கிறார். வர மறுத்த நாகலிங்கத்தை வற்புறுத்தி அழைத்துச் சென்றிருக்கிறார். திருமணத்திற்கு அழைத்துச் சென்றவர்கள் நாகலிங்கத்திற்கு மது வாங்கி கொடுத்து, இரண்டு மூன்று பேர்களாக சேர்ந்து பலமாகத் தாக்கியுள்ளனர். இதனால் அவருடைய இரு கால்களில் காயம் ஏற்பட்டு, கண் பிதுங்கியும், தொடை மற்றும் பிறப்புறுப்பு அருகே கீறல்களும் பதிந்துள்ளன. மறுநாள் காலை 7.30 மணியளவில் ஏழுமலை, நாகலிங்கத்தின் கைபேசியினை கொண்டுவந்து அவர் மனைவியிடம் கொடுத்து, நாகலிங்கம் வீட்டிற்கு வந்து கொண்டிருப்பதாகவும், இதனை ‘சார்ஜ்' செய்து வைக்கச்சொன்னார் என்று சொல்லி கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார். ஆனால், அவருடன் சேத்துப்பட்டிலிருந்து வந்தவர், நாகலிங்கம் சேத்துப்பட்டு மரியம்பீவி திருமணமண்டபத்தில் இறந்து கிடப்பதாக, செல்லப்பிராட்டி கூட்டு ரோடு டீ கடையில் உள்ளவர்களிடம் கூறியுள்ளார்.

இதற்குள் செய்தி பரவ, உறவினர்கள் அனைவரும் திருமண மண்டபத்துக்குச் சென்று பார்த்துள்ளனர். அதற்குப் பிறகு சேத்துப்பட்டு காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளனர். அங்கு பணியிலிருந்த அருணாச்சலம் என்ற ஆய்வாளர், தனக்கு ஏற்கனவே நாகலிங்கம் இறந்து கிடக்கும் செய்தி வந்துவிட்டதாகவும், அதனால் உடலை எடுத்துச் செல்லுங்கள் என்றும் கூறியுள்ளார். ஆனால் உறவினர்கள் இதை ஏற்க மறுத்தனர். ஆய்வாளர் இம்மக்கள் அளித்த புகாரையும் வாங்க மறுத்துள்ளார். உறவினர்கள் அனைவரும் தங்களுக்கு அவருடைய இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, உடலை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினர்.

உடலை இன்று எடுத்துச் சென்று நாளை காலை 10 மணியளவில் எடுத்து வாருங்கள்; அதற்குப் பிறகு பிரேத பரிசோதனைக்கு ஏற்பாடு செய்கிறேன் என்று கூறியுள்ளார். அப்போது, நாகலிங்கத்தை கொலை செய்தவர்கள் இதற்கு முன்னரே காவல் ஆய்வாளரிடம் பணம் கொடுத்து சரி செய்து, அவர்களுக்கு சாதகமான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்திக்கொண்டு, தாங்கள் செய்த கொலையை மறைக்க, பிணத்தை அவர்களே சுமந்து வந்த ஆம்புலன்ஸ்சில் ஏற்றி அனுப்பியுள்ளனர். இதைக் கண்டு கொதித்தெழுந்த உறவினர்கள் அனைவரும் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால், வேறுவழியின்றி மருத்துவப் பரிசோதனைக்குப் போகும் முன்பு புகைப்படம் எடுத்து போளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். புகாரை ஆய்வாளர் வாங்க மறுத்ததால், உறவினர்கள் புகாரை காவல் நிலைய ஆய்வாளருக்கு பதிவு அஞ்சலில் அனுப்பிவைத்தனர்.

இறந்துபோன நாகலிங்கம் தி.மு.க. ஒன்றிய கிளைச்செயலாளர். எனவே, இது குறித்து செஞ்சி நகர செயலாளரும் தலைவருமான மஸ்தானிடம் கூறியபோது, அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சேத்துப்பட்டு காவல் நிலைய ஆய்வாளர் நாகலிங்கம் கொலையுண்டு கிடந்த மரியம்பிவீ திருமணமண்டபத்திற்கு செல்லாததும், கொலை செய்யப்பட்ட இடத்தை ஆய்வு செய்யாததும், கொலையாளிகளான துரைமுருகன், அவருடைய அண்ணன் வேல் முருகன், அர்ச்சுனன் அவருடைய மகன் சம்பத், வேலு (கதிர்வேலு மகன்) ஆகியோரை கைது செய்து விசாரணை செய்யாமல் காலம் கடத்துவதன் மூலம் குற்றவாளிகள் தப்பிக்க உதவிபுரிகிறார். வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யவும் ஆய்வாளர் மறுத்துள்ளார்.

நாகலிங்கம் இறந்து 5 மாதங்களுக்கு மேல் ஆகியும் சேத்துப்பட்டு காவல் நிலைய ஆய்வாளர், இதுவரை பெயருக்குக் கூட விசாரணையைத் தொடங்கவில்லை. கொலையாளிகள் கிராமத்திலும், அருகில் உள்ள செஞ்சியிலும் சுதந்திரமாக திரிந்து கொண்டுள்ளனர். நாகலிங்கத்தை கொலை செய்த அனைவரையும் காவல்துறை கைது செய்து தண்டனை வாங்கித் தருவதோடு, வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தில் பதிவு செய்ய வேண்டும். கொலைகாரர்களில் ஒருவரான துரைமுருகன் என்பவரை கைது செய்து, அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும். கொலை செய்யப்பட்ட நாகலிங்கத்தின் குடும்பத்தினருக்கு அரசு நிவாரணம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை, பாதிக்கப்பட்டோர் முன்வைத்துப் போராடி வருகின்றனர்.
Pin It