.
Agitation
"முகமூடி அணிந்த மனிதர்கள்
கிணற்றில் உண்மையைத்
தூக்கி எறிவதைக் கண்டேன்
நான் அதற்காக அழத் தொடங்குகையில்
அதை எங்கெங்கும் கண்டேன்''
- கிளாடியா லார்ஸ்

அய்ம்பத்தொன்பது ஆண்டுகளாக இந்நாட்டின் ‘சுதந்திரம்' தன்னை சுதந்திரமாக நிரூபிக்க ஏறி மிதிப்பது ஏழைகளையும் தலித்துகளையும்தான். சட்டங்களும் அது தரும் தண்டனைகளும், அவர்கள் மீது மட்டும்தான் திணிக்கப்படுகின்றன. நலத்திட்டங்களும், வளங்களும், தொழில் வளர்ச்சிக்கான கடனுதவிகளும், சாதியக் கண்ணோட்டத்துடனேயே அணுகப்படுவதால், தலித்துகள் பெருந்தொழில் புரிபவர்களாகவோ, தொழில் நிறுவனங்களை நடத்துபவர்களாகவோ இல்லை. அதனால்தான், இடஒதுக்கீட்டின் மூலம் தங்களுக்கு கிடைக்கும் அரசு வேலைகளையே அவர்கள் நம்பி இருக்கின்றனர். கடந்த ஜெயலலிதா அரசின் சில கொள்கைத் திட்டங்களால், அரசு வேலை என்பதே இல்லை என்ற நிலை உருவானது. நிரப்பப்படாத பின்னடைவுப் பணியிடங்களை நிரப்பினாலே, எத்தனையோ ஆயிரம் தலித்துகள் அரசு வேலையினைப் பெற்றிருக்க முடியும். ஆனால், முப்பத்தைந்து வயது கடந்தும், திறக்கப்படாத வேலைவாய்ப்பகத்தின் கதவுகளுக்கு முன் அவர்கள் காத்திருக்கின்றனர்.

அப்படித்தான் அந்த இளைஞரும் 15.12.2006 அன்று வேலூர் மாவட்ட வேலை வாய்ப்பகத்தில் காத்துக்கிடந்தார். தான் படித்து முடித்த பி.எட். ஆசிரியர் பயிற்சியைப் பதிந்துவிட்டு, பதினைந்து ஆண்டுகளாக வேலைக்கு காத்திருக்கையில், அரசு தேர்வுகள் நடத்தி ஆசிரியர்களைத் தேர்வு செய்தது. தேர்வுக்குத் தேவையான மதிப்பெண்ணைவிட (Cur off Marks) ஒரு மதிப்பெண்ணே குறைவாக எடுத்த அவருக்கு, கடந்த தேர்விலும் வேலைக்கான வாய்ப்பின்றிப் போனது. பட்டதாரி ஆசிரியர்களைப் பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்ய அரசு முடிவு செய்து, மாவட்ட வேலைவாய்ப்பகங்களில் தங்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற செய்தி வெளியிடப்பட, அதைப் பதிவு செய்ய அந்த நீண்ட வரிசையிலே நிற்கிறார் அந்த இளைஞர். கூட்டம் அதிகரித்து நெருக்க, தன் உடல் இயலாமையைக் காரணம் கூறி தன்னால் நீண்டநேரம் நிற்க முடியாது என்று, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சங்கரனை சந்தித்து தன் வேலையை முடிக்கிறார். மேலும், இரண்டு மாதங்களுக்கு முன்பு தன் மனைவியின் வேலைவாய்ப்புக்கான பதிவைப் புதுப்பிக்க அனுப்பப்பட்ட விண்ணப்பத்தின் நிலை என்ன என்பதை அறிய, வேலைவாய்ப்பு அலுவலரை சந்திக்கும் வரிசையின் கடைசியில் போய் நிற்கிறார்.

இதைக் கண்ட அந்த அதிகாரி சங்கரன், ‘ஏண்டா யூஸ்லெஸ் பெல்லோ, உனக்கு இப்ப கால் வலிக்கலையா? உன்ன முதல்ல அனுப்புனேன், திரும்ப வேற எவனோட கார்ட எடுத்துட்டு வர்ற?' என்று மிகவும் கோபமாகக் கேட்க, அந்த இளைஞர் மிகவும் பொறுமையாக, அது தன்னுடைய மனைவியின் அட்டை என்றும், அதன் விவரத்தை அறிவதற்காகத்தான், தான் வரிசையின் கடைசியில் நிற்பதாகவும் கூறியுள்ளார். அதற்குள் பொறுமையிழந்த அந்த அதிகாரி, தன் வாயில் வந்ததையெல்லாம் பேசி, எழுந்து வந்து - ‘என்ன சட்டமா பேசுற, என்று அவருடைய கையைப் பிடித்து முறுக்கி, பின்னங்கழுத்தின் மீது ஓங்கி அடித்துத் தள்ளி இருக்கிறார். அதைச் சற்றும் எதிர்பார்க்காத அவ்விளைஞர், நிலைகொள்ள முடியாமல், தடுமாறி கீழே விழுந்திருக்கிறார்.

தன்னைப் போன்ற ஆண்களும் பெண்களும் சூழ்ந்து நிற்குமிடத்தில், தான் அவமானப்படுத்தப்பட்ட அந்த நொடியிலிருந்து எழுந்து அங்கிருந்த நாற்காலியில் அமர்கிறார். வந்திருப்பவர் ஒரு தலித் என்பதை அறிந்திருந்த அந்த அதிகாரி, "எக்சாம் வைக்கிறாங்க, பாஸ் பண்ணிட்டு வேலைக்கிப் போக வக்கில்லாதவனுங்க, சீனியாரிட்டி பாக்க வந்துட்டானுங்க. வேலையும் இல்ல ஒண்ணுமில்ல'' என்று கூறி, அந்த இளைஞரை இரண்டு மணி நேரத்திற்கு மேல் சிறை வைத்திருக்கிறார். பிறகு குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் லதா அவர்களின் தலையீட்டினால், அவரால் அந்த அலுவலகச் சிறையிலிருந்து வெளியே வர முடிந்திருக்கிறது. அரசு அதிகாரிகள் எளிய மக்கள் மீது செலுத்தும் இத்தகைய அதிகார வன்முறைகள், நாள்தோறும் எங்கெங்கும் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன. இப்படித் துன்பப்பட்ட, அவமானப்படுத்தப்பட்ட அந்த இளைஞர் வேறு யாருமல்ல, தமிழகம் அறிந்த எழுத்தாளர் அழகிய பெரியவன்தான்!

தலித் இலக்கியத்தில் தனக்கென இடம் பிடித்திருக்கிற ஒரு தலித் ஆளுமை. தன்னுடைய நாவலுக்காய் தமிழக அரசின் விருது பெற்றவர். அது மட்டுமல்ல, பல்வேறு மொழிகளில் அவருடைய எழுத்துகள் மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றன. தமிழகத்தின் எல்லா அறிவுத் தளங்களிலும் இயங்கும் சிந்தனையாளர்களின் பேரன்பையும் நன்மதிப்பையும் பெற்றவர். அந்த அழகிய பெரியவன் தான் அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார்.

சமூகத்தில் நடக்கும் கொடுமைகளைக் கண்டித்து, மக்களுக்கு விழிப்புணர்வூட்டி, வரலாறுகளை முன்மொழிந்து மக்களுக்கு உணர்வூட்டக்கூடிய ஓர் எழுத்தாளனுக்கே இந்த நிலை என்றால், சாதாரண கிராமத்துப் பட்டதாரி மாணவர்களும் மாணவிகளும் இவர்களுக்கு எம்மாத்திரம்? குறிப்பாக, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வேலை செய்யக் கூடியவர்கள், அங்கு வருகின்ற பட்டதாரி இளைஞர்கள் மீது காட்டுகின்ற வெறுப்பும், மனித நேயமற்ற அணுகுமுறையும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

டிசம்பர் 15 அன்று நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் குறித்த செய்தி பரவ, 17 ஆம் தேதியே ஆம்பூரில், வேலைவாய்ப்பு அலுவலர் சங்கரனை கைது செய்யக் கோரி முதல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு யாழன் ஆதி தலைமை வகித்தார். எழுத்தாளர் நாகூர் ரூமி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்றனர். எஸ். சந்திரன், பி. ராசேந்திரன், கருணாநிதி, யாக்கன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். பேரணாம்பட்டில் டிசம்பர் 21 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் உள்ள எழுத்தாளர்கள், எழுத்தாளர் சங்கங்கள், இலக்கிய அமைப்புகள், பத்திரிகையாளர் சங்கங்கள் கண்டனத் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன. குறிப்பாக, தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், தலித் ஆதார மய்யம், விடுதலைச் சிறுத்தைகள், மேட்டுப்பாளையம் அருந்ததியர் அமைப்பு, புலே கல்வி நிலையம், செட்யூல்டு மக்கள் கல்வி பொருளாதார மேம்பாட்டு இயக்கம், புத்தா வழிகாட்டு மய்யம், அயோத்திதாசர் ஆய்வு மய்யம் ஆகியவை கண்டனத் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன. ஓசூர், ஈரோடு, தருமபுரி, அரூர், அரக் கோணம், வேலூர், குடியாத்தம் ஆகிய இடங்களில் சுவரொட்டிகளும் கண்டனத் துண்டறிக்கைகளும் வெளியிடப்பட்டுள்ளன.

வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பக அலுவலகத்தின் எதிரில் டிசம்பர் 22 அன்று பேராசிரியர் அய். இளங்கோவன் தலைமையில் நடத்த திட்டமிடப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு காவல் துறை அனுமதி மறுத்தது. எனவே, அய். இளங்கோவன் உயர் நீதிமன்றத்தில் ‘ரிட்' மனு தாக்கல் செய்த பிறகு, உயர் நீதிமன்றம், ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கியுள்ளது. மேலும், தாக்குதல் நடந்த அன்றே, அழகிய பெரியவன் கொடுத்த புகாரின் அடிப்படையில், தற்பொழுது சங்கரன் மீது மிகத் தாமதமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், வேலைவாய்ப்பு அலுவலர் சங்கரன், "தானும் ஊனமுற்றவன்தான்'' என்று சொன்னதாக ‘ஜுனியர் விகட'னில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது; ‘அவர் ஒரு தலித்' என்றும் செய்தி பரப்பப்படுகிறது. இதில் எந்த உண்மையும் இல்லை. ஒருவேளை, அவர் தலித்தாகவும், ‘ஊனமுற்றவராக'வும் இருப்பார் எனில், இச்செயலுக்காக அவருக்கு இரண்டு மடங்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே நம் கோரிக்கை.

- நம் செய்தியாளர்


எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை - 20.12.2006

1. தமிழக அரசின் 2003 ஆம் ஆண்டு சிறந்த நாவலுக்கான (‘தகப்பன் கொடி') இலக்கிய விருதினைப் பெற்ற எழுத்தாளர் அழகிய பெரியவன் அவர்கள் மீது, வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி திரு. சங்கரன் என்பவர் தாக்குதல் நடத்தியதற்கு நாங்கள் எங்களுடைய கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

2. பட்டதாரி ஆசிரியர்களுக்குப் பதிவு மூப்பு அடிப்படையில் வேலை வழங்கப்படுகிறது என்ற செய்தியைப் பார்த்து, தனது பதிவு மூப்பினை சரிபார்த்துக் கொள்ள 15.12.2006 அன்று வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்குச் சென்ற திரு. அழகிய பெரியவன் அவர்கள், தனது உடல் இயலாமையால் நீண்ட நேரம் காத்திருக்க முடியாது என்பதால், வேலைவாய்ப்பு அதிகாரி திரு. சங்கரன் என்பவரை சந்தித்து, தனக்கு வேலைவாய்ப்பு அட்டையை சரிபார்த்துத் தரவேண்டும் என்றும், தனது மனைவிக்கும் வேலைவாய்ப்பு அட்டையைப் புதுப்பிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

3. ஆனால், அந்த மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, அழகிய பெரியவனை ‘ஊனமுற்றவன்' என்று கேலி பேசியதோடு வெளியே போகச் சொல்லி கோபமாக கூறியிருக்கிறார். இதை எதிர்த்து, தகவல் உரிமை அறியும் சட்டப்படியும் ஒரு மனுதாரர் என்ற அடிப்படையிலும் எனக்கு உரிய விவரத்தை நீங்கள் அளிக்க வேண்டும்; என்னை நீங்கள் வெளியே போகச் சொல்ல முடியாது என்று பதிலிறுத்தவரை, மீண்டும் கடும் சொற்களால் திட்டி, அழகிய பெரியவனின் இடது கையை முறுக்கி, மேல் முதுகில் அடித்ததோடு, அவரது கழுத்தைப் பிடித்து அறைக்குள் இருந்த நாற்காலிகள் மீது தள்ளியிருக்கிறார் அந்த அதிகாரி. இத்தாக்குதலால் நிலைகுலைந்து தடுமாறி கீழே விழுந்த சத்தத்தைக் கேட்டு அறைக்கு வெளியே இருந்த அரசு ஊழியர்களும் - தாக்குதலுக்கு ஆளான அழகிய பெரியவனையே கடுஞ்சொற்களால் திட்டியிருக்கிறார்கள். மேலும், அந்த மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, "நீ மோசமான நடத்தையுடையவன், உனக்கு ஆயுசுக்கும் வேலை கிடைக்காத மாதிரி செய்து விடுவேன்'' என்று மிரட்டி, அவருக்கு எதிராக காவல் துறையிலும் புகார் செய்வதாக அச்சுறுத்தியுள்ளார்.

4. மனிதப் பண்பாட்டின் விழுமியங்களைக் கட்டிக் காக்கும் எழுத்தாளர்களை இவ்வாறாக இழிவுபடுத்தும் போக்கு கண்டிக்கத்தக்கது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காகத் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகின்ற ஒரு பத்திரிகையாளரும் எழுத்தாளருமான அழகிய பெரியவன் அவர்களுக்கே இப்படி ஓர் அவமானம் ஏற்பட்டது கண்டு எழுத்தாளர்களாகிய நாங்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளோம். எழுத்தாளர் அழகிய பெரியவனை அவமானப்படுத்தி, அவர் மீது தாக்குதலைத் தொடுத்து, ஓர் அரசு அதிகாரி ஆற்ற வேண்டிய கடமையில் இருந்து விலகி, மனிதநேயமற்ற முறையில் நடந்து கொண்ட அந்த மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி திரு. சங்கரன் மீது அரசு கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்; குற்றவியல் சட்டத்தில் அவரைக் கைது செய்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

5. தமிழகத்தில் இருக்கக்கூடிய பெரும்பாலான வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்யச் செல்லும் பட்டதாரிகளை, அந்த அலுவலக அரசு ஊழியர்கள் ஒருமையில் பேசியும் பல மணி நேரங்கள் காத்திருக்க வைத்தும் வெளியூரிலிருந்து வரும் பட்டதாரிகளை மனிதத் தன்மையற்ற முறையில் நடத்தி, சொல்லொணா துன்பத்திற்கு ஆளாக்கும் வேதனையைத் தடுத்து நிறுத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- எஸ்.வி. ராஜதுரை, கோவை ஞானி, பா. செயப்பிரகாசம், இன்குலாப், அய். இளங்கோவன், சுப. வீரபாண்டியன், வ. கீதா, மங்கை, பாமா, வீ. அரசு, அ.மார்க்ஸ், விடுதலை க. ராசேந்திரன், பி.பி. மார்ட்டின், ரா. ஜவகர், தியாகு, லட்சுமணன், விஜயபாஸ்கர், பத்மாவதி விவேகானந்தன், ஏபி. வள்ளிநாயகம், கவிதாசரண், எழில் இளங்கோவன், அ. முத்துக்கிருஷ்ணன், விழி.பா. இதயவேந்தன், மீனா மயில், யாக்கன், நீலகண்டன், கொடிக்கால் ஷேக் அப்துல்லா, லுத்புல்லா, சுகிர்த ராணி, குட்டி ரேவதி, ம.மதிவண்ணன், யாழன் ஆதி, ஆதவன் தீட்சண்யா, அன்பு செல்வம், கே.எஸ். முத்து, சு. சத்தியச் சந்திரன், பூங்குழலி, பூவிழியன், கு. காமராஜ், அரங்க. மல்லிகா, அசுரன், பெரியார் சாக்ரட்டீஸ், தலித் சுப்பையா, தமிழேந்தி, வாலாசா வல்லவன், மு.பா.எழிலரசு, புனித பாண்டியன், கவுதம சன்னா, பொ. ரத்தினம், கா. இளம்பரிதி, ஆர்.ஆர். சீனிவாசன், கண்ணன் .எம், அபிமானி, கண. குறிஞ்சி, வேலிறையன், மா. பொன்னுச்சாமி, ஓம்பிரகாஷ்

தாக்குதலை இருட்டடிப்பு செய்யும் பத்திரிகையாளர் அமைப்புகள்

தனது பதிவு மூப்பு பற்றி அறிய 15.12.2006 அன்று, வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்குச் சென்ற எழுத்தாளர் அழகிய பெரியவன் மீது, வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சங்கரன் நடத்திய தாக்குதலையடுத்து, கடலூர் மாவட்டம் சேடப்பாளையம் கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட தலித் இளைஞரின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற சட்டமன்ற உறுப்பினரும், எழுத்தாளருமான ரவிக்குமார் மீது காவல் துறை அதிகாரிகள், கடும் தடியடித் தாக்குதலை நடத்தியுள்ளனர். படுகாயம் அடைந்த ரவிக்குமார், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது, ஜனநாயகத்திற்காகவும் மனித உரிமைகளுக்காகவும் குரல் எழுப்பி வரும் அனைத்துப் பத்திரிகையாளர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் விடப்பட்டிருக்கும் சவாலாகும்.

தி.மு.க., அ.தி.மு.க. என எந்தக் கட்சி ஆட்சியாக இருந்தாலும் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மீது தாக்குதல் நடத்த, அரசு அதிகாரிகளும் காவல் துறையினரும் சிறிதும் தயங்குவதில்லை. அறிவுத்தளத்தில் செயலாற்றி வருகின்றவர்கள் மீது நடத்தப்படும் இத்தகைய தொடர் தாக்குதல்களுக்கு - ஆட்சியாளர்களின் ஏளனமும் அலட்சியப் போக்குமே முக்கியக் காரணமாகும். தாக்கப்பட்டவர்கள் பத்திரிகையாளர்களாகவும் - எழுத்தாளர்களாகவும் இருந்தும்கூட, பத்திரிகைகளும் இதர ஊடகங்களும் தாக்கப்பட்ட செய்தியைக்கூட வெளியிட மறுத்து இருட்டடிப்புச் செய்துள்ளன. பத்திரிகையாளர் அமைப்புகள் கள்ள மவுனம் காட்டி வருகின்றன.

தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் தமிழக அரசை வலியுறுத்துகிறோம். அதே நேரத்தில் இனியும் இத்தகைய தாக்குதல்கள் நடைபெறாமல் தடுத்து நிறுத்த, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறு தமிழக முதல்வரை கேட்டுக் கொள்கிறோம்.

- ‘மாற்றுப் பத்திரிகையாளர் - எழுத்தாளர் பேரவை'யின் பொதுச்செயலாளர் யாக்கன் வெளியிட்டுள்ள அறிக்கை