அனுமதிக்கப்பட்ட சொற்களைக் கொண்டு
சுவர்களிடம் பேசு
சாலையில் நின்று பிதற்று
நாற்காலியைப் பார்த்துப் பேசாதே என்றார்கள் அவர்கள்

உணர்வில் சூல் கொள்ளும்
எம் சொற்கள்
புரிந்து கொள்ளப்படும்வரை
பேசுவேன் என்றேன் நான்

மேசையின் முன் நிற்கையில்
முதுகெலும்பை உருவி
வாலென சுருட்டு என்றார்கள் அவர்கள்

கணு அளவும் வளைந்துவிடாதபடி
தன்மானத் தீயில்
‘எக்'கினைப் போல்
முறுக்கேற்றப்பட்டுள்ளன
எம் எலும்புகள் என்றேன் நான்

நாவினை நறுக்கவும்
எலும்பினை முறிக்கவும்
நீண்டன
மமதையின் விஷம் தோய்ந்த
அவர்களின் கைகள்

அதிகாரம் எனும் மதுவினைப் பருகியபடி
ராஜபோதையில்
கண்கள் செருக
அவர்கள் சொன்னார்கள்

அதிகாரம் ஒடுக்கும்
எதிர்ப்பவனின் உயிர்வரை
பாய்ந்து நசுக்கும்
வானளாவிய அம்மரத்தின் வேர்கள்
செருக்கில் நிலைக்கொண்டவை
தன்னகங்காரத்தின் மூர்க்கத்தில்
எவராலும் உடைபடாதபடி
இறுகியுள்ளது அது

என் உடன் நின்ற
இதயங்களின் தோள்மீது
ஏறி நின்று
கூட்டுக் குரல்களின் உச்சத்தில்
நான் சத்தமிட்டேன்
அதிகாரம்
எம்மால்
உடைந்து நொறுங்கும்

என் குரல்
மெல்லத் தேய்ந்து மறையும் வரை
மேலும்
அவர்களுக்குச் சொல்வேன்

எனது உரிமை
எனது விடுதலை
என் பசியாற்ற வழங்கப்பட்ட சோற்றுக் கவளமல்ல
அவை
என் உயிர்த் தரிக்கும் மூச்சு
சுவாசிக்க மறந்தால்
நான் மனிதனல்ல