தமிழக தலித் அரசியலில் வளர்ச்சி நோக்கிய, மாற்றத்துக்கான திசைகள் பரிணமித்து வருவது தலித்துகளுக்கும், தலித் அரசியல் அமைப்புகளுக்கும் நம்பிக்கையூட்டுவதாக இருக்கின்றன. தேர்தல் மற்றும் ஊராட்சி அரசியல் பங்கேற்பின் வழியாக தலித் பிரதிநிதித்துவம் தீவிரமாக்கப்பட்டு, தலித்துகளின் போராட்ட அரசியலைக் கடந்து ஓர் ஆக்கப்பூர்வ அரசியலை நோக்கி, இன்றுள்ள தலித் அரசியல் அமைப்புகள் நகர்ந்துள்ளன. இத்துடன் கடந்த பத்தாண்டுகளில், பல ஊராட்சிகளில் மறுக்கப்பட்ட தலித் அரசியல் உரிமை மீட்பையும் ஒரு சான்றாகக் கொள்ளலாம். ஆனால், நடைமுறையில் ஊராட்சி அளவில் தலித் அரசியலின் தேவை இன்னும் பரவலாக்கப்படவும், அங்கீகரிக்கப்படவும் இல்லை.

Pappa
தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலித் தலைவர்களை செயல்படுத்தவிடாமல் அவமானப்படுத்துவதும், நக்கலமுத்தன்பட்டி, மருதங்கிணறு போன்ற ஊராட்சிகளில் தலித் தலைவர்களை திட்டமிட்டுப் படுகொலை செய்வதும் தலித் அரசியல் நடவடிக்கைகளின் தீவிரத் தன்மையை சிதைக்கிறது. சாதிய அமைப்புகளை நேருக்கு நேர் களத்தில் எதிர்கொள்ளும் ஊராட்சி மன்ற அரசியல் செயல்பாடுகளிலும், கிராமங்களிலும் சமூக அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டால்தான் அதனை ஒட்டுமொத்த சமூக, அரசியல் மாற்றமாகக் கருத முடியும் என்கிற சவாலை ஊராட்சி மன்ற தலித் தலைவர்கள் எதிர்கொண்டு நிற்கிறார்கள்.

தென் மாவட்டத்தில் குறிப்பாக நெல்லை மாவட்ட ஊராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட அருந்ததியர் சமூகப் பிரதிநிதிகள் பல்வேறு ஒடுக்குதலுக்கும், மிரட்டலுக்கும், படுகொலைகளுக்கும் அடிபணியாமல் தாங்கள் பொறுப்பேற்றுக் கொண்ட ஊராட்சி ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் முனைப்பு காட்டி வருகின்றனர். பங்கெடுத்துக் கொண்ட தலித் அரசியல் உரிமையைக் காப்பது மட்டுமின்றி, ஆண்டாண்டு காலமாகத் தங்கள் மீது திணிக்கப்பட்ட சமூக இழிவுகளை தலைகீழாகப் புரட்டி, சமநீதியை நிலைநாட்டுவதன் மூலம் – தலித் அரசியல் மாற்றத்தில் வளர்ச்சி தென்படுகிறது.

நெல்லை மாவட்டம், மண்வாசனை மனிதர்கள் வாழ்ந்த மானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தெற்குப்பட்டி என்கிற கிராமத்தில் அய்ந்து வயதுக்குட்பட்ட அருந்ததியர் குழந்தைகளுக்கு நேர்ந்த தீண்டாமைக் கொடுமைகளை, கடந்த சில மாதங்களாக பத்திரிகைகள் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளன. தெற்குப்பட்டியில் உள்ள அங்கன்வாடியில் அருந்ததியர் குழந்தைகளை உள்ளே அனுமதிக்கவில்லை. அந்த அங்கன்வாடி ஆசிரியர் அந்தோணியம்மாளும், ஆயா மல்லிகாவும் இப்படியொரு முடிவை எடுக்குமாறு அவர்களது சாதியை சேர்ந்தவர்களே வற்புறுத்தியுள்ளனர்.

அருந்ததியர் குழந்தைகளை அங்கன்வாடியில் தானே சேர்க்கவில்லை எனத்தோன்றும். வேண்டுமானால் வசதிபடைத்த குழந்தைகள் ஆரம்பக் கல்வி பயில ஒரு ‘ப்ளே ஸ்கூல்' இருக்கலாம். ஆனால், அடிப்படை வசதிகள் எதுவுமற்ற ஒடுக்கப்பட்ட குழந்தைகள் எதையாவது தரையில் கிறுக்கி, சுவற்றில் வரைந்து கற்பதற்கான குழந்தைகள் தொழுவம்தான் அங்கன்வாடி. அந்த அங்கன்வாடியில் அருந்ததியர் குழந்தைகளுக்கு அனுமதி இல்லை என்றால், ‘நீயெல்லாம் படிக்க வந்துட்டியா போடா' என்பதாகத்தானே பொருள்!

சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதையின் தொகுதியில் இப்படியொரு அவலம் நடந்திருக்கிறது. அங்கன்வாடியில் அருந்ததியர் குழந்தைகள் சேர்க்கப்படவில்லை என்பது கட்சி அரசியலாகவும், தீண்டாமைப் பிரச்சினையாகவும்தான் பலரால் அணுகப்பட்டது. ஆனால், தெற்குப்பட்டி கிராமத்தில் அருந்ததியர்களை ஒருங்கிணைத்து விழிப்பு நிலைக்குட்படுத்தி வரும் ‘அருந்ததியர் முன்னேற்றச் சங்க'த்தின் தலைவர் பாப்பா அவர்கள், இப்பிரச்சினையை மாற்றுக் கண்ணோட்டத்தில் அணுகியுள்ளார். ஒரு சமூகம் ஆதிக்க சாதிகளால் ஒடுக்கப்படும்போது, ஒடுக்கப்பட்ட சமூகங்களால் ஆதிக்க சாதிகளுக்கு என்ன பயன் ஏற்படுகிறது என்பதை அறுதியிட்டு, அதனை வேரறுக்கின்ற வேலையை பாப்பா கையிலெடுத்துள்ளார். அதுதான் ‘இழிதொழிலை இனி நாங்க செய்ய மாட்டோம்' என்பது.

மாடு தூக்குவது, குழி வெட்டுவது, இழவு செய்தி சொல்வது, ஊர் மாடு மேய்ப்பது, ஆண்டைக்கு செருப்பு தைப்பது, கொத்தடிமையாவது, சோறு எடுப்பது இவ்வாறான இழி தொழில்களை, பண்ணையடிமைச் சேவகங்களை இனி ஒருபோதும் செய்ய மாட்டோம் என்கிற முடிவை, ஒட்டுமொத்த அருந்ததியர்களையும் எடுக்க வைத்துள்ளார் பாப்பா. மாவீரன் ஒண்டிவீரன் முன்னிலையில் எடுக்கப்பட்ட இச்சூளுரையை மீறுபவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் என்கிற முடிவையும் ஏற்று உறுதி காட்டி வருகின்றார்கள்.

இழிதொழிலை செய்ய மாட்டோம் என்கிற முடிவு புதிது அல்ல. மாற்று வேலைவாய்ப்பு இருக்கும் பட்சத்தில் அப்படியொரு முடிவை எல்லோரும் எடுத்துவிட முடியும். ஆனால், அங்கன்வாடியில் அருந்ததியர் குழந்தைகளுக்கு அனுமதி இல்லை என்கிற முடிவை ஆதிக்கச் சமூகம் எடுக்கும்போது, அதற்கு சவாலாக அவர்களை எதிர்த்து இனி அடிமைச் சேவகம் செய்ய மாட்டோம் என்று எடுக்கும் முடிவு, அவர்களின் வாழ்க்கைச் சூழலையே கேள்விக்குட்படுத்தும் முடிவாகும். இந்தச் சூழலில் எடுக்கப்பட்ட முடிவுக்கு, தமிழக தலித் அமைப்புகள் தோள் கொடுத்து நிற்க வேண்டும்.

தெற்குப்பட்டி ஆதிக்க சாதியினருக்கு காலம் காலமாக அடிமைச் சேவகம் செய்ய அருந்ததியர்கள் வற்புறுத்தப்பட்டுள்ளனர்.இந்த வற்புறுத்தலை வழி மறிக்கும் முயற்சியாக, இழிதொழில் செய்ய ஒட்டுமொத்த அருந்ததியர்களும் மறுத்துள்ளனர். அவர் கள் மறுத்த நாள் முதல் இன்று வரை, கடந்த ஆறு மாதங்களில் 5 மரணங்களுக்கு இழவு செய்தி சொல்லவில்லை; குழி வெட்டப் போகவில்லை. இப்படியொரு முடிவை எடுத்த அய்யம்பாளையம், மணக்கடவு, சின்னதாராபுரம், பேரையூர், காளப்பட்டி போன்ற பல பகுதிகளில் அருந்ததியர்களுக்கு பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது. கடைகளில் பொருள்கள் கொடுப்பதில்லை, வேலையும் தரப்படுவதில்லை.

இதற்கு நிகராக இழிதொழில் இனி செய்ய மாட்டோம் என்பதும்கூட, அருந்ததியர்கள் ஆதிக்கச் சாதியினர் மீது விதித்துள்ள பொருளாதாரத் தடை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இழிதொழில் செய்வதன் மூலம், இதுவரை ஆதிக்கச் சாதியினர் அனுபவித்து வந்த பொருளாதார வரவுகளுக்கு பாப்பா வேட்டு வைத்துள்ளார். இனி இந்த வேலையை ஆதிக்க சமூகங்களுக்கு யார் செய்தாலும், அந்த சமூகத்தினர் அதற்கு கூலி கொடுத் தாக வேண்டும் என்ற நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளார். அது மட்டுமல்ல, தெற்குப்பட்டி அருந்ததியர் மீது சுமத்தப்பட்டுள்ள சமூக அவலங்களில் இருந்து அவர்களை விடுவிக்கின்ற வேலையையும் செய்துள்ளார். ஒடுக்கப்படுவதில் உச்ச நிலையில் உள்ள ஒரு சமூகம், ஓசையின்றி தலித் விடுதலைக்கான சமூக அரசியலை அடையாளம் கண்டுள்ளது.

17.3.2007 அன்று மதுரை தலித் கலை விழா கருத்தரங்கில் பாப்பா, தாங்கள் எடுத்த முடிவை கிருத்துதாசு காந்தி முன்னிலையில் அறிவித்தார். ‘அவர் எடுத்த இதே முடிவை பிற கிராமங்களும் எடுக்க வேண்டும்' என்று கிருத்துதாசு காந்தி கேட்டுக் கொண்டார். இழிதொழில் செய்ய மாட்டோம் என்பதைப் போல, இனி மலமள்ள மாட்டோம் என்ற முடிவையும் ஒரு பிரச்சாரமாகத் தொடங்கி செயல்படுத்த பாப்பா உத்வேகம் கொடுத்துள்ளார். ‘இழிதொழில் செய்ய மாட்டோம்; மலமள்ள மாட்டோம்’ என்கிற முழக்கத்தை, ஒட்டுமொத்த தமிழக சேரிகளில் குறைந்தது ஓராண்டு முழங்கினாலே அது தலித் அமைப்புகளுக்கும், தலித்துகளின் சமூக அரசியலுக்கும் கிடைத்த வெற்றியாகக் கொண்டாடலாம்.