எழுத்தாளர்களின் எழுச்சிமிக்க ஆர்ப்பாட்டம் வெப்பத்தின் அளவு கூடிக்கொண்டே இருந்தது, வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பகத்தின் முன்னுள்ள தார்சாலையில். பிப்ரவரி 14 அன்று காதலர் தினத்தின் கனவுகளை உலகம் சுவைத்துக் கொண்டிருந்த நேரம். வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பகம் மட்டும் பதற்றத்தில் இருந்தது. உயர் நீதிமன்றத்தின் ஆணைக்கிணங்க, தலித் இலக்கியத்தின் அடையாளமாகக் கருதப்படுகின்ற அழகிய பெரியவன் தாக்கப்பட்டதைக் கண்டித்து, வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பக அலுவலகத்தின் முன்பு பிப்ரவரி 14, அன்று 3 மணிக்கு சரியாக ஆர்ப்பாட்டம் தொடங்கியது. ஏற்கனவே உயர் நீதிமன்றம் அளித்த அனுமதியை மதிக்காத வேலூர் மாவட்ட காவல் துறை மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடப்பட்டு, நீதியின் முன் தலைகுனிந்த பிறகுதான் காவல் துறை அனுமதியளித்தது.

காஞ்சிபுரம் மக்கள் மன்றத் தோழர்களின் பறை முழங்க, ஆர்ப்பாட்டம் தொடங்கியது. இவ்வார்ப்பாட்டத்தில் பேராசிரியர் அய். இளங்கோவன், "உயர் நீதிமன்றம் சொல்லி இருக்கும் நடைமுறைகளைப் பின்பற்றி இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது. ஆனால், வடக்கு காவல் நிலையத்திற்கு, ஆர்ப்பாட்டத்திற்கான அறிவிப்பைத் தர நான் சென்றிருந்தபோது, என்னை உட்காரக்கூடச் சொல்லாமல், மிகவும் மோசமாக காவல் துறை ஆய்வாளர் மகேந்திரன் நடந்து கொண்டார். தலித்துகள் உட்கார்ந்தால் நாற்காலிகள் தீட்டுப்படும் என அந்த அதிகாரி நினைக்கிறார். ‘காவல் துறை உங்கள் நண்பன்' என்று உயரதிகாரிகள் பேசுகின்றனர். ஆனால் அதற்கு எதிராக ஆய்வாளர்கள் நடந்து கொள்கிறார்கள். அவர்கள் திருந்த வேண்டும், அழகிய பெரியவனைத் தாக்கிய சங்கரன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

கவிஞர் தமிழேந்தி, "அழகிய பெரியவன், பெரிய பெரிய பதவிகளில் இருக்க வேண்டியவர். இந்த வேலை வாய்ப்பகத்திற்கு வரவேண்டிய அவசியமே அவருக்கு இல்லை. அப்படிப்பட்ட ஒருவர், தமிழக அரசு விருதினைப் பெற்ற ஒருவர் தாக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. சங்கரன் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று வலியுறுத்தினார். ஒவ்வொருவரும் பேசுவதற்கு முன் பறையடித்தலும், முழக்கமிடுதலும் ஆர்ப்பாட்டத்தை மிகவும் எழுச்சியாகவும், புதுமையானதாகவும் மாற்றியது. யாக்கன் பேசுகையில், "நீண்ட கால போராட்டத்திற்குப் பிறகு, இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. ஆர்ப்பாட்டம் என்பது மிகச் சாதாரணமான ஓர் எதிர்ப்பு முறை. இதற்கே இத்தனை வழக்குகள் போட்டுதான் அனுமதி வாங்க வேண்டியிருக்கிறது. ஆனால், எங்களால் வேறு வழிகளிலும் இந்த அநீதிக்கு பதிலடி தரமுடியும். சங்கரன் மீது நடவடிக்கை எடுக்கவில்லையெனில், அவற்றையும் நாங்கள் செய்வோம்'' என்றார்.

புனித பாண்டியன் பேசும்போது, "பத்தாண்டுக்களுக்கு மேலாகப் பதிவு செய்துவிட்டு காத்திருக்கும் அழகிய பெரியவன், தனக்கு வேலை கிடைக்கவில்லையே என்பதற்காக இந்தப் போராட்டத்தை நடத்தவில்லை. மாறாக, தனக்கு நிகழ்ந்த அவமானத்தை எதிர்த்துதான் இந்தப் போராட்டத்தை அவர் நிகழ்த்துகிறார். இது, சுயமரியாதைக்கான மனித மாண்புகளை மீட்டெடுப்பதற்கான, அம்பேத்கர் வழியில் நடத்தப்படும் போராட்டம்'' என்றார். எழுத்தாளர் பூங்குழலி, ஸ்டாலின் ராஜாங்கம், சவுந்தரபாண்டியன், ஸ்டாலின் மற்றும் பலர் உரையாற்றினர்.

வேலைவாய்ப்பக அலுவலகத்தில் காத்திருந்த இளைஞர்களின் முகங்களில் மகிழ்ச்சி பொங்கியது. தங்களுக்கும் நாள்தோறும் இப்படித்தான் அவமானங்கள் நடக்கின்றன; இவை இனிமாறும் என்று அவர்கள் நம்பினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு முந்நூறுக்கும் மேற்பட்ட மக்கள் வந்திருந்தனர். போராட்டத்தின் எதிரொலியாய், வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பக அலுவலர் சங்கரனை, காஞ்சிபுரத்திற்கு அரசு மாற்றியிருந்தது. மிகவும் குறைந்தபட்ச தண்டனையாக இது இருந்தாலும் - "மூட்டைக் கட்டு மூட்டைக் கட்டு சங்கரனை மூட்டைக்கட்டு'' என்ற மக்களின் முழக்கத்திற்கு கைமேல் பலன் கிடைத்திருக்கிறது.

- நம் செய்தியாளர்