Child
குழந்தைகளற்ற பூமி எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்! உலக இயக்கம் நிலை குலைந்து விடாதா? மனித சமூகத்தின் வளர்ச்சிக்கு முக்கிய ஆதாரம் குழந்தைகள். எந்த சமூகம் குழந்தைகளுக்கான உரிமைகளை மறுப்பின்றி முழுமையாக வழங்குகிறதோ, அந்த சமூகமே மேன்மையடையும். அந்த அடிப்படையில் இந்தியாவின் வளர்ச்சி என்பது எப்போதுமே கேள்விக்குறிதான். மத, சாதி, பண்பாட்டு, பாலின, பொருளாதார, அரசியல் ரீதியான பாகுபாடுகளைக் கொட்டி குவித்து வைத்திருக்கும் நாட்டில் X குழந்தைகளுக்கான உரிமைகளும், நீதியும் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது.

குழந்தைகளுக்கு இந்த நாடு என்ன மரியாதை தருகிறது? மரியாதை என்பதை பெரியவர்களின் சொத்தாக மட்டுமே பார்க்கும் சமூகம் இது. மத்திய, மாநில அளவுகளிலும், சர்வதேச நிலையிலும் எண்ணற்ற ஒப்பந்தங்கள், சட்டத் திருத்தங்கள் இருந்த போதிலும் கோடிக்கணக்கான குழந்தைகள் X உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையிலேயே உழல்கின்றனர்.

அய்க்கிய நாடுகள் அவை, குழந்தைகளின் உரிமைகள் குறித்த உடன்படிக்கையை 1989இல் ஏற்படுத்தியது. அதில் 18 வயதுக்குட்பட்டோர் குழந்தைகள் என்ற வரையறையோடு, மொத்தம் 23 உரிமைகளை குழந்தைகளுக்கானதாக அது வலியுறுத்துகிறது: புறக்கணிப்பு மற்றும் தண்டனை வழங்குவதிலிருந்து காப்பாற்றப்பட வேண்டிய உரிமை, சம உரிமை, சமூக நீதிக்கான உரிமை, வாழ்வுரிமை, ஆபத்து இல்லாத சுற்றுப்புறச் சூழலில் வாழும் உரிமை, பொழுது போக்கு உரிமை, விளையாட உரிமை, அன்பு செலுத்த உரிமை, தகவல் கோரும் உரிமை, சிந்திக்கும் உரிமை, சிந்தித்ததை சொல்லும் உரிமை, சங்கங்கள் அமைக்க உரிமை, பொதுக் கூட்டங்கள் கூட்டும் உரிமை, குழந்தைகள் குறித்த முடிவு களை எடுப்பதில் ஊடகங்களோடு பங்கேற்கும் உரிமை, தொடர்பு கொண்டு - தங்கள் கருத்தைத் தெரிவிக்கும் உரிமை, உயர்ந்த தரமான சிகிச்சை பெறும் உரிமை, ஆரோக்கியமான உணவு, குடிநீர் மற்றும் முறையான தங்கும் இடம் ஆகியவற்றுக்கான உரிமை, இலவச - தரமான கட்டாயக் கல்விக்கான உரிமை, பொருளாதார சுரண்டல்களுக்கு எதிராக தம்மை காத்துக் கொள்ளும் உரிமை, பாலியல் கொடுமைகளிலிருந்து பாதுகாப்பு உரிமை, நீதி மற்றும் சட்டத்தைத் தொடர்பு கொண்டு தீர்வு காண உரிமை.

இந்த உடன்படிக்கையில் இந்தியா 1992இல் கையெழுத்திட்டது. எனினும், இதற்கு முன்பே தனது அரசியல் சட்டத்தில் குழந்தைகளுக்கான உரிமைகளைக் காக்கும் கடமையை ஏற்றுக் கொண்டிருக்கிறது. இவை தவிர, குழந்தைத் தொழிலாளர் (தடை) சட்டம், குழந்தைகள் சட்டம் என்று சில சிறப்புச்சட்டங்கள் இருந்தாலும், எல்லா உரிமைகளுமே குழந்தைகளுக்கு எட்டா கனியாகவே இருக்கின்றன. சுமார் 45 ஆயிரம் குழந்தைகள் கொத்தடிமைகளாக வேலை செய்கிறார்கள் என மத்திய அரசே ஒப்புக் கொண்டிருப்பது, இதற்கு மோசமான எடுத்துக்காட்டு.

இந்தியாவில் குழந்தைகளின் நிலை மற்றும் குழந்தைப் பருவம் என்பதை சாதி, மத, பண்பாடு, ஆணாதிக்க மற்றும் பெரியவர் மனப்பான்மை ஆகியவற்றைக் கொண்டே நாம் அணுக வேண்டும். ஆணும் பெண்ணும் தங்களது தன்மைகளை (அதாவது ஆண்மையையும் பெண்மையையும்) நிரூபிக்கும் களமாகவே குழந்தையை கருதுகின்றனர். ஒரு குழந்தையை பெற்றெடுப்பதை, வெறும் உடல் சார்ந்த உழைப்பாகவே பார்க்கும் மனப்போக்கே இன்றும் நிலவு கிறது. குழந்தை பெற இயலாதவர்களை மலடன்/மலடி என்று இந்த சமூகம் தூற்றக் கூடாது என்ற அச்சத்தினாலேயே பலர், திருமணமான உடன் அவசர அவசரமாக குழந்தையைப் பெற்றெடுக்கின்றனர். இந்தியாவில் குழந்தைகள் பெரும்பாலும் தவறுதலாகவோ, பலாத்காரத்தாலோ அல்லது அறியாமையாலோதான் பிறக்கின்றன. அதிலும் பெரும்பாலும் சிறுமிகளோ, சத்துக் குறைவான பெண்களோதான் குழந்தையைப் பெற்றெடுக்கின்றனர். மதம் சார்ந்த குடும்பம்தான் இதற்கு பின்னணியில் இருக்கும் உந்து சக்தி ஆகும்.

இந்த கட்டாயத்திலும் பாலினப் பாகுபாடு வலுவாகப் பின்பற்றப்படுவதால் - பெண் குழந்தைள் பல கருவிலோ, சிசுவாகவோ சாவது ஒருபுறமெனில், உயிர் வாழ வாய்ப்பு வழங்கப்பட்ட பெண் குழந்தைகள், அடிப்படை உரிமைகள்கூட கிடைக்காதவர்களாகவே இருக்கின்றனர். இறப்பிற்குப் பிறகான சடங்குகளில் ஆண் மகனின் பங்கு இல்லையெனில், ஆண் குழந்தை பெறாதவர்கள் ‘மோட்சம்' அடைய மாட்டார்கள் என்ற மூடநம்பிக்கையும்; ஆண் குழந்தையால் மட்டுமே சொத்து மற்றும் பரம்பரை கவுரவத்தைக் காப்பாற்ற இயலும் என்ற மதக் கற்பிதமும் - ஆண் குழந்தை மோகத்துக்கான அடிப்படைக் காரணங்களாகும்.

Girlபொருளாதார சுமை மற்றும் மக்கள் தொகை கொள்கையால், குழந்தைகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதனால் பாலின அடிப்படையில் கருக்கலைப்பு (Sex Selective Abortion) மற்றும் பெண் சிசுக் கொலைகள் நடந்தேறின. பிறக்கும் உரிமையே பெண் குழந்தைகளுக்கு மறுக்கப்படும் அவலம் தொடர்கையில், வேறெந்த உரிமையைப் பற்றி நாம் பேசுவது? பிறப்பிற்குப் பின் மறுக்கப்படும் முக்கியமான உரிமை - பிறப்பு பதிவு உரிமை. இந்தியாவில் சுமார் 65% குழந்தைகளின் பிறப்பு பதிவு செய்யப்படுவதில்லை. இவர்களுக்கு என்ன நேர்ந்தாலும், அதாவது ஏதோவொரு காரணத்தால் அவர்கள் இறந்துவிட்டால், அவர்கள் இந்த பூமியில் பிறந்தார்கள் என்பதற்கு எந்த சான்றும் வரலாற்றில் இல்லாமலே போய்விடும். இப்படித்தான் பல குழந்தைகள் பிறந்தும் அவர்களுடைய பிறப்பு பதிவு செய்யப்படாததினால் - குப்பைத் தொட்டியில் வீசப்பட்டும், விலைக்கு விற்கப்பட்டும், பிறகு முறையான கவனிப்பு இல்லாத காரணத்தால் உயிரிழந்தும் அல்லது கொல்லப்பட்டும் விடுகிறார்கள். இது போன்ற பல லட்சம் குழந்தைகளின் கொலைகளுக்கு சாட்சிகளே இல்லை.

இந்தியக் குழந்தைகளுக்கு இரண்டு மிகப் பெரிய தடைகள் உள்ளன. அவை, குடும்பக் கட்டமைப்பும், மதங்களும். இந்த இரண்டும்தான் குழந்தைகளின் வளர்ப்பு முறையைத் தீர்மானிக்கின்றன. பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் ஏதேனும் ஒரு விதத்தில் ஒரு முறையோ அல்லது பல முறைகளோ பாலியல் ரீதியிலான கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள். வீடு, வாகனங்கள், பூங்காக்கள், திரையரங்குகள் உள்ளிட்ட பொது இடங்களில் மாமாக்கள், அண்ணன்கள், தாத்தாக்கள், அப்பாக்கள், அத்தைகள், போன்றவர்களே பாலியல் சீண்டல்களிலும், கொடுமைகளிலும் ஈடுபடுகிறார்கள். இந்த பாலியல் கொடுமைகளில் அம்மாக்களுக்கு மறைமுகமான பங்குண்டு. அதாவது, குடும்ப மரியாதையை காப்பாற்றுவதற்காக அத்தகைய கொடுமைகளை அவர்கள் வெளியில் கொண்டு வருவதில்லை.

குழந்தைகள் மீதான பாலியல் தொல்லைகளை, இந்திய சமூக முறை ஒரு குற்றமாக ஒப்புக் கொள்வதில்லை. மாறாக, மூடி மறைக்கிறது. குடும்ப மரியாதைதான் இங்கு குழந்தைகளின் உரிமைகளை விட முக்கியத்துவம் பெறுகிறது. இப்படிப்பட்ட கொடுமைகளுக்கு எதிராக புகார் செய்யும் துணிச்சல், மிகச் சில குழந்தைகளுக்குதான் வாய்க்கிறது; அல்லது குழந்தைகள் மீது ஏவப்படும் வன்முறையில் அந்த குழந்தை உயிரிழக்க நேர்ந்தாலோ, உடலில் பெரும்காயம் ஏற்பட்டாலோ, அது வழக்கு விசாரணைக்கு தவிர்க்க முடியாமல் வந்துவிடுகிறது. இப்படி காவல் நிலையத்திற்கு வரும் வெகு சில புகார்களே ஆண்டுக்கு சுமார் 15,000 ஆகும். இந்த கொடுமைகளைப் பொறுத்தவரை, சட்டம் ஒன்றுக்கும் உதவாததாகவே இருக்கிறது. குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களைத் தடுக்க, தண்டிக்க குற்றவியல் சட்டத்தில் தனித்த சட்டம் எதுவும் இல்லை. இ.பி.கோ. 354 அய் நம்பியே இந்த வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. குழந்தைகள் மீதான பாலியல் புகார்களை விசாரித்து, உச்ச நீதிமன்றம் இதுவரை 13 தீர்ப்புகளை வழங்கியிருந்தாலும் - அவற்றை அலசிப் பார்த்தால், குழந்தைகள் மீதான வன்முறைகளில் நீதித்துறையின் அலட்சியப் போக்கு வெளிச்சத்துக்கு வரும்.

ஆசிரியர் கையில் வைத்திருந்த பிரம்பு குத்தி பார்வையிழந்தவர்கள், உப்பு மீது முட்டிக்கால் போட வைத்ததால் கால் ஊனமான மாணவர்கள், ‘ஸ்குரு டிரைவர்' கொண்டு அடித்ததால் மண்டை உடைந்த மெக்கானிக் சிறுவர்கள் எனப் பள்ளிகளில், பணியிடங்களில், குடும்பங்களில் கொடுமைகளுக்கு ஆளாவது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மூன்றில் இரண்டு குழந்தைகள் இதுபோன்ற கொடுமைகளை நாள்தோறும் சந்திக்கிறார்கள். உடலில் ஏற்படும் காயங்களை விட மனதளவில் உண்டாகும் பாதிப்பு பெருத்த மனச்சிதைவாக, எளிதில் ஆற்ற முடியாத துன்பமாக மாறுகிறது. ‘அடிச்சாதாங்க திருந்துவாங்க' என்ற ஒற்றை அதிகாரச் சொல்லைப் பயன்படுத்தியபடி, இந்தக் கொடுமைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டு பெரியவர்கள் குழந்தைகளை ஏய்த்து வருகிறார்கள்.

இந்தியாவில் உற்பத்தி மற்றும் லாபத்தில் குழந்தைத் தொழிலாளர்களின் பங்கு சுமார் 30 சதவிகிதம். குழந்தைகளை வேலையில் அமர்த்துவது, குழந்தைத் தொழிலாளர் தடைச் சட்டத்தின் கீழ் குற்றம் என்று இருந்த போதிலும் - குழந்தைகளைப் பல்வேறு வேலைகளிலும் (பாலியல் தொழில், கஞ்சா கடத்துதல், தீவிரவாதம்) இந்நாடு ஈடுபடுத்துகிறது. ஒரு கோடியே இருபதாயிரம் குழந்தைகள் (5 - 14 வயது வரை) பலதரப்பட்ட வேலைகளில் ஈடுபடுகிறார்கள் என்று அரசே ஒப்புக் கொள்கிறது (‘யுனிசெப் ஆண்டறிக்கை' 2006).

கல்வியைப் பொறுத்தவரை, தொடக்கக் கல்வி, பள்ளிக் கல்வி மற்றும் உயர் நிலைக்கல்வி என்று மூன்று பிரிவுகளாக பிரித்துக் கொள்ளலாம். அரசு, கல்வியை இப்படித்தான் நிர்வகிக்கிறது. கல்வியை மத்திய அரசின் பொறுப்பிலும் இல்லாமல், மாநில அரசுகளின் பொறுப்பிலும் இல்லாமல் பொதுப் பட்டியலில் வைத்திருக்கிறார்கள். சில மாநிலங்களில் கல்வியை ஊராட்சி மன்றங்கள் நிர்வகிக்கின்றன. ஒழுங்கற்ற, பாகுபாடு நிறைந்த இந்த நிர்வாக முறை மற்றும் கொள்கைகள் குழப்பத்தையே உண்டாக்குகின்றன. இங்கு இரண்டு முக்கியமான கேள்விகளை எழுப்ப வேண்டும். அவை, சுமார் 40 சதவிகித குழந்தைகளைக் கொண்ட இந்த நாடு, குழந்தைகள் அமைச்சகம்/குழந்தைகள் ஆணையம் என்று தனித்ததொரு துறையை இதுவரை ஏன் உருவாக்கவில்லை? குழந்தைகள், பெண்கள், மகப்பேறு, தொடக்கக் கல்வி, பள்ளிக்கல்வி ஆகிய அனைத்தையும் மனித வள மேம்பாட்டுத் துறை என்ற ஒரே அமைச்சகத்தின் கீழ் வைத்து ஒப்புக்கு ஒரு நிர்வாகத்தை நடத்துகிறது இந்த அரசு.

Dalit Childsகுழந்தைகள் கல்வி பெறுவதை அவர்களின் அடிப்படை உரிமை என்றும், அக்கல்வியை வழங்குவது அரசின் அடிப்படைக் கடமை என்றும் இந்திய அரசியல் சட்டம் உறுதியளிக்கிறது.

ஆனால், அரசமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் மிகப் பெரிய குற்றத்தையே அரசு செய்து வருகிறது. குழந்தைகளைப் பணியிடங்களில் இருந்து வெளியேற்றுவது, அவ்வாறு வெளியேற்றப்பட்ட குழந்தைகளை அவரவர் வீடுகளில் சேர்ப்பது, அப்படி சேர்க்க முடியாத குழந்தைகளை அவர்கள் விரும்பும் மாநிலத்தில்/பகுதியில் வாழ வைப்பது; குடும்பங்களிலிருந்து மீண்டும் அவர்கள் வெளியேற்றப்பட உள்ள சமூக, பொருளாதார, பண்பாட்டு, சாதிய காரணங்களைக் கண்டறிந்து அவற்றைக் களைவது, இவர்கள் படிப்பதற்கு விளையாட்டு அரங்கு, நூலகம், கழிவறை, பூங்கா உள்ளிட்ட கல்விக் கூடங்களை நிறுவி, பத்து குழந்தைகளுக்கு ஓர் ஆசிரியர் என்ற விகிதத்தில் கல்வியளிப்பது என இதற்கான பொருள் செலவு மற்றும் திட்டங்களை மேற்பார்வையிடும் முறை ஆகியவற்றில் தகுந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும், இவை அனைத்தும் அரசின் நிதி ஒதுக்கீட்டால் மட்டுமே சாத்தியமாகும்.

இந்தியா, தனது மொத்த வருவாயில் வெறும் 3.5 சதவிகிதமே குழந்தைகளின் கல்விக்கும், உடல் நலத்திற்கும் செலவிடுகிறது. ஆனால், பிரேசில் 12%, இலங்கை 16%, வியட்நாம் 18%, பிலிப்பைன்ஸ் 24% என செலவிடுகின்றன. தாய்லாந்து தன்னுடைய வருவாயில் 30 சதவிகிதத்தை குழந்தைகளின் கல்வி மற்றும் உடல் நலத்திற்காக செலவிடுகிறது. தன்னைவிட சிறிய நாடுகள் செய்யக் கூடியதை, ஏன் இந்தியாவால் செய்ய முடியவில்லை?

கடந்த அய்ம்பது ஆண்டுகால இந்திய ஆட்சிகளின் கொள்கைகள், நிர்வாகம் ஆகியவற்றை அலசிப் பார்த்தால் - நாம் ஒரு விஷயத்தை உறுதியாக சொல்ல முடியும். அது, இந்தியா ஒருபோதும் நூறு விழுக்காடு கல்வியறிவு பெற்ற நாடாக வளர்ச்சி பெற முடியாது. ஏனெனில், இந்தியாவில் குழந்தைகளின் எண்ணிக்கை இவ்வளவு; ஒரு குழந்தைக்கு ஒரு நாள் கல்வி, உணவு, உறைவிடம், பாதுகாப்பு மற்றும் பொழுதுபோக்கிற்கு இவ்வளவு செலவாகும் எனக்கணக்கிட்டு நிதி ஒதுக்கப்படுவதில்லை. குழந்தைகள் ஆயிரம் இருந்தால் என்ன, லட்சம் இருந்தால் என்ன? ஒரு பருக்கை சோறுதான் தருவேன். அதையே சிந்தாமல் சிதறாமல் பகிர்ந்து சாப்பிட்டுக் கொள்ளுங்கள் என்பதுதான் இந்திய அரசின் குரலாக இருக்கிறது.

குழந்தைகளின் உரிமைகள் குறித்து நீதியின் (சட்டம்) பார்வையும் ஏனோதானோதான். இந்திய சட்டத்தில் குழந்தை என்ற சொல்லுக்கு சரியான வரையறை இல்லை. கடத்தல் (தடை) சட்டத்தில் 16 வயது வரை உள்ளவர்கள் குழந்தைகள். சிறார் நீதி (அக்கறை மற்றும் பாதுகாப்பு) சட்டத்தில் குழந்தை என்றால் 18 வயது முடியாதவர்கள்.

இத்தகு குழப்பமான நிலையில், குழந்தைகளின் உரிமைகளை பிற ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளோடு நாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியிருக்கிறது. அதாவது, தலித் மக்கள் மற்றும் பெண்களின் உரிமைகள். இந்தியாவில் இந்து மதம் மேல் மற்ற மதங்கள் எல்லாம் கீழ்; இந்து மதத்தில் சாதியப்படி நிலைகளில் பார்ப்பனர்கள் மேல் மற்றவர் அனைவரும் கீழ்; ஆண்கள் மேல், பெண்கள் கீழ்; அதேபோல் பெரியவர்கள் மேல், குழந்தைகள் கீழ். எப்படி தலித் மக்களை ஒடுக்க சாதி இந்துக்கள் ஒன்று கூடுகிறார்களோ, பெண்களை அடக்க மதம், சாதி வேறுபாடுகளின்றி ஆண்கள் ஒன்று கூடுகிறார்களோ - அதைப் போலவே குழந்தைகளை சாதி, மத, பாலினப் பாகுபாடுகளைக் கடந்து அனைவருமே ஒடுக்குகிறார்கள். இது, மூத்தோர் ஆதிக்க உலகம் (Adult Chauvinism). எடுத்துக்காட்டாக ஒரு விஷயத்தை இங்கு சொல்லலாம். குடும்பங்களில் கணவனோ, கணவன் வீட்டாரோ செய்யும் கொடுமைகளிலிருந்து பெண்களைக் காப்பாற்ற குடும்ப வன்முறைத் தடைச் சட்டம் உள்ளது. ஆனால், அதே பெண் தன் மாமியார் மற்றும் குடும்பத்தோடு சேர்ந்து தன் பிள்ளைகளை அடிக்கலாம், உதைக்கலாம். ‘பெத்தவங்களுக்கு அடிக்க உரிமையில்லையா' என்ற கேள்வியோடு அநாகரிகமாக அரங்கேறுகின்றன குழந்தைகள் மீதான வன்முறைகள்.

இந்த அடிப்படையில் ஒரு முக்கியமான முடிவுக்கு நாம் வர வேண்டியிருக்கிறது. குழந்தைகளுக்கு எதிரான இந்த உலகில் குழந்தைகளுக்கு ஆதரவு போல் தெரியும் எல்லாமே போலியானவை. இந்து ஆணாதிக்க சமூகம் யாரைத்தான் உரிமைகளோடு வாழ அனுமதித்திருக்கிறது, குழந்தைகள் மட்டும் இதிலிருந்து தப்பிவிட? குழந்தைகள் என்ற சொல் இங்கு பொதுமைப்படுத்தப்பட்டுள்ளது என்றாலும், எல்லா குழந்தைகளும் சாதி, மத, பாலின என ஏதோவொரு உரிமை மீறலைக் கடந்தே வளர்கிறார்கள். எதுவும் இல்லையெனில், பெரியவர் மனப்பான்மை என்னும் அதிகாரத்துக்கு அவர்கள் கடைசி வரை கட்டுப்பட்டே தீர வேண்டியிருக்கிறது.

இந்த சமூகம் குழந்தைகளுக்கானதாக இல்லை. இந்து மதம் சாதி அடிப்படையில் மனிதர்களைப் பிரித்து வைத்திருக்கிறது. சமூகத்தில் வேரூன்றி இருக்கும் அத்தனைப் பாகுபாடுகளுக்கும் காரணம் மதமும் - அந்தக் கருத்தியலின் மூலம் விளைந்த பண்பாட்டுக் கூறுகளுமே! குழந்தைகள் மீதான வன்முறைகளின் தொடக்கப் புள்ளியும் அதுதான். ஒரு குழந்தை பிறந்தவுடனே அதன் மீது திணிக்கப்படும் மிகப் பெரிய கட்டாயம் - ஏதோவொரு மதத்தை அது சார்ந்திருக்க வலியுறுத்தப்படுவது: அலகு குத்துதல், காவடி எடுத்தல், தீ மிதித்தல், தீச்சட்டி எடுத்தல், விரதம் என்ற பெயரில் பட்டினி போடுதல், காது குத்துதல், சுன்னத் செய்தல், ஞானஸ்தானம், மொட்டை போடுதல் போன்ற மத ரீதியான துன்புறுத்தல்களை - கேள்வியின்றி, மறுப்பின்றி குழந்தைகள் ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. இதில் தனக்கு உடன்பாடில்லை என மறுக்கும் அல்லது இந்த மூடநம்பிக்கைகளை கேள்வி எழுப்பும் குழந்தைகள் ‘தெய்வ குத்தம்' செய்தவர்களாக அடித்துத் துன்புறுத்தப்படுகின்றனர். தவிர ஜாதகம், ஜோசியம் போன்ற மூடத்தனங்களும் அந்த வயதிலேயே அவர்கள் மீது திணிக்கப்படுகின்றன.

Childஅதிகாரம் செய்வது, அடிமைப்படுவது என்ற இரண்டு நிலைகளில் ஏதோ ஒன்றுக்கு குழந்தைகளை இந்த சாதிய சமூகம் பழக்கப்படுத்துகிறது. சமத்துவம் என்பதும், சுயமரியாதை என்பதும் பாடப் புத்தகங்களில் வெறும் வார்த்தைகளாக இருக்க, வாழ்க்கை அவர்களுக்கு அத்தனை சீர்கேடுகளையும் சொல்லித் தருகிறது. சமத்துவப் பண்பாடு என்ற பாடம் மட்டும் குழந்தைகளுக்கு திட்டமிட்டே மறுக்கப்படும் நிலையில், உரிமை மீறல்கள் அனைத்தும் வீட்டிலிருந்தே தொடங்குகின்றன. வீட்டில் தன் குழந்தையை கட்டுப்படுத்தும் ஓர் ஆண் மற்றும் பெண்தான் - சமூகத்தின் பண்பாட்டுக் காவலர்களாக வெளியில் நடமாடுகிறார்கள். இவர்கள் கட்டிக் காக்கும் பண்பாடானது, அடங்கிப் போ அல்லது அடக்கி ஆள் என்ற ஒற்றை விதிக்குட்பட்டது. குடும்பத்தின் இந்த ஆதிக்கப் பிரதிநிதிகளே கல்விக் கூடங்களில், காவல் நிலையங்களில், தொழிற்சாலைகளில், மருத்துவமனைகளில், அரசியல் முடிவுகளை எடுக்கும் இடங்களில், திட்ட உருவாக்கக் குழுக்களில் என எல்லா தளங்களிலும் நிறைந்திருக்கிறார்கள்.

ஆக, அதிகாரம் மற்றும் உரிமை மீறல்களுக்கு எதிரான சிந்தனை மாற்றம் என்பது, குடும்பத்திலிருந்தே தொடங்கப்பட வேண்டும். குறிப்பாக, குழந்தைகளை கையாளும் அணுகுமுறையிலிருந்து. சமத்துவத்தை மதிக்கும் பெற்றோரைப் பார்த்து வளரும் குழந்தை - வாழ்வின் கடைசி நொடி வரை சமத்துவ சிந்தனையை விட்டுக் கொடுக்காது. சாதி, மத, பாலின, பொருளாதாரப் பாகுபாடுகளை வெறுத்து, உரிமைகளை மதிக்கும், சுயமரியாதையை வலியுறுத்தும் மனிதர்களோடு வளரும் குழந்தைகள் - நாளைய சமத்துவ சமூகத்தின் வேர்களாக இருப்பார்கள். இப்போதைய உடனடி தேவை - சாதி, மதப் பிடியிலிருந்து விடுபட்ட பண்பாட்டு மாற்றமே! அந்த மாற்றத்தை நிகழ்த்த வேண்டிய பெரும் கடமை, வளர்ந்துவிட்ட நம் கையில்தான் இருக்கிறது. பாகுபாடற்ற பகுத்தறிவு சமூகத்தை உருவாக்குவது மட்டுமே அதற்கு ஒரே தீர்வு.

இது தவிர, குழந்தைகளுக்கென தனித்த ஆணையம், தனியான அமைச்சகம், கல்வி, ஆரோக்கியம், பாதுகாப்பான வாழ்சூழல் என எல்லாவற்றையும் கண்காணிக்க வேண்டும். தேர்தல் வாக்குறுதிகளில் குழந்தைகளுக்கான உரிமைகள் இடம்பெற வலியுறுத்துவது என அரசியல் அதிகாரத்தைப் பல நிலைகளிலும் குழந்தைகளுக்கு விரிவுபடுத்த வேண்டியிருக்கிறது. நீதியும் சட்டமும் குழந்தைகள் யார் என சரியாக வரையறுத்து, உரிமை மீறல்களை கண்காணிக்க வேண்டும். இப்படியாக சாதி, மத, பண்பாட்டு, பொருளாதார, அரசியல் தடைகளைக் கடந்து குழந்தைகளுக்கு இதெல்லாம் சாத்தியப்பட்டு, அத்தனை உரிமைகளோடும் அவர்கள் வளர்வார்களெனில், நாளைய சமூகம் சமத்துவமிக்க பகுத்தறிவு சமூகமாக மிளிரும்!