ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்' என்கிற நூலை தமிழில் மொழிபெயர்த்து வழங்கிய ரா. முருகவேள் மற்றும் பதிப்பித்த விடியல் பதிப்பகத்தினருக்கு முதலில் நம் வாழ்த்துகள். மூல ஆங்கில நூலை வாசித்தது போன்ற மிகவும் நெருக்கமான, எந்த நெருடலுமின்றி இடைவிடாத பயணமாக நூல் தன் போக்கில் சென்று கொண்டேயிருக்கிறது. மிகவும் பொருத்தமான வார்த்தைகள், வாக்கிய அமைப்புகள், அடிக்குறிப்புகள் என ஒரு முக்கிய நூலுக்குத் தேவையான அனைத்து குணங்களும் பொருந்தியதாக விளங்குகிறது.

John Perkins
உங்களுக்கு உலகை வலம் வர விருப்பமிருந்தால், கரடு முரடான பயணங்களுக்கு நீங்கள் தயாராக இருந்தால், உலக நாடுகளின் இயக்கத்தை எக்ஸ்ரே' கண் கொண்டு காணத் துடித்தால், ஏகாதிபத்தியத்தின் புற முதுகைக் காண ஆவலிருந்தால் - உடனடியாக இந்தக் கட்டுரை வாசிப்பதை நிறுத்திவிட்டு, இந்நூலைக் கையில் எடுங்கள்; அதற்கு உங்களை ஒப்புக் கொடுங்கள்.

பெரும் தொழில் நிறுவனங்கள் மற்றும் சர்வதேச வங்கிகள் ஆகியவற்றுக்கு ரகசியமாகவும் வெளிப்படையாகவும் ஒத்துழைக்கும் அரசுகள் - என இந்த மூவர் கூட்டணியின் இயக்கத்தை மிக விரிவாகப் பல எடுத்துக்காட்டுகளுடன் நமக்கு விளக்கு கிறார் ஜான் பெர்கின்ஸ். அமெரிக்காவின் பல பன்னாட்டு நிறுவனங்கள், சி.அய்.ஏ., ஆளும் வர்க்கம், நிறுவன அதிகார வர்க்கம் என சகலமும் வெவ்வேறு அல்ல; ஒரே மரத்தின் கிளைகளே என்பதையும் வெளிச்சப்படுத்துகிறார். அமெரிக்காவின் உள்கட்டுமானங்கள் பற்றிய புதிய சித்திரங்கள் பல உருவாகின்றன. உலகைத் தன் பிடிக்குள் கொண்டுவர அமெரிக்கா தீட்டிய திட்டங்கள், அதற்காக ஏற்படுத்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் என மாபெரும் வலை நம் முன் விரிந்து செல்கிறது. மேற்கூறியவை, ஏகாதிபத்தியம் பற்றி அறிந்திருப்பவர்களுக்கு முன்கூட்டியே தெரிந்தவை தான் என்ற போதிலும், இந்த நூல் ஒரு புனைவைப் போல் நாவலுக்கு ஒப்பாக நம் மனங்களை லாவகமாகப் பற்றிக் கொள்கிறது.

ஒரு சுற்றுலா வழிகாட்டியைப் போல பெர்கின்ஸ், நம்மைப் பல அதிசயத்தக்க மறைவான இடங்களுக்கு அழைத்துச் செல்கிறார். நாம் கண்டிராத, காண முடியாத இடங்கள் அவை. வெவ் வேறு குரல்கள் நம் செவிப்பறைகளில் அலைமோதி, நம்மை வேதனைக்குள்ளாக்குகின்றன. பொம்மலாட்டக்காரர், பழங்குடியினர், இந்தோனேசிய ஆங்கில மாணவி, ஆப்கான் பிச்சைக்காரர், இளவரசர் டயிள்யூ, பொன்னிறக் கூந்தல் கொண்ட அழகான இளம் பெண்கள், நீலக் கண்களுடன் சாலி, புஷ் குடும்பத்தினர், பின்லேடன், இடி அமின், அழுகிப் போன உடல்கள், வீச்சமடிக்கும் துர்நாற்றம், 9/11 கட்டட இடிபாடுகள், கெரில்லாக்கள், அமேசான் காடுகள், சவுதி அரச குடும்பத்தினர், ரோல்டோஸ், ஓமர், அலாண்டே, ‘மெய்ன்' நிறுவனத்தில் பணிபுரிபவர்கள், அதன் பங்குதாரர்கள், மிஷினரிகள், பேதி மருந்து புட்டிகள், மதுக் கோப்பைகள் என இந்நூல் நம் கண்முன் நூற்றுக்கணக்கான காட்சிகளையும் படிமங்களையும் உருவாக்கி வித்தை காட்டுகின்றன. நாள்தோறும் 24,000 பேர் பட்டினியால் செத்து மடிய, மறுபுறம் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை செழிப்புடன் விளக்கொளியில் மின்னுகிறது.

இதுவரையிலும் நாம் படித்த பல நூல்கள் மனதில் சமமாகத் தோன்றிய வண்ணம் உள்ளன. ‘பூவுலகின் நண்பர்கள்' வெளியிட்ட நூல்கள், காஸ்ட்ரோ அலாண்டே, சேயின் உரைகள்; சூசன் ஜார்ஜின் மூன்றாம் உலக நாடுகளின் கடன் பிரச்சனைகள்; மைக்கேல் மூரின் பாரன்ஹீட் 9/11 திரைப்படம் எனப் பட்டியல் நீண்டு செல்கிறது. குறிப்பாக, இந்தப் புத்தகத்தின் 40 சதவிகித பக்கங்களை மைக்கேல் மூரின் திரைப்படத்தில், புள்ளிவிவரங்களுடன் காட்சி வடிவமாகப் பார்க்கலாம்.

அதைப் போலவே இப்புத்தகம் நெடுகிலும், நம் இந்தியச் சூழல் கண்முன் தோன்றிய வண்ணமிருக்கிறது. ஆனால், இந்தியச் சூழலில் பொருளாதார அடியாட்களுக்கான அவசியம் ஏதும் இல்லை. மன்மோகன் சிங், அலுவாலியா, ப. சிதம்பரம் என்ற மூவர் கூட்டணி, பெர்கின்சின் தேவையை இல்லாமல் செய்துவிட்டது. இந்தியா வாங்கி குவித்துள்ள கடன்கள், இங்கு பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணம், 50 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முட்டாள்தனமான திட்டங்கள் என அனைத்தும் மனசஞ்சலத்தின் உச்சங்கள்தான்.

சவுதி அரேபியாவைப் போல் சென்னையில் ஓனிக்ஸ் நிறுவனம் குப்பை அள்ளுவது, பாதாள சாக்கடைகள், அணு உலைகள், நர்மதா அணை எனப் பல நூறு திட்டங்களில் முடங்கிக் கிடக்கும் கோடான கோடி டாலர்கள்; அதைவிட இந்தியா முழுவதும் போடப்பட்டு வரும் நான்கு வழி சாலைகள் - நடப்பில் நாம் காணக்கூடிய எடுத்துக்காட்டுகளாகும். முற்றிலும் அமெரிக்க நிறுவனங்கள்தான் இந்த ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளன. இவை யாருக்கான சாலை? இந்த சாலைகளை ஒட்டிச் செல்லும் பல கிராம சாலைகள் ஆண்டுக்கணக்காகப் பராமரிப்பின்றி கிடப்பது ஏன்? இந்த சாலைகளில் எளிய இந்தியர்கள் இலவசமாகப் பயணிக்க அனுமதிக்கப்படுவார்களா? அலுவலகக் கோப்புகளின் துர்நாற்றம், இந்திய சிவில் சமூகத்தின் பரப்பளவெங்கும் வீசிக் கிடக்கிறது.

நம் ஊரில், மாநிலத்தில், நாட்டில் உலாவரும் அப்பட்டமான அமெரிக்க முகவர்கள் வரிசையாக மனக்கண்களில் வந்த வண்ணமிருக்கின்றனர். அவர்கள் அரசியல்வாதிகளாக, நிறுவன அதிகார வர்க்கத்தின் உயர் பதவியில் உள்ளவர்களாக, தொண்டு நிறுவனங்களின் தலைவர்களாக, பாதிரியார்களாக, பெரும் முதலாளிகளாக, பத்திரிகையாளர்களாக, மீடியா பிரமுகர்களாக, திரைப்பட நடிகர்களாகப் பல்வேறு உருவங்களில் உலா வருகிறார்கள். யாரைப் பார்த்தாலும் இனி நம்பிக்கை வராத மனக்கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளார் பெர்கின்ஸ். இந்தோனேசிய பொம்மலாட்டக்காரருக்கு இருக்கும் அரசியல் உணர்வு, ஏன் இந்தக் கேடு கெட்ட நடுத்தர வர்க்கத்திற்கு இல்லை?

பனாமா, ஈக்வெடார், நிகரகுவா, சவுதி அரேபியா, கொலம்பியா, இந்தோனேசியா எனப் பல நாடுகள் ஏகாதிபத்தியத்தால் வீழ்ந்த கதை அடுக்கடுக்காய் நம் கண்முன் விரிகிறது. பழங்குடியினர் மத்தியில் மிஷினரிகள் முதலில் உதவிகளை செய்து விட்டு, பின்பு அவர்களின் நிலத்தை எண்ணெய் நிறுவனங்களுக்குத் தருவது; பல நாடுகளின் அரசுகள் திட்டமிட்டு கவிழ்க்கப்படுவது; சவுதி அரச குடும்பம் மற்றும் ஜார்ஜ் புஷ் குடும்பத்தினர், பின்லேடன் உள்ளிட்ட பல தீவிரவாத குழுக்களுக்கு அளித்த பெரும் நிதியுதவிகள்... இந்தப் பொருளாதார திட்டங்கள் எந்த விதத்திலும் வியட்நாம் போருக்கு சளைத்தவை அல்ல என்பதை நமக்கு உணர்த்துகிறார் பெர்கின்ஸ்.

பெர்கின்சின் மொழி நடை - பொதுவாகவே அவர்களுக்கு இருக்கும் பரந்த வாசிப்பையும், மொழி வளத்தையும் செறிவாக்குகிறது. இந்நூலில் அவர் ஆயிரக்கணக்கான புத்தகங்களை, கோப்புகளை அலுவலக நிமித்தமாக வாசிப்பதைப் பார்க்க முடிகிறது. பெர்கின்சுக்கு அவரது வேலையில் இருக்கும் ஈடுபாடும், அவரது வாசிப்புக்கு காரணமாய் அமைகிறது. அதே நேரத்தில், புத்தகம் நெடுகிலும் பெர்கின்ஸ் நம்மோடு பகிர்ந்து கொள்ளும் அவரது எண்ண ஓட்டங்கள், மீண்டும் மீண்டும் வாசித்ததையே வாசிப்பது போன்ற அயர்வைத் தருகிறது; பல நேரங்களில் அவை எரிச்சலடையச் செய்கின்றன. இந்த எழுத்தின் வாயிலாக பெர்கின்ஸ் தனது மொத்த வாழ்வையும் தற்செயல் நிகழ்வுகளின் கோர்வையாகத் தலைப்பிட விரும்புகிறார். மறுபுறம் தனது மொத்த பணியையும் சட்டத்துக்கு உடன்பட்டதாக (legitimize) உருவகப்படுத்த முயல்கிறார். அதற்காக அவர் நமக்கு அளிக்கும் நீண்ட நெடிய வாதங்கள் நகைப்பிற்குரியதாக மாறுகின்றன.

தான் ஒரு தவறான செயலை செய்வதாக உணர்கிறார் பெர்கின்ஸ். தான் செய்யும் பணி குறித்த முழுமையான அரசியல் தெளிவைப் பெறுகிறார். இருப்பினும், அந்த நிறுவனத்தின் பணியாளராக இருந்து பங்குதாரராக அவர் உருமாறும் பயணத்தில் எந்த மனத் தடையும் அவருக்கு இல்லை. டாலர்களை அள்ளிக் குவிக்கிறார். அவரது சொகுசு கப்பல் நீரில் மிதக்கிறது. அவருடைய சுகபோகங்களுக்கு எந்தக் குறையும் இல்லை.

இளவரசர் டயிள்யூவுக்கு விருப்பமான அழகான பொன்னிறக் கூந்தல் கொண்ட இளம் பெண்களை அனுப்பி வைத்து, அந்த நாட்டை கடன் வலையில் மூழ்கச் செய்வதற்காக பகல் எல்லாம் அயராது உழைத்துவிட்டு, இரவில் பீர் பாட்டிலும் கையுமாக உட்காரும்போது மட்டுமே - மூன்றாம் உலக நாடுகளின் மீது அவருக்குப் பாசம் பொங்குகிறது. இத்தகைய மனநிலைதான் பிரதி முழுவதிலும் விரவிக்கிடக்கின்றன. கேடுகெட்ட, இரக்கமற்ற சூறையாடலை செய்துவிட்டு, அதற்கு அந்த நிறுவனம் பெர்கின்சுக்கு அளிக்கும் பதவி உயர்வையும் நற்சான்றிதழையும் சன்மானங்களையும் - நம்மிடமே பக்கம் பக்கமாக புகழ்ந்து தள்ளுகிறார். அந்த உயர்வுகளை நோக்கியேதான், தன் பணியையும் அமைத்துக் கொள்கிறார் பெர்கின்ஸ்.

பெர்கின்ஸ் இந்த நூலை எழுதுவதன் நோக்கம் என்ன? ஏன் இந்த நூல் அமெரிக்க சமூகத்தில் பதிப்பு பெறுகிறது? அதிகப்படியான பிரதிகள் விற்பனை என்ற சாதனைப் பட்டியலில் எப்படி இது இடம் பெறுகிறது? இந்த நூலை அமெரிக்க நிறுவன அதிகார வர்க்கம் ஏன் சகித்துக் கொண்டிருக்கிறது? ‘மெய்ன்' நிறுவனம் இயங்கிக் கொண்டிருந்தால், பெர்கின்ஸ் இத்தகைய நூலை எழுதியிருப்பாரா? என அடுக்கடுக்கான கேள்விகள் நம்முன் எழுகின்றன.

John Perkins's book
பெர்கின்ஸ் இன்று அமெரிக்க சமூகத்தில் வாழக்கூடிய கோடீஸ்வரர்களில் ஒருவர். தன் சொத்துகளுடன் சுகபோகமாக வாழ்ந்து வருபவர். அவர் தற்பொழுது பெரும் தொகை புழங்கும் தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். பல நிறுவனங்களுக்கு ஆலோசகராகவும் உள்ளார். அவரது சிறு குற்ற உணர்வின் வடிகாலாகத்தான் இப்பிரதி திகழ்கிறது. அரவது பாவ மன்னிப்பு உரையை, அமெரிக்க சிவில் சமூகம் தனதாக்கிக் கொள்வதற்கான வெளிப்பாடுதான் இந்தப் புத்தகம். அமேசான் புத்தக வலைத்தளம், நியுயார்க் டைம்ஸ் பெஸ்ட் செல்லர் என அதிகப்படியாக விற்பனை ஆனதற்கு இதுதான் காரணம்!

தனது வாழ்க்கை முழுவதும் அரசாங்கங்களுடன் உரையாடிய பெர்கின்ஸ், இந்தப் புத்தகத்தில் அத்தகைய அரசாங்கங்கள், நிறுவன அதிகார வர்க்கம், மூன்றாம் உலக நாடுகள் என அவர்களை நோக்கி பரப்புரையை ஆற்றுகிறார். எய்ட்ஸ் நோயுள்ள ஒருவரிடம் கொஞ்சம் சாப்பாட்டில் உப்பு, புளியை குறைத்துக் கொள்ளுங்கள் என ஆலோசனை வழங்குவது போல, மொத்த மூன்றாம் உலக வாழ்நிலையை நிர்மூலமாக்கிவிட்டு, அதன் அரசுகளை, மக்களை நிரந்தரமான கடன் வலையில் சிக்கவைத்துவிட்டு, அதன் வாழ்வாதாரங்களை, இயற்கை வளங்களை சூறையாடுவதற்கான அனைத்து வழிவகைகளையும் செய்து விட்டு, இப்பொழுது பெர்கின்ஸ் நம்மிடம் வந்து - பள்ளிக் கூடத்தில் உரை நிகழ்த்துங்கள், சிக்கனமாக எரிபொருளை செலவழியுங்கள் என்று கூறுவது நகை முரணாக உள்ளது. அவர் கூறும் செயல்பாட்டு யோசனைகள், தொண்டு நிறுவன ‘ப்ராஜெக்ட்' டுக்கு இணையாக இருக்கிறது.

ஜான் பெர்கின்சின் வாழ்க்கைக் குறிப்புகள் பலவற்றில் அவர் விவிலியத்தின் அடிப்படையிலான செயல்பாட்டாளர், முன்னறிவிப்பாளர், வலது சாரி ஆர்வலர் என்றே உள்ளது. அவர் விவிலியத்தின் அடிப்படையிலான பல நூல்களை எழுதி உள்ளார். டன்கல் அறிக்கை விவிலியம் என்ற இரட்டைக் குழந்தைகளுக்கு மிகவும் விசுவாசமான வராக உள்ளார் பெர்கின்ஸ். இந்த நூலில் வருவது போன்றே பேதி மருந்து தடவப்பட்ட உணவை இலவசமாக வழங்கிவிட்டு, சிறிது இடைவெளிக்குப் பிறகு மருந்துகளுடன் பழங்குடியினரிடம் செல்லும் மிஷினரிகள் போல், நம்மிடம் வந்து கழிவிரக்கத்துடன் மன்றாடுகிறார் பெர்கின்ஸ்.

இந்த ஒட்டுமொத்த சீரழிவுகள், சுரண்டல்கள் - மனித சமூகத்திற்கே விரோதமான செயல்களுக்கு துணைபோவது மட்டுமின்றி, இவைகளை மக்கள் ஏற்கச் செய்யும் கொடுமையையும் ஊடகங்கள் செய்து வருகின்றன. பெர்கின்ஸ் தயாரித்த போலி புள்ளிவிவரங்களைப் போல, ஊடகங்கள் தொடர்ந்து வர்ண ஜாலங்களை - நாளிதழ்கள், தொலைக்காட்சிகள் வாயிலாக ஒவ்வொரு நொடியும் பரப்பிக் கொண்டேயிருக்கின்றன. பட்டினியால் வாடும் குழந்தைகளின் முகத்திலும், தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் சடலத்தின் மீதும், வேலையற்ற இளைஞர்கள் மீதும் ஊடகங்களின் ஜிகினா தூள் சமமாகப் படிகிறது. இந்த மொத்த கொள்ளையின் சரியான பங்கை, பெர்கின்சைப் போல் உலக ஊடகங்களும் பெறுகின்றன. பொழுதெல்லாம் பொய்யைப் பரப்பும் ஊடகங்களின் முகமூடியைக் கிழித்தெறிந்து, மக்களை இவர்களின் கோரப் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும்.

பெர்கின்சைப் போல் நம்மைச் சுற்றி முகமூடிகளுடனும், முகமூடிகளின்றியும் பலர் உலவுகின்றனர். இவர்களை அடை யாளம் காணும் பணி முக்கியமானது. அதற்கான கையேடுகளைக்கூட நாம் கூட்டாக உருவாக்கலாம். சென்னையில் நங்கூரமிட்டுள்ள ‘நிமிட்ஸ்' அணு ஆயுதம் தாங்கிய போர்க்கப்பலிலிருந்து பல பெர்கின்ஸ்கள் (மாலுமிகள்) துடைப்பங்களுடன் சென்னையை சுத்தம் செய்யத் தரையிறங்கியுள்ளனர். இவர்கள் தங்கள் சமூக சேவைகளை தொடங்கிவிட்டதாக ‘சன்' தொலைக்காட்சி தமிழ்ச் சமூகத்திற்கு தலைப்புச் செய்தியாக வழங்குகிறது. பெர்கின்சையும் அவரது பங்காளிகளையும் சேர்த்தே அடையாளம் காண்போம்.

இந்நூலிலிருந்து...

ஆங்கில மாணவி தீர்க்கமாக என் விழிகளை ஊடுருவிப் பார்த்தாள். இவ்வளவு பேராசை கொள்வதை நிறுத்துங்கள். உங்கள் சுயநலத்தையும், மாளிகை போன்ற வீடுகளையும், பேன்சி ஸ்டோர்களையும் தவிர, உலகில் வேறு விஷயங்களும் உள்ளன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். மக்கள் உணவின்றிப் பட்டினி கிடக்கிறார்கள்; நீங்களோ உங்கள் கார்களுக்குத் தேவையான பெட்ரோலைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். குழந்தைகள் குடிக்க நீரின்றி மடிந்து கொண்டிருக்கின்றன; நீங்களோ நவநாகரிக பாணிகளுக்காக ‘ஸ்டைல்' ‘பேஷன்' இதழ்களைத் தேடிக் கொண்டிருக்கிறீர்கள். எங்களைப் போன்ற நாடுகள் வறுமையில் கழுத்தளவு மூழ்கிப் போயிருக்கிறோம். எங்கள் ஓலக்குரல்கள் உங்கள் செவிகளில் விழுவதில்லை. யாராவது உங்களுக்குச் சொல்ல முயற்சித்தால், உடனே அவர்களுக்குப் புரட்சியாளர்கள் என்றும் கம்யூனிஸ்டுகள் என்றும் முத்திரை குத்துகிறீர்கள். ஒடுக்கப்பட்ட ஏழை மக்களை மேலும் மேலும் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் தள்ளுவதற்குப் பதிலாக, அவர்களுக்கு உங்கள் இதயங்களைத் திறக்க வேண்டும். காலம் கடந்து கொண்டிருக்கிறது. இன்னும் உங்களை மாற்றிக் கொள்ளவில்லை என்றால் ஒழிந்தீர்கள்!

நூல்: ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம்
ஆசிரியர்: ஜான் பெர்கின்ஸ்
தமிழில்: ரா.முருகவேள்
வெளியீடு: விடியல் பதிப்பகம்
11, பெரியார் நகர், மசக்காளி பாளையம்,
கோயம்புத்தூர் - 641 015.
தொலைபேசி: 0422 - 2576772