11.12.2007 அன்று நடைபெற்ற "உள் ஒதுக்கீடு : சில பார்வைகள்' கருத்தரங்கில் ஆற்றிய உரையின் சுருக்கம்

தாழ்த்தப்பட்டோர் - பழங்குடியினர் உள்ளிட்ட பட்டியல் சாதியினர் இடஒதுக்கீடு தொடர்பாக, அப்பட்டியலில் உள்ள அருந்ததியர் சமூகத்தினர் தங்களுக்கான உள் இடஒதுக்கீடு கோரி, கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக உரிமைக் குரல் எழுப்பி வருகின்றனர். அருந்ததியர் சமூக இயக்கங்களின் இந்தக் குரல், அச்சமூகத்தைப் போலவே நலிவடைந்து கிடந்தது. மத்திய, மாநில அரசுகளின் காதில் அது இன்னும்கூட ஓங்கி ஒலிக்கவில்லை. ஆனால், சமுதாயத்தளத்தில், ஊடகங்களில் அக்குரல் சற்று ஓங்கியே ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. அதற்கான காரணங்களில் ஒன்று, உள் ஒதுக்கீட்டு கோரிக்கையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) முன்னெடுத்து ஏறக்குறைய 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போன்ற போராட்டங்கள் மூலம் பொது விவாதத்துக்கு கொண்டு வந்ததே ஆகும்.

Gunasekaran
அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டை 1996 ஆம் ஆண்டிலேயே தமிழக மனித உரிமைக் கழகம் வலியுறுத்தியுள்ளது. அருந்ததியர்களுக்கான உள் இடஒதுக்கீடு கோரிக்கை முற்றிலும் நியாயமானதும், சரியானதும் ஆகும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடம் இல்லை. இதே கோரிக்கையை விடுதலைச் சிறுத்தைகள், கடந்த 2006 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலும் வலியுறுத்தியுள்ளனர். தமிழ் நாடு அருந்ததியர் ஜனநாயக முன்னணி, தமிழ் நாடு அருந்ததியர் இளைஞர் முன்னணி, அருந்ததியர் விடுதலை முன்னணி, புரட்சிப் புலிகள், தமிழ் நாடு அருந்ததியர் சங்கம், ஆதித் தமிழர் பேரவை ஆகிய இயக்கங்கள் தனித்தனியாகவும், அருந்ததியர் ஒருங்கிணைப்புக் குழு வழியாகவும் இக்கோரிக்கையை எழுப்பி -மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல்களை தமிழகமெங்கும் நடத்தியுள்ளனர்.

தலித்திய இயக்கங்கள் சிலவற்றாலும் பரந்துபட்ட ஜனநாயக சக்திகளாலும் ஆதரிக்கப்பட்டும், கவனம் குவிக்கப்பட்டும் பொது விவாதமாகப் போராட்டக் களம் நோக்கி உயரும்போது, அது குறித்து தீர்வு சொல்ல வேண்டிய இடத்தில் தமிழக அரசும், நடுவண் அரசுமே இருக்கிறது. அருந்ததியர் உள் இடஒதுக்கீடு கோரிக்கை, முழுக்க முழுக்க அரசை நோக்கியதேயாகும். இந்தக் கோரிக்கையின் நியாயத்திற்கு வலுவூட்டுகின்ற வகையில் சமூக நீதிக் கண்ணோட்டத்தில் யார் வேண்டுமானாலும் பேசலாம், எழுதலாம். ஆனால், இக்கோரிக்கையை பலவீனப்படுத்துகின்ற, கோரிக்கையை திசை திருப்புகிற நோக்கில் யார் பேசினாலும் -அவர்கள் இங்கு நிலவு கிற ஜனநாயக விரோத சமூக அமைப்புக்கும், அரசுக்கும் துணை போகின்றவர்களாகவே கருதப்படுவர்.

“அனைத்து சாதிகளின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திய பிறகே அருந்ததியர்களுக்கான உள் இடஒதுக்கீட்டை முடிவு செய்ய வேண்டும்” என்றொரு வாதம், உள் இடஒதுக்கீட்டை எதிர்ப்பவர்களால் முன்வைக்கப்படுகிறது. இன்றைய சூழலில் இத்தகைய கோரிக்கை, உள் இடஒதுக்கீடு கோரிக்கைக்கு வலுவை குறைக்கவே உதவும் என்பதை ஜனநாயக சக்திகள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

1980 ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர்., பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 31 சதவிகிதத்திலிருந்து 50 சதவிகிதமாக உயர்த்தும்போது, அனைத்து சாதியினரின் மக்கள் தொகை கணக்கெடுக்கப்படவில்லை.

1990 ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்டோர் சமூகத்திற்கான மொத்த இடஒதுக்கீட்டு அளவான 50 விழுக்காட்டை இரண்டாகப் பிரித்து, மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவிகிதம் என்ற உள் இடஒதுக்கீடு கொடுத்தபோது, மொத்த சாதிகளின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை.

தற்பொழுது 2007 ஆம் ஆண்டு தமிழக அரசு, செப்டம்பர் மாதத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கான 30 சதவிவிகித இடஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கும், கிறித்துவருக்கும் 7 சதவிகித இடஒதுக்கீடு அளித்திட ஆணையிட்டபோதும் -மொத்த சாதிகளின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை.

ஆனால், அருந்ததியர் உள் இடஒதுக்கீடு கோரிக்கை மேலெழும்பி வரும்போது மட்டும், மொத்த சாதிகளின் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டுமென்று கேட்பது நியாயம்தானா?

உள் இடஒதுக்கீடு என்கிற சிக்கலில், தமிழக மனித உரிமைக் கழகம் இரண்டு தீர்வுகளை முன்வைக்கிறது. இப்பொழுதுள்ள பட்டியல் சாதியினருக்கான 18 சதவிகிதத்தில், 4 முதல் 6 சதவிகிதங்களுக்குள் அருந்ததியர்களுக்கு உள்இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். பட்டியல் சாதியினர் பட்டியலில் உள்ள 76 சாதிகளில் 15க்கும் மேற்பட்ட சமூகப் பிரிவுகள் அருந்ததியர் சாதியினரின் உட்பிரிவுகளேயாகும்.

வன்னியர்களோடு ஏனைய சிறுபான்மை, மிகப் பிற்படுத்தப்பட்ட சாதிகளை -மிகப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்ததைப் போல, அருந்ததியர் உள்ளிட்ட வட்டார சிறுபான்மை பட்டியல் சாதியினர்களை அருந்ததியர் உள்இடஒதுக்கீடு பட்டியலில் சேர்த்து விடலாம் அல்லது அருந்ததியர்களுக்கென்று மட்டும் உள்இடஒதுக்கீடு அளிக்கலாம். இது ஒருவகையான உடனடித் தீர்வு.

ஒருவேளை இத்தகைய தீர்வு பறையர், பள்ளர் உள்ளிட்ட பட்டியல் சாதியினரின் பங்கை பாதிப்பதாகக் கருதி, அவர்கள் இத்தகைய தீர்வுக்கு ஆட்சேபனை தெரிவிப்பார்களேயானால், அருந்ததியர்களுக்கு தற்பொழுதுள்ள பட்டியல் சாதியினருக்கான 18 சதவிகிதத்தில் 4 சதவிகிதத்தையும், பொதுப் போட்டிக்கான இடங்களிலிருந்து 2 அல்லது 3 சதவிகித இடங்களையும் எடுத்து, மொத்தமாக அருந்ததியர்களுக்கே உள் இடஒதுக்கீட்டின் அளவை 6 முதல் 7 சதவிகிதம் வரை உயர்த்தலாம். இது இரண்டாவது வகை.

பட்டியல் சாதியினருக்கான 18 சதவிகிதமும் பறையர், பள்ளர்களின் ஏகபோக குத்தகையல்ல. அதில் அருந்ததியர்களுக்கும் இதர பட்டியல் சாதியினருக்கும் கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகளை அளித்தே தீர வேண்டும். நிறைவாக, பட்டியல் சாதியினர், பழங்குடியினர் இடஒதுக்கீடு அளவு உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை -மொத்த தலித் சமூகங்களும், பரந்த அளவிலான ஜனநாயக சக்திகளும் இணைந்து போராடிப் பெற வேண்டியதேயல்லாமல், அதை அருந்ததியர்களுக்கான உள் இடஒதுக்கீட்டுக் கோரிக்கையுடன் முடிச்சுப் போடுவது நியாயமான வாதமாகாது.

தகுதி, திறமை என்பது இன்றைக்கு கேலிக்குரியதாகவும், கேள்விக்குரியதாகவும் மாறிவிட்டதாலும், 3 முதல் 4 சதவிகிதத்திற்குள் சாதி இந்துக்களில் மேல்தட்டு வர்க்கங்களின் மொத்த குத்தகையாகவும் பொதுப் போட்டிக்கான இடங்களாகவும் விளங்குகிறது. எனவே, பொதுப் போட்டியாளர் பட்டியலிலிருந்து 2 முதல் 3 இடங்களை அருந்ததியருக்கு எடுத்துக் கொடுப்பதால், வானம் இடிந்து வீழ்ந்து விடாது. மாறாக, இந்திய, தமிழக புதிய ஜனநாயகத்திற்கானப் போராட்டம் மேலும் வலுப்பெறவே செய்யும்.

மொத்த சாதிகளில் தலித்துகள் எப்படி ஆகக் கீழான சாதிக் கொடுமைகளை எதிர்கொள்கிறார்களோ, அதே போல தலித்துகளில் மிகக் கொடூரமான அவலங்களையும், அடக்குமுறைகளையும் எதிர்கொள்பவர்களாக அருந்ததியரும், புதிரை வண்ணாரும் உள்ளனர். இவர்களுக்கான சமூக நீதியை சாதி வாரிக்கணக்கு அடிப்படையில் மட்டும் கணக்கில் கொள்ளாமல், இவர்கள் அனுபவிக்கும் தீண்டாமைக் கொடுமையின் அளவிலிருந்து இடஒதுக்கீட்டை அளிக்கும்போது -ஓரிரண்டு விழுக்காடு கூடினாலும், குறைந்தாலும் உள் இடஒதுக்கீடு இன்றைய உடனடித் தேவை என்பதே தமிழக மனித உரிமைக் கழகத்தின் நிலைப்பாடு.

இரண்டாவது வகை தேர்வில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சிக்கல்களை ஏற்படுத்தக் கூடுமே என்ற விவாதங்கள் எழுவதை எம்மால் ஊகிக்க முடிகிறது. முன்னரே தமிழ் நாட்டில் 69 சதவிகித இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தும்பொழுது, தமிழக அரசு உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் கண்டனங்களை எவ்வாறு சகித்துக் கொண்டும், சரி செய்து கொண்டும் 69 சதவிகித இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துகிறதோ, அதுபோலவே அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டை உயர்த்துவதற்காக, பொதுப் போட்டியிலிருந்தும் சில சதவிகித இடங்களை எடுப்பதால் வரும் உச்ச நீதிமன்றக் கண்டனங்களையும் தமிழக அரசு சகித்துக் கொள்ளவும், சரிசெய்து கொள்ளவும் வேண்டும்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை மீறுவது என்பது, தமிழ்த்தேச சமூக நீதிக்கானப் போராட்டத்தின் மைல் கற்களைத் தாண்டும் செயலுத்தியாகக் கொண்டு, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை ஒதுக்கித் தள்ளி -ஒடுக்கப்பட்ட மக்களின் இடஒதுக்கீடு கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் நம் வழியில் நாம் நடைபோட வேண்டும். முல்லைப் பெரியாறு, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புகளில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை கேரளமும், கர்நாடகமும் அலட்சியப்படுத்தும் துணிவை இடஒதுக்கீட்டிற்கான உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் தமிழக அரசு காட்ட வேண்டும்.