தந்தித் துறையில் தத்தித் தவழ்ந்து, யார் யார் முன்னெல்லாமோ பட்டியல் சாதி ஊழியர்கள் "தந்தி அடித்துக்' (கை, கால், பல்லால்) கொண்டிருந்த காலமும் இருந்தது. தற்பொழுது அண்ணல் அம்பேத்கரின் 117 ஆம் ஆண்டு விழாவான இன்றோ, பட்டியல் சாதி ஊழியர் சங்கமான உங்களைக் கண்டு, பிறர் தந்தியடிக்கும் காலம் பிறந்துவிட்டது. இதை இன்னும் ஆளுமை மிக்க உளத்தியலாக உருப்பெருக்க வேண்டும். உளத்தியலில் நாம் "தீ'யாக இருக்கும்போதுதான் இது நிகழ முடியும். நாம் "தீ'யாக இருக்கும் வரை, தீண்டாமைத் தீ நம்மைத் தீண்ட முடியாது.

எனக்கு முன்னர் பேசிய அன்பர், "கல்வி உதவித் தொகையை, கல்லூரி அதிகாரிகளிடம் வாய்திறந்து கேட்கத் தெம்பில்லாமலோ, தாழ்வு மனப்பான்மையாலோ படிப்பையே விட்டுவிட்டதாக' ஒரு நிகழ்வைச் சொன்னார். இது ஏன் நிகழ்கிறது? தான் தலித்தாகப் பிறந்து விட்டோமே என்பதனால் வந்த தாழ்வுணர்ச்சியாக மட்டும் இதை எடைபோடக் கூடாது. “பிச்சை புகினும் கற்கை நன்றே'' என்பது தமிழ்ப் பண்பாடு. ஆக, தாழ்வு மனப்பான்மை எங்கிருந்து, ஏன் வருகிறது?

கற்றல் என்பது பெருமிதமான செயல் என்பது, அந்த மாணவனுக்கும் தெரியும். அவன் கற்க வந்ததற்காகத் தாழ்ச்சி கொள்ளவில்லை. ஆனால், கல்வி உதவித் தொகை என்றால் மட்டும் கூசியுள்ளான்? ஏன்? பெரிய பெரிய நிறுவனங்களும் பல்கலைக் கழகங்களும் செய்தித் தாளில் வரும் கல்வி உதவித் தொகைகளுக்கு, எல்லோரும் முண்டியடித்துக் கொண்டு விண்ணப்பிக்கின்றனர். இந்த உதவித் தொகை கிடைத்தவர்கள், “நõன் இன்ன ஸ்காலர்ஷிப் பெறும் மாணவன்'' என்று மார்தட்டிக் கொள்கின்றனர். ஆனால், நமது மாணவன் மட்டும் உதவித் தொகைகள் கண்டு கூனிக் குறுகுவது ஏன்?

கூனல் அவர் போன்றோரது உள்ளத்தில் இல்லை. வெறும் எச்சமாக எச்சிலாகத் தரப்படும் கல்வி உதவித் தொகை என்ற கொசுறில் இருக்கிறது கூனல். பிறபிற கல்வி உதவித் தொகைகளெல்லாம் முழுச்செலவினத்தை ஏற்குமளவு வளமாக இருக்கும். ஆகவே, அதைப் பெறும்போது மாண்பு பிறக்கிறது. ஆனால், பட்டியல் சாதி மாணவர்களுக்குத் தற்போது தரப்படும் கல்வி உதவித் தொகை, கல்விச் செலவில் 1/10கூட இல்லை. வக்கற்றவர் வந்ததைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற விதமாக இது இருப்பதால், இதைப் பெறும் கட்டாயத்திற்கு ஆட்படும் நம்மவர்க்கு, மாண்புக்குப் பதிலாகக் கூனலும் கூச்சமும், கேவலும், கேவலமும் பிறக்கின்றன.

"மனித மாண்பின் மீட்சி' என்று நமது போராட்டத்தின் உட்கருத்தை அம்பேத்கர் விளக்குவார். மாண்புக்கு உயர்வுள்ளல் வேண்டும். இதற்கு ஓர் எடுத்துக்காட்டாகத்தான் அண்ணல் அம்பேத்கர் அவர்கள், மன்னனின் உதவித் தொகை பெற்று, வெளிநாட்டுக் கல்வியை மேற்கொள்வதற்குக் கூசினாரில்லை. அவரையும் யாரும் இழித்துரைக்க முடியவில்லை. பின்னர் அண்ணலே பட்டியல் சாதியினரின் வெளிநாட்டுக் கல்விக்கென்றே அரசுத் திட்டத்தையும் உருவாக்கித் தந்தார். ஆகவே, முன்னைக்குத் தற்போது வளர்ச்சி கண்டுள்ளோம் என்ற தெம்பு, நமக்கு வலிமையைக் கொண்டுவர வேண்டும். நாம் வலிமையைக் காட்டும்போது, அதை வன்முறையாகச் சாதிய பிரியர்கள் திரித்துக் கூறுவர்.

பனிக்குடம் உடைந்து, கருவாயிருந்தது திருவாகப் பிறப்பெடுக்கும்போது – அக்குழந்தையின் தாய் காட்டுவதும், காட்ட வேண்டுவதும் வலிமைதான். அது வன்முறை எனப்பட்டால், அத்தகு வன்முறையைக் கடைப்பிடிக்காமல் பிறப்பு இல்லை; படைப்பு இல்லை; புதுவாழ்வு இல்லை என்பதை நாம் மனத்திலிருத்திக் கொள்ள வேண்டும். வெடிக்க வேண்டுமிடத்தில் வெடிக்க வேண்டும்.

ஆகவே எம்மவர்களே! வீரியம் கொண்டவர்களாக நாம் இருப்போம். இனி, வீரியத்தை எங்கு எதில் காட்ட வேண்டும் என்பதிலும் நாம் தெளிவாக இருக்க வேண்டும். வெறுமனே பணியிட ஒதுக்கீட்டிற்காகவும் சலுகைகளுக்காகவும் படபடக்கும், சலசலக்கும் சறுகுகளாக நாம் இருக்கக் கூடாது. எரிபடும் சறுகுகளா நாம்? சலுகை எனும் நிழலுக்காக மட்டுமே கேவிக்கொண்டிருக்கும் சாவிச் சனங்களாக நாம் இருத்தலாகாது. நாம் கோரவேண்டிய, கோரிப் பெற வேண்டிய நிதி உரிமைகள் என்ன என்றுகூட அறியாத படித்த வெருவாக்கட்டைகளாக நாம் இருத்தலாகாது.

மத்திய அரசு திட்ட நிதி ஒதுக்கீடு 200708 இல் ரூ. 3,19,992 கோடி. அதில் பட்டியல் சாதியினர் சிறப்புக் கூறு என்கிற பட்டியல் சாதி துணைத் திட்டத்திற்கு வரவேண்டுவதோ 16 சதவிகிதமான ரூ. 51,184 கோடி. வந்திருப்பதோ ரூ. 11,000 கோடி. நீங்கள் சார்ந்திருக்கும் தகவல் தொடர்பு வளர்ச்சித் துறையின் ஒதுக்கீட்டைக் காண்போம் :

2007 08 Union Budget-Expenditure Budget Vol. I-Statement 13 இல் கீழ்வருமாறு ஒதுக்கீடுகள் உள்ளன :

ரூ. கோடி
1. தொலை தொடர்புத் துறை                      25,190.00
2. மற்ற தொடர்புத் துறைகள்                      337.97
3. அஞ்சல் துறை                                              283.66

மொத்தம்                                                         25,811.63


ரூ. 25,811 கோடியில் 16% என்பது ரூ. 4,129 கோடி. பட்டியல் சாதியினர் சிறப்புக் கூறு திட்டத்தின் கீழ் வரவேண்டிய தொகை இது. வந்ததா?

மொத்த                           16% வர                           வந்தது
ஒதுக்கீடு                         வேண்டுவது

1. தொலை தொடர்புத் துறை                      25,190.00                           4,030.4                             இல்லை
2. மற்ற தொடர்புத் துறைகள்                      337.97                               54.1                                    30.00
3. அஞ்சல் துறை                                             283.66                                45.4                                   இல்லை

மொத்தம்                                                         25,811.63                           4,129.9                               30.00

அதாவது, நமக்கு சட்ட ரீதியான உரிமைப்படி ரூ. 4,129 கோடி வரவேண்டிய இடத்தில், சலுகைப்படி ரூ. 30 கோடி மட்டுமே வந்துள்ளது. இந்த நாட்டின் வளர்ச்சியை முன்னேர் ஓட்டிக் கொண்டிருக்கும் துறையில், பட்டியல் சாதி மக்களுக்குக் கிட்டுவது எச்சமா? எச்சிலா? துச்சமா? துக்கமா? என்னென்போம்? இதற்கு நாமென்ன செய்தோம்? பிறர் என்ன செய்தார் என்று புலம்புதலைவிட்டு, நாம் ஏதும் செய்தாலென்ன?

தனியரின் கல்வி உதவித் தொகையாக 6,000 ரூபாயும், நாட்டு மொத்த கல்வி உதவித் தொகையாக ரூ. 600 கோடியும் வருவதைக் கேட்பதற்கே நாணிக் கொண்டும் கோணிக் கொண்டும் நாம் இருக்கையில், ரூ. 50,000 கோடியை ஆணவத்தோடு அரட்டி அதட்டி வாங்கிக் கொண்டு செல்கிறார்கள். யார்? பணம் கொழுத்திருக்கும் ஏற்றுமதியாளர்கள். எதற்காக? ஏற்றுமதியால் தாம் ஈட்டும் லாபத்திற்கு வரிவிலக்காக! அதாவது கொழுத்தவனிடமிருந்து முறையாக வரவேண்டிய இந்த வரி வந்தால், பட்டியல் சாதியினர் சிறப்புக் கூறு திட்டத்திற்கு வராமல் போகும் ரூ. 37,000 கோடி கிஞ்சித்தும் குறையாமல் பட்டியல் சாதியினர்க்கு வரமுடியும் என்ற வேளையிலும், பட்டியல் சாதியினர்க்கு மறுத்து, பணப்பெட்டியருக்கு இதைவிட கூட ஒரு மடங்கு தாரை வார்க்கப்படுகிறது.

இதைக்கண்டு பாராமுகமாக இருப்பவர்களைப் பார்த்துத்தான் "பலி ஆடுகளாக இராதீர்கள்' என்றார் அண்ணல் அம்பேத்கர். அரட்டி மிரட்டுவோர் ரூ. 50,000 கோடி பெற முடியுமென்றால், வெருட்டப்படுவோராக வும், மிரட்டப்படுவோராகவும் மட்டும் நாம் இருக்க முடியாதே? முன்னர் பேசிய உங்கள் துணைத் தலைவர், நம்மவருள் பலர் போதையில் கிடக்கிறார்கள் என்று கவலையுற்றார். அவர் எந்த போதையைச் சொன்னார் என்று எனக்குத் தெரியாது. ஆனால், நம்மவர்க்கு இன்னும் போதை ஏறவில்லையே என்ற கவலை எனக்கு! ஆம், ஆளுமை என்ற போதை, அதிகாரம் என்ற போதை கொஞ்சம்கூட ஏறாமல் கையேந்திகளாக இருப்பதே கதி என்றிருப்பவர்களே! போதையை ஏற்றுங்கள்; பாதையைக் காணுங்கள்; காதையைப் படையுங்கள்.

அப்படியே உங்கள் தலைவர் சொன்ன சரக்கை ஏற்றிக் கொண்டு அரட்டினால், வெருட்டினால் ரூ. 51,000 கோடி – பட்டியல் சாதியினர் சிறப்புக் கூறு திட்ட நிதியும் வந்து விடும் என்ற நிலை ஏற்படுமானால், இதுவரை "போதை' மணமே நுகராத நானே, புல் புல்லாக ஏற்றிக் கொண்டு முதலில் களம் இறங்கவும் தயார். "போதை' ஏற்றுவதில் பெரிய தவறிருக்க முடியாது. போதை ஏற்றிக் கொண்டு என்ன செய்கிறோம் என்பதில்தான் மானங்கெடும்.

“எது வாய்க்குள் போகிறது என்பதில் தீட்டு இல்லை; எது வாயிலிருந்து வெளி வருகிறதோ அதில்தான் தீட்டு வரும்''
பைபிள்

"சீறும் சிங்கங்களாக இருங்கள்' என்று அம்பேத்கர் வழிமொழித்து விடைபெறுகிறேன். வீர வணக்கம்.

13.4.07 அன்று சென்னை தொலைத் தொடர்பு எஸ்.சி./எஸ்.டி. சங்கத்தில் ஆற்றிய உரை