கேரளத்தில் உருவாக்கப்பட்ட ஒவ்வொரு பொருளிலும் அதை உருவாக்கியவர்கள் என்ற மூலாம் பரத்தில் அடிமைச் சாதி, ஊழியச் சாதிகளின் உழைப்பே பொருந்தி இருந்தது. ஆனால், அவர்கள் உழைப்புக்கும் அதன் பலனுக்குமிடையில் ஒட்டா உறவை சவர்ணம் பேணிக்காத்துக் கொண்டது. இந்துத்துவம் காலந்தோறும் உழைப்பு மனிதர்களை அடக்கியொடுக்கிச் சுரண்டியதோடு மட்டுமின்றி, இழிவுகளுக்கும் ஏழ்மைக்கும் கொடுமைகளுக்கும் ஆளாக்கியது.
கேரளத்தின் ஒவ்வொரு கணமும் வன்முறையாக, சவர்ணர் ஆதிக்கத்தின் வடிவமாக உருப்பெற்று, இடைவெளியற்று நீக்கமற நிறைந்து அச்சுறுத்திக் கொண்டிருந்தது. அவர்ணர்களின் வாழ்தலுக்கான இருப்பும், மனித மதிப்பீடுகளும் சூறையாடப்பட்டன. மனிதரை மனிதர் நசுக்கும் கீழ்மைத்தனம் அவர்ணர் ஆண் - பெண் உடல்களை குறிவைத்து செயல்பட்டது.

ஒடுக்குமுறையின் தொடர்த் தீயில் உருவான தீண்டாமை கோட்பாட்டுக்குள் இருத்தப்பட்ட ஈழவர்கள் - தீண்டத்தகாதோராக மட்டுமின்றி, நெருங்கக் கூடாதவர்களாகவும் நடத்தப்பட்டனர். ஈழவர்கள் பார்ப்பனர்களிடமிருந்து 36 அடிகளும், நாயர்களிடமிருந்து 12 அடிகளும் விலகிப் போக வேண்டும். திருவிதாங்கூர் இந்து ராச்சியத்தில் தன்னைத் தொட்டுவிடும் பட்சத்தில் ஒரு ஈழவரை கொன்றுவிடும் உரிமை நாயர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. ஆதிக்கச் சாதியினர் வாழுமிடங்களிலிருந்து ஈழவர்கள் விலக்கி வைக்கப்பட்டதுமின்றி, பொதுக்குளங்கள், கிணறுகள், சந்தைகள், சாலைகள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதற்கும் தடைவிதிக்கப்பட்டன. சமுதாயத்தில் ஈழவர்களின் கீழான நிலையை அடையாளப்படுத்தும் வண்ணமாக அவர்கள் அணியும் ஆடை, அணிகலன்கள், பயன்படுத்தும் பாண்டங்கள் ஆகியவற்றில் விதிமுறைகளைக் கடைப்பிடிக்கக் கட்டாயப்படுத்தப்பட்டனர்.

ஆண்களும், பெண்களும் கால்மூட்டுக்குக் கீழும் இடைக்கு மேலும் ஆடைய அணிய அனுமதிக்கப்படவில்லை. உயர்த்தப்பட்ட சாதியினர் முன்பு தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்கள் மார்பை மறைத்து ஆடை அணிந்து சென்றால், அது தங்களை அவமதிக்கும் செயல் என சவர்ணர்கள் கருதினர். ஈழவர்களுக்கு விலையுயர்ந்த உலோகங்களாலான ஆபரணங்கள் அணியவும், குடை பிடிக்கவும், காலணி அணியவும் அனுமதியில்லை. ஓடுவேய்ந்த வீடுகளில் வசிப்பதும், பால் கொடுக்கும் பசுக்கள் வளர்ப்பதும், வாகனங்கள் பயன்படுத்துவதும் தடை செய்யப்பட்டிருந்தன.

ஈழவர்கள் அவர்களின் வீடுகளிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு, மிரட்டி திரட்டப்பட்டு தொடர்ந்து பல நாட்கள் பயங்கரமான, தனிமையான காடுகளையும், யானைகளைப் பிடிக்கும் குழிகள் வெட்டிப் போடப்பட்ட பிரதேசங்களை காவல் காக்க ஊதியமின்றி செய்யவும் கட்டாயப்படுத்தப்பட்டனர். உப்பளங்களிலிருந்து மண்டிகளுக்கும், விற்பனை நிலையங்களுக்கும் உப்பு மூடை சுமந்து செல்லுதல், அரசு பண்டக சாலைகளைப் பாதுகாத்தல், நிலங்களுக்கு வேலி அமைத்தல், வண்டிகளில் சுமைகளை ஏற்றி இறக்குதல், மகாராஜாவின் குதிரைகளுக்குப் புல் வெட்டிக் கொண்டு கொடுத்தல், அரசுக் கட்டடங்களைப் பழுது பார்த்தல், காவல் காத்தல், மரங்களை வெட்டி வீழ்த்தி அவைகளைத் தூக்கிச் செல்லல், குளங்களைத் தூரெடுத்து கரைகளைக் கட்டுதல் போன்ற வேலைகளை ஊதியமின்றி செய்ய வேண்டியிருந்ததோடு ஈழவர்கள் விடுபட முடியவில்லை.

அரசின் ஆவணங்களுக்குத் தேவையான எழுத்தோலை, கோயில்களுக்குத் தேவையான எண்ணெய், பூமாலை, பார்ப்பனர்களுக்கான இலவச உணவகங்களான ஊட்டுப்புரைகளுக்குத் தேவையான விறகு மற்றும் காய்கறிகள், அரசு யானைகளின் தீவனத்திற்கான தென்னை ஓலைகள் ஆகியவற்றை இலவசமாகக் கொடுப்பதும் ஈழவர்களின் கடமையாக இருந்தது. இவற்றைத் தவிர பண்டிகைக் காலங்களில் அரச குடும்பத்தினருக்கும், ஆதிக்கச் சாதியினருக்கும் கோழிகள், முட்டைகள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை இனாமாகவும் கொடுக்க வேண்டியிருந்தது. பொருட்கள் கொடுப்பதினால் ஏற்படும் இழப்பு மட்டுமின்றி, திருவிதாங்கூர் இந்து ராச்சியத்தின் தலைநகரான திருவனந்தபுரத்திற்கு அவைகளைச் சுமந்து கொண்டு சேர்க்க ஆகும் காலமும் விரயமான காலமானது.
பொருளாதார ரீதியாக அவர்கள் மீது பல கட்டுப்பாடுகள் சுமத்தப்பட்டன. இந்து கோவில்களுக்கும், அரசுக்கும், உயர்த்தப்பட்ட சாதி நிலக்கிழார்களுக்கும் ஊதியமின்றி பணி செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டனர். கல்வி நிறுவனங்களில் அனுமதியும் அரசுப் பணிகளில் வாய்ப்பும் மறுக்கப்பட்டன.

திருவிதாங்கூர் இந்துத்துவ அரசு, தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் உடல் அவயங்களுக்குக்கூட வரிகளை விதித்தது. நூற்றுக்கும் மேற்பட்ட வகையான வரிகள் இவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டன. இதில் அதிக பாதிப்புக்குள்ளாக்கிய வரி ‘தலை வரி' ஆகும். பதினாறு முதல் அறுபது வயது வரையுள்ள ஆண்கள் அனைவரிடமிருந்தும் இவ்வரி வசூலிக்கப்பட்டது. மீசை வரி, முடி வரி எனவும் வரி விதிப்பு இருந்தது. நம்ப முடியாத கொடுமையான, வெறுப்பை ஏற்படுத்தும் பெண்களுக்கான ‘முலை வரி'யும் பிரதானமாக இருந்தது. இந்த வரியை வசூலிப்பதில் காட்டப்பட்ட மனிதாபிமானமற்ற அநியாயமான செயல்களும், இந்த வரியின் தன்மையையும் அது ஏற்படுத்திய இழிவையும் தாங்க முடியாத ஓர் ஈழவப் பெண், இந்த வரித் தண்டல்காரர்கள் அவர் வீட்டிற்குச் சென்று வரி கொடுக்க கட்டாயப்படுத்தியபோது, ஒரு முலையை அறுத்து அவர்களிடம் கொடுத்தாள் (என்.ஆர். கிருஷ்ணன் எழுதிய ‘ஈழவர்கள் நேற்றும் இன்றும்' மலையாள நூல், பக்கம் : 175 180).

வரி கொடுக்கத் தவறியவர்கள் கடுமையான தண்டனைகளுக்கு ஆளாக்கப்பட்டனர். முதுகில் பாரமான கற்களை ஏற்றிவைத்து வெயிலில் பல மணி நேரம் நிற்க வைத்தல், பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியை காதில் நுழைத்துத் தொங்க விடுதல், சிறையிலடைத்து துன்புறுத்துதல் போன்ற கொடுமைகளுக்கு அவர்கள் ஆளாக்கப்பட்டனர். வரி கொடுக்கத் தவறியவர்களின் வீட்டிலுள்ள பெண்களையும் தண்டல்காரர்கள் விட்டு வைக்கவில்லை. அவர்களும் பல வழிகளில் துன்புறுத்தப்பட்டனர்.

சவர்ண சாதி எஜமானர்கள் தங்களுக்கு அடிமைப்பட்ட மனிதர்களை மிகவும் தாழ்வாகவே மதிப்பீடு செய்திருந்தனர். எப்பொழுதாவது ஒரு குளத்தில் அல்லது ஆற்றில் கரை உடைந்துவிட்டால், அதற்கு கடவுளர்களின் கோபமே காரணம் எனக் கருதி, கடவுளர்களின் கோபத்தைத் தணிக்க அவர்ண சாதியினரையே உடைப்பில் தள்ளி, அவர்கள் மேல் மண்ணைப் போட்டு மூடி அவர்களை பலி கொடுத்து விடுவார்கள். இந்த நரபலி பட்டியலில் ஈழவர்கள் உள்ளடங்கிப் போனார்கள்.

அறியாமை, வறுமை, துன்பம் ஆகியவற்றுடன் வாழ்ந்து, இழிவு செய்யப்பட்டு, ஆதிக்கச் சாதியினரால் வெறுத்து ஒதுக்கப்பட்டு வந்த அடிமைப்பட்ட மக்கள், கடவுளுக்கு பலியிடுவதற்கு உகந்த பரிசுப் பொருளாகவே பாவிக்கப்பட்டனர். 1746 ஆம் ஆண்டு தனது வெற்றிக்கு இடையூறாக இருந்த தடைகளை அகற்ற மகாராஜா மார்த்தாண்ட வர்மா - ஈழவர், சாணார், முக்குவர் சாதிகளைச் சேர்ந்த 15 பச்சிளங் குழந்தைகளை நரபலி கொடுத்தார். அரசாட்சிக்கு ஆலோசகர்களாகயிருந்த பார்ப்பனர்கள், அவர்ண சாதிக் குழந்தைகளை பலி கொடுக்கும்படி கூறினார். புயல் வீசிக் கொண்டிருந்த ஓர் இரவில், இந்த குழந்தைகள் பெற்றோர்களிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பிரித்தெடுக்கப்பட்டு, திருவனந்தபுரத்திலிருந்து கோட்டைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். பார்ப்பன புரோகிதர்கள் நடத்திய பல சடங்குகளுக்குப் பின்னர் மூடநம்பிக்கையினூடே மந்திரங்கள் எழுதப்பட்ட செப்புத் தகடுகள் - இந்தக் குழந்தைகள் மீது பொருத்தப்பட்டு, அவர்கள் உயிருடன் அரச தலைநகரின் நான்கு மூலைகளிலும் புதைக்கப்பட்டனர் (டி. ஒயிட் ஹவுஸ் எழுதிய ஓர் இருளடைந்த நாட்டில் மின்னிடும் ஒளிகள் - லண்டன் 1873, பக்கம் : 215).

உடல் ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் சுரண்டப்பட்ட தீயர்களான ஈழவர்கள், திருவிதாங்கூரின் மொத்த மக்கள் தொகையில் 17 சதவிகிதமாக இருந்தனர். தென்னை மரம் சார்புடைய தொழில்களிலேயே பெரும்பான்மையோர் ஈடுபட்டிருந்தனர். கடினமான உழைப்பாளிகளான ஈழவர்களைப் பற்றி குமாரன் ஆசான் மொழியில் கூறுவதானால், அவர்கள் ‘இரு கால் விலங்குகள்'. ஈழவர் வடதிருவிதாங்கூரில் பெரும்பான்மையினராக இருந்தனர்.
தென்திருவிதாங்கூரில் பெரும்பான்மையினராக சாணார்களான நாடார்கள் இருந்தனர். ஈழவர்களுக்கான சமூக, பொருளாதார, அரசியல் அழுத்தங்கள் அனைத்தும் நாடார்களுக்கும் முற்றிலும் பொருந்துபவை ஆகும்.

கி.பி. 1921 ஆம் ஆண்டு வரை சாணார்களாகயிருந்த இவர்களில் பெரும்பான்மையோர், பனைமரம் சார்புடைய தொழில்களில் ஈடுபட்டிருந்தனர். கி.பி. 1921 ஆம் ஆண்டு சென்னை மாகாண அரசு, சாணார்கள் தங்களை நாடார்கள் என குறிப்பிடலாம் என ஓர் ஆணை பிறப்பித்தது (G.O. NO.785, 7 July 1921 Law (General) Department, Government of Madras). கேரளத்தில் இந்துக்கள் சவர்ணர்களாகவும், இந்துக்கள் அல்லாதோர் அவர்ணர்களாகவும் இருந்தனர். அவர்ணர்களுக்கு குறிப்பாக ஈழவர்களுக்கு வடதிருவிதாங்கூரில் டாக்டர் பி. பல்பு, நாராயண குரு, குமாரன் ஆசான் ஆகியோர் மூலமே மறுவாழ்வு பிறந்தது. தென்திருவிதாங்கூரில் மகராசன் வேதமாணிக்கம் ஏற்படுத்திய சீர்திருத்தக் கிறித்துவம் மூலமே வாழ, வளர வழி ஏற்பட்டது.

தலைமுறை தலைமுறையாக இழைக்கப்பட்டு வந்த கொடுமைகளை எதிர்க்கவும், சிதைக்கப்பட்ட மனித விழுமியங்களைப் பாதுகாக்கவுமான முன் முயற்சியில் ஈடுபட்டவரே டாக்டர் பி. பல்பு. அவர்தான் கவிழ்ந்த இருட்டிலிருந்த ஈழவர்களை வெளிச்சப்படுத்த முனைந்த சமூக முன்னோடி. ஈழவர்கள் அனுபவித்துணரும் வேதனையின் ஆழத்திற்கேற்ப தன்னை தகவமைத்துக் கொண்ட பி. பல்பு, சமூக கவனமானதில் தன்னை சமூக மனிதராகவே ஆளாக்கிக் கொண்டார். ஆதிக்கச் சாதிகளின் விலங்காண்டித்தனங்களைக் கண்டு வெகுண்டு, எதிர்மறைகளுக்கான அறைகூவலாக தன்னை வளர்த்தெடுத்தார்.

கல்வி மறுப்பால் சமூகத் தீமையும் சமூக அடிமைத்தனமும் களை போல் தீவிரமாக வளர்ந்த சூழ்நிலைமையில் கல்வியை தனது சமூக விடுதலைக்கான கருவியாய் கையாண்ட பல்புவிற்கு உயர் நிலைப்பள்ளியில் இடம் மறுக்கப்பட்டது. இருப்பினும், திருவனந்தபுரத்திலுள்ள ஓர் உயர் நிலைப்பள்ளியின் தலைமையாசிரியராக இருந்த ஓர் ஆங்கிலேயர் பல்புவிற்கு இடமளித்தார். பல்கலைக் கழகத் தேர்வில் எப்.ஏ. வெற்றி பெற்று மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான தகுதி பெற்றார். ஆனால், மருத்துவக் கல்லூரி அவரைச் சேர்க்க மறுத்தது.

தோல்விகண்டு துவளாது சென்னை சென்று எல்.எம்.எஸ். பட்டம் பெற்று தகுதி பெற்ற மருத்துவராக திருவிதாங்கூர் திரும்பியதும் வேலைக்கு விண்ணப்பித்தார். ஆனால், அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் என்பதால், அவர் விண்ணப்பம் குப்பையில் போடப்பட்டது. இருப்பினும் மைசூர் அரசு அவருடைய தேர்ச்சியின் வீரியத்தை உணர்ந்து, அவரை வரவேற்றுப் பணியில் அமர்த்தியது. அங்கு லிம்ப் நிறுவனத்தின் இயக்குநராகவும், உடல் நல அலுவலராகவும் பல்பு பொறுப்பேற்று செல்வாக்கோடு வாழ்ந்தார். இன்றைக்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்பே பல்புவின் திங்கள் ஊதியம் 1,000 ரூபாய். வெளி மாநிலத்தில் உயர் நிலையில் இருப்பினும், சொந்த மண்ணில் சாதி இழிவு காரணமாக மனித மதிப்பினைப் பெற முடியாதவராகயிருந்தார்.

கேரளத்தில் சாதி ஆதிக்கத்திற்கு முடிவு கட்ட எண்ணிய பல்பு, ஈழவர்களை அமைப்பாக்க முனைந்தார். ஈழவர்களுக்கென ஓர் அமைப்பு வேண்டும் என்ற பல்புவின் உள்ளக்கிடக்கை நாராயண குருவிற்கு மகிழ்வித்த யோசனையானது. மனிதர்களின் சாரம் மனிதர்களினுள் இல்லை; அது அவர்கள் சமுதாயத்துடன் கொள்ளும் உறவின் சாரமாயிருக்கிறது என்பார் சமத்துவ மேதை காரல் மார்க்ஸ். மார்க்சின் நன்மொழியை மெய்ப்பிக்கும் வண்ணத்தில், சமூகப் பாட்டாளி வர்க்கத்திற்கென, ஈழவ மக்களுக்கு இனிய வாழ்வை மீட்டெடுக்கவும், எல்லா வெற்றிகளும் கிட்டவும், டாக்டர் பி. பல்பு நாராயண குரு குமாரன் ஆசான் என்ற முக்கோணப் பரிணாமத்தினூடே ‘சிறீ நாராயண தர்ம பரிபாலன யோகம்' 1902 இல் தோற்றுவிக்கப்பட்டது. அன்பு அருள், ஆற்றல், அறிவு இவற்றை வேர் ஊன்றி வளராமல் செய்கின்ற களர் நிலமாய் இருந்த கேரளத்தில், அடிப்படை சமூக மக்களின் வளர்முகமாக சிறீ நாராயண தர்ம பரிபாலன யோகத்திற்குப் பொதுச் செயலாளர் ஆனார் குமாரன் ஆசான்.

- தொடரும்