பருவங்கெட்டு பெய்து கொண்டிருந்தது மழை. முனிமலை மேலிருந்து பாறாங்கல் உருண்டு வருவதைப் போல, அடர்ந்தடர்ந்து கிடுகிடுக்கும் இடியோசைக்கு குலை நடுங்கியது. சாளைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தாலும் ரோமக்கால் சிலிர்ப்பில் மண்டியிருந்தது குளிர். பழஞ்சீலையை மேலுக்குப் போர்த்தி சாக்குப் பைக்குள் கழுத்துவரைக்கும் நுழைத்துக் கொண்டாலும் வெடவெடப்பு குறையவில்லை. விளையாட்டுக்கு ஒரு மோதுமோதினாலும் இற்று விழுந்துவிடுமளவுக்கு சாளையின் சுவர்களில் ஓதமேறிவிட்டது. கூரையிலிருந்து விழும் மரவட்டைகள் காதுக்குள் நுழைந்துவிடுமோ என்கிற பயத்தில், அரைமயக்கத் தூக்கமும் அவ்வப்போது தடைபட்டது.

காடுகரையெல்லாம் ஊறி ஊற்றெழும்பித் தளும்பியது. கிணறுகளில் நீர்மட்டம் பிடுவைத் தாண்டி தொலைக்குழி வழியே கோடி போனது. புடையெடுக்கும் நெல்லங்காட்டில் தெப்பக்குளமாட்டம் முழங்காலமுட்டுத் தண்ணி நின்றது. மேட்டு அணப்புகளில் நட்டிருந்த குச்சிக்கிழங்கு அழுகி நொதிக்கும் நாற்றம் குமட்டியெடுத்தது காற்றை.

‘எம்மக்க பட்டப்பாடெல்லாம் இப்பிடி பதராப் போச்சே... ஒரு போகத்து வெள்ளாமையழிஞ்சா தாங்குமா குடும்பம்...' என்ற மழையிறக்கம் கண்ட நாளிலிருந்து சாக்குப் பைக்குள் முடங்கிக் கொண்டு அங்கலாய்த்துக் கிடக்கிறாள் பொன்னுருகிப் பாட்டி. ‘நான் கொமரியாவறதுக்கு முன்னாடி சின்னப்பிள்ளையா இருந்தப்ப ஒருதபா இப்படித்தான் பேஞ்சது. இப்ப என்னை அடிச்சினு போறதுக்குத்தான் திரும்ப வந்துனுக்கீதாட்டங்கீது.....' என்று ஊதக்காற்றுக்குத் தாங்காமல் நடுங்கும் குரலில் தனக்குத்தானே தன் பிராயத்தை சொல்லிக் கொள்வதைப் போல் முனகிக் கொண்டிருந்தாள்.

அவளுக்கு இப்போதும் எல்லாமே ஞாபகத்தில் இருக்கிறது. பேயாத மழை பேய்ந்து பெரியநத்தம் ஏரி உடைந்து ஊரும் காடும் வெள்ளத்தில் முழுகியது அப்போதுதான். ஏரிக்கு கீழ்க்கரையில் இருந்த பூங்கரடு, பவளனூத்து, வேட்டக்குடி, வெள்ளிமுறி நாலு ஊருக்கும் சென்மத்தில் காணாத சேதாரம். சுவர் இடிந்தும் கூரை அமுங்கியும் நாலைந்து பேர் செத்துப் போனார்கள். வெள்ளாமை முழுசுக்கும் அழிமானம். விவரந்தெரிந்த நாளிலிருந்து வெளேரென்ற மணல்தட்டிக் கிடந்த மணியாற்றில் கரையைத் திமுத்து ஓடியது தண்ணி. செங்காமூட்டுப் பனையில் பாதி தண்ணிக்குள்ளிருந்தது. அப்படியொரு கோலத்தில் ஆற்றைப் பார்க்கிற ஆசை யாருக்குத்தான் இருக்காது? ஊரே திரண்டு குமிந்தது கரையில். இவளும் சவ்வுக் காகிதத்தை தலையில் கொங்காடையாக மாட்டிக் கொண்டு, சித்தப்பனோடு பார்க்கப் போயிருந்தாள். காணியம்மன் தேருக்குக்கூட இப்படியொரு ஜனம் குமிந்து அவள் பார்த்ததில்லை. கரை முழுக்க ஜனமான ஜனம். பண்ணாடிகளும்கூட குடைபிடித்து வந்து வெப்பால மரத்தைத் தாண்டி கருங்கண்ணன் காட்டோரம் இருந்த பாறைகளில் ஏறி நின்று பார்த்தார்கள். இவள் உயரத்துக்கு தெரியாததால் சித்தப்பன் தோளேற்றிக் கொண்டான். ரண்டுப்பக்கமும் தாண்டுகால் போட்டு உட்கார்ந்து கொண்டு இவளும் பராக்கு பார்த்தாள்.

முனிமலை உச்சியிலிருந்து வகிடு மாதிரிரி தாழ இறங்குகிறது மணியாறு. எப்போதோ ஒரு காலத்தில் அது பொங்கிப் பெருகி பாய்ந்திருப்பதை இருமருங்கு கரையோரப் பாறைகளில் படிந்திருக்கும் நீர்த்தாரையைப் பார்த்தாலே தெரியும். ‘இப்படி அனாமத்தாய் ஓடி சமுத்திரத்தில் எதுக்கு கலக்கணும்...' என்று ஒரு வெள்ளைக்காரன் நடுவாந்தரத்தில் வளைத்து நொய்யங்குழி அணை கட்டின பிற்பாடு, நிலைமை தலைகீழாகி விட்டது. மழைக் காலத்தில் மட்டும் முடி உதிர்ந்தவள் சடையாட்டம் சன்னமாய் கொடிவாய்க்கால் அளவுக்கு மணலை நனைத்துக் கொண்டு ஈரம் தெரியும். அப்படி இருந்த ஆறா இது... என்று அரட்டிக் கொண்டு ஓடியது இப்போது.

பாறைகளில் வெள்ளம் மோதித் தெறிக்கும் திவலைகள், புகையாட்டம் ஆற்றுக்கு மேல் மிதந்து நகர்ந்தது. செங்கரட்டிலிருந்து வடியும் தண்ணீரும் பாலக்குட்டை கணவாயில் ஆற்றோடு சேர்ந்து புதுவெள்ளத்தின் நிறத்தை செம்மண் குழம்பு போலாக்கியிருந்தது. நேரமாக ஆக தண்ணி மட்டம் ஏறியது மேலுக்கு. அதுவரை பயமும் திகிலும் பரவசமுமாய் கரையிலிருந்தக் கூட்டம் தன்னையறியாது அடியடியாய் பின்வாங்கி நின்றது. மணல் மூட்டைகளை அடுக்கி முட்டுக் கொடுத்திருந்த வண்ணம் பாளையம் ஏரியும் உடைந்து விட்டிருக்கலாம் என்று பேசிக் கொண்டனர். அது உடைந்திருந்தால் பத்திருவது ஊர்கள் ஜலசமாதிரிதான் என்றும் ஒரு குஞ்சுகுளுவான்கூட மிஞ்சாது என்றம் தனக்குத்தானே சொல்லிக் கொண்டான் சித்தப்பன். ஜவுரிக்கு முடி வாங்கிக் கொண்டு பட்டாணியும் பலூனும் தருகிற கப்பக்காலிக்கு வண்ணம்பாளையம்தான் ஊர். அவள் இனி வருவாளோ, மாட்டாளோ என்ற கவலை இவளுக்கு. தாவாரத் தண்டையில் சொருகி வைத்திருக்கும் முடிச்சுருணையை இனி யார் வாங்கிக் கொள்வார்கள் என்று யோசித்தாள்.

பாறைகளில் வெள்ளம் விளாறியடித்து ஓடும்போது ஏற்படும் சத்தம் ஓங்காரமாய்க் கேட்டது நெடுந்தூரத்துக்கு. பராக்குப் பார்க்கப்போன பிள்ளை இன்னும் திரும்பாத பதட்டத்தில் கூட்டிப்போன கொழுந்தனைக் கறுவிக் கொண்டே அவள் அம்மாவும் கரைக்கு வந்து விட்டிருந்தாள். மகளைத் தேடி வந்தவள் பெருக்கெடுத்துப் பாயும் செந்தண்ணியைக் கண்டதும் சின்னப்பிள்ளை மாதிரிரி மிரண்டு போனாள். அவளும் ஆயுசுக்கு இப்படிப் பார்த்தவளில்லையே...’ஆத்துக்குன்னு ஒரு வழியிருக்கு, அது நம்ம மேல வந்து ஏறாது'ன்னு கொழுந்தன் தைரியம் சொன்னான். ‘பயத்துல புள்ளைக்கு காய்ச்ச குளுரு வந்தா ஒங்கொண்ணனுக்கு ஜவாப்பு சொல்றது யாரு...' என்று நொடித்துக்கொண்டே ‘வா யம்மா சாளைக்குப் போலாம்' என்று மகளை அழைத்தாள். மறுத்து தலையாட்டியபடி சித்தப்பனின் உச்சிமுடியை கோர்த்துப் பிடித்தாள் இவள். ‘சின்னப்பிள்ளையாட்டம் தோள்மேல ஒக்காந்துனு ரெம்பவும்தான் செல்லங் கொஞ்சறே... ஏய் இறங்கி வாடி' என்று அம்மா அதட்டியதும் இவள் அடம் பிடித்து அழுததும் எப்டியோ போய்த்தொலை என்று அவள் விட்டுவிட்டதும்கூட இவளுக்கு மறக்கவில்லை.

மரம் மட்டை செடி செத்தை இன்னதென்றில்லாமல் எல்லாமே கண்ணிமைக்கும் நேரத்தில் மிதந்தோடிப் போய் மறைகிறதாயிருந்தது ஆறு. சாளையின் கூரைகள் பாதி மூழ்கியும் மூழ்காமலும் ரங்கவட்டம் சுற்றிக்கொண்டு ஓடுவதைப் பார்த்து கூட்டம் அரற்றியது. அடித்துக்கொண்டுபோன ஆடு மாடு உருப்படிகள் ஒண்ணா ரண்டா...? நாயொன்று கரையேற மாட்டாமல் தத்தளித்துக் கொண்டு அண்ணாந்து ஊளையிட்டபடி ஆற்றின் போக்கில் போய்க்கொண்டிருந்தது. தீத்தான்கொல்லை பக்கத்தில் கரையிலிருந்த வாகை மரமொன்று பெருஞ்சத்தத்தோடு ஆற்றின் குறுக்கே சாய்ந்தது. நல்லவேளையாய் அந்த மரத்துக்குக் கீழே நாய் நின்றிருக்கவில்லை. பெருங்கூட்டு மரம் என்பதால் வெள்ளத்தை கிடையாய் மறித்துக்கொண்டு நின்ற அவ்விடத்தில் சுழிபோல ஆறு பொங்கி எதுக்களித்து ஓடியது திசைதப்பி. மேங்காட்டிலிருந்து அடித்துக் கொண்டு வந்த ஒரு மாட்டின் கொம்பு, மரத்தின் கிளைகளில் சிக்கிக் கொண்டது. அது மேற்கொண்டு நகரமுடியாதபடி செருமிக் கொண்டு தீனமாய் கத்தியது.

சித்தப்பனும் அவனது சேக்காளிகளும் எதையோ குசுகுசுத்தார்கள். பின், உங்கம்மா கையைப் பிடிச்சுக்க கண்ணு என்று தோளிலிருந்த இவளை இறக்கி அவளிடம் விட்டுவிட்டு எங்கோ ஓடியவன், இரண்டு கயித்துச் சுருணைகளை தூக்கிவந்தான். பெத்தய்ய நாய்க்கர் காட்டோரமிருந்த விளாமரத்தில் ஒண்ணுங்கீழ் ஒண்ணாய் கயிறுகளைக் கட்டி மறுமுனையை இடுப்பில் கட்டிக் கொண்டான். இவளும் இவங்கம்மாளும் சனங்களும் போட்ட கூப்பாட்டை அவன் சீந்தவேயில்லை. கீழேரிப்பள்ளம் தெக்கத்தியான் காட்டில் பண்ணையத்தில் இருந்தபோது, பெண்ணையாற்றில் ஆற்றுநீச்சல் பழகிய தைரியம் அவனுக்குள் பொங்கிக் கொண்டிருந்தது. ஆனால், காட்டாற்றுக்கு கரையுமில்லை வரையுமில்லை என்பதால்தான் இந்தக் கயிற்றைப் பிடித்துக்கொண்டு இறங்குகிறான். எதற்கு இவன் ஆற்றுக்குள் இறங்குகிறான் என்று தெரியாத கூட்டம், அவனது சேக்காளிகளைத் திட்டிக்கொண்டே சேற்றுக்கட்டிகளை எடுத்து வீசி கரைக்கு அழைத்தது.

அவன் ஆற்றின் போக்கில் கைகளை நீளநீளமாய் விளாவிப்போட்டு, ஒரு தக்கையைப்போல மிதந்து மரத்தை நெருங்கினான். இப்போது ஆற்றின் போக்கை மறித்துக் கொண்டு குறுக்குவாட்டமாய் மரத்தை நோக்கி அவன் கடக்க வேண்டியிருந்தது. வெள்ளம் அவனை உந்தித்தள்ளி இழுத்தது. நீந்தவும் முடியாமல் கால்பாவவும் ஏலாமல் பிடிமானமற்றுத் தத்தளித்தவன் மரக்கிளையொன்றைப் பற்றிக் கொள்வதற்குள் போதும்போதுமென்றாகிவிட்டது. தவ்வித்தவ்வி நகர்ந்து மாட்டின் கழுத்தில் ஒரு கயிற்றால் படிமுடிச்சிட்டான். இன்னொரு கயிற்றை பின்னங்கால் பக்கம் போட்டு, முதுகுப்பக்கம் இழுத்துக்கட்டி விட்டால் மாட்டை இழுப்பது சுளுவாயிருக்கும். ஆனால், தண்ணிக்குள் முழுகினால்தான் உண்டு. கலக்கங்கண்ட புதுத்தண்ணியாயிருப்பதால் முழுகினாலும் எதுவும் நெப்பு நிதானம் தெரியவில்லை. ஆனது ஆகட்டுமென்று சீக்கையடித்தான். கரையிலிருந்த அவனது சேக்காளிகள் கயிற்றை இழுக்க, பின்னாலிருந்து இவன் உந்தித் தள்ளினான். மாட்டை கரை சேர்ப்பது பெரும்பாடாகிவிட்டது. அது உயிரோடிருந்தது.

கயிற்றோடு மீண்டும் ஆற்றில் இறங்கப் போனவனை ‘மறுக்கா எதுக்குப் போறே காளீப்பா...' என்று இவளம்மா தடுத்தாள். ஒண்ணும் ஆகாது என்று சொல்லிக்கொண்டே அவன் போய் மரத்தின் ஒரு கிளையில் வாகாக உட்கார்ந்து கொண்டான் இப்போது. மிதந்துவந்த சீலையொன்றை இழுத்துச் சுருட்டி கரைக்கு வீசினான். அது பாதியிலேயே விழுந்து சாயத்தண்ணி மாதிரிரி ஓடியது. தலைகுப்புறக் கவிழ்ந்து தக்கையாட்டம் தேலிக்கொண்டு வந்து ஒரு பிணத்தைக் கண்டு திகீரென்றானவன் என்ன செய்ய என்ற யோசிப்பதற்குள் அது கடந்து போய்விட்டது. கரையிலிருந்து அதப்பிடிடா பிடிடா என்று கூப்பாடிட்டனர். பிணத்தை எடுத்து எதற்காகும்... ஆள் யார் ஊர் எது என்று இந்த மழையில் தேடிக் கண்டுபிடித்து கொடுக்கிற பாடும் தன் அண்ணனுக்குத்தான் சேர்ந்துத் தொலையும் என்று நினைத்துக் கொண்டதும்கூட, அவன் அந்தப் பிணத்தை போட்டுமென்று விட்டதற்கு காரணமாயிருக்கும்.

‘ஒரு பறப்பயனுக்கு இருக்கிற தகிரியம் நம்மள்ல ஒருத்தனுக்கும் கெடையாதா...' என்ற மீசை கடித்த வேங்கான் மகன் சொக்கனிடம் ‘ஆத்தோட போற மாட்டை அறுத்துத் தின்னா எவன் கேக்கப் போறாங்கிற துணிச்சல்ல எறங்கிப் புடிச்சிட்டான். மாட்டுக்காரன் மாட்டுக்கு அழுதானாம் பறையன் கொழுப்புக்கு அழுதானம்கிற கதையா இருக்கு இவனுகங்க பண்றது... இதுல நீயும் நானும் போட்டிப் போடணுமா...' என்றான் வெள்ளை. நம்ம கண்ணு முன்னாடியே எத்தினி ஆடுங்க அடிச்சினு போச்சு... ஒண்ணையாவது மறிச்சு தூக்கணும்னு நமக்குத் தோணலியே... அவன் என்னடான்னா பராக்கு பாக்க வந்த எடத்துல வூட்டுக்கு ஒருகூறு கறிக்கு வழி பண்ணிட்டான் பாத்தியா...' என்று மறுபடி கொதித்தான் சொக்கன். ‘அதுக்கு ஏண்டா மருகா ஆத்ரப்படறே... அவங்களுக்கு ஒரு மாட்டைப் பிடிச்சவன் நமக்குன்னு ஒரு ஆட்டைப் பிடிக்காமலாப் போயிடுவான்... கரைக்கு வரட்டும் பாத்துக்கலாம்...' என்று சமாதானம் சொன்னான் வெள்ளை. அவன் வாய் முகூர்த்தம் பலித்த மாதிரிரியே அடுத்தடுத்து ஒரு செம்பிலியாட்டையும் மான் ஒன்றையும் மடக்கி கரைக்கு ஏற்றிவிட்டு தானும் கரை திரும்பினான் இவள் சித்தப்பன்.

கரைக்கு வந்தவன் தான் மீட்ட உருப்படிகளை ஒரு நோட்டம் விட்டான். அவை தண்ணியிலிருந்து மீண்டு தப்பித்த உணர்வின்றி இன்னும் நடுங்கிக் கொண்டே இருந்தன. மாட்டின் உடல் சிலிர்த்து சிலிர்த்து அடங்கியது. அதன் வயிறு உப்பசம் கண்டது போலிருந்தது. அடிக்கடி வாலைத் தூக்கி மூத்திரம் பெய்து கொண்டேயிருந்தது. சும்மாவே செருமிக்கிடக்கும் ஆடு நிலைகொள்ளாமல் துள்ளித்துள்ளி செருமி குடித்துவிட்டிருந்த ஆத்துத் தண்ணியை வெளித்தள்ள பாடாய் பட்டுக் கொண்டிருந்தது. பயத்தில் புழுக்கையிடுவதற்குப் பதில் கழிச்சலைப் பீய்ச்சியது. மனிதர்களைக் கண்ட மிரட்சியில் மானின் காதுகள் விடைத்துக் கிடந்தன.

குடை பிடித்து நின்றிருந்த பண்ணாடிகள், அவர்களுக்குள் குசுகுசுத்துவிட்டு ‘நல்ல காரியம் பண்ணிட்டடா காளீப்பா... என்று பாராட்டினார்கள். பேச்சு இங்குமிங்குமாய் சுற்றியடித்து உருப்படிகளைப் பங்கு பிரிப்பதில் வந்து நின்றது. மாட்டை நீங்க எடுத்துக்குங்க... ஆடும் மானும் எங்களுக்கிருக்கட்டும்' என்பதாயிருந்தது பண்ணாடிகள் விருப்பம். ‘உசுரை தண்ணி மேல எழுதி வச்சிட்டு ஆத்துல இறங்கினது நான். கரையிலிருந்து இழுத்துப் போட்டது எங்காளுங்க. இதுல பங்கு பாகம்னு கேட்கிறது பண்ணாடிமாருக்குத் தகுமா சாமி...' என்றான் காளியப்பன். ‘அடே, உங்கிட்ட யாரும் பஞ்சாயத்து பேசல. நாங்க பிரிச்சியுடறோம். அவ்வளவுதான்...' என்றான் வெள்ளை. ‘பாத்தாலே தெரியலீங்களா பண்ணாடி அது செனைமாடுன்னு. வளக்க வேண்டிய சிசு அது வயித்துல இருக்கும்போதுஅறுத்துத் திம்பாங்களா யாராச்சும்... இந்த மாட்டை வேணும்னா பிடிச்சுக்கிட்டுப் போய் உங்க பட்டியிலியோ கட்டாந்தரையிலியோ கட்டிக்குங்க. எங்க பொண்டு புள்ளைங்க வயித்துல ஈரங்கண்டு ரண்டு நாளாச்சு. ஆடும் மானும் எங்களுக்கு வேணும்.....' என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே குடையை வீசியெறிந்துவிட்டு அவன் மீது பாய்ந்தான் சொக்கன். காளியப்பன் விலகிக் கொள்ளவும் நிலைகுலைந்து விழுந்த சொக்கன், அவமானம் தாங்காமல் எழும்பும் நினைப்பற்று சேற்றிலேயே கிடந்தான். கூட்டம் ரெண்டுத் தரப்பாய் கிழிந்து முறுக்கியது.

‘செத்தமாட்டைத் திங்கற நாய்ங்க செனமாட்டுக்கு கருணை காட்டுதுங்களேன்னு பொருமாதீங்க பண்ணாடி... பாவம் ரட்டைச் சீவன். இந்த மாட்டுக்கு ஒரு நாம்பு புல்லறுத்துப்போட எங்களுக்குன்னு கோமணத்தமுட்டு நெலம் நீச்சுகூட கிடையாது. அதனால அதை நீங்களே பிடிச்சுக்குங்க' என்ற சொல்லிவிட்டு, ஆட்டையும் கேளையையும் பிடித்துக் கொண்டு சேக்காளிகளோடு சேரிக்குத் திரும்பினான். இவளும் இவள் அம்மாவும் பின்னாலேயே ஓடினார்கள். பண்ணாடிங்கள பகைச்சிக்கிட்டா அவங்க நம்மள சும்மா விடுவாங்களா...? என்று வழிநெடுக புலம்பிக் கொண்டே வந்தாள் அம்மா.

கரையில் நடந்த சண்டையே மிச்சப்பொழுதின் பேச்சாயிருந்தது. கறியாக்கித் தின்னும் ஆசை யாருக்கும் தோன்றவேயில்லை. அடுப்பு மூட்ட காய்ந்த ஒரு சிமிறுகூட சேரிக்குள் யார் வீட்டிலும் இல்லாத நிலையில், இப்போதைக்கு கறியறுக்க வேண்டாம் என்று பெண்கள் சிலர் சொன்னதும் சரியென்றே பட்டது. விபரீதமான சூழலுக்குப் பொருந்த முடியாமலும் புரியாமலும் காளியாத்தா கோயில் நடையில் மேமே என்ற ஆடு கத்திக் கொண்டேயிருந்தது. இதுவரையிலும் பார்த்தேயிராத மானைச் சுற்றிக் குமிந்து பசியை மறக்கத் தொடங்கியிருந்தனர் குழந்தைகள். குளிரில் சிலிர்க்கும் மேனியில் புள்ளிவட்டங்கள் வினோதமாய் மாறும்போது மான் இன்னும் வேடிக்கைக்குரியதாயிருந்தது.

அந்தி சரியும்போது மீண்டும் மின்னல் வெட்டிக் கொண்டு மழையடிக்கத் தொடங்கியது. காலையிலிருந்து சிணுங்கிக் கொண்டிருந்த தூறல், இப்போது சடசடவென்று பெருமழையாகி இறங்கியது. ரெண்டுபக்கமும் திண்ணை வைத்து தரைக்கு காரை பூசியதாயும் மங்களூர் ஓடு போர்த்தியதாயும் இருந்த கோயில் மட்டுமே சேரியில் ஒழுகாததாய் இருந்ததால், மொத்தசனமும் அங்கேதான் அடைக்கலமென வந்து அண்டியிருந்தனர்.

அன்றிரவும் பிள்ளைகள் சோளப்பொறியைக் கொறித்து வயிறுமுட்ட தண்ணீரைக் குடித்துவிட்டு மானைச் சுற்றி சுருண்டு கிடந்தனர். பண்ணாடிமாருக்கும் இவங்களுக்கும் காலங்காலமாய் நடந்த சண்டைச் சச்சரவுகள், பஞ்சாயத்துகள், தீர்ப்புகள், தண்டனைகள் பற்றி தங்களது ஞாபகத்தைக் கிளறி கிளறி பெரியவர்கள் ஆளாளுக்கு ஒன்றாய் சொல்லிக் கொண்டிருந்தார்கள். பழையவை உண்டாக்கின பயமும் கோபமும் இருட்டில் வினோத உருவங்களாகி அலைந்து, அவர்களின் தூக்கத்தைப் பறித்து விழுங்கின. பொன்னுருகியும்கூட கண்ணை மூட பயந்து இருட்டையே பார்த்துக் கொண்டிருந்தாள். இந்நேரம் இவ்விடத்தில் அப்பன் இருந்திருந்தால், அணைத்துக் கொண்டு தூங்கியிருக்க முடியு மெனத் தோன்றியது அவளுக்கு. ஆனால், சர்க்கார் தோட்டியான அவள் அப்பன், உடைந்து விட்ட ஏரியைப் பார்க்கப்போன முன்சீப்பையருடன் நேற்று சாயங்காலமே போக வேண்டியதாயிற்று. தண்ணிக்குள் முழுகிச் செத்தவர்களின் பிணங்களை போலிஸ் வந்து எடுத்துப் போகும்வரை, அங்கேயே இருந்து பிணங்களுக்கு பந்தோபஸ்து கொடுக்க வேண்டிய சர்க்கார் தோட்டி தன் மகளைத் தூங்க வைப்பதற்காக எப்படி வரமுடியும்?

தங்ளையும் மீறி சிலருக்கு கண் சொக்கும் நேரத்தில் மாட்டின் பெருஞ்சத்தம் கேட்டது. திண்ணையிலிருந்து இறங்கிவந்து தாவாரத்தில் நின்று உற்றுக் கேட்டான் கசாப்பு கோயிந்தன். வெள்ளத்தின் பேரிரைச்சலையும் மீறி ஆற்றங்கரைப் பக்கமிருந்து பேரோலமாய் எழுந்தது மாட்டின் கத்தல். நெடுநேரம் ஆற்றுக்குள் நின்றிருந்ததால் உடம்பில் ஏறிய சில்லிப்பில் வெடவெடத்து முடங்கியிருந்த காளியப்பனை உசுப்பி எழுப்பினான் கோயிந்தன். மாடு கத்தன சத்தம் கேட்டுச்சாடா உனக்கு...? என்றான். ‘அவனுங்க அங்கயே உட்டுட்டுப் போய்ட்டாங்களாட்டங்கீது. ஆத்தங்கரையிலயேத்தான் இருக்காட்டங்கீது' என்றான். ‘நாம காப்பாத்தின உசுரை அவங்களை நம்பி உட்டுட்டு வந்தது தப்பாப்போச்சே...' என்று கலங்கிய காளியப்பன் ‘போய் பாத்துட்டு வரலாமா' என்றான். சித்தப்பனை கூப்பிட நினைத்தவள் அமைதியானாள்.

அடித்த கூதலில் ராந்தல் நெடுந்தூரம் தாங்கவில்லை. அப்படியும் இப்படியுமாய் அளைந்து கடைசியில் அந்த கைவிளக்கும் அணைந்துவிட்டது. கையிருப்பிலிருக்கும் தீக்குச்சிகள் விரயமாவதில் அவர்களுக்கு சம்மதமில்லை. ஜம்பமாய் கூத்தாடி முருகன் கொண்டுவந்திருந்த மூனுகட்டை பேட்டரி மின்னாம்பூச்சியாட்டம் மங்கியடித்தது. பந்தமாவது கொளுத்தி வந்திருக்கலாமென்றான் கணவதி. அந்த எண்ணையிருந்தா ஒரு நாள் சாளையில் வெளக்கெரிக்க ஆவும் என்று வாயடைத்தான் கொண பாலன். வேறுவழியில்லாமல் நடந்து பழகிய நெப்பிலும் கொடியோடப் படரும் மின்னல் வெளிச்சத்திலும் கரையை நோக்கி உத்தேசமாய் நடந்தார்கள். மழைக்காலிருட்டில் பாதை வழுக்கியது. நதானங்கெட்டு கால் வைத்தால் ஊறிக்கிடந்த பூமி உள்ளிழுத்தது. கவனம் கவனம் என்று கடக்க வேண்டியதாயிற்று ஒவ்வொரு அங்குலத்தையும்.

மாடு மறுபடி கத்தாமலிருப்பது கிறுத்து காளியப்பனுக்கு சற்றே ஆசுவாசம் வந்தது. கரையை நெருங்க நெருங்க மாட்டின் பெருமூச்சு சீரற்று இரைந்து கேட்டது. வெள்ளத்தில் சிக்கி இழுபட்டு வந்ததில் சினை தங்காமல் இறங்கியிருக்குமோ... பூச்சிப்பொட்டு எதாச்சும் கடித்திருக்குமோ... என்று பலவாறாய் தனக்குள் புலம்பி நடந்தான். வெள்ளத்தின் பேரிரைச்சல். இடி மின்னல். இருட்டு. தனியாக் கெடந்து என்ன தவுதாயம் பட்டதோ மாடு என்று நினைத்துக் கொண்டபோது, அவனுக்குத் தன் மீதே வெகாளம் பாய்ந்தது. ஆனது ஆகட்டுமென்று சாயங்காலமே அதையும் இழுத்து வந்து கோயிலடியில் கட்டியிருக்கணும் என்ற நினைப்பை அறுத்துக்கொண்டு யாரோ ஓடுவது கேட்டது.

யார்ரா அது என்ற கத்திக்கொண்டே காலடியோசையை விரட்டிப்ப பாய்ந்தார்கள் இருட்டுக்குள்ளேயே எல்லோரும். தாங்கள் விரட்டுவது மனிதனையா, விலங்கையா, எதுவுமற்ற நினைப்பையா என்று யோசிக்க அவகாசமில்லை அவர்களுக்கு. யாரோ விழுந்து அலறியதைப் பொருட்படுத்தாது ஓடிய உருவத்தின் மூச்சிரைப்பையே அவர்கள் துரத்த வேண்டியதாயிற்று. ஒரு மின்னல் வெட்டில் ஓடிக்கொண்டிருந்த சொக்கன் எல்லோருக்கும் பிடிபட்டுப் போனான்.

காளியப்பன் பிடி அவன் உடம்பில் ஈரக்கயிற்றைப் போல் இறுகிக் கொண்டிருந்தது. என்னைத் தொட்டுப் பிடிக்கிற தைரியம் வந்துருச்சாடா ஒங்களுக்கு என்று திமிறினான் சொக்கன். உன்னைத் தொட்டதால இப்ப நீ கருகிட்டியா இல்ல நாங்கதான் கருகிட்டமா... என்ற கணவதி, சொக்கன் கையிலிருந்த பேட்டரியை பிடுங்கிக் கொண்டு மாட்டை நோக்கிப் போனான். பிடியைத் தளர்த்தாமல் சொக்கனை இழுத்துக்கொண்டு காளியப்பனும் அவனுக்குப் பின்னே மற்றவர்களும் நடந்தனர். என்னை விடுடா தேவிடியா பெத்ததே என்று திமிறிக் கொண்டே இருந்தான் சொக்கன். ‘பறையன் தானம் பண்ணித்தான் எங்க பண்ணையத்துல மாடுகன்னு பெருகணுமாடா' என்று பொருமினான். ஒருவரும் மறுவார்த்தை பேசவில்லை.

மாடு சரிந்து கிடந்தது. அதன் வயிற்றில் கடப்பாறை மின்னியது. கடப்பாறை இறங்கிய இடத்திலிருந்து ரத்தம் கொப்பளித்து பெருகிக் கொண்டிருந்தது. எங்களுக்குன்னு கொடுத்த மாட்டை நாங்க எதுவுஞ் செய்வோம் என்றான் சொக்கன். யாருக்கும் எதுவும் பேசத் தோன்றவில்லை. ஆவேசம் வந்தவனாகி அவனை குண்டுக்கட்டாக தூக்கி ஆற்றின் திசையில் வீசினான் காளியப்பன்.

தெறித்து விழுந்தத் தண்ணீரை துடைத்துக் கொள்ளவும் நினைப்பில்லாமல் அங்கேயே கொஞ்சநேரம் நின்றிருந்தவர்கள் எதுவும் பேசிக் கொள்ளாமல் திரும்பினர்.

மாட்டைக் கொன்றுவிட்டு சொக்கன் எங்கோ ஓடிப் போய்விட்டான் என்றே இன்றும் பேச்சிருக்கிறது ஊருக்குள். இத்தனை வருஷங்கழித்து இப்படி பெருக்கெடுத்தோடும் மணியாற்றில் அவன் பிணம் மிதந்து வந்தால் எப்படியிருக்கும் என்று பொன்னுருகிக் கிழவி நினைத்துக் கொண்டபோது அவளுக்கு சிரிப்புதான் வந்தது. ஒழிஞ்சது பீடை என்று சொல்லிக்கொண்டே தூங்கடா பொண்ணு என்று மார் மீது கிடத்திக் கொண்ட சித்தப்பனின் நினைப்பு அவ்விடத்தில் கதகதவென்று பரவியது. மானின் புள்ளிவட்டங்களை கண்விரியப் பார்த்து வியந்த பொன்னுருகி என்னும் குட்டிப் பெண்ணாக தான் மாறிக் கொண்டிருப்பதாய் நினைத்துக் கொண்ட கிழவிக்கு இப்போது குளிரவில்லை.

Pin It