தமிழ் நாட்டின் அடையாளங்களை, தமிழர்களின் அடையாளங்களைக் கொண்ட திரைப்படம் வெளிவந்திருக்கிற மகிழ்ச்சி எங்கெங்கும் தெரிகிறது. கிராமங்களை முதன்மையாகக் கொண்டு செயல்படும் நகரங்களில், குடும்பம் குடும்பமாக (இரவு இரண்டாவது ஆட்டத்திலும்) வந்து பார்க்கிற படமாக உள்ளது, இயக்குநர் சேரனின் ‘தவமாய் தவமிருந்து'. இதன் மூலம் கோடம்பாக்கத் திரைப்பட வரலாற்றில் தனக்கென தனித்ததொரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டதோடு, தமிழ்த் திரைப்பட வாசகனின் நினைவை விட்டு அகலாத நபராகவும் சேரன் உயர்ந்திருக்கிறார். வரவேற்க வேண்டிய ஒன்றே!

தந்தை, தந்தையின் பாசம், தந்தை என்கிற ஆளுமை, தந்தை என்பதின் எல்லாமான தமிழ் அடையாளம் என தந்தையின் தன்மை, படமெங்கும் விரவிக் கிடக்கிறது. அதுவும் தாரம் என்கிற வாழ்க்கைத் துணைவியை அவர் எப்படி மதிக்கிறார் என்றும் நேர்த்தியாகக் குறிப்பிடப்படுகிறது, காட்சிப் பூர்வமாக. அதேபோல் குடும்பத்தை வழிநடத்தும் நல் தலைவியாக அவரும் நடந்து கொள்வது, மிகவும் கவனத்தோடு கையாளப்பட்டுள்ளது. ராஜ்கிரணும் சரண்யாவும் எளிதில் மறக்க முடியாத உழைப்பைத் தந்திருப்பது உண்மை. ‘இது எங்க குடும்ப விஷயம்... இதுல நீ தலையிடாத...’ என (சரண்யா), தனது மூத்த மருமகளைக் கேட்கிறார். மருமகள் குடும்பத்தில் ஒருவர் இல்லையா? கோபத்தில் கேட்கலாம் என்றால், நேரம் கருதி வெட்டப்பட்ட காட்சிகளும் இப்படியான தன்மை கொண்டதாக இருக்கிறது. இதன் அடிப்படை குணாம்சம் எதிலிருந்து வருகிறது என்பது தெரியாததா?

Padmapriya and Cheran
சுமார் 20 ஆண்டுகளாக நமது தினசரிகளில் ‘காதல் ஜோடி ஓட்டம்' எனச் செய்தி வெளிவராத நாளே இல்லை. இதற்காக, தமிழ்ச் சமூகத்தை நெறிப்படுத்தும் வகையில் கதையின் மய்யப் போக்கை அமைத்ததற்கு மிகுந்த நன்றியை சொல்ல வேண்டியிருக்கிறது, இயக்குநர் சேரனுக்கு. பலர் பார்க்க ரோஜாக்களை கொடுத்தும், பலர் முன்னிலையில் பிறந்த நாள் பரிசைக் கொடுக்கிற கொச்சையான முறை, நிச்சயம் தமிழ்நாட்டில் உள்ள எந்தக் காதலர்களிடம் இருந்ததில்லை. உங்கள் வார்த்தையில் சொன்னால் ‘கண் மூடித்தனமான காதல்' கொண்டவர்களிடம்கூட! காதலுக்கு அச்சம், நாணம் தானே வேர். தமிழ்க் காதலுக்கு?

‘அண்ணே நாலு இட்லியும், ரெண்டு பரோட்டாவும் எவ்வளவு’ என்று கேட்கையில் காட்சியின் நிமித்தம் அருகாமைக் காட்சியில், மாநகர்ப்புற தள்ளுவண்டி இட்லி காட்டப்படுகிறது. ‘அடுப்பு மேல இருந்து போறாப்போல இருக்கு...’ என அம்மா சொல்ல, மகன் கழிப்பறையை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று சொல்கிற நகர்ப்புற நவீன மாற்றம், தமிழ்ப் பார்வையாளனுக்குப் புதுசு. ஆனால், அந்தக் கழிப்பறை எந்தவிதக் கழிப்பறை என அருகாமைக் காட்சியில் காட்ட வேண்டிய அவசியம் இல்லையா? அழகியல் நோக்கில் தவிர்த்திருந்தால், நிச்சயம் ஆபத்து உள்ளது. நீங்கள் குறிப்பிடும் மேற்கத்திய வடிவக் கழிப்பறையை பெரும்பாலான தமிழர்கள் கண்டே இருக்க மாட்டார்கள். பலர் முதன் முறையாக இப்படத்தில்தான் பார்த்திருப்பார்கள்.

படத்தில் அழுத்தமாகக் குறிப்பிடப்பட வேண்டிய அம்சம் இசை. படம் முழுக்க மக்களிடம் பரவலாக சேர்ந்து அங்கீகரிக்கப்பட்ட திரைப்படப் பாடல்கள் ஒலிக்கின்றன பின்னணி இசையாக. அது புதிய பார்வையை படத்துக்குத் தருகிறது. கதாநாயகன் மீது கதாநாயகி காதல் வயப்பட்டதை மைனாக்களின் ஒலியில் பதிப்பித்த விதம் நெகிழ்ச்சியானதே. ஆனால், முத்தையா (ராஜ்கிரண்) இறந்து சுடுகாட்டில் புதைக்கும் நிலையில், செம்பு வட்டுக் கொண்டு தடித்த கட்டையால் அடிக்கும் தமிழர்களின் தொன்மமான மரண இசைக் கருவியின் ஒலி, கவனிக்கப்படாமல் போனது ஏன்? சபேஷ் முரளியை தோளிலும் தாங்கும் சேரனின் வலி போன்றது அவ்வொலி இல்லையா?

கலை, ஒப்பனை, நடிப்பு, பாடல்கள், மிகக் குறைவான வசனங்கள், விளம்பர முறை எனப் பலவற்றிலும் நேர்த்தியான பணாமத்திற்கு வழிகாட்டும் இயக்குநர் சேரன், கொண்டாடப்பட வேண்டியவர்தான். படத்தொகுப்பு பி. லெனின் என்று வருகிறது. சேரன்தான் படத்தொகுப்பைச் செய்தார் என்பது ஊர் அறிந்த செய்தி. ‘ஆட்டோகிராப்பை' தொடர்ந்து இந்தப் படம் தேசிய விருதுகளை வாங்கும் என்பது முழுநம்பிக்கை. ஆனால், படத்தொகுப்புக்கு விருது வந்தால் சேரனைப் பாராட்ட முடியுமா? இயக்குநர் மற்றும் படத்தொகுப்பாளராக பி. லெனின் பரவலாக அறியப்படுபவர். அவர் உங்களுக்கு உதவியமைக்காக அவரைத்தான் குறைத்து மதிப்பிட வேண்டுமா? விருது கிடைத்த பிறகு உங்கள் சூழலை விவரித்தால், தமிழர்கள் ஏற்பது எதிர்காலத்திற்கு நல்லதா?

‘ஆட்டோகிராப்' தேசிய விருதுக்குப்பிறகு, நாளிதழ்களில் படத்தொகுப்பு மற்றும் இயக்கத்துக்கு விருது தந்திருக்க வேண்டும் என்ற ஆதங்கத்தோடு ‘விடமாட்டேன்' என நம்பிக்கையுடன் உறுதியாகச் சொன்ன சேரன், படத்தொகுப்பிற்காக அதற்கென சங்கத்தில் முறையாகப் பதிவு பெற்று தன்னை வெளிப்படுத்துவது, இன்றைய நிலையில் சிரமமான ஒன்றா? உடன் பணிபுரியும் படத்தொகுப்பு தொழிலாளரைக் குறைத்து மதிப்பிடுவதுதானே இதன் பொருள்.

உடலால் இயலாதவர்கள் எப்பொழுதும் ஒதுக்கப்பட வேண்டியவர்கள் அல்ல என்பதையும், அவர்கள் சமூகத்தின் செயல்பாட்டில் பங்கேற்பதில் முக்கியமாகவும் இருப்பார்கள் என்பதை, மீண்டும் காதுகேட்கும் திறமை குறைந்த அழகர்சாமி (இளவரசு) பாத்திரம் மூலம் சொல்வதும் இயக்குநர் சேரன்தான். அதேவேளை, தமிழ்ப் படம் என்றால் அதிலும் வீரம் வந்து வாளேந்தும் படம் என்றாலே, மதுரையை கதைக்களமாகக் கொண்டு குறிப்பிட்ட சமூகத்தை மய்யமிட்டே படம் எடுக்கப்படும் (கட்டாயமாக்கப்படும்) சூழல் நிலவுகிறது. மதுரை, சிவகங்கை, காரைக்குடி என நிகழும் கதையும் அதே குறிப்பிட்ட சமூகத்தின் கதையாகவே நிகழ்வதாக இயக்குநர் சேரன் காட்சிப்படுத்துகிறார். வாளேந்தும் தன்மையில் சீரழியாது இப்படித் தங்களது வாழ்வையும் அமைத்துக் கொண்டவர்கள் உண்டு என சாதிய அரவணைப்பையும் சொல்வதற்கா இது?

நமது தமிழ்ச் சமூகம் என்பது தாய்வழிச் சமூகத்தின் வேராகும். ஆனால், தந்தை வழிச் சமூகமாக நாம் மாறியது, ஆணாதிக்கத்தின் தீவிர செயல்பாடே. வேரை அறுத்ததும் நாம்தான். வேறு யாருமல்ல. பாருங்கள், தந்தைப் பாசத்தை ‘நிறைவாக' என்று சொன்ன இந்தப் படத்திலும் ‘ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு அம்மா அப்பா' என்ற பாட்டாகட்டும், இறப்பிற்கான சடங்காகட்டும், எல்லாமே ஆணுக்கான முன்னுரிமை மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. ‘நாட்டரசன் கோட்டையில் இருந்து வாழ்க்கைப்பட்ட சாரதா’ என்று குழந்தைகள் வாசிப்பதில் மட்டுமே அவரின் அடையாளத்தைக் காண முடிகிறது. அவரது அப்பா, அம்மா, உடன்பிறந்தோர் பற்றி தகவல்கூட இல்லை. இறப்பின் சடங்கை அவருக்காக காட்டினால், அவரது பிறந்தகத்தைக் காட்ட வேண்டி வரும் படத்தில் முன்வைக்கப்படும் சமூகத்தின் அடிப்படையில்கூட. ‘தந்தை' என்கிற தனித்துவம் தாய்வழி பாட்டி வீட்டில் சொல்லப்படுகிற விமர்சனங்களில் இருந்தே பிள்ளைகள் பெறுகிறார்கள் என்பது, தமிழ்ச் சமூகத்தின் விழுதுகளாகத் தொடரும் வரலாறு. மருந்துக்குக்கூட தாய்வழிப் பாட்டி வீடு பற்றி சொல்லப்படாமலே போனதின் காரணம் என்ன? இறக்கும் தருவாயில்கூட, தனது பிறந்தகத்தைப் பற்றி குறிப்பிடாமல் இறக்க மறுக்கிற நம் தாய்மார்களின் வழக்கத்தை இப்படியான படத்தில் தவிர்க்க இயலுமா?

‘இப்படியின்றி' தொடரட்டும் இயக்குநர் சேரனின் சந்தோஷப் பயணம்
Pin It