மனிதரை மனிதர் நேசிக்க வேண்டி இருப்பதால், அவரவருடைய நன்மைக்காகவே மனிதர்கள் ஒழுக்கமாக நடந்தாக வேண்டும். இதுவே தம்மம். அதாவது ஒழுக்கம் ஆகும். சிலருக்கு சுதந்திரம் இருக்க, பலருக்கு அந்தச் சுதந்திரம் இல்லாமலிருக்கிறது. இதற்கு என்ன தீர்வு? சகோதரத்துவத்தை உலகளவில் பொதுத்தன்மையுடையதாக ஆக்குவது ஒன்றே தீர்வானதாகும். சகோதரத்துவம் என்பது என்ன? மாந்தர்கள் அனைவருக்குள்ளும் சமத்துவம் என்பதன் மறு பெயரே அது. ஒழுக்கத்தின் மறுபெயரே தம்மம். - டாக்டர் அம்பேத்கர்

Budha
இயற்கையில் ஓர் ஒழுங்கு உள்ளது. சமூகத்தில் அப்படிப்பட்ட ஓர் ஒழுங்கு உள்ளதா? என்ற கேள்வியை எழுப்பியவர் புத்தர். மனிதர்கள் செயல்களில் ஈடுபடுகிறார்கள். அவை நல்ல செயல்கள், கெட்ட செயல்கள் என ஆகிவிடுகின்றன. இச்செயல்கள் சமூகத்தில் விளைவுகளை ஏற்படுத்துகின்றன. விளைவுகளால்தான் சமூக ஒழுங்கு நிர்ணயிக்கப்படுகிறது. இச்சமூக ஒழுங்கின் நிர்ணயம் முழுக்க மனிதர்களாலேயே முடிவாகிறது. மனிதரைத் தவிர வேறு எவராலும், வேறு எதனாலும் சமூக ஒழுங்கு நிர்ணயமாவதில்லை. இந்த விவாதத்திற்கு இசைவாகத் தம் கருத்துகளோடு காயங்களோடு மானுட உலகிற்கு இயைந்து போனவரே புத்தர்.

புத்தர் பயன்பாட்டு வாதம் என்ற அணுகுறையின் மூலவர் ஆவார். அவ்வணுகுறையின் வாயிலாகத் தன்னை தீவிர நேர்காட்சிவாதியாக பாவித்துக் கொண்டார். புத்தரின் கருத்துகள் பயன்பாட்டு மதிப்புகளுக்கே சாய்மானம் கொண்டதாகும். புத்தர் உடனடிப் பயன்பாடு கொண்ட நேர்க்காட்சித் தளத்திலான பிரச்சனைகளையே பிரச்சனைகளென்று எடுத்துக்காட்டினார். மனிதர், அவரது உள்ளம் ஆகியவற்றை தன்மைப்படுத்தினார். நுட்பமான உளவியல் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளித்தார். மறு உலகம், முக்தி போன்ற கருத்து முதல் வாதங்களை நிராகரித்து, நடைமுறை வாழ்வில் உள்ள துன்பத்தை எவ்வாறு விரட்டுவது என்ற நோக்கிலேயே சிந்தித்தார்.

புத்தர், துன்பம் என்ற கருத்தை சமூகமயப்படுத்தினார். துன்பத்திற்குக் காரணம் பிறவி முதலாளித்துவ (பார்ப்பனிய) வர்க்க மோதல்கள் என்று அவர் கூறினார். துன்பத்தை விலக்குவதற்கு உளவியல் ரீதியிலான வழிகளை முன்வைத்தார். சமூக முரண்பாட்டை மனித மனம் துன்பமாக உணர்கிறது என்பது புத்தரின் முடிவு. சமூக வர்க்கங்களுக்கிடையிலான மோதலை எப்படி அகற்றுவது என்று தொடர்ந்து சிந்திக்க முடிவு செய்ததன் விளைவே சித்தார்த்தரின் துறவு. அத்துறவின் நோக்கம், மனித வாழ்க்கையின் பிரச்சனைகளைக் கண்டறிவதற்காகவும், தீர்வுகளைத் தேடுவதற்காகவும்தான்.

துன்பமே உலகத்தின் எதார்த்தம் எனில் உலக வாழ்வை மறுத்து துறவு மேற்கொள்ளுவதைத் தவிர, சித்தார்த்தருக்கு வேறு வழியில்லாமல் இருந்தது. ஆனால், ஆரம்பத்தில் துன்பத்தையும் துறவையும் ஏற்கும் சித்தார்த்தர், புத்தராகும் போது துறவை மறுத்துவிடுவது குறிப்பிடத்தக்கது. மத்திய மார்க்கம் எனும் புதிய பாதையை உருவாக்குவது கவனத்திற்குரியது. இதுவே துன்பத்தை நீக்குவதற்குரிய புத்தரின் பாதையாகும். நம்பிக்கை வறட்சி இதன் நிலைப்பாடல்ல.

துறவு பயனற்றது. அது ஒரு தப்பித்தல். துறந்தவனும் கூட தப்பிக்க முடியாது. உலகைத் துறப்பதல்ல; உலகை மாற்றுவதே பவுத்த தம்மம். "பரிநிர்வாணம்' என்பது முழுத்துறவு. பரிநிர்வாணம், நிர்வாணம் இவைகளை அம்பேத்கர் விளக்கும் போது, பரிநிர்வாணம் என்பது உடல், உணர்ச்சிகள், மனம், செயல்கள் ஆகிய அனைத்தையும் அடங்கச் செய்வது; நிர்வாணம் என்பது உணர்வுகளை அடக்கி சரியான வழியில் வாழ்வது என்றே வரையறை செய்கிறார். இது வாழ்வு நெறிதானே தவிர, துறவு நெறி அல்ல என்பது அவரது விளக்கம்.

கர்மக் கோட்பாடு, உலகம் பற்றிய ஓர் ஒட்டுமொத்தக் கோட்பாடே தவிர தனித்தனி மனிதர்கள் பிறப்பு, வாய்ப்புகள், வாய்ப்பின்மைகள் ஆகியவை குறித்தது அல்ல என்று குறிப்பிடும் அம்பேத்கர், கர்மக் கோட்பாட்டை சமூகம் குறித்த பொதுக் கோட்பாடு என விளக்கும்போது, பவுத்தத்தை சமூகவியல் கொள்கைகளுக்கு பொருத்தப்பாடாகவே நிறுவியுள்ளார். கடவுள் கருத்து பவுத்தத்தின் மய்யமல்ல; ஆன்ம விடுதலை பவுத்தத்தின் மய்யமல்ல; மனிதரும் அவர்களது அறவியல் வாழ்வுமே பவுத்தத்தின் மய்யம். உலகத்தின் தோற்றம், முடிவு ஆகியவற்றை விளக்குவது பவுத்தமல்ல; உலகை மாற்றுவதே பவுத்தமாகும்.

இதே போல தம்மம் என்பது கடவுள், ஆன்மா சம்பந்தப்பட்டது அல்ல. சாவுக்குப் பிறகான வாழ்வைக் குறிப்பதும் அல்ல. அது மனிதர்கள், உலகில் மனிதருக்கிடையிலான உறவுகள் ஆகியவற்றைக் குறித்தது ("புத்தரும் அவரது தம்மம்', தொகுதி 2, பக்கம் : 121). தம்மம் என்பது மனிதர்களுக்கிடையிலான உறவுகளைப் பற்றியது. இங்கு கடவுளின் இடத்தில் அறம் அமைந்துள்ளது. அறமே தம்மமாகும் (பக்கம் : 322). பவுத்தம் விதிகளின் தொகுப்பல்ல. அது வாழ்க்கை முறைக்கான நெறிமட்டுமே ஆகும். விதி எனில் அதனை மீறவே முடியாது, கூடாது. ஆனால் பவுத்தம் வாழ்க்கை நெறியாகும் போது, அது மனிதர்களின் தேர்வுக்குரியதாகும். கடவுள் கொள்கை, இறைக்காட்சி, மறு உலகம், முக்திக் கோட்பாடு, சடங்குகள் ஆகியவற்றை பவுத்தம் ஏற்கவில்லை என்பதால், பவுத்தம் ஓர் உலகியல் சார்ந்த மார்க்கமேயாகும்.

புத்தர், பத்து நெறிமுறைகளைக் கை கொண்டு கடைப்பிடித்த பின்னரே அவர் மானுடம் போற்றும் புத்தரானார். மாசற்ற மனம் பெற்ற மகிழ்ச்சி, பிறரிடம் குறை காணா நற்குணம், அறிவுத் தீ பரவும் சூழ்நிலை, தற்பொருள், சார்புப் பொருள் தொடர்பு தெரிதல், பொருள்களின் முழுமை புரிதல், அனைத்து உயிரையும் நேசித்தல், சலனமிலா அசல்நிலை, சகலத்தையும் உணர்ந்த மதி, அறிவைப் போதிக்கும் உயர்ந்த நிலை ஆகிய இந்த ஞானங்களையெல்லாம் அவர் எய்தினார். இவ்வாறுதான் சித்தார்த்தர் உலகம் போற்றும் ஒப்பற்ற புத்தர் ஆனார். உலகில் அமைதி நிலவ புத்தர் போதித்த தம்மம்தான் சிறந்த மார்க்கம் என்பது, அம்பேத்கரின் முடிந்த முடிவாகும்.

தம்மம் என்றால் என்ன? தம்மம் என்பது பகுத்தாய்வும் அறிவையும், அர்த்தமுள்ள கருணையையும் தன்னுடைய அங்கங்களாகக் கொண்டுள்ளது. அறிவை "உணர்வு' என்றும் அர்த்தமுள்ள கருணையை "மைத்ரி' என்றும், புத்தர் வரையறுக்கிறார். "உணர்வு' என்பது புரிந்து கொள்வதில் அடங்கியுள்ளது. மூடநம்பிக்கைக்கு எவ்விதத்திலும் இடம் தரக் கூடாது என்பதை புத்தர் தன்னுடைய தம்மத்தின் அடிப்படையாகக் கொண்டதால், "உணர்வு' மற்றும் "மைத்ரி' தம்மத்தின் இரு எல்லைகளாகக் கருதப்படுகின்றன. "மைத்ரி'யும் "உணர்வு'ம் சேர்ந்த கலவையே தம்மம்.

போதப்பத்தர் என்ற மருத்துவருக்கும் புத்தருக்கும் நடந்த உரையாடலில் :

1. உலகம் அழிவற்றதா? 2. உலகம் முடிவுடையதா? 3. உலகம் முடிவற்றதா? 4. உடலும் ஆத்மாவும் ஒன்றா? 5. உடலும் ஆத்மாவும் வெவ்வேறு ஆனதா? 6. உடல் அழிந்த பிறகு ஆத்மா வாழுமா? என்ற கேள்விகளை போதப்பத்தர் புத்தர் முன் வைக்கிறார். இந்தக் கேள்விகளுக்கு புத்தர் தந்த பதில் மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டியதாகும். போதப் பத்தரிடம் புத்தர், உங்கள் கேள்விகளுக்கு நான் எந்தப் பதிலையும் சொல்ல விரும்பவில்லை என்றார்.

மனித வாழ்க்கைக்கும் சமூக உறவிற்கும் துளியும் பயன்படாதவற்றை நோக்கி உங்களுடைய நேரத்தை செலவிடுவதையும், கற்பனையான கேள்விகளை எழுப்பி மனித சமூகத்தை எதார்த்த வாழ்விலிருந்து அப்புறப்படுத்துவதையும் நிறுத்துங்கள். மாறாக இந்த உலகில் 1. துன்பமிருக்கிறதா? 2. துன்பத்திற்கான காரணமென்ன? 3. துன்பத்திற்கு நிவாரணம் என்ன? 4. துன்பத்திற்கு நிவாரண வழிமுறை என்ன? என்ற நான்கு வினாக்களுக்கும் விடை தேடுங்கள் என்றார்.

புத்தர், மறுபிறவி என்ற பார்ப்பனியச் சொல்லாடலின் பொருளை மறுத்தார். மனிதன் உயிர் 1. பிரத்வி (இயக்கம்) 2. சுப (வெப்பம்) 3. தேஜ் ( உணர்தல்) 4. வாயு (சுவாசக்காற்று) ஆகிய நான்கு மூலங்களால் ஆனது. மனிதன் உயிர் மரித்தல் என்பது இந்த நான்கு மூலங்கள் சிதறுவதைக் குறிக்கிறது என்றார். மனிதர், தான் வாழும் காலத்தில் ஒவ்வொரு வினாடியும் கோடிக்கணக்கான உயிர்ச் செல்கள் மடிந்து மீண்டும் மறு உருவாக்கம் பெறுகிறது. இதன் வெளிப்பாடே மனித உடலில் ஏற்படும் இளமை மற்றும் முதுமை ஆகியவற்றுக்கான வளர்சிதை மாற்றமாகும். ஒவ்வொரு வினாடியும் ஏற்படும் இந்த வளர்சிதை மாற்றத்தை புத்தர், மறு உருவாக்கம் அல்லது மீள் உருவாக்கம் எனக் குறிப்பிடுகிறார்.

Budhar
ஆற்றலை எப்படி அழிக்க முடியாதோ, அதைப் போலவே மனித உடலுக்குள் செல்களும் அழிக்க முடியாதவையாகும். ஒரு வகையான ஆற்றல் பிறிதொரு வகையிலான ஆற்றலாகத் திருப்பப்படுவது போல, மனித உடல் செல்கள் மாற்றம் பெற்று மனிதருக்குப் பல்வேறு பருவங்கள்/நிலைகளை தோற்றுவிக்கின்றன. இந்த மாற்றங்களை "அட்டா' என்ற மீள் உருவாக்கமாக புத்தர் குறிப்பிடுகிறார். பார்ப்பனர்களால் கற்பிதம் செய்யப்படும் மறுபிறவியை புத்தர் எதிர்த்து நின்றார். உயிர், தன்னுடைய வெளிப்பாட்டை உடம்பில் வெளிப்படும் வெப்பத்தில் (சுப) வெளிப்படுகிறது. உயிர்களின் மரித்தல் என்பது வெப்பத்தின் மரித்தலாகும். இந்த வெப்பம்தான் உடலிலுள்ள உறுப்புகளுக்கு இயங்கு சக்தியாக விளங்குகிறது என்றார்.

தம்மத்தின் அறநெறி புரட்சிகரமானவை. அது கடவுள் கோட்பாட்டையும் சொர்க்கத்தையும் நரகத்தையும் புறந்தள்ளுகிறது. ஆத்மாவை ஒதுக்குகிறது. நல்வினை, தீவினை, வினைப்பயன், மறுபிறவி போன்றவற்றை மறுத்து நிற்கிறது. மானுட வாழ்வில் ஒரே தன்னலமற்ற பொதுநலக் கொள்கையையே, மானுடர் செயல்படுத்த ஏதுவாக உள்ளது. புத்தரின் தம்மம் தனி நபரிடமிருந்தோ, சமூகத்திலிருந்தோ பிரிக்க முடியாதது. எதுவும் புனிதமல்ல; அனைத்தும் பரிசீலனைக்கும் மறுபரிசீலனைக்கும் உட்பட்டது. புனிதம் மறுபரிசீலனையை மறுத்து விடுகிறது. ஒருமுறை புனிதம் என்றால் எப்போதும் புனிதமே. இது அறிவியல் பார்வையைக் கொன்று விடுகிறது. பவுத்தம் ஆய்வையும் மறு ஆய்வையும் அங்கீகரிக்கின்றது. எனவே, பவுத்தத்தில் புனிதம் என்று எதுவுமில்லை.

ஆரியப் பார்ப்பன மதத்தில் கருணை வலியுறுத்தப்படுகிறது. இந்தக் கருணை, குழு ஒழுக்கமாக அமைக்கப்பட்டுள்ளது. ஆரியப் பார்ப்பன மதத்தின்படி, தனி மனிதர் மிகவும் கருணை உள்ளவர். அதே நேரத்தில் கண்டிப்பு உள்ளவரும்கூட. தன் கருணையை தன் குடும்பம், சுய சாதி மக்களிடம், சுய சாதி இயக்கத்திலும் வெளிப்படுத்துவர். ஆனால், பவுத்தமோ பொது ஒழுக்கமான மைத்ரியை, பகுத்தறிவு ரீதியான அன்பைப் போதிக்கிறது. "மைத்ரி' பகுத்தறிவின்பாற்பட்ட அன்பு. அவ்வன்பு வாழ்வளிக்கும் அறிவின்பாற்பட்ட அன்பாகும். தனிமனிதர் தனக்கென்று சுயமான சாதி உணர்வோ வர்ண உணர்வோ, ஆண் பெண் பேத உணர்வோ, ஏழை பணக்காரன் உணர்வோ, ஆதிக்கக் குழு சிந்தனைக்கு ஆட்பட்டு, தம்மம் இல்லாதவற்றை தனி மனிதர் எதன் பொருட்டும் செய்வதை பவுத்தம் வலிந்து தடை செய்கிறது. உண்மையான பவுத்தர், ஆதிக்கக் குழு உணர்விலிருந்து விடுபட்டுத் தன்னை ஒட்டுமொத்த உலகத்தின் குடிமகள்/குடிமகன் என்று உணர வேண்டும். இவ்வுணர்தலை புத்தர் "மைத்ரி' என்கிறார். உண்மையான பவுத்தர்கள் உலகக் குடிமக்கள் ஆவர்.

புத்தர், தன்னுடைய மார்க்கமான தம்மத்தை மதத்திலிருந்து முற்றிலுமாக வேறுபடுத்துகிறார். மதம் தனி மனிதன் உடைமை. பொது வாழ்க்கையில் ஒரு தனி மனிதன் உடைமை. பொது வாழ்க்கையில் ஒரு தனி மனிதர் தன்னுடைய மதத்தை மற்றவர்களிடம் நிர்பந்திக்கவோ, பின்பற்றச் சொல்லவோ இயலாது. மாறாக, தம்மம் என்பது மக்களைச் சார்ந்ததாகும். மதமென்பது இறைவனைச் சார்ந்ததாகும். இறைவன் இல்லாமல் மனிதர் இருக்கலாம்; சமூகம் இருக்கலாம். ஆனால், சமூக அங்கமென விளங்கும் மனிதர் சமூக உறவின் ஒழுக்க விதிகளை அடிப்படையாகவும், தவிர்க்கவியலாததாகவும் தன் வாழ்வில் பின்பற்ற வேண்டிய அவசியம் உள்ளது. தம்மம் அனைவருக்கும் பொருந்தும். தம்மம் இன்றி சமூகம் இயங்காது. சமூகத்தில் தம்மத்தைச் சுட்டிக் காக்கும் பொறுப்பை உண்மையான ஓர் அரசு ஏற்றுக் கொள்ளக் கூடியதாகும். அரசின் இயக்கும் கருவி தம்மமாக இருப்பின் நிச்சயம் ஒரு நற்சமூகம் விளையும். தம்மம் தவறிய ஆட்சி, வெகுமக்களுக்கு எதிரான ஆட்சியாகவே இருக்கும். ஓர் அரசு காவல் துறை, நீதித் துறை இவைகளை தம்மத்தின் கோட்பாட்டோடு இயக்கினால் அதைவிடச் சிறப்பான அரசு இருக்க முடியாது.

தம்மமின்றி சமூகம் இயங்காது!

தம்மம் என்பது அடிப்படையாகவும் சாராம்சத்திலும் சமூக வயப்பட்டது. தம்மம் என்பது ஒழுக்கம் அதாவது வாழ்வில் எல்லா அம்சங்களிலும் மனிதர்களுக்கிடையே நிலவ வேண்டிய சரியான உறவை விளக்குவது. ஒருவருக்கொருவர் தொடர்புடன் இரு மனிதர்கள் வாழும்போது, அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தம்மத்திற்கு அவர்கள் வாழ்வில் இடம் தந்தாக வேண்டும். வேறு வகையில் சொல்வதானால், தம்மம் இல்லாமல் சமூகம் இயங்க முடியாது.
- டாக்டர் அம்பேத்கர்

-தொடரும்