உணர்ச்சிமயமான இந்திய மக்களைக் கவர்ந்திழுக்கும் ஆற்றலையுடையதாக இந்திய அரசமைப்புச் சாசனம், இன்று வரையிலும் நீடித்து வருகிறது. விதவிதமான அச்சுறுத்தல்களையும், சிக்கல்களையும் சந்தித்துவந்த போதிலும் கடந்த அரை நூற்றாண்டுக் காலமாக இந்திய மக்களை அதுதான் வழி நடத்திக் கொண்டிருக்கிறது. ஒடுக்கப்பட்ட இனங்களுக்கும் சிறுபான்மை மக்களுக்கும்கூட, இந்திய அரசமைப்புச் சட்டம் வெறுப்பூட்டக் கூடியதாக இருக்கவில்லை. மாறாக, அவர்களுக்கும் நம்பிக்கையூட்டும் திறனை அது பெற்றிருப்பது, வியப்பைத் தரும் உண்மையாகும். அதற்குக் காரணம், இந்திய அரசமைப்பு, அறிவார்ந்த அறிவியல் தன்மையுடையது என்பது மட்டுமல்ல; சமூக நீதியின்பால் அதற்கிருக்கும் பெரு விருப்பம் அக்கறையுமேயாகும்.

பெரும் சமூக முரண்களைக் கொண்ட, அறியாமை மிகுந்த இந்திய மக்களைத் தாயுள்ளத்துடன் அரவணைத்துக் காக்க அது முயன்றிருக்கிறது. சாதி, சமய, இன, மொழி, பாலின வேறுபாடுகளையெல்லாம் கடந்து, தனது குடிமக்கள் அனைவரையும் அனைத்து உரிமைகளையும் பெற்றவர்களாக்கி, சமப்படுத்துகிறது அது. நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், தனிமனித கண்ணியம் போன்றவை குடிமக்கள் அனைவருக்கும் வாய்க்க உறுதியளிக்கிறது. மேற்கண்ட மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் கண்டடைய இந்திய அரசமைப்பு, இந்திய மக்களுக்கு வழங்கியிருக்கும் வழிமுறைதான் மக்களாட்சியாகும். எவராலும் ஒருபோதும் மாற்ற முடியாதபடி, மக்களாட்சி வழிமுறையை உறுதி செய்திருப்பது, இந்திய அரசமைப்பின் கூடுதல் சிறப்பாகக் காண முடியும்.

அத்தகைய மக்களாட்சி, அரசமைப்புச் சட்டத்தின் உயர்ந்த நோக்கங்களை நிறைவேற்றுவதில் நம்பிக்கையளிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறதா என்பதே நம்முன் எழும் கேள்வி! இந்துப் பார்ப்பன வேத மரபுகளால் உருவாக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்ட சாதியத்தையும், அதன் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளையும் மாற்றியமைக்கும் திறனுடையதாக இந்தியாவின் மக்களாட்சி வடிவமைக்கப்படவில்லை. அத்தகைய நோக்கத்துடன் அது உருவாக்கப்படவும் இல்லை. மாறாக, இந்தியாவின் மக்களாட்சி, அரசியல் காரணிகளால், அரசியல் நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டதாகும்.

விடுதலையை நெருங்கிக் கொண்டிருந்த நாட்களில், இந்தியாவின் அரசியல் மற்றும் சமூகச் சூழ்நிலைகள் பெரும் கொந்தளிப்புடன் இருந்தன. அரசியல் உரிமைகளுக்காக அனைத்து இந்திய மக்களும், தங்களின் இன, சாதி, மத, மொழி அடையாளத்தை உயர்த்திப் பிடித்தனர். வெள்ளை ஆதிக்கத்தை ஒன்று சேர்ந்து எதிர்த்த இந்திய மக்கள், சுதந்திர இந்தியாவின் அரசியல் பலன்களை பங்கிட்டுக் கொள்ள போட்டியிட்டன. அது, பெரும் உள்நாட்டுப் போர் போலிருந்தது. சமூகத்தளத்தில் தங்களிடையே நிலவும் அனைத்து ஏற்றத் தாழ்வுகளையும் அரசியல் வாய்ப்புக்களாலும் லாபங்களாலும் சரி செய்து கொள்ள முடியும் என்று நம்பினர். அந்த நம்பிக்கைதான் இந்திய மக்களை அரசியல் வெறிபிடித்தவர்களாக்கியது. நூறாண்டு காலமாக காங்கிரஸ் கற்றுக் கொடுத்த பாடம் அது. மக்களின் சமூக, பொருளாதார பிரச்சனைகளைப் பின்னுக்குத் தள்ளி, வெள்ளையரை விரட்டிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்ற மாயையில் தேசமக்களை மூழ்கடித்தது. இன்று வரை அதே ‘அரசியல் உளவியல்' ஆட்சியாளர்களால் வளர்த்தெடுக்கப்பட்டு வருகிறது.

விடுதலைக்குப் பிறகு உருவான அரசியல் பதற்றத்தையும் அதிகரித்து வந்த பிரிவினை முழக்கங்களையும் கட்டுப்படுத்தி, மக்களிடையே தேசிய அரசியல் ஒற்றுமையை வளர்த்தெடுக்க வேண்டிய கட்டாயம், அரசமைப்பு அவையின் சட்ட அறிஞர்களுக்கு உருவாகியது. ‘செழுமையான மக்களாட்சியை' உருவாக்குவதன் மூலமே, நாட்டின் அரசியல் சிக்கல்களுக்குத் தீர்வைக் கொண்டுவர முடியும் என்று அவர்கள் நம்பினர். மக்களாட்சி நடைமுறையைத் தவிர, வேறு எந்த வகை ஆட்சிமுறையையும் அரசமைப்புச் சட்ட அறிஞர்கள் தேர்ந்தெடுத்திருந்தாலும், இவ்வளவு பெரிய இந்தியா உருவாகியிருக்காது. உருவாகியிருந்தாலும் இத்தனை காலம் அது நீடித்திருக்காது.

ஆயினும் ‘செழுமையானது' என்று அரசமைப்புச் சட்ட அறிஞர்கள் கருதிய இந்திய மக்களாட்சி, கெடுவாய்ப்பாக பெரும் குறைவுடையதாகவே இருந்தது. அரசியல் தளத்தில் மக்களைக் குவிமய்யப்படுத்துகிறபோது, அம்மக்களிடையே நிலவும் சமூகப் பிரச்சனைகளும், ஏற்றத்தாழ்வுகளும் நீர்த்துப் போகும் என்று அரசியல் தலைவர்களும் அரசமைப்புச் சட்ட அறிஞர்களும் நம்பினார்கள். கல்வியறிவற்ற பாமர ஏழைகள் நிரம்பி வழியும் இந்தியாவில், அரசியல் நோக்கங்களுடைய ‘அரசியல் மக்களாட்சி' வெற்றிபெற முடியாது என்பதை அவர்கள் அப்போது உணரவில்லை. ஆனால், சமூகப் பொருளாதார மக்களாட்சியை உருவாக்குவதே புரட்சியாளர் அம்பேத்கரின் உண்மையான உறுதியான லட்சியமாக இருந்தது. சமூக, பொருளாதாரத் தளத்தில் மக்களாட்சியைக் கண்டடைவதற்கு நாடாளுமன்ற மக்களாட்சி உதவமுடியாமல் போகுமானால், அதற்குப் பொருளே இல்லை என்று கருதினார் அம்பேத்கர்.

அரசமைப்புச் சட்டத்தின் 14ஆவது பிரிவு வகுத்தளிக்கும் ‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்' என்ற கோட்பாட்டின் அடிப்படையில்தான், நாடாளுமன்ற மக்களாட்சியில், ‘ஒரு மனிதர், ஒரு மதிப்பு' என்ற கொள்கை ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால், சமூகப் பொருளாதாரத் தளங்களில் அக்கொள்கை மிதிபடுகின்றது. இத்தகைய பிறழ்வுகளுக்கு, அரசமைப்பு அவை அறிஞர்களே காரணமாக இருந்திருப்பதை அம்பேத்கர் விளக்குகிறார். ‘ஒரு மனிதர், ஒரு மதிப்பு என்ற கொள்கையே மக்களாட்சியின் ஆன்மா'' ஆகும். வருத்தத்திற்குரிய செய்தி என்னவென்றால், அரசியல் கட்டமைப்பு தொடர்பாக மட்டுமே இக்கொள்கைக்குச் செயல் வடிவம் கொடுக்க முயன்றுள்ளது இந்திய மக்களாட்சி. ‘ஒருவருக்கு ஒரு வாக்கு' என்ற விதியைக் கைக் கொள்ளுவதன் மூலம் இம்முயற்சி நடைபெறுகிறது. இந்த விதி, ஒரு மனிதர் ஒரு மதிப்பு என்ற கொள்கையை எல்லா தளத்திலும் உண்மையாக்கி விடும் என்று அரசமைப்பு அவை அறிஞர்கள் நம்புகிறார்கள்.

இந்தியாவின் மக்களாட்சி, இந்திய சமூக, பொருளாதாரக் கட்டமைப்புகளைப் பற்றிக் கவலை கொள்ளவில்லை. மாறாக, அதை வளர்த்தெடுப்பவர்களின் விருப்பப்படியே அது வளரட்டும் என்று விட்டுவிட்டார்கள். காரணம், ஒரு பழமைவாதக் கருத்து அவர்களை ஆட்டிப் படைத்தது. மக்களாட்சி அமைப்பிற்குத் தேவைப்படுவதெல்லாம், அரசை அதன் குடிமக்களுக்குப் பொறுப்பாக்கக் கூடியதும், மக்களை அரசு கொடுங்கோன்மை செய்வதைத் தடுக்கக் கூடியதுமான அரசமைப்புச் சட்டம் மட்டுமே! இந்திய மக்களாட்சி, ‘ஒரு மனிதர்; ஒரு மதிப்பு' என்ற தன் கொள்கையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால், அரசமைப்புச் சட்டம், சமூகப் பொருளாதாரக் கட்டமைப்புகளில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்பதை அவர்கள் உணரவில்லை'' என்கிறார்.

இதன் மூலம், அரசமைப்பு அவை சட்ட அறிஞர்கள், சமூகப் பொருளாதாரத் தளங்களில் சமத்துவத்தை உருவாக்கும் மக்களாட்சியை விரும்பவில்லை அல்லது அதை அலட்சியப்படுத்தினார்கள் என்பது உறுதியாகிறது. அரசியல் தளத்திலும்கூட, தேர்தல் காலங்களில் வாக்களிப்பதைத் தவிர, மக்களாட்சியில் மக்களின் பங்கேற்பு எதுவுமில்லை. தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் போக்குகளைப் பற்றி எழுதத் தேவையில்லை. இத்தகைய பெரும் பிழைகளுடையதாக இந்திய மக்களாட்சி வடிவமைக்கப்பட்டிருப்பது தற்செயலானது அல்ல! மாறாக, சமூகப் பொருளாதாரத் தளங்களில் வதைபட்டுக் கொண்டிருக்கும் மக்களை, போலியான அரசியல் சமத்துவத்தின் மூலம், புதை குழிக்குள் மூழ்கடிக்கும் வஞ்சக வேலைத்திட்டமாக இருக்கிறது அது.

பன்னெடுங்காலமாக இந்தியச் சாதிய சமூகத்தில், அரசியல், பொருளாதாரத் தளங்களில் அதிகாரம் பெற்றிருந்தவர்களுக்கே, இந்திய மக்களாட்சியும் அதிகாரத்திற்கு வர வாய்ப்பளித்தது. அரசமைப்புச் சட்டம் வகுத்துத் தந்த ‘ஒரு மனிதர், ஒரு மதிப்பு' என்ற கோட்பாடு, அதற்கே பயன்பட்டது. அரசியல் மாற்றத்தையோ, ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு மீளும் வாய்ப்பையோ அது தரவில்லை என்பது நிரூபணமானது. அரசமைப்புச் சட்டத்தின் குறைபாடுகள், ஏற்கனவே பலவீனமாக வடிவமைக்கப்பட்டிருந்த மக்களாட்சி நெறிமுறைகளை மேலும் வலுவிழக்கச் செய்தன. மக்களாட்சிப் பணியாளர்களாகக் கருதப்பட்டவர்கள், தாங்கள் சார்ந்த சாதியின் பிரதிநிதிகளாகச் செயல்பட்டதன் விளைவாக, ‘சாதி அரசு அதிகார வர்க்கம்' ஒன்று பேராரவாரத்துடன் உருவாகியது. அவ்வர்க்கத்திற்கு அதே சாதி உணர்வாளர்களாக இருந்த ஆட்சியாளர்கள் துணை போனதால், மக்களாட்சி நெறிமுறைகளை அரசமைப்புச் சட்டத்தின் மூலம் மக்கள் பெற்றிருந்த உரிமைகளைத் தின்று விழுங்கும் கரையான்களாக ‘சாதி அரசு அதிகார வர்க்கம்' மாறியது. கெடு வாய்ப்பாக, அக்கரையான்களுக்கு மக்கள் உரிமைகளைத் தின்னக் கொடுத்தவர்கள், ஆட்சியாளர்கள் மட்டுமல்ல; இந்திய அரசமைப்புச் சாசனம்தான்.

எந்தவொரு சட்டத்திற்கும் ‘அதிகார சக்தி' ஒன்று உண்டு. அதிகார சக்தியற்றது சட்டமாக இருக்கவியலாது. சட்டத்தின் அதிகார சக்தியைப் பயன்படுத்தும் மனிதர்களே ஆட்சியாளர்களாகவும் அதிகாரிகளாகவும் மாறுகிறார்கள். பரந்து விரிந்த இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அதிகார சக்தியை ஆட்சியாளர்கள் மட்டுமே பெற்றிருக்கவில்லை. பெருமளவிலான சட்ட அதிகார சக்தியை அதிகார வர்க்கம்தான் பெற்றிருக்கிறது. சட்டத்தின் அதிகார சக்தியே ஆட்சி எனப்படுகிறது. ஆட்சி என்பது நிர்வாகமாக நெகிழ்ந்து செயலாற்றி, தன் எல்லைக்குட்பட்ட அனைத்தையும் கட்டுப்படுத்துகிறது.

சட்டத்தின் அதிகார சக்திதான், நிர்வாகம் செய்யும் அதிகார வர்க்கத்திற்கு அடிப்படை. ஆயினும் அதிகார வர்க்கத்திற்கு, அது போதுமானதாக இருப்பதில்லை. எனவேதான், அவசரச் சட்டம், உத்தரவு, விதிகள், போன்ற புதிய புதிய அதிகார சக்திகளை அதிகார வர்க்கம் உருவாக்கிக் கொள்கிறது. அதற்கு அரசமைப்புச் சட்டம் அனுமதியும் வழங்குகிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பாகம் 3, பிரிவு 12 (3) பின்வருமாறு பேசுகிறது: ‘சட்டம் என்பதில் அவசரச் சட்டம், ஆணை, துணைவிதி, ஆட்சி அதிகாரம், ஒழுங்குறை, அறிவிப்பு, பழக்க வழக்கம், ஆகியவை இந்திய சட்ட அதிகார சக்தி என்று கொள்ளப்படும்.'

அதன்படி மீப்பெரு அதிகார சக்தியை ஆட்சியாளர்கள் பெறுகிறார்கள்; அதிகார வர்க்கம் பெறுகிறது. அத்தகைய பரந்து விரிந்த அரசமைப்புச் சட்டத்தின் அதிகார சக்தியை ‘சாதி உணர்வுடைய' அரசு அதிகார வர்க்கம் பெற்றதன் விளைவாக, ‘சட்டத்தின் அதிகார சக்தி' சாதியத்தின் அதிகார சக்தியாக மாற்றப்பட்டது. சாதியம் எவற்றையெல்லாம் மறுத்ததோ, யாரையெல்லாம் ஒடுக்கியதோ, அவற்றையெல்லாம் சட்டத்தின் அதிகார சக்தி மறுக்கிறது; ஒடுக்குகிறது. அதற்கேற்ற வகையில், எண்ணற்ற அரசாணைகளை, ஒழுங்கு விதிகள் அறிக்கைகளை, அவசரச் சட்டங்களை ‘சாதி அரசு அதிகார வர்க்கம்' உருவாக்கிக் கொண்டேயிருக்கிறது.

இந்த நவீன சட்டறைச் சாதியம்தான், இந்தியாவில் மக்களாட்சியென அழைக்கப்படுகிறது. இந்த வெட்கக்கேடான மக்களாட்சிக்கு, உலக நாடுகள் மதிப்புத் தர வேண்டுமென இந்திய ஆட்சியாளர்கள் பேசித் திரிவதை என்னவென்று சொல்வது?

சுதந்திர மாயையிலிருந்தும் மக்களாட்சிக் கவர்ச்சியிலிருந்தும், ஒடுக்கப்பட்ட இனங்கள் மீண்டு வரமுடியாமல் இன்று வரை தத்தளித்துக் கொண்டிருக்கின்றன. பித்தம் தெளிய எதைத் தின்பதென அம்மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், சாதி அரசு அதிகார வர்க்கம், கடந்த அய்ம்பதாண்டுகளில் மூர்க்கமாக ஒரு வேலைத் திட்டத்தைச் செய்து முடித்திருக்கிறது. அது எதுவெனில், குடியரசு இந்தியாவில் பேரளவில் பெருகிக் கிடந்த பொருளாதார வாய்ப்புகளை, பார்ப்பன உயரடுக்கு இடைநிலைச் சாதியினரிடம் கொண்டு போய் சேர்த்ததேயாகும்.

ஏற்கனவே, அநீதியான நிலவுடைமை பொருளியல் ஏற்றத் தாழ்வுகளைப் போற்றி வளர்த்த சாதிய இந்தியாவில், நவீன மக்களாட்சி நடைமுறையிலும் பொருளாதார வாய்ப்புகளும் சமமாகப் பங்கிடப்படவில்லை. நாட்டின் வளங்களை சமப்பங்கீடு செய்வதற்கான கட்டாயத்தை இந்திய அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தவில்லை. இன்னும் சொல்லப்போனால், இந்தியப் பொருளாதாரத்தை என்ன செய்வது என்ற பார்வையே அரசமைப்புச் சட்டத்திற்கு இல்லை.

சட்ட வரைவுக் குழுவின் தலைவராகப் பணியாற்றிய புரட்சியாளர் அம்பேத்கர், ‘அதை அவர்கள் அப்படியே விட்டு விட்டார்கள்' என்கிறார். ஒன்றை அது இருந்த நிலையிலேயே விட்டுவிடுவது என்பது, அது எங்கு இருந்ததோ, அங்கேயே இருக்கச் செய்வதுதான். காலனியாட்சி கால இந்தியப் பொருளாதாரக் கட்டமைப்பின் பெரும்பகுதி, பார்ப்பன மற்றும் மேலடுக்குச் சாதியியைச் சேர்ந்த மற்றும் பண்ணை நிலவுடைமையாளர்களின் பிடியில் இருந்தது. எந்திரமயமாக்கலின் போதும், நவீன பொருளியல் வாய்ப்புகள் உருவாகியபோதும், பார்ப்பன, மேலடுக்குச் சாதியினரின் பிடி தளரவில்லை. சாதியத்தால் பொருளியல் சுழற்சியிலிருந்து விரட்டப்பட்ட மக்களின் நிலையில் மாற்றம் நிகழவில்லை. இந்திய அரசமைப்புச் சட்டமோ, நாடாளுமன்ற ஜனநாயகமோ, அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவில்லை. அவர்களுக்கு கிடைத்ததெல்லாம் சொற்பமான ஒதுக்கீடுகள் மட்டுமே!

நாற்பத்திரெண்டாவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் 1976 இன் மூலம், அரசமைப்புச் சட்டத்தின் முன்னுரை திருத்தம் செய்யப்பட்டது. அத்திருத்தம்தான் இந்தியாவை ‘இறையாண்மை சோசலிச மதச் சார்பற்ற ஜனநாயகக் குடியரசு' என்கிறது. ‘சோசலிசம்' என்ற சொல் அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையாய் சேர்க்கப்பட்டதன் பின்னணி மோசமானது. மக்களாட்சி நெறிமுறைகளை ‘அவசரநிலை அறிவிப்பின்' மூலமாக குழிதோண்டிப் புதைத்துவிட்டு, இந்தியாவை சோசலிசக் குடியரசாக அறிவித்தார் இந்திரா காந்தி. இந்திய ஜனநாயகத்தின் மீது தனியொரு நிபராக இந்திரா காந்தி நடத்திய தாக்குதல்களை, அடுத்த இதழில் நாம் விரிவாகக் காண்போம். சோவியத் ரஷ்யாவுடன் இணைந்து நின்றபோது, இந்திராகாந்தி கொண்டுவந்த 20 அம்சத்திட்டத்தின்படி, பல நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார். வங்கிகளை நாட்டுடைமை ஆக்கியது போன்ற அவரது நடவடிக்கைகள் நாட்டின் ‘பொது பொருளாதாரக் கட்டுமானங்களை' அரசின் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வந்தன. பன்னாட்டு நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகள் தடுத்து நிறுத்தப்பட்டன. ஆனாலும் இந்தியாவை மக்கள் சோசலிச நாடாக சித்தரிக்க இந்திரா காந்தி நடத்திய ‘அரசியல் நாடகம்' அது என்பது அடுத்த அய்ந்தாண்டுகளிலேயே மக்களுக்கு விளங்கியது. இந்திராகாந்தியின் சீர்திருத்தங்கள், உண்மையில் சோசலிசத்தை நோக்கி நாட்டை அழைத்துச் சென்றனவா? நமது நாடு ‘சோசலிச குடியரசு' தானா?

‘சோசலிசம்' என்ற சொல்லுக்கு உற்பத்திக் காரணிகளையும், மூலதனங்களையும், பகிர்மானத்தையும் மக்களின் (அரசின்) பொறுப்பில் வைத்திருப்பது என்று பொருள் கொள்ளலாம். வருமானத்திலும் வாழ்க்கைத் தரத்திலும் ஏற்றத் தாழ்வுகளைக் களைவது என்பதை வலியுறுத்துவதுதான் சோசலிசமாகும். ஆனால், இந்தியா அப்பட்டமான முதலாளித்துவ ஜனநாயக நாடாக முரண்பட்டு நிற்பது ஏன்?

-யாக்கன்

Pin It