ஓர் ஆண் மற்றொரு ஆணைத் திட்டும்போது, தான் திட்ட நினைக்கிறவன் ஆணாக இருந்தாலும் அவனைத் திட்டாமல், அவனைப் பெற்ற தாயைத் திட்டும் ஒரு கொடூரம் - ஆணாதிக்கச் சமூகத்தில் இன்றளவும் ஒரு குற்றமாகக் கருதப்படுவதில்லை. அதுபோலவே, இந்திய சாதிய சமூகத்தில், தாழ்த்தப்பட்ட சாதியினரின் பெயரைச் சொல்லி இழிவுபடுத்தும் குற்றச் செயல்களும் தண்டனையின்றி நீடிக்கின்றன. ஆதிக்க சாதியின் பெயர்களைப் பயன்படுத்தி, மறந்துபோய்கூட யாரும் பிற சாதியினரைத் திட்டுவதில்லை. ஆனால், அடிமை சாதியினரின் பெயர்களைப் பயன்படுத்தி எந்த சாதியையும், எத்தகைய பயங்கரவாதத்தையும் திட்ட முடிகிறது. இப்பட்டியலில், படிக்காத மக்களிலிருந்து, படித்த/மெத்தப்படித்த/அறிவு ஜீவிகள்/முற்போக்குவாதிகள்/பிற்போக்குவாதிகள்/முதலமைச்சர்கள் வரை அடக்கம்.

“இனவெறி - இதயமற்றோர் நடத்திய கொடுமை, இவற்றுக்கு உதாரணமாக அண்மையில் நடந்த நிகழ்ச்சி எது?’ என்றொரு கேள்வியைத் தானே கேட்டு, அதற்கு, “அண்மையில் என்ன, மிக அருகில் நடந்த நிகழ்ச்சியே உள்ளதே; இலங்கையில் குழந்தைகள் காப்பகத்தின் மீது ராணுவ விமானங்கள் குண்டுகள் பொழிந்து தாக்குதல் நடத்தியதும், அந்த நாசகாரியத்தையும் நடத்திவிட்டு, அதற்கு சமாதானம் சொல்வது போன்ற சண்டாளத்தனம்தான் அந்த நிகழ்ச்சி’ என்று தமிழக முதலமைச்சர். கருணாநிதி பதிலும் அளித்துள்ளார் ("தினத்தந்தி' 18.8.2006).

அது என்ன "சண்டாளத்தனம்'? தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் உள்ள 78 வகை சாதிகளில், 15ஆவது பிரிவினராக இருக்கும் சாதிதான் "சண்டாளன்' என்பது. தஞ்சைப் பகுதிகளில் இச்சாதியினர் அதிகம் வசிக்கின்றனர்.

"சண்டாளன்' என்பதற்கு மநுநீதி, "விபச்சாரியின் மகன்' என்று பொருள் சொல்கிறது. சிங்கள வெறியர்களின் நாசகாரியத்திற்கும், இங்குள்ள "சண்டாளர்'களுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்? இப்பட்டியல் சாதியினரின் பெயர்களைச் சொல்லி மற்றவர்களைத் திட்டுவது, பொது இடங்களில் இழிவுபடுத்துவது, "வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்' கீழ் தண்டனைக்குரிய குற்றம். ஆனால், முத்தமிழ் அறிஞராகப் போற்றப்படும் ஒரு மாநிலத்தின் முதல்வரே இத்தகைய சொல்லைப் பயன்படுத்தியிருப்பது அறியாமையின் வெளிப்பாடாக எப்படி இருக்க முடியும்? சட்டம் தன் கடமையைச் செய்யுமா?

தமிழ்த் திரைப்படங்களில், சின்னத்திரையில் வரும் தொடர்களில், பத்திரிகைகளில் வரும் கதைகளில், கவிதைகளில் என இந்த சாதிப் பெயரைச் சொல்லி இழிவுபடுத்தும் பயங்கரங்கள் நாள்தோறும் பல்வேறு வடிவங்களில் அரங்கேறுகின்றன. ஆனால், தணிக்கை மற்றும் செய்தி ஒளிபரப்புத் துறை இத்தகைய அநீதிகளுக்கு அரணாகவே இருக்கிறது. தமிழ்ப் பண்பாட்டில் சாதியம், எந்தளவுக்கு சூழ்ச்சியாக, ஒடுக்குமுறைக்கு ஆளாகும் மக்கள் மீதே திணிக்கப்படுகிறது என்பதற்கு இன்னும் பல சான்றுகளைக் காட்ட முடியும். புகழ்பெற்ற பாவலர் அறிவுமதி, தமது "தை' கவிதைக் காலாண்டிதழில், "சண்டாள யானைகள்' என்று தலைப்பிட்டு, “...../போதிமரத்தின்/சங்கிலியறுத்துப் பாய்ந்து வந்த/சண்டாள/யானைகள்’ எனக் கவிதை ஒன்றை வடித்துள்ளார். "பற நாயே' என்று சொல்வதைப் போன்றதுதான் இதுவும்.

மிருகத்தைத் திட்டுவதாக இருந்தால்கூட, தாழ்த்தப்பட்ட சாதியினரின் பெயரைச் சொல்லி இழிவுபடுத்தும் கொடுமையை என்னவென்று சொல்ல? "தை' இதழில் இக்கவிதை வெளிவந்த பின் சிலர் சுட்டிக்காட்ட, "சண்டாள யானைகள்' என்பதை "சதிகார யானைகள்' என்று அறிவுமதி திருத்தி வெளியிட்டிருக்கிறார். ஆனால், அவர் முதலில் பயன்படுத்தியதற்கு எவ்வித வருத்தம் தெரிவிக்கவில்லை. அதேபோல, அண்மையில் முற்போக்காளர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட "தம்பி' திரைப்படத்திலும் நடிகர் வடிவேலு, இச்சொல்லைப் பலமுறை பயன்படுத்துகிறார். இருப்பினும், இப்படியெல்லாம் இருந்தால்தான் அது "சிறந்த திரைப்படம்' என்று எண்ணி, அதை யாரும் கண்டிக்காமல் ஜாதி காத்தனர்.

மூன்று ஆண்டுகளுக்கு முன் வாசந்தி என்ற எழுத்தாளர், "இந்தியன் எக்ஸ்பிரஸ்' கட்டுரை ஒன்றில், “நீங்கள் கீழினும் கீழான இலக்கியப் பறையனாக இருக்க விரும்பவில்லையெனில், ஆங்கிலத்தில் எழுதுங்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார். நாம் இதைக் கண்டித்தும் அவர் அதற்காக மன்னிப்புக் கோரவில்லை. அதேபோல, இடதுசாரி இதழான "ஜனசக்தி' இதழில் சி.பி.அய். தலைவர் தா. பாண்டியன், குஜராத் படுகொலைக்குக் காரணமானவர்களை சாடும்போது, "அட சண்டாளர்களே!' என்று கோபப்பட்டிருந்தார். அதைச் சுட்டிக் காட்டியபோதும், அதற்கு வருத்தம் தெரிவிக்காமல், அது பயங்கரவாதிகளைத் திட்டத்தானே பயன்படுத்தப்பட்டது என்று வினோத விளக்கமளித்து வருத்தம் தெரிவிக்க "ஜனசக்தி' மறுத்துவிட்டது.

அண்மையில், ஈழத் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்து, கட்சி பேதமின்றி அனைவரும் ஓரணியில் திரண்டனர். அதேபோல, தங்கள் தாய்மொழியில் கருத்துகளை வெளிப்படுத்தும்போது, சேரித் தமிழர்களுக்கு எதிராக ஏவப்படும் கருத்தியல் வன்கொடுமைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க, தமிழ்ச் சமூகம் முன்வர வேண்டும்.
Pin It