அரசின் கொள்கைகளுக்கு எதிராக செயல்படும் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம்

சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (எம்.அய்.டி.எஸ்.) இட ஒதுக்கீட்டுக் கொள்கை பின்பற்றப்படாதது குறித்து, சென்ற "தலித் முரசில்' வெளியிடப்பட்ட செய்தியையடுத்து "இந்தியா டுடே' (ஆகஸ்ட் 30, 2006 ), சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் அனந்தகிருஷ்ணன் த/பெ. டி.எம். முனிரத்தினம் முதலியார் (அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள எதிர் மனுவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்) மற்றும் பெயர் குறிப்பிட வக்கில்லாத சில பேராசிரியர்கள் கொடுத்த தகவல்களை எவ்விதப் பரிசீலனையுமின்றி உண்மைகளெனவும், இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தக் கோருவதை தனியொரு உதவிப் பேராசிரியரான லட்சுமணனின் தனிப்பட்ட விரோதமெனவும் திரித்து செய்தி வெளியிட்டுள்ளது.

“தனிப்பட்ட முறையிலும் ஒரு நிறுவனத் தலைவர் என்ற முறையிலும் நான் இடஒதுக்கீட்டை ஆதரிப்பவன். "சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம்' தலித்துகளுக்கு முன்னுரிமை அளிப்பதை தனது விளம்பரங்களில் குறிப்பிடவில்லை என்றாலும், எப்போதுமே தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு அதிக கவனம் கொடுத்து வருகிறது. உயர் நீதிமன்றத்திற்குச் சென்ற ராமகிருஷ்ணன், தான் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதை தனது விண்ணப்பத்தில் குறிப்பிடவில்லை’ என்று அனந்தகிருஷ்ணன் கூறியுள்ளார்.

"சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன'த்தில் உள்ள ஆறு பேராசிரியர்கள் மற்றும் மூன்று இணைப் பேராசிரியர்களில் ஒருவர்கூட தலித் இல்லை. ஏழு உதவி பேராசிரியர்களில் முனைவர் சி. லட்சுமணன் தவிர மற்ற ஆறு பேரும் தலித் அல்ல. இத்தனையாண்டு கால வரலாற்றில் ஒரு தலித் மாணவர்கூட இங்கிருந்து முனைவர் பட்டம் பெற்றதில்லை. அது மட்டும் அல்ல; இடஒதுக்கீடே பின்பற்றப்படாத ஒரு நிறுவனத்திற்கு விண்ணப்பிக்கும்போது, ராமகிருஷ்ணன் தன்னை ஒரு தலித் என்ற குறிப்பிடவில்லை என்று சொல்வதே தவறு. இந்நிலையில், தலித் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிப்பதாக அனந்தகிருஷ்ணன் கூறுவது அப்பட்டமான பொய்.

"அய்.அய்.டி.' மற்றும் அய்.அய்.எம்.களில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இடஒதுக்கீடு கோருவதில் தீவிர முனைப்பும் ஈடுபாடும் காட்டிய அனந்தகிருஷ்ணன், தான் தலைமையேற்றுள்ள எம்.அய்.டி.எஸ். நிறுவனத்தில், தலித் இடஒதுக்கீட்டிற்கெதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் எதிர் மனு தாக்கல் செய்துள்ளார். தனது வாதத்திறமையையும், நுட்பமான அறிவுக் கூர்மையையும் தனது நிறுவனத்தின் பார்ப்பன சகாக்களின் ஒத்துழைப்புடன் அவருடைய எதிர் மனுவில் திறம்பட வெளிக்கொணர்ந்துள்ளார். "சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம்' மாநில அரசின் கட்டுப்பாட்டிற்கோ, மற்றெந்த கட்டுப்பாட்டிற்கோ உட்பட்ட நிறுவனமல்ல என்றும், இடஒதுக்கீட்டுக் கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டிய எந்த நிர்பந்தமும் அற்ற நிறுவனம் இது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இடஒதுக்கீடு பின்பற்றப்படாத நிலையில், தலித்துகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றுகூட தனது விளம்பரங்களில் அறிவிக்க மறுத்த நிறுவனம், தனது பேராசிரியர்கள் பட்டியலில் இரண்டு தலித் பேராசிரியர்கள் இருப்பதை வைத்துக்கொண்டு “எங்கள் நிறுவனம் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக’ பிதற்றுகிறார் அனந்தகிருஷ்ணன். இடஒதுக்கீடு கொள்கையாகப் பின்பற்றப்படுவதற்கும், முன்னுரிமை அளிக்கிறோம் என்று வாயளவில் சொல்வதற்கும் என்ன வித்தியாசம் என்பதை அறியாதவரா இந்த முன்னாள் துணைவேந்தர்?

மேலும், தனது எதிர் மனுவில் "எம்.அய்.டி.எஸ். ஒரு பொது நிறுவனம் அல்ல' என்று பதிலளித்துள்ளார். ஆனால் இந்நிறுவனம், தன் வருடாந்திர செலவுகளுக்கு 50 சதவிகித நிதியை இந்திய சமூக அறிவியல் ஆய்வுக் கழகத்திடமிருந்தும், அதற்கு இணையாக 50 சதவிகித நதியை தமிழக அரசிடமிருந்தும் பெறுகிறது. இந்நிலையில், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் "ஒரு பொது நிறுவனமல்ல' என்றும், "இது ஒரு தன்னாட்சி நிறுவனம்' என்றும் வாதிடுவது நியாயமாகாது.

பெங்களூரில் உள்ள இதே போன்ற அய்.சி.எஸ்.எஸ்.ஆர். நிறுவனமான Institute for Social and Economic Change - (அய்.எஸ்.ஈ.சி.)இன் பணி நியமனத்தில் இடஒதுக்கீடு பின்பற்றப்படாததை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், அந்நிறுவனத்திற்கு உயர் நீதிமன்றம் திட்டவட்டமான தீர்ப்பை வழங்கியது. இனி, "அய்.எஸ்.ஈ.சி.' நிறுவனம் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணிகளுக்கான நிரந்தர மற்றும் தற்காலிகப் பணி நியமனங்களில் 50 சதவிகித இடங்களை தலித், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும், இதற்கு முன் இந்நிறுவனம் வெளியிட்ட விளம்பரம் சட்டப்படி செல்லாது என்றும் தீர்ப்பு வழங்கியது.

இதில் நாம் கவனிக்கத்தக்க முக்கியச் செய்தி, இவ்வழக்கில் இந்நிறுவனம் தாக்கல் செய்த பதில் மனுவில் இந்நிறுவனம் அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டு, இனி சட்டப்பூர்வமாக எடுக்கப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் தாமே நடைமுறைப்படுத்த முன்வந்ததுதான். ஆனால், "சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன'த்தின் மீதான குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தபோதிலும் அது அக்குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. "சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் ஒரு தரமான நிறுவனம்' என்று "இந்தியா டுடே' அடையாளப்படுத்தியுள்ளது. இந்நிறுவனம் எந்த அளவிற்குத் தரமான நிறுவனம் என்பதை முனைவர் எம்.எஸ்.எஸ். பாண்டியன், "எக்னாமிக் பொலிடிக்கல் வீக்லி' என்ற ஆய்விதழில் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘இந்தியா டுடே' தொடக்கத்திலிருந்தே பார்ப்பன ஆதரவுப் போக்கை வெளிப்படையாகப் பின்பற்றி வந்துள்ளது. அது, பா.ஜ.க.வின் பினாமி இதழ் என்பதே உண்மை. அதன் ஆசிரியராக ஒரு பார்ப்பனர் அல்லாதவர் வந்தாலும், அதன் செய்தியாளர்களில் ஒருவர் முஸ்லிமாக இருந்தாலும், அவர்களும் பார்ப்பனியக் கருத்தியலைத்தான் பின்பற்றுகிறார்கள் என்பதையே "இந்தியா டுடே' கட்டுரை, மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

‘தீண்டாமை டுடே'

"இந்தியா டுடே' ஆகஸ்ட் 30, 2006 இதழில் "ஆராய்ச்சிகளும் தகுதிகளும்' என்ற தலைப்பில் வெளியான கட்டுரைக்கு என் தரப்பு நியாயத்தையும், உண்மையையும் பதிவு செய்யக் கடமைப்பட்டுள்ளேன். எம்.அய்.டி.எஸ். நிறுவனத்திற்கு எதிராக ஏற்கனவே சில வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன : (1) 1987 இல் தான் முதல் வழக்கு போடப்பட்டது. அதற்கு தீர்ப்பும் வழங்கப்பட்டுவிட்டது. (2) 2001 2003 இல் நிர்வாகக் குழுவுக்கு எதிராக ஒன்றும், மற்றொன்று நிறுவன இயக்குநருக்கும், தலைவருக்கும் எதிராகவும் வழக்குகள் தொடுக்கப்பட்டு, உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. (3) 21.8.2006 இல் மேலும் இரண்டு வழக்குகள், இந்நிறுவனத்தில் பணிபுரிகின்ற ஆசிரியர்கள் அண்மையில் நடந்து முடிந்த பணித்தேர்வு முறையில் நேர்மையின்மையையும், அநீதியிழைக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டி இருவரும் தனித்தனியே வழக்குத் தொடுத்துள்ளனர். சென்னை உயர் நீதிமன்றம் இதை எடுத்துக் கொண்டு, காலியிடங்களை நிரப்பக் கூடாது என இடைக்காலத் தடை உத்தரவிட்டுள்ளது.

மேலும், இந்நிறுவனம் தலித்துகளுக்கு எவ்வாறு "முன்னுரிமை' கொடுக்கிறது என்பதற்கு சில சான்றுகளை முன்வைக்கிறேன் : 35 ஆண்டுகால வரலாற்றில் 18 முனைவர் பட்ட ஆய்வாளர்களை உருவாக்கியுள்ளது. இதில் இதுவரையில் ஒருவர்கூட தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவரல்ல.  நிறுவனத்தில் பணியாற்றுகின்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்களுக்குப் பணி நிரந்தரம், பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவைகளில் பாகுபாடு தொடர்ந்து காட்டப்பட்டு வருகிறது.  தற்பொழுது தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களில் ஒருவர்கூட தாழ்த்தப்பட்டவர் இல்லை. சுமார் 15 ஆண்டுகள் இந்நிறுவனத்தில் பணியாற்றிய இணைப் பேராசிரியர் ஒருவர், பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால், அவருக்கும் எந்த முன்னுரிமையும் கொடுக்கப்படவில்லை.

எம்.அய்.டி.எஸ். நிறுவனம் 1977லிருந்து ஒரு தேசிய பொது நிறுவனமாக அய்.சி.எஸ்.எஸ்.ஆர். கட்டமைப்பிற்கு உட்பட்டு, மத்திய மாநில அரசுகளிடமிருந்து நிதி உதவிகளை தவறாமல் பெற்று இயங்கி வருகிறது. ஆனால், தன்னாட்சியை முன்னிலைப்படுத்தி, அரசியல் அமைப்பு சட்டவரைவான எஸ்.சி./எஸ்.டி. இடஒதுக்கீட்டைப் பின்பற்றாமல் நிராகரித்து வந்துள்ளது.

இந்நிறுவனத்தின் ஆட்சிமன்றக் குழுதான் நிறுவனத்தின் உயரிய செயல் திட்டங்களை இயற்றும் அதிகாரக் குழு ஆகும். இந்தக் குழு 2001 இல் ஆசிரியர் பணிகளுக்கான தகுதிகளை நிர்ணயித்து எம்.அய்.டி.எஸ். நிறுவன சட்டவரைவுகளை வெளியிட்டது. இதன்படி, எந்த ஒரு பணி நியமன விளம்பரமும் வித்தியாசமில்லாமல் தகுதியாளர்களின் விண்ணப்பங்களை வரவேற்க வேண்டும். ஆனால், தற்போது நடந்து முடிந்த ஆசிரியர் பணிக்கான தேர்வு விளம்பரங்கள், மிகப்பெருமளவில் மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இந்த மாற்றம் ஆட்சிமன்றக் குழுவின் ஒப்புதலோடு நடந்ததா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

குறிப்பாக, துணைப் பேராசிரியர் பதவிக்கு 5 ஆண்டுகால ஆய்வுப் பணி அனுபவமோ அல்லது கற்பித்தல் அனுபவமோ பெற்றிருக்க வேண்டும் என்ற விதியானது, வெறும் 5 ஆய்வுக் கட்டுரைகள் வெளியிட்டிருக்க வேண்டும் என்றும், இத்துடன் வெறும் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்ற மாற்றம் யாருக்காக செய்யப்பட்டது என்பதனை தங்கள் புலனாய்வு இதழான "இந்தியா டுடே'தான் வெளியிட வேண்டும்.

மேலும், தங்களின் பெயர்களைக் குறிப்பிடக்கூட தகுதியற்ற பேராசிரியர்களின் கூற்றை ஆதாரமின்றி, தங்கள் இதழில் வெளியிட்டிருப்பது வேதனைக்குரியது. “எம்.அய்.டி.எஸ்.இன் தலித் பேராசிரியரான சி. லட்சுமணனுக்கு இணைப் பேராசிரியராகப் பதவி உயர்வு கிடைக்கவில்லை என்பதால்தான் அவர் இதுபோன்ற பிரச்சனைகளைக் கிளப்புகிறார் என்று பெயர் குறிப்பிட விரும்பாத சில எம்.அய்.டி.எஸ். பேராசிரியர்கள் சொல்கிறார்கள்’ - இதில் வேடிக்கை என்னவென்றால், அவர்கள் குறிப்பிட்ட பதவிக்கு நான் விண்ணப்பிக்கவே இல்லை என்பதுதான் உண்மை. இதை அறிந்துகொள்ளாமல் செய்தியாளர் வெளியிட்டிருப்பது, அவரின் பொறுப்பின்மை மட்டுமின்றி, ஜாதிய அடிப்படை வாதத்தையும் முன்னிலைப்படுத்துகிறது.

செய்தியாளர் பீர்முகமது என் சாதியைக் குறிப்பிட்டு எழுதியிருப்பது வருந்தத்தக்கது. ஏனெனில், மற்றவர்களின் சாதிகளை அவர் குறிப்பிடவில்லை. அது ஏன்? நான் கோடிட்டுக் காட்ட விரும்புவது என்னவென்றால், நான் முனைவர் சி. லட்சுமணன், உதவிப் பேராசிரியர், எம்.அய்.டி.எஸ். இந்த நிலையை நான் அடைந்ததற்கு, நீண்ட போராட்டமும் கடின உழைப்புமே காரணமே தவிர, நாகரிகமற்ற பேராசிரியர்கள் கூறிய காரணங்களல்ல. என்னுடைய இந்த உதவிப் பேராசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டபோது, தகுதியின் அடிப்படையில் முதன்மையாகத் தேர்வு செய்யப்பட்டேன் என்பது ஆதாரப்பூர்வமான உண்மையாகும்.

- முனைவர் சி. லட்சுமணன், "இந்தியா டுடே'வுக்கு அனுப்பிய மறுப்புக் கடிதத்தின் ஒரு பகுதி.