தமிழகத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஆதித் தமிழர்கள் மற்றும் சாதியற்ற திராவிடர்களின் உரிமைகளைப் பற்றிய சிந்தனைகளை வேரூன்றி, பார்ப்பனியத்தை எதிர்த்து சாதி ஒழிப்பு, சுயமரியாதை, பகுத்தறிவு, பிரதிநிதித்துவம் போன்ற நவீன கருத்தாக்கங்களை உருவாக்கிய பண்டிதர் அயோத்திதாசர், தொடர்ந்து நடத்திய "தமிழன்' வார இதழ், ஒரு நூற்றாண்டு நிறைவு பெற்றுள்ளது. இதனை யொட்டி மதுரையில் அயோத்திதாசர் ஆய்வு மய்யம், நூற்றாண்டு விழா கருத்தரங்கம் ஒன்றை 10.8.06 அன்று ஏற்பாடு செய்திருந்தது.

Tirumavalavan, Maniyarasan and Thiyagu
சென்னை ராயப்பேட்டையில் இருந்து புதன் கிழமைதோறும், 19.6.1907 முதல் நான்கு பக்கங்களுடன் அன்றைய காலணா விலையில், "ஒரு பைசாத் தமிழன்' என்று தனித்துவமாய் பெயர் சூட்டப்பட்டு வெளிவந்தது. ஓராண்டுக்குப் பிறகு வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க “அச்சுக் கூடமும் பத்திரிகைப் பெயரும் மாறுதலடைந்து’ (26.8.1908 பக். 2) என விளக்கமளித்து "ஒரு பைசா' நீக்கப் பெற்று "தமிழன்' என்ற பெயரோடு 26.8.1908 முதல் தொடர்ந்து வெளிவந்தது. இத்தகு வரலாற்றுச் சிறப்புமிகு இதழின் தொகுதி வெளியீட்டு நிகழ்வில் தொல். திருமாவளவன் முதல் தொகுதியை வெளியிட, பெ. மணியரசன் பெற்றுக் கொண்டார்; இரண்டாம் தொகுதியை விடுதலைச் சிறுத்தைகளின் பொதுச் செயலாளர் ஆற்றலரசு பெற்றுக் கொண்டார்; தியாகு மூன்றாம் தொகுதியைப் பெற்றுக் கொண்டார்.

நிகழ்வின் முக்கிய அங்கமாக "மொழி' காலாண்டிதழையும், ஸ்டாலின் ராஜாங்கம் எழுதிய "இருபதாம் நூற்றாண்டில் தலித்துகளின் பதிப்புப் பணிகள்' என்ற நூலையும் தொல். திருமாவளவன் வெளியிட்டார். "தமிழன்' இதழ் குறித்த விரிவான தகவல்களை பாரி. செழியன் தொகுத்து வழங்கி நிகழ்வை ஒருங்கிணைத்தார். மேலும், ஆய்வாளர்களும் ஆர்வலர்களும் தெரிந்து கொள்ளும் வகையில் கணினி நிகழ்த்துதலில் "தமிழன்' இதழ் முழு விவரக் கோப்புகளும் பார்வையாளர்களுக்கு வைக்கப்பட்டிருந்தன.

தியாகு தமது உரையில், “நீதிக்கட்சிக்குப் பின்னால் வந்த திராவிடக் கட்சிகளில் பண்டிதர் அயோத்திதாசரின் பங்களிப்பு இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கிறது. அயோத்திதாசருக்கு திரு.வி.க. எழுதிய இரங்கற்பாவை பற்றி சிலாகித்துப் பேசினர். இருவருக்குமிடையே இருந்த உறவினை வெளிப்படுத்தினர். அயோத்திதாசர் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, அங்கு கூட்டத்தைக் கலைத்த சாதிப் பெருமிதம் உடைய திரு.வி.க., பின்பு காசநோயால் பாதிக்கப்பட்டபொழுது அவருக்கு மனிதநேய முறையில் மருத்துவம் பார்த்தார் பண்டிதர் என்பது, அவருடைய ஜனநாயக நடவடிக்கை முதிர்ச்சிக்கான ஓர் அழகிய குறியீட்டு நிகழ்வாகும்’ என்றார். பெ.மணியரசன், "தமிழன்' இதழ் மற்றும் வரலாற்று ரீதியாக தமிழ்த் தேசியத்திற்கான தத்துவார்த்த விழுமியங்களை உருவாக்கிய, உருவாகிய புள்ளிகளைப் பேசினார்.

ஸ்டாலின் ராஜாங்கம், "தமிழன்' இதழ் வழியாக அயோத்திதாசர் தனது சம கால பார்ப்பன மற்றும் சாதி அபிமானிகளுடன் எவ்வாறு எதிர்வினையாற்றினார் என்றும், கடுமையான விமர்சனப் பூர்வமான கண்ணோட்டத்துடன் இயங்கும் அறிவுப் போராளிகள் எப்படி வரலாற்றில் மறைக்கப்பட்டனர் என்பதற்கு அயோத்திதாசரும், புத்தரும் நம்முன் உள்ள வரலாற்று உதாரணங்கள் என்றார். மேலும், தமிழ்க் கலாச்சாரம் என்று பேசப்படுகிற அனைத்தும் பூர்வ பவுத்தர்களின் பவுத்த வாழ்வியல் கலாச்சாரத்தில் இருந்து பிடுங்கப்பட்டு, வைதீகப் புனைவுக்கு உட்படுத்தப்பட்டதால் அயோத்திதாசர் முதலான சிந்தனையாளர்கள் அதனை முறியடிக்க பவுத்தத்தை மீட்டனர். "எதார்த்த பிராமணர்', "வேஷ பிராமணர்', சாதியற்ற திராவிடர்கள், சாதி பேதமுள்ள திராவிடர்கள் குறித்து அயோத்திதாசரின் அடிப்படையான பார்வைகளைப் பற்றி விரிவாகப் பேசினார்.

இறுதியாகப் பேசிய தொல். திருமாவளவன், “உலகிலேயே மூத்த மதம் பவுத்த மதமாகும். அதற்குப் பிறகே பிற மதங்கள் தோன்றி தங்களுக்கான வாழ்வியல் நெறிமுறைகளை பவுத்தத்திலிருந்தே பெற்றுக் கொண்டன. உலகுக்கு பவுத்தத்தின் கொடை என்பது தமிழர்களின் கொடை ஆகும். பவுத்தம் ஒரு மதமன்று; அது தோன்றிய காலம் முதலே அவைதீக நடைமுறையைச் சார்ந்த ஒரு பகுத்தறிவு இயக்கமாகும். அன்றும் இன்றும் ஒடுக்கப்பட்டவர்களின் ஆயுதமாக பவுத்தம் திகழ்கிறது. அம்பேத்கருக்கும் முன்னோடி சிந்தனையாளரான பண்டிதரின் பணி, பவுத்தம் வழி வெளிப்படுகிறது. ஒடுக்கப்பட்டவர்களின் அடையாளமான பவுத்தத்தை மீட்பது என்பது, வரலாற்று ரீதியாக நம்மிடமிருந்து பறிக்கப்பட்ட அதிகாரத்தை மீட்பதற்கான ஒரு வழிமுறை என்பதால்தான் அம்பேத்கரும் அயோத்திதாசரும் அதனைக் கையிலெடுத்தார்கள். எனவே, அதிகாரத்தைக் கைப்பற்றாமல் தலித்துகளுக்கு விடுதலை கிடையாது’ என்றார்.

அரங்கு முழுவதும் நூல் விற்பனை, இதழ் விற்பனை, உரையாடல், விவாதங்கள், பகிர்வுகள் என்று ஓர் அறிவார்ந்த உத்வேகத்துடன் நிகழ்ந்ததை மழை பெய்து தணிக்க முயன்றாலும், சாதியை ஒழிப்பதற்கான கனலை அவ்வளவு எளிதில் யாரும் அணைத்துவிட முடியாது என்பதை அனைவரும் உள்ளார்ந்து சிந்தித்தபடி பிரிந்து சென்றனர். நிகழ்வில் பல்வேறு சிந்தனையாளர்களும், செயல்பாட்டாளர்களும் ஒன்றாக இணைந்து காணப்பட்டது, இதனை மேலும் வலுப்படுத்தியது. சாதி ஒழிப்பு என்பது இனி ஒரு வரலாற்றுக் கனவு அல்ல; அது நிகழ்கால நடவடிக்கையின் கடைசிப் பணி மட்டுமே என்பதை வலியுறுத்தியது.

இந்நூற்றாண்டு விழா கருத்தரங்கில் அரசுக்கு கோரிக்கை விடுத்து, கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன :

அயோத்திதாசரின் நூல்கள் அனைத்தும் நாட்டுடைமையாக்கப்படல் வேண்டும். எதிர்காலத் தலைமுறையின் சிந்தனை வளம் பெறும் வகையில் பல்கலைக் கழகத்தில் அயோத்திதாசர் இருக்கை ஏற்படுத்திட வேண்டும்.

அயோத்திதாசரின் உருவம் பொறித்த சிறப்பு அஞ்சல் தலையாக இல்லாமல், தினசரி மக்கள் பயன்பாட்டில் உள்ள அஞ்சல் தலையினை வெளியிட வேண்டும். கடற்கரைச் சாலையில் அயோத்திதாசரின் முழு உருவச் சிலை ஒன்றை அமைத்துத் தர வேண்டும். அவர் வாழ்ந்த இல்லத்தை நினைவிடமாக்கி, அதனை முழு அளவிலான நூலகமாக மாற்றி அரசே பராமரித்து மக்கள் அவர் நினைவைப் போற்றும் வகையில் நினைவிடம் உருவாக்க வேண்டும்.

நூற்றாண்டுப் பாரம்பரியம் மிக்க "தமிழன்' இதழின் நூற்றாண்டு விழாவினை அரசு விழாவாக அறிவித்து, தமிழகம் எங்கும் பரவும் வகையில் அரசு விழா நடத்திட வேண்டும்.

 

-பொழிவு.சா.முகில்
Pin It