Sivakami's bookபதினேழு ஆண்டுகள் கழித்தும் காலக்கண்ணாடியென உண்மையை அதன் நிறம் மாறாமல் பிரதிபலித்துக் கொண்டிருப்பதால், மூன்று பதிப்புகளை இந்நாவல் கடந்திருப்பதோடு, நாவலாசிரியர் சிவகாமியாலேயே ஆங்கிலத்தில் சிறப்புற மொழிபெயர்க்கப்பட்டு, தற்பொழுது வெளிவந்திருக்கிறது. கால இடைவெளிக்குப் பிறகு இப்போது புரட்டிப் பார்த்தாலும், அது இன்றைய சமூக நிதர்சனத்தைப் பளிச்சென உணர்த்துகிறது. "பழையன கழிதலும்...' இன்றும் புதிதாய் இருப்பதன் காரணம் அதுதான்.

"நிலமில்லாத ஏழைகளோ தங்களின் ஆயிரத்தெட்டு சாதிகளால் ஒன்று சேர முடியாதவர்களாயிருந்தார்கள். சாதியின் அசுரப்பிடியில் சிக்கி மீள முடியாதவர்களாயிருந்தார்கள்... கோவணத்திற்கு மாற்றுக் கோவணம் இல்லாதவன், அதேபோல உள்ள கோவணாண்டியை பள்ளன் என்கிறான், பறையன் என்கிறான். பள்ளனோ பறையனைக் கேவல மாயும், பறையன் சக்கிலியைக் கேவலமாயும், சக்கிலியன் பறையனைக் கேவலமாயும், இவனெல்லாம் சேர்ந்து பறவண்ணானை இன்னுங்கேவலமாய்... தனக்குக் கீழே யாராவது கேவலமாய் இருப்பதை விரும்பும் தோரணையாய் அல்லவா இருக்கிறது நிலைமை!''...

காலம் சலனமற்று கடந்து கொண்டிருக்கிறது - எத்தனையோ மாற்றங்களையும், சீற்றங்களையும் தாங்கியபடி. இந்த மண்ணின் மீதும் மனிதர்கள் மீதும் - துடைத்தெடுக்க முடியாத புழுதியெனப் படிந்துவிட்ட சாதியெனும் கொடுமைக்கானத் தீர்வை மட்டும் அது தள்ளியே வைத்திருக்கிறது. ஆளுக்கொரு ஆயுதமாய் எடுத்துப் பார்த்தாயிற்று! சுய நலனுக்காகவோ, பொது நலனுக்காகவோ சாதி ஒழிப்பு முயற்சிகளைத் தீவிரப்படுத்தியும் ஆயிற்று! கெஞ்சியும் கதறியும்; போராடியும் சண்டையிட்டும்; நீதி கேட்டும் சட்டம் நாடியும் பயனில்லை. முடிவாக, சாதி அழியவில்லை. அழிக்க அழிக்க, அது தழைத்துப் படர்ந்து கொண்டே இருக்கிறது - நச்சுக் கொடியாய்...

ஒவ்வொரு முறை நம்பிக்கை நீர்த்துப் போகும் போதும் பொசுங்கிய சாம்பலிலிருந்தே உயிர்த்தெழ வேண்டியிருக்கிறது. அப்படி எழ முயன்றவர்களால் மட்டுமே நூற்றாண்டுகளாக மண்டி, மக்கி, இறுகிப் போய் கிடக்கும் சாதியின் தலையில் ஓங்கி அடித்து, சிறு அசைவையேனும் ஏற்படுத்த முடிகிறது. சிலரின் போராட்டம் எழுத்தாகிறது. வேறு சிலர் எழுத்தையே போராட்டமாக்குகிறார்கள். தலித் எழுத்தாளர்களாலும் அவர்களால் உயிர் பெறும் தலித் இலக்கியத்தாலும் - அத்தகையதொரு போர் பல்வேறு தளங்களிலும் நிகழ்த்தப்படுகின்றன.

17 ஆண்டுகளுக்கு முன்பு (1989) வெளிவந்த "பழையன கழிதலும்...' நாவலை அதன் ஆசிரியர் சிவகாமி, வீரிய படைப்பாகவே விதைத்திருக்கிறார். தலித் மக்களின் வாழ்க்கை மற்றும் சமூகப் போராட்டத்தில் பதிவாகி, பதினேழு ஆண்டுகள் கழித்தும் காலக்கண்ணாடியென உண்மையை அதன் நிறம் மாறாமல் பிரதிபலித்துக் கொண்டிருப்பதால், மூன்று பதிப்புகளை இந்நாவல் கடந்திருப்பதோடு, நாவலாசிரியர் சிவகாமியாலேயே ஆங்கிலத்தில் சிறப்புற மொழி பெயர்க்கப்பட்டு, தற்பொழுது வெளிவந்திருக்கிறது. கால இடைவெளிக்குப் பிறகு இப்போது புரட்டிப் பார்த்தாலும், அது இன்றைய சமூக நிதர்சனத்தைப் பளிச்சென உணர்த்துகிறது. "பழையன கழிதலும்...' இன்றும் புதிதாய் இருப்பதன் காரணம் அதுதான்.

நாவலின் முக்கிய கதாபாத்திரங்களும் சரி, அவ்வப்போது வந்து போகும் நபர்களும் சரி, நம்முடன் இன்றும் சேரிகளில் வாழ்கிறவர்கள். கிராமத்துக்கும் சேரிக்கும் இடையில் நிரந்தரமாகத் தங்கி தேங்கிக் கிடக்கிற பதற்றத்தை - அப்படியே படம் பிடித்துக் காட்டுகின்றன, ஆசிரியரின் எழுத்துகள். முகத்துக்கு முன் புன்னகைத்துக் கொள்வதும், முதுகில் ஆயுதங்களை மறைத்து வைத்திருப்பதுமாக ஓர் அவலமான பாதுகாப்பின்மையோடு தானே தலித் - ஆதிக்க சாதியினரின் உறவு தொடர்கிறது. அதையேதான் நாவலும் சொல்கிறது. தலித் மக்களுக்கு எதிர்ப்புணர்வு வளர்ந்துவிட்டதும், அவர்களின் கட்டுக்கடங்கா எழுச்சி, நாவலில் வரும் புளியூர் சேரி மக்கள் வாயிலாகத் தெளிவு படுத்தப்பட்டிருக்கிறது. அடி விழுந்து விடாமல் தடுக்கவும், அடித்தால் திருப்பி அடிக்கவும் விம்மித் துணிந்த சேரி இளைஞர்களால் - அதைத் தவிர வேறெதையும் செய்ய முடியாத இயலாமையை வலியோடு உரைக்கிறது.

இன்றைய சூழலில் தலித் மக்களின் முக்கியப் பிரச்சனைகளாக குறிப்பாக, கல்வியறிவற்ற கிராமப்புற சேரி மக்களின் வாழ்நிலையைப் பிரதிபலித்துப் பட்டியலிட ஆசிரியர் முயன்றிருப்பது, நாவலின் போக்கில் புரிகிறது. எந்தவொரு கதாபாத்திரத்தையும் முதன்மைப்படுத்தாமல், ஒரு சமூகத்தை அருகிலிருந்து பதிவு செய்வதாகவும் அதன் போக்கில் நபர்கள் வந்து போவதும் சிறப்பு. காத்தமுத்து, கவுரி தங்கம், சந்திரன் என யார் வேண்டுமானாலும் மய்யப் பாத்திரமாகி விடக் கூடும் நிலையில், அப்படி ஆக்கிவிடாமல், சமூகச் சூழலை மட்டுமே உணர்த்த வேண்டி - ஆங்காங்கே பல நபர்கள் கவனமாக நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் வாழ்வனுபவமே வாசிப்போருக்கு சமூக அனுபவமாக அளிக்கப்பட்டிருக்கிறது.

ஆதிக்க சாதியினரிடம் விவசாயக் கூலியாக வேலை பார்க்கும் தலித் பெண்கள், எந்நேரமும் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக நேரிடும் அவல நிலையை, தங்கம் என்ற கதாபாத்திரத்தின் மூலம் விவரித்திருக்கும் அதே வேளை, அவர்களை தலித் ஆண்களே சுரண்டுகிறார்கள் என்ற உண்மையையும் போட்டுடைக்கிறார். பரஞ்சோதி உடையாரால் தோட்டத்தில் வைத்து பலாத்காரம் செய்யப்படும் தங்கம், வேறு வழியின்றி "வைப்பாட்டி' ஆகிறார். பரஞ்சோதியை கண்டிக்கத் துணியாத அவர் சாதிக்காரர்கள், தங்கத்தை தெருவில் இழுத்துப் போட்டு அடிக்கிறார்கள். சேரி தோறும் எத்தனை தங்கங்கள் சீரழிக்கப்படுகிறார்கள்! அவர்களின் துன்பங்களுக்கெல்லாம் என்னதான் தீர்வு? தங்கம் நியாயம் கேட்டு தலித் தலைவரான காத்தமுத்துவிடம் போகிறாள். உடையாரை மிரட்டி இழப்பீடு வாங்கித்தரும் காத்தமுத்து, தங்கத்தின் பணத்தை அபகரிப்பதோடு, அவரைத் தனது மூன்றாவது மனைவியாக்குகிறார்.

ஒரு தலித் பெண் சுய மரியாதையோடு வாழ்வதை - எந்த ஆணும் விரும்புவதுமில்லை, அனுமதிப்பதும் இல்லை. அடச்சே! தலித் பெண்களுக்கு விதிக்கப்பட்டது இதுதானா என்று நாம் கொந்தளித்து அடங்குவதற்குள், இதுதான் நிஜம் என உணர்த்திவிட்டு, அடுத்த நிகழ்வுக்குள் நுழைந்து விடுகிறது கதை.

கூலிக்கு மாரடிப்பவர்கள் தானே தலித்துகள்! அடிமைத்தனங்களை எதிர்த்து தலித் மக்கள் சிலிர்த்துக் கொள்ளும் போதெல்லாம் ஆதிக்க சாதிக்காரர்கள் கை வைப்பது - அவர்களின் வேலையிலும், கூலியிலும்தான். வயிறு பசிக்கும்போது போராடும் எண்ணம் தடைபடும் என்பது சூட்சுமம். வேலையும் கூலியும் போனாலும் பரவாயில்லை, சுய மரியாதையும், உரிமையுமே முக்கியம் என தலித் மக்கள் முடிவெடுக்கத் துணியும் போதே கலவரங்கள் நிகழ்கின்றன; தலித் உயிர்கள் காவு வாங்கப்படுகின்றன. கீழ் வெண்மணி, கொடியன்குளம், மாஞ்சோலை, மேலவளவு... போன்றவற்றில் அப்படி காவு வாங்கப்பட்டதன் வடுக்கள் நிறைந்திருக்கின்றன. எரித்து விளையாடத்தான் தலித் மக்களின் குடிசை; சூறையாடத்தான் அவர்களின் பொருட்கள்; சுரண்டப்படத்தான் அவர்களின் உழைப்பு; அடிமைப்படுத்தத்தான் அவர்களின் உடல்கள் என்ற நிலை எள்ளளவும் மாறவில்லை. புளியூரில் இவையனைத்தும் நிகழ்கின்றன.

இயல்பாகவே தலித் மக்கள் பெரிதாக எதற்கும் அலட்டிக் கொள்ளத் தெரியாதவர்கள். ஆண்டாண்டு காலமாக அடிமைத்தனம் அவர்களை அப்படி மரத்துப் போகச் செய்திருக்கிறது என்பதே உண்மை. வீடு எரிந்தாலும், உடல் துன்புறுத்தப்பட்டாலும், உயிரே போனாலும்கூட, ஒரேயடியாய் அழுது தீர்த்துவிட்டு, அடுத்த வேலையைப் பார்ப்பதற்கு சாதியச் சமூகம் நிர்பந்தமாகப் பழக்கிவிட்டிருக்கும் கொடுமையை "பழையன கழிதலும்' முகத்தில் அறைந்தார் போல் பறை சாற்றுகிறது.

இப்போது போராட்டம் வெடிக்கப் போகிறது என்று வாசகர்கள் எதிர்பார்க்கும் இடத்திலெல்லாம், சிறு தூறலுக்கு நமத்துப் போகும் பட்டாசு போல போராட்டங்கள் கட்டுப்படுத்தப் படுகின்றன. பிடிவாதமாக எதிர்க்க முடியாமல் போவதன் விளைவை - தலித் விடுதலை தள்ளிப் போவதற்கான முக்கியக் காரணமாகக் கொள்ள முடியும்.

சிக்கலில்லாத எழுத்தோட்டமும், வெறுமனே உணர்ச்சியைத் தூண்டாத கதைப் போக்கும், சுய பச்சாதாபத்தைத் தவிர்த்த இயல்பும் "பழையன கழிதலு'க்கு அணிகலன்களாகி இருக்கின்றன. நாவல் படிக்கும் போதும், முடித்த பின்பும் வாசக மனதுள் எழும் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு "பழையன கழிதலும் ஆசிரியர் குறிப்பில்' (பகஆகு) பதில்கள் நிறைந்திருக்கின்றன. அதுவொரு சுய விமர்சனமாகவே அமைந்திருக்கிறது.

"இப்பல்லாம் யாருங்க ஜாதி பாக்குறாங்க' என்ற போலியான, வஞ்சம் மிக்க வாக்கியத்தின் வலுவான, அழிவற்ற அர்த்தமென பளீரென பல்லிளிக்கிறது ஜாதி. உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராகத் திரண்டு, குய்யோ முறையோ என்று கதறுகிறவர்களைப் பார்க்கிறோமல்லவா? பாப்பாபட்டி, கீரிப்பட்டியில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாமல் தவிக்கிறோமல்லவா? இல்லாத மாதிரியே இருக்கும். விழுந்து கிடந்தவர்கள் எழ எத்தனிக்கும் போது, தன் அகலக் கால்களால் அழுத்தி மிதிக்கும். அதுதான் ஜாதி.

நாவல் முடிவை நெருங்க நெருங்க, தலித் விடுதலையை இளைஞர்கள் கைகளில் முழுமையாக ஒப்படைத்து விடுகிறார் ஆசிரியர். அடிமைத்தனங்களிலிருந்து தலித் மக்களை விடுவிக்கும் போராட்டத்தில் பிற சாதியினரையும் இணைத்துக் கொள்வதோடு, கவுரி என்ற பெண்ணை - தலித் பெண் விடுதலையின் அடையாளமாகவும் முன்னிறுத்துகிறார். சுயநலமற்ற, சுய மரியாதையின் அவசியத்தை உணர்ந்த, பழைய கற்பிதங்களுக்கு விலை போகாத இளைய சமூகத்தால், சாதிக்கெதிராகத் திரண்டெழ முடியும் என்கிறது "பழையன கழிதலும்...'

அவர்களால் சாதியை அடையாளமின்றி அழித்தொழிக்க முடியுமா? அல்லது காத்தமுத்து மிக எதார்த்தமாகச் சொல்வது போல

"இன்றைக்கு சாதி கேக்காத இடம் எது சொல்லுங்க பாப்பம்? எங்கயும் சாதி இருக்கு. எல்லாத்துலயும் சாதி இருக்கு. சாதி பிடிக்கலன்னா சொல்லாம இருக்கலாமே தவிர, சொல்லாம இருந்தாக்க சாதி இல்லாமப் போயிடாது - நானும் நீங்களும் சாகிற வரை இருக்கும். ஏன்? நம்ம புள்ளைங்களும், ஒங்க புள்ளைங்களும் சாகிற காலம் வரைக்கும் இருக்கும்...'' இருக்குமா?

இருக்கக் கூடாது. இருக்க விடக்கூடாது.


Pin It