"கலாச்சாரம் இல்லாத படை, மந்தப் புத்தியுடைய படையாகும். மந்தப் புத்தியுடைய படையால் எதிரியைத் தோற்கடிக்க முடியாது.'' மாவோ

Parai meeting
உலகெங்கும் ஒடுக்குமுறைக்குள்ளான சமூகங்கள் யாவும் தங்களுடைய கலாச்சார அடையாளங்களை, தங்கள் விடுதலைக்கான கருவிகளாக மாற்றியுள்ளன. தமிழகத்திலும் தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்களுக்கென தனித்த கலாச்சார அடையாளங்கள் உண்டு. அம்மக்களுக்கான பொதுவான கலாச்சார அடையாளங்களில் ஒன்றுதான் கலை இலக்கிய வடிவங்கள். இந்து சமூக அமைப்பின் பொதுப் புத்தியின் அடிப்படையில், தாழ்த்தப்பட்டவர்கள் எவ்வாறு தீண்டத்தகாத மனிதர்களாகக் கருதப்பட்டு வருகிறார்களோ, அதுபோலவே அவர்களின் கலை இலக்கிய வடிவங்களும் தீண்டத்தகாதவையாகவே வெறுத்தொதுக்கப்பட்டன. புரட்சியாளர் அம்பேத்கரின் நூற்றாண்டு விழாவுக்குப் பிறகு தலித் மக்களிடையே ஏற்பட்ட எழுச்சியால், தீட்டு என ஒதுக்கப்பட்ட கலை வடிவங்கள் சமூக அங்கீகாரம் பெறத் தொடங்கின. சமூக விடுதலை அடைவதற்கு முன் தன்னளவில் அக்கலை வடிவங்கள் போராட வேண்டியுள்ளன. அவ்வாறு போராடி வருகின்ற கலை வடிவங்களுள் ஒன்றுதான் பறை.

பறை இசையை, அதன் தொன்மையை, அதிர்வுகளின் ஈர்ப்பை, சமூகக் கலை இலக்கியப் பண்பாட்டு அரசியலை ஆதரிப்பது, வளர்த்தெடுப்பது; பறை மீது சுமத்தப்பட்டுள்ள வரலாற்று இழிவை உடல் - உளவியல் சார்ந்த வன்முறையை, தீண்டாமைக் கருத்தியலை மனதில் கொண்டு அதை எதிர்ப்பது என்ற இருவகையான விமர்சனங்கள் பறையின் மீது முன்வைக்கப்பட்டன. இவ்விரு கருத்துகளும், பறையாட்டத்தை நிகழ்த்துபவர்கள், அதனுடன் தொடர்புடையவர்கள் மற்றும் தலித் விடுதலைக்கான செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்ற சிந்தனையாளர்களாலும் முன்வைக்கப்பட்டதோடு, கடுமையான விமர்சனங்களையும் எதிரும் புதிருமாக கிளப்பி விட்டன. இவ்விரு கருத்தாளர்களையும் ஒரே இடத்தில் அழைத்து, விவாதித்து முடிவு காணும் வகையில் ‘பறை 2006' என்ற மாநில அளவிலான கருத்தரங்கு 23.9.2006 அன்று, தலித் ஆதார மய்யத்தின் சார்பில் மதுரையில் நடைபெற்றது.

முதல் அமர்வில் ‘பறை - அடையாள மீட்டுருவாக்கத்தின் கருவி' என்ற தலைப்பில் பணி. பாக்கியநாதன் கட்டுரை வழியே தன்னுடைய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். "கருப்பின மக்களின் வீர வரலாறு ‘ஜாஸ்' இசையில் எழுதப்பட்டது. கருப்பின மக்களின் பயங்கரமான போராட்ட வரலாறும், அவர்களின் பண்பாட்டு அடையாளத்தை நிறுவுகின்ற தன்மையும் அந்த இசைத் தொகுதியில் வெளிப்பட்டது. அது போல தலித் மக்களின் முகவரியை, அடையாளத்தைப் பறையிசை வழியே மீட்டெடுக்க வேண்டும். அந்த அடையாளத்திற்குள் ஓர் இனத்தின் வரலாறும், அரசியலும் உள்ளடங்கியுள்ளது. பறை என்பது, நமக்கான அடையாளச் சின்னம். அதை மாற்றுப் பார்வையிலிருந்துதான் மீட்டெடுக்க முடியும்.

ஆனால், பறை இங்கு இழிவாகப் பார்க்கப்படுகிறது. பறையை பார்ப்பனர்களின் பார்வையிலிருந்து பார்ப்பது வேறு; அதை அடித்தட்டு மக்களின் பார்வையிலிருந்து பார்ப்பது வேறு. ஆதரித்து அழிப்பதும், நிராகரித்து அழிப்பதும் பார்ப்பனியத்தின் சூழ்ச்சி. தோலிசைக் கருவிகளின் தாயாக, கற்கால தகவல் தொடர்பு சாதனமாக விளங்கிய பறை, சாதிய மேலாதிக்க சமூகம் இங்கு அறிமுகப்படுத்தப்பட்ட போதும், தூய்மை X தீட்டு என்ற கருத்தாக்கங்கள் உருவான போதும்தான் சாதி - தீண்டாமை நிலைநிறுத்தப்பட்டு பறையும் தீட்டுக்குள்ளானது. பார்ப்பனர் பார்வையில் செத்தது எல்லாம் அசுத்தமானது. செத்ததைத் தொடுகிறவர்கள், உறவு கொள்கிறவர்கள் அசுத்தமானவர்கள். செத்த மாட்டிலிருந்து எடுத்த பறைத்தோலும் அசுத்தமானது. பிறப்பால் அசுத்தமானவர்கள் அசுத்தமான கருவியைத் தொடுகின்றபோது, அசுத்தம் இரட்டிப்பாகின்றது. இதுதான் அவர்களுடைய பார்வை.

இதற்கு மாற்றாக, நாம் ஓர் எதிர்ப்பண்பாட்டை நடைமுறைப்படுத்த வேண்டும். அந்த எதிர்ப்பண்பாட்டின் வழியாக நமது பண்பாட்டை நிலைநிறுத்த வேண்டும். எதிர்ப்பண்பாடு என்பது, சொல்லப்பட்டிருப்பதை அங்கீகரிக்க மறுப்பதும், சொல்லப்பட்டிருப்பதற்கு எதிர்க்கருத்தை முன்வைப்பதும் ஆகும். அத்தகைய எதிர்ப்பண்பாட்டை நாம் பறையிசை மூலம் கட்டமைக்கலாம். அதன் மூலம் இழந்துபோன நமது முகவரியை, மானத்தை மீட்டெடுக்கலாம். மீட்டுருவாக்கம் என்பது கருவியை மட்டுமல்ல; அந்தக் கருவியை இசைக்கும் இனத்தையும் மீட்டுருவாக்கம் செய்வதாகும். எனவே, பறையை நாம் வலிந்து மீட்டெடுக்க வேண்டும்'' என்றார். இந்த அமர்வை முனைவர் கஜேந்திரன் நெறியாள்கை செய்தார்.

இரண்டாவது அமர்வில் "வடதமிழகத்தில் பறையும் கலைஞர்களின் சமூக நிலையும் என்ற பொருளில் இசைக் கல்லூரி மாணவி மேகலா உரையாற்றினார். "வடதமிழகத்தில் குறிப்பாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பறை என்பது சாவுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் கருவியாக உள்ளது. தென் மாவட்டங்களில் உள்ளது போல பறை, ஆட்டக் கலையாக வளரவில்லை. காஞ்சிபுரம் மக்கள் மன்றக் குழுவினர் மட்டுமே பறையை ஆட்டக் கலையாக மேடையேற்றி வருகிறார்கள். மேலும் பறையடிப்பதை, தலித்துகளில் ஒரு சிலர் எதிர்த்துள்ள நிகழ்வுகளும், எரித்த சம்பவங்களும் உண்டு'' என்றார். இந்த அரங்கை எழுத்தாளர் அழகிய பெரியவன் நெறியாள்கை செய்தார்.

வடதமிழகத்தில் பறை ஏன் கலையாக வளரவில்லை என்பதற்கான வரலாற்றுக் காரணங்களை விளக்கினார். "செட்யூல்டு காஸ்ட் பெடரேஷன் அமைப்பின் வழிவந்த முன்னோடித் தலைவர்கள், இந்திய குடியரசுக் கட்சி தலைவர்கள், வடமாவட்டங்களில் பறையடிக்கும் தொழிலை எதிர்த்து பறையொழிப்புப் போராட்டங்களை நடத்தினார்கள். பல இடங்களில் பறையைத் தீயிட்டுக் கொளுத்தினார்கள். அதனால்தான் பறைத்தொழில் வளர்த்தெடுப்பதில் ஆர்வம் காட்டப்படவில்லை'' என்றார்.

நண்பகல் அமர்வில் "பறை - ஓர் ஒடுக்குமுறையின் வடிவம்” என்ற தலைப்பில் தமிழக மனித உரிமைக் கழகத்தின் பொதுச் செயலாளர் அரங்க குணசேகரன் மற்றும் எழுத்தாளர் பூவிழியன், கள அனுபவங்களோடு தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். பறையடித்தல் என்பது கடலூர் மாவட்டத்தில் ஓர் அடிமைத் தொழில் மட்டுமல்ல; அது தீண்டாமையின் ஒரு வடிவமாகவும் இருந்ததால், தமிழக மனித உரிமைக் கட்சியின் தலைவர் எல். இளைய பெருமாள் தலைமையில், சேரிதோறும் பறை ஒழிப்புப் போராட்டம் நடத்துகையில் தமிழக காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், தோழர் பாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்டார். எனவே, பறையடித்து வாழ்வதைவிட செத்துப் போவதே மேல். பறை வளர்த்தெடுக்கப்பட வேண்டிய கலை அல்ல. அது ஒழிக்கப்பட வேண்டிய இழிவுத் தொழில். எங்களின் இறுதி மூச்சு உள்ளவரை பறையடிப்பதைத் தடுத்து நிறுத்துவோம்'' என்று உணர்ச்சி பொங்க இருவரும் உரையாற்றினர். இருவரின் கருத்தை மேலும் கூர் தீட்டுகிற வகையில் இந்த அமர்வை நெறியாள்கை செய்த முனைவர் கோவேத சுவாமிநாதன், சங்க காலத்தில் அய்ந்திணைகளில் வாழ்ந்த தமிழ்ச் சாதிகள் எல்லோரும் பறை அடித்தார்கள் என்றால், இன்று தாழ்த்தப்பட்டவர்கள் மட்டும் அடிக்கக் காரணம் என்ன? பறையைக் கையிலேந்தி எல்லா சாதிகளும் அடிக்க முன் வரட்டும். பின்பு அதை நாங்கள் கலையாக ஏற்றுக் கொள்கிறோம். அதுவரை பறை ஒழிக்கப்பட வேண்டும்'' என்றார்.

காரசாரமான மூவரின் எதிர்க்கருத்துகளைத் தொடர்ந்து பார்வையாளர்களிடையே விவாதம் சூடு பிடித்தது. பறையிசை தொடர்பாக இருவிதக் கருத்துகள் கொண்ட சிந்தனையாளர்கள், கலைஞர்கள்,ஆய்வாளர்கள் அனைவரையும் இந்த அமர்வு உசுப்பிவிட்டு, கருத்து மோதலைத் தீவிரப்படுத்தியது. இன்னொரு புதிய கோணத்திலிருந்து ‘பறை ஓர் மாற்றுப் பார்வை' என்ற பொருளில் கட்டுரை வழியே உரையாற்றினார் கே.எஸ். முத்து.

"சமூகப் பயன்பாட்டுக் கண்ணோட்டத்தில் பறையைப் பார்க்கும்போது - அது ஓர் இழிந்த கலையாக, ஓர் ஊடகமாக மட்டுமே பார்க்கப்படுகிறது. ஆனால், அதையும் கடந்து அது ஓர் இசைக் கருவியாகவும் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இதனைப் பிரித்தறிய மறுக்கும்போது தான் ‘பறை' குறித்த பார்வையின் அளவுகோல் மாறுபடுகின்றது. சாதி இந்துக்களின் பார்வையிலிருந்து தலித்திய பார்வை முரண்பட்டாக வேண்டும். அத்தகைய மாற்றுப் பார்வையைத்தான் சமகால பண்பாட்டுத் தளங்களில் ‘பறை' உருவாக்கி வருகின்றது. பறை, சமூக அங்கீகாரத்தைப் பெற்றதோடு பறையைத் தொட மறுத்த சாதிகளைத் தொட்டு அடிக்க வைத்திருப்பதன் மூலம், சாதி ஒழிப்பு நடவடிக்கையையும் பண்பாட்டுத் தளத்தில் அது மவுனமாக நிகழ்த்திக் காட்டி வெற்றி பெற்றுள்ளது என்றார்.

நான்காம் அமர்வைத் தொடர்ந்து இசைப் பேராசிரியர் கவிநேசன் சாலமோன், பறையிசையின் சிறப்புத் தன்மைகளை விளக்கினார். அதை செயல்வடிவில் உணரும் வகையில் பனையூர் ராசா குழுவினரின் பறையாட்டம் நிகழ்த்தப்பட்டு விவாதம் முடிவுக்கு வந்தது.

- நம் செய்தியாளர்